Monday, August 8, 2016

வலம் நாவல் -- இரா.முருகவேள்

வலம் நாவல் பற்றி எழுத்தாளர் இரா.முருகவேளின் விமர்சனம்.

வலம்
----------
----இரா.முருகவேள்

தன் மனதுக்கு மூளைக்கு வெளியே இன்னொரு உலகம் இருக்கிறது என்பதை அங்கீகரிக்கும் எழுத்துக்கள் எப்போதுமே முக்கியமானவை. அவைதான் காலத்தின் வரலாற்றுப் பதிவுகளாக உலகமெங்கும் கொண்டாடப்படுகின்றன. அதிலும் நூலாசிரியருக்கு தான் எடுத்துக் கொண்ட காலப் பகுதியின் மக்கள் வாழ்வைத் தேடிக் கண்டுகொள்ளும் பிடிவாதமும் ஆவலும் இருந்து அவர் அதற்காக உழைக்கவும் தயாராக இருந்து விட்டால் நிச்சயம் ஒரு நல்ல இலக்கியம் பிறந்து விடும்.

அந்த வகையில் விநாயக முருகனின் வலம் குறிப்பிடத்தக்க நாவலாக உருவாகியிருக்கிறது. சென்னை நகரின் உருவாக்கத்துக்குக் கொடுக்கப்பட்ட விலைதான் நாவலின் பின்னணி. நரிகளுக்கும் சென்னை கிராமப்புறங்களுக்கும் இருந்த உறவையும் அவை ஆங்கிலேயர்களால் அழிக்கப்பட்ட விதத்தையும் சுவாரஸ்யமாகப் பேசுகிறது வலம்.

தமிழக நாட்டுப்புறக் கதைகளில் நரிக்குத் தனி இடம் உண்டு என்று விமர்சகர் முருகேச பாண்டியன் குறிப்பிடுகிறார். நரி எப்போதும் மனிதனுடன் போட்டி போடும். நரியை வெற்றி கொள்வதுதான் மனிதனின் சாம்ர்த்தியம் என்று நாட்டுப்புறக் கதைகளில் திரும்பத்திரும்ப வலியுறுத்தப்படும். இயற்கையின் நுட்பமான வலைப் பின்னலில் நரி ஒரு தவிர்க்க முடியாத இணைப்பு. இப்போது தமிழக மலையோர கிராமங்களி நரிகளும் கீரிகளும் அழிந்ததால் மயில்களும் மற்ற பறவைகளூம் பெருகி விவசாயிகளுக்குப் பெரும் தொல்லையாக மாறிவருகின்றன. நரிகள் போதுமான எண்ணிக்கையில் இருந்திருந்தால் அவை பறவை முட்டைகளைக் குடித்து பறவைகளில் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தியிருக்கும்.

நுட்பமாகப் பார்த்தால் இந்த உறவை நமது நாட்டுப்புறக் கதைகள் வலியுறுத்துவதை உணர முடியும். ஆனால் வெள்ளையர்களின் பார்வை வித்தியாசமானது. தங்கள் நாடுகளில் பெரும் காடுகளை அழித்தும் தனியுடமையாக்கியும் பெற்ற அனுபவங்களோடு வெள்ளையர்கள் இங்கே வருகின்றனர். அவர்கள் நமது மலைக்காடுகளை வெட்டிச் சாய்த்தனர். சதுப்பு நிலங்களை வடித்தனர். யானைகளையும் புலிகளையும் மான்களையும் மற்ற மிருகங்களையும் கொன்று குவித்தனர். பின்பு நடந்ததை துன்பக் கேணீயும் தமிழக மலையக எஸ்டேட் இலக்கியமும் பேசும். இவற்றின் தொடக்கம் சென்னையைச் சுற்றி ஆரம்பித்தது என்பதை வலத்தில் காண முடிகிறது.

கதை நரி மேட்டு சித்தரில் தொடங்குகிறது. நரிகளுக்கும் இயற்கைக்கும் சுற்றி வாழ்ந்த மக்களுக்குமான உறவைப் பேசி பதினெட்டாம் நூற்றாண்டுக்குத் தாவுகிறது. நரி மேடு தகர்க்கப்படுகிறது. நரிகள் கொன்று குவிக்கப்படுகின்றன. சென்னைப் பட்டணம் எழுகிறது. இதன் பிறகு பத்தொன்பதாம் நூற்றாண்டில் சென்னையில் வாழ்ந்த வெள்ளையர்களின் வாழ்வை ஒரு கொலை வழக்கு மற்றும் நரி வேட்டையின் பின்னணீயில் சொல்கிறார் விநாயக முருகன்.

ஓர் ஓவியம் வரையும் போது அதையொட்டிய காட்சிகள் அதனதன் இடத்தில் இயல்பாக உட்கார்ந்து விடுவது போல புதிய சென்னை நகரத்தில் நீக்கமற நிறைந்து கிடக்கும் சாதி, அயோத்திதாசப் பண்டிதரின் தலைமையில் முதல் தலித் இயக்கம் துளிர்விடுவது, பஞ்சம், பாலியல் தொழிலாளர்களீன் நிலை, என்று அனைத்தையும் நம் முன்னர் விரித்து வைக்கிறது வலம். அயோத்திதாசர் இந்து மதத்திலிருந்து விலகிச் செல்வதும் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கோஹன் சென்னையின் காவல்துறை அதிகாரி. பிரபு குடும்பத்தில் வந்தவன். சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையைக் கட்டிய கோஹனின் பெயர் தனக்கு வைக்கப்பட்டிருப்பதை பெருமையாக உணர்பவன். மொத்தத்தில் எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன்.

புளியந்தோப்புப் பகுதியில் இரண்டு சிறுவர்கள் நரிகளால் கொல்லப்பட்டிருப்பதை அறிந்து விசாரிக்கச் செல்கிறான். அங்கு வாழும் ஆதிதிராவிட மக்கள் தங்கள் குழந்தைகள் நரிகளால் கொல்லப்பட்டன என்பதை நம்ப மறுக்கின்றனர். அங்குதான் கோஹன் உள்ளூரில் வாழும் ஆங்கிலம் தெர்ந்த தலித் மக்களின் தலைவனான ரத்தினத்தைத் சந்திக்கிறான். உடல்களை உயர்சாதி அதிகாரியின் வண்டியில் ஏற்றச் சொல்லும் போது அவர் மறுக்கிறார். சென்னையின் சாதி பற்றிய ஆரம்ப அறிவு அவனுக்குக் கிடைக்கிறது.

பேட்டர்ஸன் அய்ர்லாந்தைச் சேர்ந்த படைவீரன். அவனது அப்பா அயர்லாந்தில் பண்ணையில் வேலையாளாக இருந்தார். குலப்பெருமை அற்றவனாகவும் பணமில்லாதவனாக இருப்பதையும் உணர்ந்த தாழ்வு மனப்பான்மை அவனை உறுத்திக் கொண்டே இருக்கிறது. மனதுக்குள் குமைந்து கொண்டிருக்கும் கோபம் அதி தீவிரத்துடன் அவனை நரி வேட்டையில் ஈடுபடச் செய்கிறது. அவன் வெறி பிடித்தவனாக சென்னையைச் சுற்றி நரிகளைத் தேடி அலைந்து கொண்டே இருக்கிறான்.

சென்னையில் வேட்டைக்காரர்களுக்காக ஒரு கிளப் இயங்குகிறது. அதன் உரிமையாளர் மெக்கன்ஸி உயர்ரக நாய்களையும் குதிரைகளையும் நரிவேட்டையாடுபவர்களுக்கு அளிக்கிறார். கவர்னர் (கன்னிமாரா?) பெரும் குடிகாரராகவும் பெண் பித்தராகவும் இருக்கிறார். சென்னையை விரிவுபடுத்த திட்டங்கள் தீட்டுகிறார். அவரது இனிமையான குணமுடைய ஓவியரான மனைவி சூஸன் கவர்னரின் குணத்தால் வெறுப்படைந்திருக்கிறார். இந்தப் பின்னணியில் சென்னையின் அக்கால வாழ்க்கை குறிப்பாக வெள்ளையர் வாழ்க்கை நம் கண் முன் விரிகிறது.

பஞ்சப் பிரதேசங்களில் இருந்து மக்கள் நிழல்கள் போல நகரினுள் நுழைந்து கொண்டே இருக்கிறார்கள். உணவின்றிக் குழந்தைகள் உயிர்விடுகின்றன. நெல் ஏற்றிச் செல்லும் வண்டிகள் கொள்ளையடிக்கப்படுகின்றன. ஆனால் அரசு சென்னைக்கு ரயில் பாதை அமைக்கவும் நகரை இன்னும் விரிவுபடுத்தவும் திட்டங்கள் தீட்டுகிறது.

வலம் முழுமையும் தலித்துகளைப் பற்றிய நாவல் அல்ல என்றாலும் பெரும்பாலும் எதிர்த்துத் தாக்காத நரிகள், தாக்க வழியில்லாத தலித்துகள், பிரிட்டிஷ் அரசு என்று ஒரு முக்கோண பிணைப்பு நாவலில் இருக்கத்தான் செய்கிறது.

சதுப்பு நிலங்களும் ஓடைகளும் ஆறுகளும் ஏரிகளும் நிரம்பிய ஒரு மென்மையான நிலப்பரப்பின் ஒரு மூர்க்கமான, பஞ்சங்களுக்கும் கொள்ளை நோய்களுக்கும் இருப்பிடமான நகரத்தைக் கட்டியமைக்கிறது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம். நரிகள் கொன்று குவிக்கப்படுகின்றன. விரட்டியடிக்கப்படுகின்றன.

நரிகளைப் போலவே கோட்டை இருக்கும் கடலோரப் பகுதியில் வாழ்ந்த மீனவர்களும் விரட்டியடிக்கப்படுகிறார்கள். அவர்கள் வாழ்விடங்கள் ஆகிரமிக்கபட்டு அங்கே எழுகிறது ஒரு வலிமை வாய்ந்த கோட்டை. தலித்துகளுக்கு பல புதிய வாயில்கள் திறக்கின்றன. ஆனால் அவற்றையும் அரசே அடைக்கிறது. ஒரு புதிய வகையிலான அடிமைத்தனம் உழைக்கும் மக்கள் மீது திணிக்கப்படுகிறது.

இக்கதை நடக்கும் காலத்துக்கு அறுபது ஆண்டுகளுக்கு முன்பு தென் தமிழகத்தில் மருது பாண்டியர், பூலித்தேவன், கட்டபொம்மன், எல்லோருக்கும் மேலாக ஊமைத்துரை தலைமையில் ஆங்கிலேயருக்கு எதிராக கடும் போர்கள் நிகழ்ந்தன. அப்போது ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பலர் எல்லா பாளையக்காரர்களின் படைகளீலும் தளபதிகளாகவும், வீரர்களாகவும் பணீபுரிந்தனர். அதற்கான தேவை இருந்தது. இது தொடர்ந்திருந்தால் சாதியக் கட்டுமானத்தில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் பிரிட்டிஷ் அரசு தனது அதிகாரத்தை நிலைநாட்டிய பின்பு சாதிய அமைப்புமுறையைக் குலைக்காத ஒரு நுட்பமான பாதையைப் பின்பற்றியது. ராணுவத்துக்கும், ஆலைகளுக்கும் தேவைப்பட்ட அளவுக்கே தலித்துகள் அரசு அமைப்புகளில் அனுமதிக்கப்பட்டனர். மற்றபடி சாலைகளீலும், நிறுவனங்களிலும் ப்ரந்து விரிந்த கிராமப் பகுதிகளீலும் சாதிய முறை தடையின்றித் தொடர அனுமதிக்கப்பட்டது.

இதைத்தான் வலத்திலும் காண்கிறோம். பின்னி மில்லில் பாதிப்பேர் தலித்துகள். அவர்கள் தங்களுக்கென்று பள்ளிகள் வைத்து ஆங்கிலம் படிப்பது தடை செய்யப்படவில்லை. ஆனால் காயம் பட்ட ஒருவனை தன் வண்டியில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்று சொல்லும் உரிமை உயர்சாதிக்காரனுக்கு அனுமதிக்கப்பட்டது. சாதியக் கட்டுமானத்தைத் தாங்கி நிற்கும் மேல்சாதிக்காரர்களின் பொருளாதார பலத்தைத் தகர்க்காமல் சாதிய அமைப்பில் பலவீனத்தை ஏற்படுத்துவது சாத்தியமில்லை என்பதை அயோத்திதாசரின் அனுபவத்திலிருந்து இன்று வரையிலான அனுபவங்கள் காட்டுகின்றன. தலித்துகள் படிக்கவும், மில்களில் வேலை செய்யவும் அனுமதிக்கப்படுகின்றனர். அதே நேரம் சாதி ஆதிக்க வாதிகள் சாதியைக் காப்பாற்றும் பொருளாதார மேல்நிலையை தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்கபப்டுகின்றனர். இந்த நீண்ட நெடிய போராட்டத்தின் தொடக்கம் வலத்தில் கோடிட்டுக் காட்டப்படுகிறது.

இவையனைத்தையும் விட நாவலில் வரும் வெள்ளைக்காரர்களின் பத்திரங்களின் உருவாக்கத்தில்தான் விநாயக முருகனின் நேர்த்தி தெரிகிறது. குறிப்பாக பாட்டர்ஸனின் பாத்திரம். ஒரு விளையாட்டாகத் தொடங்கி நரி வேட்டையில் அவன் கொள்ளும் தீவிரம், மூர்க்கம், எதிர்ப்புக் காட்டாமல் தப்பி ஓட மட்டுமே முயலும் பலவீனமான உயிரிகள் மீது வரும் கண்மூடித்தனமான வெறுப்பு உலகத்தில் தான் வெறுக்கும் அனைத்தின் மொத்த உருவமாக நரிகளை அவன் உருவகப்படுத்திக் கொள்வது அற்புதமாக எழுதப்பட்டிருக்கிறது. பேட்டர்ஸனின் நாயான புல்லட்டின் விசுவாசம் சக்திக்கு மீறிய உழைப்பால் தளர்ந்து வரும் அதன் உடல்நிலை . . . விநாயக முருகனின் எழுத்துத் திறன் தனிச்சிறப்புடன் வெளிப்படுகிறது. அவர் வருணிக்கும் நரிவேடையின் நுணுக்கங்கள் இந்தப் பகுதியை நாவலில் மிகவும் முக்கியமானதாக மாற்றுகிறது.

நரி வேட்டை ராயல் விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதாவது நரியைக் கொல்வது வேட்டை அல்ல, விளையாட்டு என்று பிரிட்டிஷாரால் கருதப்பட்டது. குதிரையில் செல்லும் வேட்டைக்காரன் நரியைச் சுடுவது கௌரவக் குறைச்சல் என்று கருதப்பட்டது. எல் போன்ற இரும்புத் தடியால் நரியின் மண்டையை அடித்துப் பிளப்பதே சிறந்த விளையாட்டு வீரனுக்கு அடையாளமாகும் .எதிர்ப்புக்காட்டாத மனித குலத்தின் ஒரு பகுதியை அடக்கி ஒடுக்குவதிலும் அதை அதன் அற்பமான வாழ்விடங்களில் இருந்து ஓரப்பகுதிகளுக்கு விரட்டியடிப்பதிலும் மற்ற பகுதி காட்டும் முனைப்பை இதனுடன் இணைத்துப் புரிந்து கொள்ளலாம். பழைய கொண்டாட்டமான தமிழக கிராமப்புற வேட்டைக்கும், ஆங்கிலேயர்களின் இது போன்ற கேளிக்கை அல்லது உள்ளே குமையும் மூர்க்கத்திற்கு வடிகாலான வேட்டைக்கும் வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது. வளர்ந்து வரும் நகரம் நரிகள் வாழத் தகுதியில்லாததாக மாறிப் போகிறது. நரிகள் எங்கோ தொலை தூரங்களில் சென்று மறைகின்றன. பஞ்சமும், பசியும் நோய்களும் அவை விட்டுச் சென்ற இடங்களில் நிரந்தரமாகக் குடியேறுகின்றன.

நாவல் முழுக்க விநாயக முருகனின் பிடிவாதமான உழைப்பு தெரிகிறது. நாவலில் சொல்லப்படும் எதைக் குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டாலும் துல்லியமாக ஆதாரங்களுடன் அவர் விடையளிப்பதை முக நூலில் பார்த்திருக்கிறேன். சென்னை செங்கற்களால் ஆன நகரம் மட்டுமல்ல. ஓடைகளையும், பசும்புல் வெளிகளையும், வயல்களையும் சின்னஞ்சிறு அழகிய கிராமங்களையும் புதைத்துக் கட்டிய மாபெரும் புதைகுழியும்கூட என்பதை வலம் உணரவைக்கிறது.

ஓர் இடத்தில் மட்டும் எனக்கு சந்தேகம் இருக்கிறது. தோடர் பழங்குடியின கரோலின் பாத்திரம் அது. வெள்ளைக்காரன் தொடர்பால் அவளது அம்மா தற்கொலை செய்து கொள்கிறாள். கரோலின் கோஹனைக் காதலிக்கிறாள். கவர்னரின் வேட்கைக்கு இரையாகிறாள். குற்ற உணர்வால் உந்தப்பட்டு கோஹனின் காதலை ஏற்றுக் கொள்ளாமல் கன்னியாஸ்திரியாவதாக நாவல் முடிகிறது. பழங்குடியினங்களில் குழந்தைகள் ஒருபோதும் அனாதைகளாக விடப்படுவதில்லை. அவர்களது பாலியல் சார்ந்த பார்வையும் நமது மத்திய தரவர்க்கப் பார்வையிலிருந்து வித்தியாசமானது. விநாயக முருகன் கட்டாயம் ஏதோ ஒரு வரலாற்று ஆவண்த்திலிருந்துதான் இந்த பாத்திரத்திற்கான தாக்கத்தைப் பெற்றிருப்பார் என்று உணரமுடிகிறது. அந்த சூழலை சற்று விரிவாக சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

சென்னையின் ஆரம்ப நாட்களையும் அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்வையும் இயற்கையின் நுட்பமான வலைப்பின்னலின் பின்னணியில் சுவாரஸ்யமான நாவலாக்கிய விநாயக முருகன் பாராட்டத்தக்கவர்.

நன்றி:- இரா.முருகவேள்

Tuesday, August 2, 2016

வலம் நாவல் -- கண்ணன் ராமசாமி




வலம் நாவல் பற்றி எழுத்தாளர் கண்ணன் ராமசாமியின் விமர்சனம்

http://kannanwriter.blogspot.in/2016/08/blog-post.html

வலம் நாவலின் முன்னுரையில் அதன் எழுத்தாளர் விநாயக முருகன் இப்படியாக அறிவிக்கிறார்:
நான் வரலாற்று ஆசிரியன் அல்ல. கிடைத்த தகவல்களை எல்லாம் ஆவணப்படுத்துவது என் நோக்கமும் அல்ல. ஒரு கற்பனை சித்திரத்தை முன்வைக்கும் ஓவியன்
இது தான் வலம். எந்தவொரு வரலாற்று எழுத்தாளருக்கும் தன்னுடைய ஆய்வு முடிவுகள் உண்மையானதாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்கிற ஆசை இருக்கும். ஆனால், வரலாற்றுப் பின்னணியில் சேதி சொல்லும் புனைவுச் சித்திரத்தை மட்டும் வரையும் ஓவியரின் இத்தகைய அசாத்திய தைரியம் பாராட்டுக்குரியது.
16 ஆம் நூற்றாண்டில் தொடங்கும் கதையில் சென்னையின் மையப் பகுதியில் அமைந்த நரிமேடு அறிமுகப் படுத்தப் படுகிறது. நரிகளும், நடிமேட்டினை நம்பிக்கைக்குப் பாத்திரமாக மாற்றிய ஆன்மிகமும், அந்த மேட்டினை அரசியல் கண்ணோட்டத்தில் மட்டும் கவனித்து நாசங்களை ஏற்படுத்திய ஆங்கிலேயரும், அந்த நரிமேட்டின் முக்கோண வடிவத்தில் சரியாகப் பொருந்துகின்றனர்.16ஆம் நூற்றாண்டில் இன்றைய பிராட்வே பகுதியில் கடல் மட்டம் உயர்ந்ததால், பல இடங்களில் குன்றுகளும் பள்ளங்களும் ஏற்பட்டிருக்கின்றன. அதில் ஒன்று தான் அட்டப் பாலம் என்று அழைக்கப் பட்டது.
அப்போது அய்யப்ப நாயகர் என்பவரிடம் இருந்து நல்ல விலைக்கு ஜார்ஜ் டவுன் இருக்கும் இடத்தை கிழக்கிந்திய கம்பெனியின் முதல் ஏஜெண்டான ஆண்ட்ரூ கோகன் வாங்கினான். அங்கு வாணிபம் செய்வதே அவனுடைய முக்கிய நோக்கம். அவனுக்கு அடியில் வேலை செய்தவனே பிரான்சிஸ் டே.
அப்படியே இருநூறு ஆண்டுகள் கடந்தால், ஸ்டீபன் போப்பம் (Stephen Popham’s) எனும் வரலாற்றுக் கதாபாத்திரம் Black town என்று அழைக்கப்பட்ட George Town ல் ஒரு இடத்தை வாங்கித் தங்குகிறார். அவருக்கு Fort St. George கோட்டைக்கு எதிரில் நிற்கும் நரிமேடு எனும் குன்று அச்சுறுத்தலாகத் தெரிகிறது. அதை உடனடியாக இடித்து தரைமட்டம் ஆக்க வேண்டும். அதோடு, போபம் தன்னுடைய நிலத்திற்கு அருகில் உள்ள அட்டப்பாலத்திற்குள் கொட்டி சமன்படுத்துவதற்கு மணலும் தேவைப்படுகிறது என்று எண்ணுகிறான். இதன் மேல் ஒரு விரிவான சாலையை அமைக்கவும் திட்டம். இந்த இரு திட்டங்களையும் சொல்லி போபம் நரிமேட்டினை தரைமட்டம் ஆக்குவதற்கு அனுமதி பெறுகிறான். அதிலிருந்து கிடைத்த மணலை எடுத்து அட்டப்பாலத்தில் நிரப்பி, George townவழியாக பெரிய சாலையை அமைக்கிறான். அது Popham’s Broadwayஎனும் பெயரைப் பெறுகிறது. இந்த Popham’s broadway தான் இப்போது வெறும் ப்ராட்வேவாக நம்மால் அறியப் படுகிறது. தரைமட்டம் ஆக்கப் பட்ட நரிமேட்டின் மேல் தான் தற்போது பொது மருத்துவமனையும், மெட்ராஸ் யுனைடட் க்ளப்பும், பார்க் டவுன் போஸ்ட் ஆபீசும் இருக்கிறது.
இந்த யோசனையை செயல்படுத்திய Stephen Popham’s தான் 1782 ல் மெட்ராஸ் காவல் படையை அமைத்திருக்கிறார். இந்த இணைப்பை,19 ஆம் நூற்றாண்டின் புனைவுக் கதாபாத்திரமான ஆண்ட்ரூ கோகன், மதராசப்பட்டின காவல் படையில் கேப்டனாக இருப்பதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

இங்கே, மதராசப்பட்டினத்தை உருவாக்கிய பெருமை பொருந்திய இரு நண்பர்களில் ஒருவரான ஆண்ட்ரூ கோகனின் வியாபாரப் பேராசையும், பொதுவாகவே சொந்த நாட்டில் தாங்காமல், வலம் சென்று பிற நாடுகளின் இயற்கை அமைப்புகளில் மாற்றங்கள் செய்யும் ஆண்களும், சாதிய உட்பிரிவுகளை ஏற்படுத்தி ஆங்கிலேயர்கள் உள்ளே வந்து அடிமை படுத்த அனுமதி அளித்த நம்பிக்கை அமைப்பும் விமர்சிக்கப் படுகின்றன. இம்மூவரின் நடவடிக்கைகளால் எப்படி இயற்கையின் சமன்பாடு நரிமேட்டுடன் சேர்த்து உடைக்கப் படுகிறது என்று விளக்குகிறது நாவல்.
ஆண்ட்ரூ கோகனால் நரிமேடு தரைமட்டம் ஆக்கப்பட்ட பிறகு, மதராசப் பட்டினம் வடக்கில் வெள்ளையர் நகரமாக (அடையாற்றுக்கு அருகில்), சையதுஷாபேட்டை என்று அழைக்கப்பட்ட சைதாப்பேட்டையை ஒட்டிய ஆற்றங்கரையோரம் கருப்பர்களாகிய பணியாட்கள் தாங்கும் சேரிகளாக உருவாகுகின்றன. இந்நிலையில் நரிமேட்டில் இருந்து துரத்தப்பட்ட நரிகள் அடையாற்று காடுகளில் தஞ்சம் புகுகின்றன.

நரிமேட்டை தகர்க்கும் போது எதிர்த்த நரிகளையும், செம்படவர்களையும் ஒரே குழியில் இட்டு எரிக்கிறார்கள் கோகனின் ஆட்கள். இதை முதலில் படித்ததில் இருந்து இந்தக் கதை நெடுகிலும் எனக்கு உள்ளுணர்வாக ஒரு விடயம் அரித்துக் கொண்டே இருந்தது. நரிகளும் மனிதர்களும் தனித்தனியாக நடமாடுவது இக்கதையில் தெளிவு படுத்தப் பட்டிருந்தாலும், எனக்கு நரிகள் எல்லாம் ஒடுக்கப்பட்ட நிஜ மனிதப் போராளிகள் என்றும், நரிகளைக் கொல்ல உதவும் பாக்ஸ் ஹவுன்ட் நாய்கள் எல்லாம் பிரிட்டிஷ் அரசாங்கம் சொன்னதைச் செய்யும் ராணுவ சிப்பாய்கள் என்றும், ராஜபாளையம் நாய்கள், சுய ஆதாயத்திற்காக தம் மக்களை தாமே கொல்லும் இந்திய ராணுவ மற்றும் மத நம்பிக்கையாளர்கள் என்றும் தோன்றியது. இத்தகைய ஒப்புமை கதையை மேலும் சுவாரசியமாக்குகிறது.

இதற்கான பல உதாரணங்களை மேற்கோளிட வேண்டும்:
1.  பிராசிஸ் டேவின் குழந்தை நரிமுகத்துடன் பிறக்கிறது. இது ஒரு வகையான மிஸ்டிகல் ரியலிச சிந்தனையை உருவாக்குகிறது. ஒருவேளை நரிமுகம் என்பது இந்திய முகம் தானோ? அப்படியானால், பிராசிஸ் டேவின் மனைவி, ஒரு இந்தியனோடு உறவு வைத்துக் கொண்டதால் தான் அப்படி எழுதி இருக்கிறாரோ? இந்திய ஆண்களை புணரும் பிரிட்டிஷ் பெண்களை நரிகளைப் புணரும் நாய்கள் என்று பேட்டர்சன் என்கிற கதாபாத்திரம் விமர்சிக்கிறான். இந்தியர்களை அவ்வப்போது நரிப்பசங்க என்று விமர்சிக்கும் இடங்களும் கதையில் இருக்கின்றன. இவை எல்லாம் நரிகளின் மூலமாக இந்தியர்களையும் குறிப்பிட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.

2.   ஆங்கிலேயர்கள் விரட்டும் போது நரிகள் தந்திரமாக செயல்படுவது நமது இந்தியர்களின் கொரில்லா யுக்திகளை நினைவுபடுத்தாமல் இல்லை. வெள்ளையர்களால் விரட்டப்படும் நரிகள் ஏன் மறுபடியும் சொந்த இடத்திற்கே வருகின்றன என்கிற கேள்விக்கு, மாசானம் என்கிற கதாபாத்திரம் சொல்கிறார், நரிகளை இங்கிருந்து விரட்டினாலும், பிறந்த இடத்தின் நினைவுகளை அவற்றின் மனதுகளில் இருந்து அவ்வளவு எளிதாக விரட்ட முடியாது என்று. இதனை கிளர்ச்சியாளர்களின் மன நிலையோடும் பொருத்திக் காணலாம்.

3.   கோகனின் காவல் நிலையத்தை முற்றுகை இடுகிறார்கள் பறையர்கள். அப்போது பிரிட்டிஷ் அரசின் அதிகார அமைப்பு பற்றிய குறிப்பு வருகிறது. அவர்கள் எப்போதும் மேலதிகாரிகளுடைய கட்டளைக்கு கீழ் பதிவார்கள். ஆனால், நாமோ வேலூர் புரட்சியிலிருந்து கற்றுக் கொண்ட பாடம் என்னவென்றால், தனி மனித புரட்சி எந்த வித இலக்கும் அற்று இருக்கும் என்பது தான். இதை பாக்ஸ் ஹவுன்ட் நாய்களின் கீழ்படிதலுக்கும், ராஜபாளையம் நாய்களின் வெறித்தனமான தாக்குதலுக்கும் ஒப்பீடாகக் கருதலாம்.

4.   நரிகளைக் கொல்வது ஒரு கவர்ச்சிகரமான விளையாட்டாக ஆங்கிலேயர்களால் பார்க்கப் படுகிறது. அது அவர்களது சிறு வயதில் இருந்தே பழக்கமாக ரத்தத்தில் கலக்கப் படுகிறது. அவர்கள் தங்களுடைய சக்திக்கு மீறிய புலிகளைக் கொல்ல நினைப்பதில்லை. அதைக் காட்டிலும், சக்தி குறைந்த, ஆனால் தந்திரங்களின் மூலம் கொல்ல வேண்டும் என்கிற கிளர்ச்சியை ஏற்படுத்தும் நரிகளைத் தான் அவர்கள் கொல்ல பிரியப் படுகிறார்கள் என்கிற கருத்து, இந்தியர்களை ஆங்கிலேயர்கள் ஏன் கொன்றார்கள் என்கிற கேள்விக்கு பதிலாகவும் அமைகிறது. நரி விளையாட்டுக்கு மாற்றாகத் தான் கிரிக்கெட் விளையாட்டும் இங்கு அறிமுகப் படுத்தப் படுகிறது. கிரிக்கெட் விளையாட்டு பண்டைய கால கலோசிய பாணியில் வட்டமாக உட்கார்ந்து அனைவரும் ரசிக்கும் விளையாட்டாகவும் இருப்பது இங்கு ஒப்புமை செய்து யோசிக்கத் தக்கது. ஆக நரிகளையும், இந்தியர்களையும் அவர்கள் க்ளாடியேட்டர்களின் நீர்த்துப் போன வடிவமாகத் தான் கருதியிருக்கிறார்கள் எனும் கருத்துக்கு இங்கு இடம் இருக்கிறது.
5.   இந்தியர்களின் புழு போன்ற உடலையும், கருப்பு நிறத்தையும், கிளிஞ்சல் கண்களையும் நரிகளின் குள்ள உருவத்தோடும், கண்களோடும் ஒப்பீடு செய்திருக்கிறார் வி.மு. இந்திய சாதிய கட்டமைப்பில் ஒரு சாதியினர் மற்றொரு சாதியை அடிமைப் படுத்துவதும், அவர்களே இன்னொரு சாதியினருக்கு கீழ் அடிமையாய் இருப்பதுமான வினோதம் நிகழ்கிறது. இதனை ஆங்கிலேயர்களின் கையால் மரணிக்கும் நரிகள், ஆமைகளையும் எலிகளையும் கொண்டாட்டமாக விளையாடிக் கொல்வதை ஒப்புமையாகக் கருதலாம்.

இவ்வாறாக, நரிகளையும், நாய்களையும் மனிதர்களோடு ஒப்பிட்டு நோக்கச் செய்து, வாசகனாகிய என்னையும் கதைக்குள் மாற்றங்கள் செய்ய வைக்கும் வலம் ஒரு முக்கிய படைப்பாகிறது.
அடுத்ததாக, பல முக்கிய பிரச்சனைகள் குறித்த அரசியல் பார்வைகளை இக்கதை முன்வைக்கிறது. அவற்றையும் ஒவ்வொன்றாகக் காணலாம்:

மதம், சாதிய அமைப்பு:
பொதுவாகவே மதவாதிகளும், சாதியத்தின் பாதுகாவலர்களும் ஒரு பொதுவான கருத்திற்கு பின்னால் ஒளிந்து கொள்வது வழக்கம். அது பகுத்தறிவாளர்கள் ஒற்றைப்படையாக இந்து மதத்தை மட்டுமே விமர்சிக்கிறார்கள் என்கிற குற்றச் சாட்டு. இது நிஜத்தில் அடிப்படைவாத இந்திய நாத்திகர்களின் குணம். ஆனால், பகுத்தறிவு என்பதே ஒரு சார்பற்ற நிலைக்கு வித்திடும் உண்மை இவர்களுக்கு விளங்குவதில்லை. இந்தப் புத்தகம் ஒரு சிறந்த பகுத்தறிவாளரை இனம் காணச் செய்கிறது என்பதற்கான உதாரணங்கள்:

சாதிய அமைப்பின் அடிப்படையே கல்வியை மறுதலிப்பதாகும். காரணம், நம்பிக்கைகளும், பகுத்தறிவும் ஒன்றாக பயணிப்பது கடினம் என்பதே. நரிமேட்டுச் சித்தர், அணையாத விளக்கு என்று தொடங்கி இக்கதையில் நடக்கும் மரம், நரிமனிதன் என எண்ணற்ற மூடநம்பிக்கைகளைப் பற்றிய குறிப்பு இருக்கிறது. நியாயமான கேள்விகளை எல்லாம் நம்பிக்கைகளுக்கு எதிரான புண்படுத்தும் கேள்விகளாகப் பார்க்கும் மனிதர்கள் இதிலும் இருக்கிறார்கள். பின்னி மில்லில் சாதிய அமைப்பின் மேல் நிலையில் உள்ள பிராமணர்கள் எவ்வாறு ஊதிய வேறுபாட்டின் மூலம் பிள்ளை, நாயக்கர், பறையர் சமூகத்திற்குள் வேற்றுமையை ஏற்படுத்தினார்கள் என்றும் தெளிவாக எழுதப் பட்டிருக்கிறது. சாதிய கட்டுமானம், இனக் கலப்பை குறைத்து இந்தியர்களின் உடல் உறுதியை உருக்குலைத்து விட்டதாக ஜாக் ஓரிடத்தில் கூறுகிறான். பிராமணர்களின் புத்தி கூர்மைக்கும் ரத்த சுத்திக்கும் தொடர்பில்லை என்கிற உண்மையை ரத்தினமும், தாசரும் உணர்த்துகிறார்கள். இந்து-பௌத்த மதங்களுக்கு இடையிலான சண்டைகளைப் பற்றிய விவாதமும் இடம் பெறுகிறது.
இதற்கு இணையாக, கிறித்தவ நடைமுறைகளைப் பற்றிய விமர்சனங்களும் இடம் பெறுகின்றன. கத்தோலிக்க கிரித்தவர்களுடைய மன நிலையும், பிராமணர்களுடைய மனநிலையும் ஒன்று என்கிற இந்த நாவல். இருவருக்கும் தாங்கள் உயர்குடியில் பிறந்தோமென்ற செருக்கு இருக்கும் என்று ஜாக் ஓரிடத்தில் சொல்கிறான். இங்கிருக்கும் உட்பிரிவுகளுக்கு இடையிலான மோதல், ஆங்கிலேயர்களுக்கு அநுகூலமாகி விட்டது என்று கருத்து தெரிவிக்கப் படுகிறது.
அதோடு, சில கிறித்தவர்களின் நற்பணிகளால் மக்களுக்கு நன்மை விளைந்தது உண்மை தான் என்றாலும், அதன் பின்னணியில் மத மாற்றம் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது எனும் போது, அந்த சேவை விஷத்தன்மை கொண்டதாகும் என்கிற வெளிப்படையான கருத்தும் இடம் பெறுகிறது. பிரிட்டிஷாரின் உதவிகள் பெரும்பாலும் கிருத்தவ தொண்டு நிறுவனங்களுக்கே சென்றது எனும் குற்றச்சாட்டு முன்வைக்கப் படுகிறது.
கத்தோலிக்கர்களை மட்டும் விமர்சிக்கிறாரே! இவர் ப்ராடஸ்டன்ட் அபிமானியா என்றும் கூட மத நம்பிக்கையாளர்கள் கேட்கலாம். இதற்கு விடையாக, பேட்டர்சனின் தந்தை கூறுகிறார். நாம் செல்டிக் இனத்தை சேர்ந்தவர்கள். ப்ராடஸ்டண்டுகளின் நடவடிக்கையால் நாம் துரத்தப் பட்டோம் என்று. இதன் மூலம், அதிகார வேட்கையால் செயற்கையாக அயர்லாந்தில் உருவாக்கப்பட்ட பஞ்சம் மற்றும், கிறித்தவர்களின் வெறியாட்டம் இந்திய நிலைமையோடு ஒப்புமை படுத்தப் படுகிறது.
ஆங்கிலேயே ஆட்சியில், மதத்தால் உந்தப்பட்ட பெண்கள் பிரசவத்தில் கூட இறக்க நேரிட்டது எனும் உண்மையை கோஷா அணியும் இசுலாமியப் பெண்களை முன்வைத்து சொல்லி இருக்கிறார் வி.மு.
இவ்வாறாக எந்த மதமும் ஒடுக்கப் பட்டவர்களை விட்டு வைக்க வில்லை என்கிற வலுவான ஆதாரத்துடனான வாதம் முன்வைக்கப் படுகிறது.

இயற்கை சீரழிவு:
ஒற்றை வைக்கோல் புரட்சியை எழுதிய மசனோபு ஃபுக்குவோக்கா, ஒரு வயலில் வெட்டுக் கிளியின் பங்கு என்ன? சிலந்திகளின் பங்கு என்ன? என்று தரம் பிரித்து, இயற்கை விவசாயம், ஒன்றும் செய்ய வேண்டியிறாத விவசாயம் என்று விளக்கி இருப்பார். மனிதன் இயற்கைக்கு உதவுகிறேன் என்கிற பெயரில் எதையும் செய்து வைக்கத் தேவையில்லை. இயற்கை தன்னை தானே பார்த்துக் கொள்ளும் என்பார். அவ்வாறு மனிதன் இயற்கையை புரிந்து கொள்ளாமல் செய்யும் எதுவும் அதன் சமன்பாட்டை குலைத்து, நாசத்தை ஏற்படுத்தும் என்பதே அவர் கற்ற பாடம்.
இந்த நாவல் ஏறக் குறையை இதையே சொல்கிறது. முன்னேற்றம் என்பது யாது? என்கிற கேள்விக்கு விடையாக பலர் பலவற்றைக் கூறலாம். ஆனால், மனித சமுதாயத்தோடு கூடி இயற்கையின் அனைத்து படைப்புகளும் உயிர் வாழ வேண்டும் என்கிற ஒரு சூழலே முன்னேற்றத்திற்கான சூழல்.
ஆனால், நகரமயமாதலின் தொடக்கமாக ஆண்ட்ரூ கோகன் செய்த அந்த நாச வேலை தான் கதையின் பின் பகுதியில் வரும் அனைத்திற்கு காரணியாக விளங்குகிறது. ஸ்டீபன் போபம் தான் வாங்கிய நிலத்தின் மதிப்பு கூட வேண்டும் என்கிற காரணத்திற்காகத் தான் நரிமேடு கோட்டைக்கு அச்சுறுத்தல் என்று கூறி அதை இடிக்கவும் வைத்தான். இதன் மூலம் அவன் இரண்டாவது கோகனாகவும் மாறுகிறான்.
இந்த நாவலும் பல இடங்களில் இயற்கையின் ஒன்றுக் கொன்று தொடர்புடைய விடயங்களைப் பற்றிய செய்திகளை தூவிச் செல்கிறது.
1.   நரிகள், ஆங்கிலேயரும் பிறரும் நினைப்பது போல தந்திரமான விலங்குகள் இல்லை. அவை செத்துப் போன விலங்குகளை உண்டு காடுகளை சுத்தம் செய்கின்றன என்று சொல்வதில் இருந்து தொடங்குகிறது இது பற்றிய குறிப்புகள்.

2.   சாணி வண்டுகள் மட்டும் இல்லை என்றால் இந்த இடமே மிருகங்களின் கழிவுகளால் பாழ்பட்டுப் போகும் என்கிறார் மாசானம். இங்கு நம் கழிவுகளை அள்ளும் சக்கிலி, அருந்ததியர் மீது கவனம் திரும்புகிறது.
3.   கொசுக்களுக்கு விலங்குகளின் ரத்தமே போதும். காடுகளை அழிப்பதால் தான் அவை மனிதனை தேடி வருகின்றன.
4.   செம்படவர்கள் நரிகளை கடவுளாக ஏற்றுக் கொண்டதால் அவர்கள் என்றும் பஞ்சத்தினால் பாதிப்பை சந்தித்ததில்லை.  
5.   ஒரு புலி பசி அடங்கிவிட்டால் மான்களை வேட்டையாடுவதில்லை. மனிதனிடம் தான் அந்த எண்ணம் உள்ளது.
இவ்வாறாக பல இடங்களில் இயற்கையை புரிந்து கொள்ளாததால் தான் தவறுகள் நிகழ்கின்றன என்று கருத்துச் சொல்கிறது இந்த நாவல்.

பெண் அடிமைத் தனம்:
பெண்களை ஆங்கிலேயர்கள் எவ்வாறு நடத்தினார்கள் என்பதற்கு சான்றாக கரோலினும், சூசனும் இக்கதையில் வலம் வருகிறார்கள்.
இங்கே குறிப்பிடப் படும் சூசன் என்பவர் நிஜ வரலாற்றில் ராபர்ட் போர்க் முதலாம் பேரன் கன்னிமாராவின் முதல் மனைவியான லேடி சூசன் ராம்சே என்பவர் தான். கன்னிமாரா மெட்ராஸ்-ன் கவர்னராக இருந்த போது சென்னையையும் கல்கத்தாவையும் இணைக்கும் கிழக்குக் கோஸ்டல் ரயில்வே லைனை மேம்படுத்தினார். இவருடைய பெயரைத் தாங்கியே கன்னிமாரா நூலகம் இன்றும் இயங்கி வருகிறது.
அந்தக் காலத்தில் கன்னிமாரா விவாகரத்து பல செய்தித் தாள்களில் தலைப்புச் செய்தியாக வந்திருக்கின்றன. சூசனுக்கு கொசுக்கடியால் பல பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கின்ற சமயத்தில் அவரால் விருந்துகளில் கலந்து கொள்ள முடியாமல் போகிறது. அப்போது கன்னிமாரா, லேடி ஈவா என்கிற பெண்ணை சூசனுக்கு உதவியாகவும், விருந்துகளில் உபசரிக்கவும் உடன் வைத்திருந்திருக்கிறார். நாளடைவில் சூசனுக்கு கன்னிமாராவின் மேல் சந்தேகம் ஏற்படத் தொடங்கி உள்ளது. கண்ணிமாராவுக்கும் லேடி ஈவாவுக்கும் (கதையில் இவள் பெயர் கரோலின்) ஒன்றாக இருக்கக் கூடாது என்பதற்காக கோடையில் சூசன் அவரோடு ஊட்டிக்கு சென்றிருக்கிறார். அக்டோபரில் சூசனுடன் சர்ஜியன் மேஜர் ப்ரிக்க்ஸ் (கதையில் டாக்டர் பைடி) ஊட்டியில் தங்க, கன்னிமாரா தன்னுடைய மனைவிக்கு கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக லேடி ஈவா வை மறுபடியும் மதராசப் பட்டினத்தில் வேலைக்கு அமர்த்தி இருக்கிறார். இதற்குப் பிறகு 1890 ல் குடும்ப நபர்களின் அறிவுறுத்தலுக்கு மாறாக சூசன் விவாகரத்து கோரியிருக்கிறார்.

இந்தக் கதையில் சூசனின் கதாபாத்திரம் கண்ணியத்தோடும், பரிவோடும் இந்தியர்களை நடத்தும் பெண்ணாக சித்தரிக்கப் பட்டிருக்கிறது. ஒரு பெண் தான் மனிதனின் வாழ்க்கையை முழுமை படுத்துகிறார். அவளுக்கு சொந்த இடத்தைப் பற்றிய நல்ல அபிப்ராயங்களே மனதில் தங்குகிறது. ஆனால், அவளை ஆண் அடிமை படுத்தி வைத்திருக்கிறான். ஆண், எப்போதும் சொந்த இடத்தை விமர்சித்துக் கொண்டே இருக்கிறான். அதனாலேயே அவன் வலம் செல்கிறான். நாசங்களை ஏற்படுத்துகிறான். இது போன்ற வித்யாசனமான கருத்துக்கள் முன்வைக்கப் படுகின்றன.
இக்கதையில் கரோலின் தமிழ் நாட்டுப் பெண்ணாக வருகிறாள். நிஜத்தின் அடிப்படையில் எழுதப் பட்டிருந்தாலும், இவளுடைய கதாபாத்திரத்தில் சற்று புனைவு கலந்துள்ளதாக தெரிகிறது. கரோலினுக்கும் (லேடி ஈவா) கவர்னருக்கும் தொடர்பு உள்ளது என்று அறிந்த பிறகு, சூசன் தன்னைத் தானே திட்டிக் கொள்கிறாள். தான்னால் தான் இவள் மெட்ராசுக்கு வந்தாள். அதனால் தான் இவளுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டது என்று நினைக்கிறாள். அதனால் அவளை காக்க வேண்டும் என்பதற்காக கோகனுடன் திருமணம் செய்து கொள்ள அறிவுறுத்துகிறார். நிஜத்தில் லேடி ஈவா கவர்னரின் உதவியாளரான கேப்டன் க்வின் என்பவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.  

எனக்குத் தெரிந்த வரையில் இந்நாவலை நான் போதுமான அளவிற்கு அலசிவிட்டதாக நினைக்கிறேன். விமர்சனம் என்று வரும் போது குறைகளையும் சுட்டிக் காட்ட வேண்டியது அவசியம் தான்.
இந்தக் கதையில் எழுத்தாளர் கையாண்டிருக்கும் நேர்த்தியை பற்றி முதலில் சொன்னால், குறைகள் இல்லை; வெறும் எதிர்பார்ப்புகள் மட்டுமே உள்ளன என்று புரிந்து கொள்ள முடியும். கதை சொல்லும் போது எழுத்தாளர் முதலில் சில அறிமுகங்களை செய்து பின், அதை விளக்கமாக தகுந்த இடங்களில் கட்டவிழ்த்துக் கொண்டே வருகிறார். இக்கதை எந்தெந்த அரசியல்களை பேச வேண்டும் என்பதை பட்டியல் இட்டு, அதன்படி நேர்த்தியாக கதையின் போக்கை வடிவமைத்திருப்பது புரிகிறது.
அதே நேரம், கதாபாத்திரங்களின் குணங்களை விளக்கும் பத்திகள் நிறைய உள்ளன. அடிப்படையில் இது ஒரு இன்வெஸ்டிகேஷன்-ஐ மையமாக வைத்து பயணிக்கிறது என்றாலும் கதையின் முதல் பாதியிலேயே குற்றவாளி யாராக இருக்க முடியும் என்று கணித்து விட முடிகிறது. ஒருவேளை, எழுத்தாளர் இதை சஸ்பென்ஸ்-ஆக முன்னிறுத்த வில்லையோ என்று கூட தோன்றுகிறது. ஏனெனில், முக்கிய கதாபாத்திரங்களுக்கு உரிய இடம் தரப் பட்டிருப்பதால் தான் இந்த சஸ்பென்ஸ் உடைந்து விடுகிறது. கதாபாத்திரங்களின் குணங்களை விளக்கும் போது யார் குற்றவாளியாக இருக்க முடியும் என்று நம்மால் கணித்து விட முடிகிறது.
மெட்ராஸ் ரீஜியனைப் பற்றிய தகவல்கள் அதிகமாக இல்லை என்பதால் இந்தக் கதையின் வரலாற்றுப் பின்னணி சற்று குறைவாக இருப்பது போலத் தெரிகிறது. நாம் தினமும் காணும் இடங்களைப் பற்றிய குறிப்புகள் இருப்பதால் இது சற்று சமன்பட்டு தெரியாமல் போகிறது. ஆனால் கூடியவிரையில் வி.மூவிடம் இருந்து முழுமையான ஒரு வரலாற்று நூலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதில் புனைவுக்கு இணையாக வரலாறும் இருக்க வேண்டும் என்பது என்னுடைய எதிர்பார்ப்பு.

அன்புடன்
கண்ணன் ராமசாமி 
(பரமபதம் (2014) மற்றும், விரைவில் வெளியாக இருக்கும் ‘ஒரு காதல் கதையின் நான்காம் முடிவு’ நாவல்களின் எழுத்தாளர்)            

Thursday, November 19, 2015

ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே - சிறுகதை


வணக்கம்

இந்த வார ஆனந்த விகடனில் ‘ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே’ என்ற பெயரில் எனது சிறுகதை ஒன்று வெளியாகியுள்ளது. நண்பர்கள் பார்வைக்கு...
 
 

 

    

Monday, November 9, 2015

ராஜீவ் காந்தி சாலை - எனது ஆசிரியரின் விமர்சனம்

அன்புள்ள விநாயகமுருகன்

என் பெயர் மு.அருணகிரி. என்னை நினைவில் இருக்குமென்று நினைக்கிறேன். தஞ்சாவூரில் நீங்கள் படித்த பொன்னையா ராமஜெயம் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக இருந்தேன். இப்போது தஞ்சாவூரில் இல்லை. நன்னிலத்தில் வசிக்கிறேன். கடந்தாண்டு நூலகத்தில் உயிர் எழுத்து பத்திரிக்கை படிக்கும்போது அதில் எஸ்.வி.ராஜதுரையின் ஒரு கட்டுரை படித்தேன். அதில் உங்கள் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. பெயரை வைத்து சற்று சந்தேகமாக இருந்தது. நீங்கள்தான் என்று பிறகுதான் உறுதிப்படுத்திக் கொண்டேன். எனது மாணவர்களிடம் விசாரித்தேன். நீங்கள் முகநூலில் தீவிரமாக இயங்குவதை கேள்விப்பட்டு ஆச்சர்யமாக இருந்தது. எனக்கு முகநூல் கணக்கு இல்லை. எப்போதாவது வலைப்பதிவுகள் வந்து பார்ப்பதுண்டு. எனது மாணவன் ஒருவன் உங்கள் வலைப்பதிவை தேடிப்பிடித்து கொடுத்தான். உங்கள் மின்னஞ்சல் முகவரி கிடைத்தது. உங்கள் புகைப்படத்திலிருந்து என்னால் அடையாளம் கண்டுக்கொள்ள முடியவில்லை. எஸ்விஆரின் கட்டுரையை உங்கள் வலைத்தளத்தில் பார்த்து உறுதிப்படுத்திக்கொண்டேன். எஸ்.வி.ராஜதுரையிடமிருந்து அவ்வளவு எளிதாக அபிப்ராயங்களை பெறமுடியாது. உங்கள் முதல் நாவலுக்கான அவரது விமர்சனம் உண்மையில் மகிழ்ச்சியூட்டுவதாக இருந்தது. நான் விசாரித்த உங்கள் நாவல் எங்கும் கிடைக்கவில்லை. சமீபத்தில்தான் எனது மாணவர் ஒருவர் எங்கிருந்தோ தேடிப்பிடித்து கொண்டு வந்தான். படித்தேன்.

முதலில் நாவலின் முக்கிய குறையை சொல்லிவிடுகிறேன். அந்த கட்டுரையின் இறுதியில் எஸ்.வி.ஆர் குறிப்பிட்டதுதான். நாவலில் பல இடங்களில் வாக்கியப்பிழைகள், இலக்கணப்பிழைகள் உள்ளன. அது நாவலை தொடர்ந்து படிக்கவிடாமல் தொந்தரவு செய்கிறது. நாவலின் தலைப்பிலேயே பிழை. ராஜீவ் காந்தி என்று பிரித்து எழுத வேண்டும். ஆசிரியராக என்னால் மன்னிக்கமுடியாத பிழை இது. இது முக்கியமான குறைபாடு. சரிசெய்து கொள்ளுங்கள்.

ஆனால் இந்த ஒரேயொரு குறையை தவிர வேறு எதையும் என்னால் பார்க்க முடியவில்லை. இது ஒரு அசாத்தியமான முயற்சி என்றுதான் சொல்ல தோன்றுகிறது. நாவலுக்கு காலம் (Time), வெளி (Space) இரண்டு புள்ளிகள் முக்கியம். அதன் மீது கதாபாத்திரங்களை சிருஷ்டித்து எழுத வேண்டும். இந்த நாவலில் காலமும், வெளியும் இரண்டு புலனாகாத(Invisible) புள்ளிகள் மீது மிக அழகாக வரையப்பட்ட ஒரு கோலத்தை பார்க்கிறேன். சாலை ஒரு புள்ளியாக வருகிறது. ஆண்டின் பல்வேறு மாறும் பருவநிலைகள் இன்னொரு புள்ளியாக வருகிறது. ஒவ்வொரு பருவநிலைக்கு ஏற்ப மனிதர்களின் குணங்கள் மாறுகின்றன. சாலை மாறுகின்றன. மழை, பனி, கோடைக்கு ஏற்ப சாலை விரிந்தும், நெகிழ்ந்தும் தன்னை மாற்றிக்கொள்கின்றது. மனிதர்களும் தங்களை மாற்றிக்கொள்கிறார்கள். அன்னத்தை,செட்டியாரை தவிர வேறு எந்த மனிதர்களும் நிலையான குணங்கள் கொண்டவர்களாக இல்லை. சந்தர்ப்பத்துக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு பிழைக்கிறார்கள். நாவலின் இந்த அம்சத்தை யாரும் வேறு யாரும் தங்கள் விமர்சனத்தில் குறிப்பிட்டார்களாக என்று தெரியவில்லை. படிக்கும்போது எனக்கு தோன்றியது இது. இந்த மையத்தை நாவலின் வடிவமாக தேர்வு செய்ததாலேயே உங்களால் இந்த படைப்புக்குள் ஒரு பெருநாவலுக்கான விரிவையும், செறிவையும் , பிரமாண்ட களனையும் கொண்டு வர சாத்தியமாகியுள்ளது. ஏனெனில் தமிழில் வெளிவரும் வரலாற்று நாவல்கள் எல்லாம் பிரமாண்டத்தை கொண்டுவர சில நூற்றாண்டுகள் கதைக்களன் இருக்குமாறு பார்த்துக்கொள்வார்கள். ஆனால் உங்கள் நாவலுக்கு நீங்கள் இருபதாண்டுகாலத்தை மட்டும் எடுத்துக்கொண்டு இதை சாத்தியப்படுத்தி இருக்கின்றீர்கள்.

இரண்டாவது இந்த நாவலின் பிரமாண்டத்தன்மை என்பது அதன் இருபக்க சித்தரிப்பு. பல்வேறு வர்க்கநிலை மனிதர்களை சித்தரித்து அவர்களின் முரண்களை நுட்பமாக காட்டியுள்ளீர்கள். சான்றாக ஓர் அத்தியாயத்தில் மேல்தட்டு மக்கள் நட்சத்திர விடுதியில் குடித்தபடி பேசிக் கொண்டிருப்பார்கள். அடுத்த அத்தியாயத்தில் கீழ்தட்டு மக்கள் குடித்தபடி பேசுவார்கள். ஓர் அத்தியாயத்தில் அவர்கள் கீழ்தட்டு மக்களின் பாலியல் உறவை விமர்சிப்பார்கள். அடுத்த அத்தியாயத்தில் கீழ்தட்டு மக்கள் உயர்வர்க்க மனிதர்களின் பாலியல் கிசுகிசுக்களை ஆர்வமாக பேசிக்கொள்வார்கள். இப்படியேதான் நாவல் முழுக்க செல்கிறது. மென்பொருள் நிறுவனம் உள்ளே இருக்கும் உயரதிகாரிகள் கீழ்நிலை அதிகாரிகளை மட்டம் தட்டுவார்கள். அடுத்த அத்தியாயத்தில் அவர்கள் மேலதிகாரிகளை கிண்டல் செய்வார்கள். ஜாதியக்கட்டமைப்பு , பணம், பாலியல் இச்சைகள், குடும்ப உறவுகள், மதம் , பண்பாட்டுக்கூறுகள் இப்படியாக எல்லா விஷயங்களையும் அதன் இன்னொரு பக்கத்தை வேறொரு மாறுபட்ட கதாப்பாத்திரங்கள் வழியாக விவாதத்துக்கு உட்படுத்துகின்றீர்கள். அன்னம், செட்டியாருக்கு இடையே இருக்கும் முறைகேடான உறவு அர்த்தம் பொதிந்த அழகிய கவிதையாக மலரும் அதே தருணம் சுஜாவின் உறவு ரத்தமும், சதையுமாக வந்துபோகிறது. நாவலின் ஊடாக இறுதிவரை செல்லும் இந்த விவாதத்தன்மையும், கருத்து, எதிர்கருத்து பரிமாற்றங்களும் நாவலுக்கு செறிவை தருகிறது. நாணயத்தின் இரண்டு பக்கங்களை நுட்பமாக விவரித்து எழுதியுள்ளீர்கள். இதை திட்டமிட்டு செய்தீர்களாக அல்லது இயல்பாக கதையின் போக்கில் வந்ததா என்று தெரியவில்லை. இறுதி அத்தியாயத்தை படித்து முடித்ததும் அந்த சாலையும் மனிதர்களும் வெகுநேரம் வரை மனதில் அப்படியே இருந்தார்கள். ஒரு நல்ல படைப்புக்கான குணமாக இதை பார்க்கிறேன்.

நாவலை பற்றி நீண்ட விமர்சனக்கட்டுரை ஒன்று எழுதிக் கொண்டிருக்கிறேன். தஞ்சை தமிழ்பல்கலைக்கழகத்தில் படிக்கும் எனது மாணவர்களில் சிலர் உலகமயமாக்கல் குறிப்பாக தமிழ் பண்பாட்டுத் தளத்தில் மென்பொருள்துறை ஏற்படுத்திய தாக்கத்தை பற்றி ஆய்வு செய்ய என்னிடம் வந்தார்கள். அவர்களுக்கு இந்த நாவலை பரிந்துரை செய்தேன். வாழ்த்துகள்.


அன்புடன் ஆசிரியர்
மு.அருணகிரி

Tuesday, October 6, 2015

நரகம் ஒரு தனித்த பிரதேசம்

சார்லஸ் புக்கோவ்ஸ்கி எனக்கு மிகவும் பிடித்த கவிஞர். புக்கோவ்ஸ்கி கவிதைகள் வாசிக்க எந்த சிரமமும் இல்லாமல் எளிமையாக இருக்கும். அவரது பல கவிதைகளை எனது வலைப்பக்கத்தில் தமிழில் மொழிப்பெயர்ப்பு செய்து பதிவிட்டுள்ளேன். அவரது ஒரு குறிப்பிட்ட கவிதை சமீபத்தில் என்னை மிகவும் தொந்தரவு செய்தது. அந்த கவிதையை மொழிப்பெயர்க்க தோன்றியது.. பொருளாதாரத்தில் நலிவுற்ற வயதான நோயுற்ற தம்பதிகளின் இறுதிக்கால கொடும் தனிமைதான் இந்த கவிதையின் ஆன்மா.கவிதையின் உச்சம் இறப்பு நடந்த அந்த வீட்டுக்கு புதிதாக வரும் இளம் ஜோடி பற்றிய மர்மமான விவரணைகள். ஒருவேளை அந்த முதியவர்களே மீண்டும் பிறந்து கூட அங்கு வந்திருக்கலாம்.

நரகம் ஒரு தனித்த பிரதேசம்
----------------------------------------------
அந்த மனிதருக்கு அறுபத்தைந்து வயது
அவரது மனைவிக்கு அறுபத்தாறு வயது
மனைவிக்கு அல்சைமர் வியாதி
அந்த மனிதருக்கு வாய்புற்றுநோய்
அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை
அவரது தாடையின் எலும்பை உருக்கிற்று
தாடையை தாங்கி பிடித்துக்கொண்டிருக்க வேண்டும்
தினமும்
அவரது நோயுற்ற மனைவிக்கு
ஒரு குழந்தைக்கு மாட்டிவிடுவதைபோல
ரப்பர் டயாப்பரை அணிவிப்பார்.
அவரது நிலைமையில் கார் ஓட்ட முடியாது
மருத்துவமனைக்கு வாடகைடாக்சி பிடிக்க வேண்டும்
ஓட்டுநரிடம் பேச இயலாது
செல்ல வேண்டிய திசையை எழுதிக்காட்ட வேண்டும்
கடந்த மருத்துவச்சோதனையின்போது
அவரிடம் தெரிவித்தார்கள்
தாடையில் இன்னொரு அறுவை சிகிச்சை
செய்யப்பட வேண்டும்
வலதுப்பக்க கன்னத்தருகே
நாவுக்கருகே
அவர் வீடு திரும்பியதும்
மனைவியின் டயாப்பரை மாற்றினார்
அடுப்பை பற்ற வைத்தார்
மாலைநேர செய்திகளை கவனித்தார்
பிறகு இருவரும் படுக்கையறை சென்றார்கள்
அவர் துப்பாக்கியை எடுத்து
மனைவியின் நெற்றிப்பொட்டில் வைத்து சுட்டார்
மனைவி இடதுப்பக்கம் சரிந்ததும்
அவர் மெத்தையில் உட்கார்ந்தார்
தனது வாயில் துப்பாக்கியை நுழைத்து
விசையை இழுத்தார்
குண்டுச்சத்தம் அண்டைவீட்டாரை உசுப்பவில்லை
பிறகு
பற்றியெரியும் அடுப்பு அதை செய்தது
யாரோ வந்தார்கள்
கதவை உடைத்தவர்கள் அதை கவனித்தார்கள்
விரைவில்
காவலர்கள் வந்தார்கள்
சம்பிரதாய கடமைகளை செய்தார்கள்
சில பொருட்களை சேகரித்து எடுத்துச்சென்றார்கள்
1.14 டாலர் மிச்சமுள்ள
ஒரு மூடப்பட்ட வங்கிக்கணக்கு
ஒரு செக்புத்தகம்
தற்கொலை என்று முடிவெடுத்தார்கள்
அடுத்த மூன்று வாரங்களில்
இரண்டு புதியவர்கள் அங்கு குடிவந்தார்கள்
ராஸ் என்ற பெயருடையை ஒரு மென்பொருள் நிறுவனர்
அவரது மனைவி அனந்தனா
பாலே நடனம் கற்றவர்
சமூகத்தில் உயர் அந்தஸ்துடைய ஜோடி


Hell Is A Lonely Place 

- Poem by Charles Bukowski

he was 65, his wife was 66, had
Alzheimer's disease.

he had cancer of the
mouth.
there were
operations, radiation
treatments
which decayed the bones in his
jaw
which then had to be
wired.

daily he put his wife in
rubber diapers
like a
baby.

unable to drive in his
condition
he had to take a taxi to
the medical
center,
had difficulty speaking,
had to
write the directions
down.

on his last visit
they informed him
there would be another
operation: a bit more
left
cheek and a bit more
tongue.

when he returned
he changed his wife's
diapers
put on the tv
dinners, watched the
evening news
then went to the bedroom, got the
gun, put it to her
temple, fired.

she fell to the
left, he sat upon the
couch
put the gun into his
mouth, pulled the
trigger.

the shots didn't arouse
the neighbors.

later
the burning tv dinners
did.

somebody arrived, pushed
the door open, saw
it.

soon
the police arrived and
went through their
routine, found
some items:

a closed savings
account and
a checkbook with a
balance of
$1.14
suicide, they
deduced.

in three weeks
there were two
new tenants:
a computer engineer
named
Ross
and his wife
Anatana
who studied
ballet.

they looked like another
upwardly mobile
pair. 

Saturday, August 8, 2015

ரசிகன்



மகத்தானவற்றின் மீது நாம் வைக்கும் நம்பிக்கையும், உறுதிப்பாடும் பொய்த்துப் போகிறபோது நொறுங்கிவிடுகிறோம். அவநம்பிக்கை மேலெழுகிறது. குழப்பங்களும், வினாக்களும் தோன்றுகின்றன. இதுநாள்வரை நாம் எதன்மீது பற்று வைத்திருந்தோமோ அது இற்று விழுகிறது. நம் மனதிலேயே எதிர்வாதம் தோன்றி நம்மை உருமாற்றம் செய்கிறது. நாம் அதுவரை நம்பிக்கொண்டிருந்தவைக்கு எதிரானவராக அத்தருணத்தில் மாறிவிடுகிறோம்
--– அபிலாஷின் ரசிகன் நாவல் பற்றி அழகிய பெரியவன் எழுதிய கட்டுரையிலிருந்து
எண்பதுகளின் தொடக்கத்தில் பிறந்தவர்களை பாக்கியசாலிகள் என்று நான் எனது நண்பர்களிடம் அடிக்கடி சொல்வேன். காரணம் அவர்கள் வளர்ந்து பதின்பருவம் அடையும்முன்னரே தமிழ்நாட்டில் குளோபலைசேஷன், லிபரலேஷன் காலூன்றிவிட அவர்கள் உலகத்தை புரிந்துக்கொள்வதற்கு முன்பே அவர்களால் இயல்பாக ஒரு காலமாற்றத்துக்குள் அடியெடுத்து வைத்து விட்டார்கள். ஆனால் அதற்குமுன்பு பிறந்து அதிலும் குறிப்பாக தீவீர லட்சியவாதம் பேசிய சிறுபத்திரிக்கை மரபை சேர்ந்த பல இளைஞர்கள் என்ன ஆனார்கள் என்று எனது கண்முன்னால் பார்த்திருக்கிறேன். எனது நண்பர்கள் சிலர் அப்படி மைய நீரோட்டத்தில் கரைந்து காணாமல் போனதையும் தற்கொலை செய்துக்கொண்டதையும் சிலர் துபாய் போன்ற நாடுகளில் கிடைத்த வேலை செய்து தங்கள் அடையாளம் இழந்துப் போனதையும், பலர் என்ன ஆனார்கள் என்றே தெரியாமல் போனதையும் பார்த்திருக்கிறேன்.
ரசிகன் நாவலில் வரும் சாதிக் என்ற கதாபாத்திரத்தின் சாயலில் நான் பார்த்த சில நெருங்கிய நண்பர்களின் சாயலை உணர முடிந்தது. எண்பதுகளின் ஆரம்பத்திலிருந்த லட்சியவாத சிறுபத்திரிக்கை மரபை சேர்ந்த சாதிக் தொண்ணூறுகளின் காலகட்டத்துக்கு வரும்போது அவன் வாழ்க்கை உள்ளும் புறமும் எப்படி மாறுகிறது? அவன் நம்பிக்கைகள் எப்படி சிதறுகின்றன? என்பதுதான் ரசிகன் நாவலின் மையம்.
சாதிக்தான் இந்த நாவலின் மையப்புள்ளி என்றாலும் சங்கர் என்ற கதாபாத்திரத்தின் பார்வையில் நாவல் ஆரம்பிக்கிறது. சந்திரமுகி படம் வெளிவந்த காலகட்டத்தில் நாவலின் கதை ஆரம்பிக்கிறது. சென்னையில் கதை தொடங்குகிறது. சந்திரமுகி படத்தின் நூறாவது நாள் வெற்றிவிழாவில் கலந்துக்கொள்ளும் சாதிக் தியேட்டர் வாசலில் இருக்கும் ரஜினி கட்டவுட் மீது ஏறி கால்தடுமாறி அல்லது தற்கொலை எண்ணத்துடன் தானாகவே கீழே விழுந்து மண்டை உடைந்து மூளை சிதறி இறக்கிறான். சாதிக் இறந்த விஷயத்தை சங்கர் ஊரிலிருக்கும் சாதிக்கின் பழைய காதலி ரெஜினாவிடம் சொல்கிறான். அங்கிருந்து பிளாஷ்பேக்காக சாதிக்கின் பின்னணியை சங்கர் சொல்வதாக நாவல் விரிகிறது.
எண்பதுகளில் சாதிக்கை போன்ற ஆட்களை எளிதாக கண்டு பிடித்துவிடலாம். எல்லாருக்கும் ஒரேபோல முகத்தில் தாடி கண்களில் தீர்க்கம், பேச்சில் அலட்சியம், உடம்பில் நீளமான ஜிப்பா என்று பொதுத்தன்மை கொண்டிருப்பார்கள். சாதிக்கின் உலகம் சிற்றிதழ் வாசிப்பு, உலக அரசியலை பேசுவது, நண்பர்களுடன் சேர்ந்து மொட்டை மாடியில் டிவியில் மாற்றுத் திரைப்படங்களை பார்ப்பது, கையில் புகையும் பீடி, தேதீருடன் அகிரகுரசோவா படங்களை பற்றி விவாதிப்பது என்று சுற்றுகிறது. டுட்டோரியல் பள்ளியொன்றில் குறைந்த ஊதியத்தில் வேலை செய்யும் சாதிக் பொருளாதாரத்தை பற்றியெல்லாம் பெரிதாக கவலைப் படுவதில்லை. தஸ்தாயெவ்ஸ்கி, டால்ஸ்டாய், நகுலன், புதுமைப்பித்தன், பிராய்டு,சார்த்தார் என்று வேறு ஓர் உலகத்தில் வாழ்கிறான். சூரியனுக்கு கீழே உள்ள எல்லா விஷயங்களையும் பற்றி அவனால் தீவிரமாக விவாதிக்கமுடியும். எல்லாவற்றையும் ஒரு புதுகோணத்தில் பார்த்து அவன் தனது நண்பர்களுக்கு அறிவாசானாக இருக்கிறான். மார்க்கிசிய சித்தாந்தத்தில் தீவிரமாக நம்பிக்கை கொண்டவன். ஊரில் செங்கதிர் என்னும் சிற்றிதழ் நடத்திவருகிறான்.
இந்நாவல் மூன்று தளங்களில் மூன்று பகுதிகளாக விரிந்து செல்கிறது. முதல் பகுதியில் சாதிக்கின் இலக்கிய நண்பர்கள் அவர்களின் அரசியல் நம்பிக்கைகள் சித்தாந்தங்கள் அவர்களில் சிலரின் வெகுஜன ரசனையை பொருளியல் யதார்த்த வாழ்க்கையை கடுமையாக விமர்சித்து சாதிக் செய்யும் உரையாடல்கள் என்று செல்கிறது. அடுத்த பகுதி சாதிக் அவனது காதலி ரெஜினா பிறகு அவன் திருவனந்தபுரம் பேரலல் கல்லூரியில் பேராசிரியராக சேருவது என்று சுழல்கிறது. மூன்றாவது பகுதியில்தான் சாதிக் சென்னைக்கு வந்து வெகுஜன ரசிக மனோபாவத்தை விரும்பி ஏற்று தீவிர ரஜினி ரசிகனாக மாறி கட்அவுட்டுக்கு பால், பீர் ஊற்றும் வெறிப்பிடித்த ரசிகனாக மாறுவது நடக்கிறது.
சாதிக்கின் தனிப்பட்ட வாழ்க்கையில் பாலியல் ஆர்வமற்று இருக்கிறான். கிட்டத்தட்ட பிரவீணாவிடமும் இதேபோல நிறைவேறாத அல்லது திருப்தியடையாத அலல்து தன்னைத்தானே சுயவதை செய்துக்கொள்ளும் ஒருவித மனநிலை இருக்கிறது. பாலியல் ஆர்வம் இல்லாதவர்கள் கொஞ்சம் டேஞ்சரான ஆட்கள்தான். அதோடு இலக்கியக்கிறுக்கும் சேர்ந்துவிட்டால் இன்னும் மோசம். ஆனால் இந்நாவலின் ஆரம்பத்தில் மிக தீவிரமாக வெகுஜன ரசிக மனோபாவத்தை கிண்டல் செய்யும் ரஜினி படங்களை திட்டும் சாதிக் குறிப்பாக தீவிர மார்க்சியம் பேசும் ஒருவன் எப்படி இப்படியொரு இடத்துக்கு வந்து சேர்ந்திருப்பான்? இது சாத்தியம்தானா என்று யோசிக்கும்போது இலக்கிய உலகத்திலும் ரசிகமனோபாவம் இருப்பதை தாஸ் போன்ற கதாபாத்திரம் வழியாக அபிலாஷ் பதிவு செய்து அதற்கான விளக்கத்தை கொடுக்கிறார்.
மனிதர்களால் சமநிலையை பேணுவது மிகவும் கடினம். ஏதோவொன்றின் மேல் எல்லா மனிதர்களுக்கும் ரசிகமனோபாவம் தேவைப்படுகிறது. சங்கருக்கு ஆன்மிகம். ஆணை பெண் ரசிப்பதும் பெண்ணை ஆண் ரசிப்பதும் அரசியல் தலைவரை தொண்டர்கள் ரசிப்பதும் என்று எல்லாமும் ஒரே புள்ளியில் மனிதர்களின் பாதுகாப்பின்மை ஏற்படுத்தும் பதற்றத்திலிருந்தே பிறக்கின்றன
தாஸ் கதாபாத்திரம் வரும்போதெல்லாம் இவர் யார்? இவரா அவரா என்று யோசிக்க வைக்கிறது. பிற்பாதியில் எழுத்தாளர் தாஸ் சென்னைக்கு வந்து தனக்கென்று வாசகர் வட்டம் என்ற பெயரில் ரசிக அடிவருடிகளை வைத்து ரஜினிக்கு நிகராக தனது கட்அவுட்டுக்கு பீர் அபிகேஷம் செய்யும் பவர்ஸ்டார் கோமாளித் தனங்களை புன்னகையுடன் படித்தேன். குறிப்பாக தாஸின் வாசகர்கள் நாவல் வெளியீட்டு விழாவுக்கு ஒரு பெண்ணை காசுகொடுத்து அழைத்து வருகிறார்கள். அந்தப்பெண் தாஸை தனது மார்பில் கையெழுத்து போட சொல்லி வற்புறுத்துகிறாள். இவள்தான் தனது உணமையான வாசகி என்று தாஸ் மேடையில் பெருமையாக பேசுகிறார். அதே மேடையில் ஏறும் சாதிக் ரஜினி பட வசனங்களை பேச தாஸின் வாசகர்கள் அதற்கும் கைதட்டுகிறார்கள். இரண்டாயிரத்துக்கு பிறகு கிட்டத்தட்ட இலக்கிய ரசிகர்களும் (வாசகர்கள் அல்ல) சினிமா ரசிகர்களும் ஒரே மாதிரித்தான் தங்கள் மூளையை அடகுவைத்து கிடக்கிறார்கள். பிறகு அந்தபெண் மேடைக்கு பின்னால் சென்று மனுஷனா அவன்? கையெழுத்து போட சொன்னால் பேனாவால் கீறி வைக்கிறான். ஒழுங்கா பேசுன காசை கொடுத்துடுங்க என்று தாஸின் வாசகர்களிடம் சண்டை போடுகிறாள்.
எண்பதுகளின் மார்க்சிய சித்தாந்தம் சிதைந்து பின்நவீனத்துவம் வந்தபிறகு அது ஒரு தனிமனித நம்பிக்கைகளை இருப்பை எப்படி அலைக்கழிக்க வைத்து அவனை காணாமல் போக வைத்தது என்பதை வலுவாக பதிவு செய்தவகையில் இந்நாவல் முக்கியம்பெறுகிறது. அதே நேரம் சாதிக் தோற்றுப்போனால் அது அவன் கொண்ட நம்பிக்கைகளின், சித்தாந்தங்களின் தோல்வி அல்ல. வச்சா குடுமி. அடிச்சா மொட்டை என்று சொல்வார்கள். சாதிக்கும் அப்படியொரு பிடிவாத மனநிலையில்தான் வாழ்கிறான். வெகுஜன ரசிக மனோபாவத்தின் உச்சத்துக்கு சென்று ராகேவந்திரா மண்டபம் சென்று ரஜினி காலில் விழுந்து ஆசிப்பெற்று வருகிறான்.
நாவலில் நுட்பமாக வரும் சில இடங்களும் உண்டு. கறுப்பு நாயொன்று சாதிக்கை பின்தொடர்ந்து வந்தபடியே இருக்கிறது. ரஜினி கட்அவுட் மீதிருந்து சாதிக் கால் தவறி விழும்போது அந்த நாய் வந்து அவனது மூளையை நக்குகிறது. எல்லா மகத்தான மூளைகளையும் கடைசியில் ஓர் அற்பநாய் வந்துதான் நக்கிவிட்டு செல்கிறது.

Sunday, November 2, 2014

ஹெர்குலிஸ்

மலைகள்.காம் நவம்பர் மாத இதழில் ஹெர்குலிஸ் என்ற சிறுகதை பிரசுரமாகியுள்ளது. 

சித்தப்பா அந்த சைக்கிளை வாங்கும்போது எனக்கு பத்து வயது. இப்போது நாற்பது வயது. முப்பது வருடத்துக்கு முன்பு கும்பகோணம் இப்படி இருப்பதுபோல இருந்ததில்லை. குறிப்பாக ரயிலடி. மகாமக (மாமாங்குளம் என்று உச்சரிப்பார்கள்) குளத்திலிருந்து நூல்பிடித்ததுபோல நேராக நடந்து வந்தால் ரயிலடிக்கு வந்துவிடலாம். காபி கடைகளும், குதிரை வண்டிகளும், ரிக்சா வண்டிகளும், புகையை கக்கிக்கொண்டே தெற்கு, வடக்காக ஓடும் கரி எஞ்சின் வண்டிகளும் ரயிலடியை சுற்றி இருக்கும் கரிமேடும், அங்கு குவிந்துகிடக்கும் எரிந்துப்போன நிலக்கரிகளை பொறுக்கவரும் மாதளம்பேட்டை சிறுவர்களும், அவர்களை விரட்டும் ரயில்வே போலீஸ்காரர்களும் என்று ஒருபுறம் ஏதோவோர் ஆதிகால சலனப்படம் போலவும், மற்றொருபுறம் நீலமேக மேம்பாலம், அதன் மீதேறிச்செல்லும் சோழன் பேருந்துகள், சுவர்களில் ரஜினி பட போஸ்டர்கள் என்று நவீனமும் கலந்துக்கட்டி நின்றிருந்த காலம். எதிர்ப்படும் எந்த மனிதர்களை பார்த்தாலும் வெற்றிலை எச்சிலும், காபி மணமும் தெறிக்கும். இப்போதுபோல ஊரைச்சுற்றி இருக்கும் நவக்கிரகங்கள் அப்போது பிரபலம் இல்லை. மகாமகத்திருவிழா அன்று வெளியூர் ஆட்கள் நிறையபேர் ஊருக்குள் வருவார்கள். மற்றபடி வழக்கமாக மார்கழி மாதம், கருடச்சேவை என்று வாரத்துக்கு ஒரு திருவிழா நடக்கும். சப்ளாங்கட்டை அடித்துக்கொண்டு பாகவத கதைகளை சொல்பவர்களை பார்க்கலாம். லாட்ஜுகளின் வாசலில் மல்லிகைச்சரம், உதட்டுச்சாயத்துடன் நமுட்டுச்சிரிப்பு சிரிக்கும் பெண்களை ரிக்சாக்காரர்கள் கிண்டல் செய்தபடியே போவார்கள். கரும்பு ஏற்றிக்கொண்டு தார்ச்சாலையில் செல்லும் டிராக்டர்களை துரத்திக்கொண்டே போய் டிரைவர்களுக்கே தெரியாமல் பின்புறமாக கரும்புக்கட்டை உருவி எடுக்கும் ஜகதல பிரதாபன்களும், வீடுகளில் திருடிவிட்டு செல்லும் திருடர்களும், ரயிலடியிலிருந்து பார்த்தால் தெரியும் ஊசிமாதா கோவில் பின்பக்கம் இருந்த அடர்ந்த வயல்களில் சாராயம் காய்ச்சும் ஆட்களுமாய் ஊர் இருந்த காலம் அது.

அப்பாவுக்கு பெரும்பாலும் வெளியூரில்தான் வேலை இருக்கும். நான் பிறந்தபிறகு அவருக்கு கும்பகோணத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் இருந்த நாச்சியார்கோவில் என்ற ஊரில் ஓர் ஆரம்ப சுகாதார மையத்தில் பணிமாற்றம் கிடைத்திருந்தது. அந்நாட்களில் பேருந்தில் பத்து கிலோமீட்டர் பயணம் செய்தாலே உடம்பை நோகவைத்துவிடும். கிலோமீட்டருக்கு மூன்று பேருந்து நிறுத்தங்கள் வரும். அப்பா எவ்வளவோ கேட்டுப்பார்த்தும் கும்பகோணத்துக்குள் பணிமாறுதல் வாங்க முடியவில்லை. அப்போது புதியபேருந்து நிலையம் கட்டியிருக்கவில்லை. பழைய பேருந்துநிலையத்திலிருந்து வரும் சோழன் பேருந்தை ரயிலடி நிறுத்தத்தில் கைக்காட்டி மறித்தால் அரைமணிநேர பயணத்துக்கு பிறகு பித்தளை விளக்குகள் உற்பத்திக்கு பெயர்பெற்ற நாச்சியார்கோவில். நாச்சியார்கோவில் ஆரம்ப சுகாதார மையத்தில் காலரா, யானைக்கால் நோய்க்கு அரசு விநியோகம் செய்யும் த/அ என்று எழுத்துகள் பொறிக்கப்பட்ட மாத்திரைகளை கணக்குப்பார்ப்பதும், வெள்ளை நிற காலி கொசு மருந்து கேன்களை கணக்குப் பார்ப்பதும்தான் அப்பாவின் வேலை. மழை, வெள்ளம் வரும் நாட்களில் அலுவலகத்திலிருந்து ஜீப்பில் பயணித்து சுத்துப்பட்டு கிராமங்களுக்குச் சென்று மருந்து,மாத்திரைகளை விநியோகிக்க வேண்டும். விநியோகம் செய்தவற்றை முறையாக நோட்டில் கணக்கு எழுதவேண்டும். வேலைக்குச்செல்லும் அப்பா மாலையில் வீடு திரும்பும்போது குடித்துவிட்டுதான் வருவார். கையில் மீன்கள் இருக்கும். எங்கள் வீட்டில் பெரும்பாலும் இரவில்தான் மீன் சமையல் நடக்கும். அப்பா வேலைக்கு செல்லாத நாட்களில் அம்மா கோழிக்கறி எடுத்து வந்து குழம்பு வைப்பார். அப்பா வீட்டுக்கு வெளியே இருக்கும் வேப்பமரத்தடியில் கயிற்றுக்கட்டிலை போட்டு உறங்கிக்கொண்டிருப்பார். கறிக்குழம்பு தயாரானதும் அப்பாவை எழுப்பி சோறு போடுவார். மாலையில் அப்பாவின் நண்பர்கள் யாராவது சைக்கிளோடு வருவார்கள். அவர்கள் சைக்கிள் ஓட்ட அப்பா கேரியரில் உட்கார்ந்துக்கொள்வார். அவர்கள் எங்காவது சீட்டுக்கச்சேரி நடத்த கிளம்பிவிடுவார்கள். பிறகு நான் அரைத்தூக்கத்தில் இருக்கும்போது அப்பா எல்லா வேலைநாட்களிலும் செய்வது போன்றே குடித்துவிட்டு வீட்டுக்கு வருவார். சோற்றை போடும் அம்மா அழுதபடியே வந்து எனது பக்கத்தில் படுத்துக்கொள்வார்.

அப்பா வேலைக்கு சென்றிருந்த நாளொன்றின் பகல்பொழுதில் ராஜேந்திரன் உற்சாகமாக வந்தான். வீட்டு வாசலில் நின்றபடி என்னை பெயர் சொல்லி அழைத்தான். நான் வெளியே வந்து பார்த்தபோது அவன் கால்கள் தரையில் பாவியிருக்கவில்லை. சிறுவன் பக்கத்தில் நிற்கும் அவன் வளர்ப்பு நாய்க்குட்டிபோல என்னை பார்த்ததும் தரையிலிருந்து எம்பி எம்பி குதித்து தன்னோடு வரும்படி சைகை செய்தான். ராஜேந்திரன் மாதளம்பேட்டையில் குடியிருப்பவன். பெரியவனானதும் சைக்கிள் கடை வைப்பதுதான் தனது லட்சியம் என்று சொல்லி வாத்தியாரிடம் பிரம்படி வாங்கியவன். தெருவில் யார் சைக்கிளில் போனாலும் அந்த சைக்கிள் பின்னாலேயே கொஞ்சதூரம் வரை ஓடுவான். அந்தக்காலத்தில் ராஜேந்திரன் வயதையொத்த எங்களில் பலருக்கும் சைக்கிள் பைத்தியம் இருந்தது.

சித்தப்பா வீட்டுக்கு பக்கத்துத்தெருவில் ஒரு சைக்கிள்கடை இருந்தது. அந்த சைக்கிள்கடைக்காரர் எப்போதும் கட்டம் போட்ட அழுக்கு லுங்கி அணிந்திருப்பார். கிரீஸ் கறைகளை லுங்கியில் துடைக்கமாட்டார். அதற்கென்று தனியாக துண்டு வைத்திருப்பார். எப்போதும் சிவப்புநிற பார்டர் வைத்த மஞ்சள்நிற முண்டாபனியன் அணிந்திருப்பார். மடித்துக்கட்டிய லுங்கியுடன் குத்துக்காலிட்டு அவர் உட்காரும்போது அவரது வலுவான பின்னங்கால்களின் சதைகள் திரண்டு நிற்கும். அகன்ற தோள்களுடன் வலுவான புஜங்களுடன், நெஞ்சு நிறைந்த கருத்த சுருள் முடிகளோடு கடை முன்பு உட்கார்ந்து சக்கரத்துக்கு கோட்டம் எடுப்பது , பொத்தல் விழுந்த ட்யூப்களில் பஞ்சர் ஒட்டுவது, ஒவாராயிலிங்க் செய்வது என்று எந்நேரமும் அவர் ஏதாவதொரு வேலை செய்துக்கொண்டே இருப்பார். சைக்கிள் கடைக்கு பின்புறம் ஒரு காலித்திடல் இருந்தது. அதில் இரண்டு ப வடிவ இரும்பு உருளைகளை தலைகீழாக மண்ணில் அடித்து எதிரெதிரே இறக்கியிருப்பார்கள். இருட்டிய மாலை நேரங்களில் சைக்கிள்கடைக்காரர் அந்த இரும்பு உருளைகளின் மீது தொங்கிக்கொண்டு உடம்பை முறுக்கி பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பார். கொழுத்த சதை திரட்சியில் பச்சை நரம்புகள் மின்னல்போல நெளிந்தோடும். தண்ணீர் பிடிக்கச்செல்லும் பெண்கள் மடித்து கட்டிய லுங்கியுடன் இரும்புபாரில் உடற்பயிற்சி செய்யும் சைக்கிள்கடைக்காரரையும் , வியர்வை ஊற்றெடுத்து ஓடும் அவரது உடம்பையும் பார்த்தபடியே செல்வார்கள். இரும்பு பொருட்களோடு வேலை செய்பவர்களுக்கு நாளடைவில் உடம்பு இரும்பாக மாறிவிடும் என்று ராஜேந்திரன் சொல்வான். ராஜேந்திரனுக்கு ஏனோ அந்த சைக்கிள்கடைக்காரரை மிகவும் பிடிக்கும். வளர்ந்து பெரியவன் ஆனால் சைக்கிள் கடை வைக்கப்போவதாக என்னிடம் சொல்ல நாங்கள் பேசிக்கொண்டிருந்ததை கேட்ட எனது அம்மா என்னை அதட்டினார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் படித்துவிட்டு சைக்கிள்கடை வேலைக்கு போனால் என்ன? குழப்பமாக இருந்தது.

எனது அப்பாவுக்கு ராஜேந்திரனை பார்த்தாலே முகம் மாறிவிடும். ராஜேந்திரன் மூக்கில் எப்போதும் சளி ஒழுகிக்கொண்டிருக்கும். கால்சட்டை இடுப்பில் நிற்காது. ஒருகையால் டவுசரை இழுத்து விட்டுக்கொண்டே ஓடிவருவான். மறுகையில் ஏதாவது தின்பண்டம் இருக்கும். அல்லது ஒரு குச்சியால் சைக்கிள் டயரை ஓட்டிக்கொண்டே வருவான். சாலையில் நரிக்குறவர்கள் சென்றால் அவர்கள் பின்னாலேயே நடந்து வயலுக்கு போவான். அவர்கள் எப்படி குருவி சுடுகிறார்கள் என்பதை மறுநாள் வகுப்புக்கு வந்து எங்களிடம் விவரிப்பான். ராஜேந்திரன் மீது எப்போதும் ஒருவித கவுச்சிவாடை அடிக்கும். காக்கையை சுட்டு தின்பவர்கள் மீது அப்படித்தான் நாறும் என்று எங்கள் வகுப்பில் படிக்கும் சேதுராமன் அடிக்கடி சொல்வான். ராஜேந்திரன் வீட்டில் மாட்டுக்கறி சமைப்பார்கள். அதுகுறித்து சேதுராமனும், மற்றவர்களும் ராஜேந்திரனை அடிக்கடி கிண்டல் செய்வார்கள். ஆனால் ராஜேந்திரன் அவர்களுடன் சண்டைக்கு போகமாட்டான். நான் ஆடு,கோழி, மீன் சாப்பிடும் எங்களை சேதுராமன் கிண்டல் செய்யமாட்டான். ஒருமுறை ராஜேந்திரனிடம் “நீங்க ஏன் மாட்டுக்கறி சாப்பிடுறீங்க?” என்று கேட்டேன். அது தனக்கும் வருத்தமாகத்தான் உள்ளது என்றும், எங்க வீட்டில் வேறு கறி எதுவும் எடுப்பதில்லை என்றும் சொன்னான். “ஆட்டுக்கறி சாப்பிட்டதே இல்லையா?” என்று வியப்புடன் கேட்டேன். “சாப்பிட்டிருக்கேன். தீபாவளி அன்னைக்கு மட்டும் எங்க வீட்டில் ஆட்டுக்கறி வாங்குவாங்க” என்று சொன்னான். அதன்பிறகு மாட்டுக்கறி குறித்து நாங்கள் அதிகம் எதுவும் பேசிக்கொள்வதில்லை. நான் ராஜேந்திரனிடம் பழகுவது சேதுராமனைபோலவே எனது அப்பாவுக்கும் பிடிக்காது. ஒருமுறை ராஜேந்திரனோடு சேர்ந்துக்கொண்டு கோனார் தோப்பில் மாங்காய் அடித்தேன். விஷயம் கேள்விப்பட்ட எனது அப்பா என்னை தெருவிலேயே நிற்க வைத்து செருப்பால் அடித்து அவமானப்படுத்தினார். அம்மாவும் வந்து என்னை அடிக்க ஆரம்பித்தபிறகுதான் அப்பா அடிப்பதை நிறுத்தினார். என்னை அடித்தபிறகு அம்மாவும் என்னோடு சேர்ந்து அழுதார். இனிமேல் நான் ராஜேந்திரனோடு சேரக்கூடாது என்று திட்டியபடியே என்னை வீட்டுக்குள் அழைத்து வந்தார்.

ராஜேந்திரன் சொல்லித்தான் எனக்கு விஷயம் தெரிந்தது. சித்தப்பா புதுசைக்கிள் வாங்கிவிட்டார் என்று. சித்தப்பா வீட்டு வாசலில் புதுசைக்கிள் நிற்பதாக தலையில் கைவைத்து சத்தியம் செய்தான். நான் மெதுவாக வீட்டின் பின்புறம் எட்டிபார்த்தேன். அம்மா கொல்லையில் பாத்திரங்கள் கழுவிக்கொண்டிருந்தார். சித்தப்பா வீட்டுக்கு போனால் எனது வீட்டில் அடிவிழும். அதுவும் ராஜேந்திரனுடன் சேர்ந்துப்போனால் கொன்றேவிடுவார்கள். ஏன் அப்பாவுக்கு எனது நண்பன் ராஜேந்திரனையும், சித்தப்பாவையும் பிடிக்கமாட்டேங்குது என்று வெகுநாள் வரை எனக்குள் கேட்டுக்கொண்டே இருந்தேன். அம்மா முதுகை காட்டியபடி கொல்லையில் உட்கார்ந்திருக்க விளையாட போறேம்மா என்று சொல்லிவிட்டு நானும், ராஜேந்திரனும் தெருவில் இறங்கி மறைந்தோம். நான்கைந்து தெருக்கள் தள்ளியிருந்த எனது சித்தப்பா வீட்டுக்கு ஆர்வத்தோடு ஓடினோம். சித்தப்பா ரயிலடியிலிருந்து மகாமக குளம் செல்லும் வழியிலிருந்த பவர்லைட் சோப் தயாரிக்கும் கம்பெனி பக்கத்தில் சொந்தமாக மருந்துக்கடை வைத்திருந்தார். சித்தப்பாவுக்கும்,சித்திக்கும் திருமணம் ஆகி ஐந்து வருடங்கள் இருக்கும். பிள்ளைகள் இல்லை. சித்தப்பா அழகன் என்றால் சித்தி பேரழகி.

சித்தப்பா வீட்டின் தெருவில் நுழையும்போது தூரத்திலிருந்தே சைக்கிளை பார்க்க முடிந்தது. திண்ணைக்கு சற்றுத்தள்ளி கம்பீரமாக நின்றிருந்தது அந்த சைக்கிள். குதிரைக்குட்டியின் உறுதியான எலும்புக்கூடுபோல அந்த இரும்பு வாகனம் நின்றிருந்தது. பச்சைநிறத்தில் இருந்த இருக்கையில் கைவைக்க கை பொதிந்துப்போனது. கைகள் கூச்சமாகவும்,உடல் சிலிர்ப்பாகவும் இருந்தது. அப்படியே அந்த பஞ்சுப்பொதியை கையால் அமுக்கிக்கொண்டே இருக்க வேண்டும்போல தோன்றியது. சைக்கிளின் முன்பாரில் பச்சை நிற லெதர் சுற்றப்பட்டிருந்தது. தோலுறையின் ஏழு இடங்களில் சின்ன பொத்தல் போட்டு சின்ன அலுமினியவளையங்கள் அடித்து அந்த இடத்தில பொன்னிற பட்டுக்குஞ்சத்தால் முடிபோடப்பட்டு கட்டப்பட்டிருந்தது. இரும்பு ரிம்களில் சூரிய வெளிச்சம் பட்டு கண்ணை கூச வைத்தன. ஹெட்லைட் மீது இருந்த மஞ்சள்நிற துணி மட்டும் பொருத்தமற்றதாக தெரிந்தது. அதையும் பச்சை நிறத்தில் வாங்கியிருக்கலாம் என்று தோன்றியது.

அப்படியே சைக்கிளின் மற்ற பகுதிகளை நோட்டம் விட்டேன். முன்பாரிலிருந்து முக்கோண வடிவில் சரிவாக இறங்கியிருந்த கம்பியில் யாரோ ஒரு மாவீரன் ஒரு காலை நிலத்தில் அழுத்தமாக ஊன்றி முழங்காலிட்டு அமர்ந்திருந்தான். அந்த மாவீரன் உடல் அவ்வளவு உறுதியாக அழகாக இருந்தது. அவன் சற்று தலையை தாழ்த்தியிருந்தான். அவனது தோள்பட்டையில் உலக உருண்டை இருந்தது. அப்படி ஒரு வசீகர படத்தை நான் அதற்கு முன்னால் பார்த்ததே இல்லை. நான் அந்த அட்லஸ் சைக்கிளை பார்த்து பிரமித்து நின்றிருக்க வீட்டுக்குள்ளிருந்து சித்தி கொலுசு சத்தம் ஒலிக்க வந்தார். எங்கள் பின்னால் சைக்கிள்பெல் சத்தம் கிணிங் கிணிங்கென்று ஒலித்தது. திரும்பி பார்த்தோம். தெருமுனையில் சைக்கிள்கடை வைத்திருப்பவர்தான்.

“என்ன ராசு? புது சைக்கிள் இறக்கிட்டே போல?” என்று சிரித்தபடியே எங்களை கடந்துப்போனார். திரும்பி பார்த்தால் இப்போது சித்தி பக்கத்தில் சித்தப்பாவும் நின்றிருந்தார்.

“ஏன் நாங்க எல்லாம் சைக்கிள் வாங்கக்கூடாதா?” என்று சித்தப்பா கேட்டார்.

“அட சைக்கிள் வாங்கினது சந்தோஷமுன்னு சொன்னேன்ப்பா” என்று சொல்லிவிட்டு அவர் சைக்கிளை மிதித்தபடி பக்கத்து சந்தில் மறைந்தார்.

சித்தி என்னையும், ராஜேந்திரனையும் உள்ளே கூப்பிட்டார்கள். ராஜேந்திரன் என்னோடு சேர்ந்து சித்தப்பா வீட்டுக்குள் நுழைய தயங்கினான்.

“சரிதான் கிடக்கு வாடா பெரிய மனுஷா” என்று சித்தி ராஜேந்திரனை கிண்டல் செய்தார். அவனுக்கு கூச்சமாக இருந்தது.

“என்னடா ஸ்கூல் போகலையா? ரெண்டு பேரும் இங்க சுத்திக்கிட்டு இருக்கீங்க?” சித்தப்பா கேட்டார்.

“இன்னைக்கு லீவ் சித்தப்பா”

சித்தி எங்களுக்கு மணக்க மணக்க காபி போட்டு கொடுத்தார்கள். காபி குடித்துவிட்டு திண்ணைக்கு வந்து அந்த புது சைக்கிளையே அதிசயமாக பார்த்தபடி நின்றோம். சித்தப்பா வீட்டிலிருந்து திரும்பிவரும்போது, “உங்க சித்தி ரொம்ப நல்லவங்கடா. சித்தப்பாதான் மோசம்” என்று ராஜேந்திரன் என்னிடம் சொன்னான். காரணம் எனது சித்தப்பா அவர் முன்பு எங்களை சைக்கிளை தொடக்கூட அனுமதிக்கவில்லை. அதட்டிக்கொண்டே இருந்தார். எங்களுக்கு வருத்தமாக இருந்தது. சைக்கிளில் பார்த்த அந்த மாவீரனின் உருவம் பற்றி ராஜேந்திரனிடம் கேட்டேன். அந்த வீரனின் பெயர் அட்லஸ் என்று ராஜேந்திரன் சொன்னான். நான் நம்பவில்லை. அட்லஸ் என்பது சைக்கிள் கம்பெனி. இவன் ஏதோ அடித்துவிடுகிறான். ஒருவேளை அந்த வீரனின் பெயர் அட்லஸ் என்றாலும் இவனுக்கு எப்படி அது தெரியும்?

“அட்லஸ் என்பது சைக்கிள் கம்பெனி பெயர். மனுஷனுக்கு எல்லாம் அப்படி பெயர் வைப்பாங்களா?” என்று கேட்டேன். அவன் முழித்துவிட்டு அப்படித்தான் எங்க பேட்டைல இருக்கற ஒரு அண்ணா சொன்னார். அவர் இங்க்லீஷ் எல்லாம் நல்லா பேசுவார் என்றும் சொன்னான். அதைப்பற்றி மேலும் பேச விவாதிக்க எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் அந்த தோளில் உலகை சுமக்கும் வசீகர உருவம் எனக்கு பிடித்திருந்தது. பெரியவன் ஆனால் அந்த அட்லஸ் உருவம் போலவே எனது உடலும் மாறும் என்று தீர்மானமாக நம்ப ஆரம்பித்தேன். இந்த அட்லஸ் பெண்ணாக பிறந்தால் எப்படி இருக்குமென்று யோசிப்பேன். கண்டிப்பாக அவள் இப்படி பலசாலியாக இருக்கமாட்டாள். ஆனால் பேரழகியாக இருப்பாள். சிவப்பாக, மேலுதட்டின் மேல் சின்ன மச்சத்தோடு, சாயம் பூசாத ஆனால் சிவந்த உதட்டுடன், காதில் சின்ன ரோஜாப்பூ வைரக்கல் பதித்த தோடுடன், தலையில் இருக்கும் மல்லிகைச்சரம் முன்புற தோளில் புரள நடந்துவருவாள். எனக்கு ஒருக்கணம் சித்தியின் முகம் நினைவுக்கு வந்தது.

சித்தப்பா வாங்கிய அந்த புதுசைக்கிளை பார்ப்பதற்காக நானும், ராஜேந்திரனும் ஏதாவது சாக்கு வைத்துக்கொண்டு தினமும் அவர் வீட்டுக்கு செல்ல ஆரம்பித்தோம். நாங்கள் செல்லும்போதெல்லாம் சித்தப்பா அந்த புதுசைக்கிளை துடைத்துக்கொண்டே இருப்பார். சின்ன தண்ணீர் பக்கெட்டில் துணியை போட்டு பிழிந்தெடுத்து நிதானமாக சைக்கிளின் ஒவ்வொரு அங்குலத்தையும் பார்த்து பார்த்து துடைப்பார். சைக்கிள் டயரில் கூட மண் இருப்பது அவருக்கு பிடிக்காது. மழையில் நனைந்த பனைமரத்தின் நிறத்தில் டயர் எப்போதும் கருப்பாகவே இருக்கும். ஒருவேளை இவர் சைக்கிளை தரையில் விடாமல் ஆகாயத்தில் விடுகிறாரோ என்றுகூட தோன்றும். வாங்கும்போது எப்படி இருந்ததோ அதேபோலவே ஒருவருடம் ஆகியும் சைக்கிள் புதிதாக இருந்தது. சித்தப்பா பக்கத்தில் ஒரு மரப்பெட்டி இருக்கும். அதில் கிரீஸ், எண்ணெய் கேன், சின்ன, சின்ன ஸ்பேனர்கள் உப்புத்தாள் எல்லாம் இருக்கும். சித்தப்பா கருப்பு உப்புத்தாள் வாங்க மாட்டார். அது கொஞ்சம் முரட்டுத்தனமாக இருக்கும். வெள்ளையும், மஞ்சளும் கலந்த நிறத்தில் ஒருவித மென்மையான உப்புத்தாளே எனக்கும் பிடிக்கும். அதைத்தான் அவரும் பெட்டியில் வைத்திருப்பார். புதுசைக்கிளுக்கு அந்த உப்புத்தாள் அநேகமாக தேவைப்படாது. அதை ஏன் வாங்கி வைத்திருக்கார் என்று நினைத்துக்கொள்வேன். சக்கரத்தில் இருக்கும் ஒவ்வொரு போக்ஸ் கம்பிகள் மீதும் மடக்கிய துணியை வைத்து ரம்பத்தால் மரத்துண்டை அறுப்பது போல தேய்த்து துடைப்பார். அதற்கே அரைமணி நேரம் ஆகும். சித்தப்பா கடைக்கு சென்று சைக்கிளுக்கு காற்று அடிக்க மாட்டார். காற்று அடிக்கும் பம்பு வாங்கி வைத்திருந்தார். விசுக்விசுக்கென அவர் காற்று அடிப்பதை பார்க்க சிரிப்பாக இருக்கும். எப்போது பார்த்தாலும் சைக்கிளை துடைத்துக்கொண்டே இருக்கும் சித்தப்பாவை பார்த்தால் ஒருவிதத்தில் எனக்கு சைக்கிள்கடை வைத்திருப்பவர் நினைவுக்கு வருவார். அவருக்கு அது தொழில். பலவிதமான சைக்கிள்களை கடையில் நிற்க வைத்திருக்கிறார். நாள் முழுவதும் சைக்கிளோடு புழங்குகிறார். இவருக்கு கூடவா சைக்கிள் பைத்தியம். அதுசரி சிறுவர்களாகிய எங்களுக்கே சைக்கிள் பைத்தியம் இருக்கும்போது பெரியவர்களுக்கு இருக்காதா?

பல வருடங்கள் முன்பு நடந்த அந்த சைக்கிள் பற்றிய நினைவுகளை எல்லாம் இப்போது அசைபோட காரணம் இருக்கிறது. இன்று காலையில் சென்னை கேகேநகரில் ஒரு சைக்கிள் விபத்தை பார்த்தேன். ஷேர்ஆட்டோ ஓட்டிகொண்டு வந்த யாரோ ஒருத்தன் சைக்கிள்காரனை இடித்து கீழே தள்ளிவிட்டான். நல்லவேளை சைக்கிள்காரனுக்கு பெரிய அடி எதுவும் இல்லை. ஆனால் சைக்கிள் முன்சக்கரம் நசுங்கி கிடந்தது. அந்த சைக்கிள் பார்க்க பொம்மை சைக்கிள் போல இருந்தது. ஐந்து வயது சிறுவன் கூட அநாயசமாக ஒருகையால் தூக்கிவிடுவான் என்று தோன்றியது. இப்போது வரும் எந்த சைக்கிளுமே பழைய அட்லஸ்போல பலம்வாய்ந்த சைக்கிள் இல்லையோ என்று தோன்றியது. அந்த பழைய அட்லஸ் சைக்கிள்தான் எவ்வளவு கம்பீரமானது? எவ்வளவு எடை மிக்கது? ஒருமுறை நானும், ராஜேந்திரனும் சைக்கிள்கடைக்காரனிடம் கெஞ்சி கூத்தாடி அட்லஸ் சைக்கிளை வாடகைக்கு எடுத்து வந்தோம். கடைக்காரன் லேசில் தரவில்லை. ராஜேந்திரனிடம் காசு இல்லை. அவன் வீட்டில் மூன்றுவேளை சமைப்பதே பெரிய விஷயம். நான்தான் தீனி வாங்கி தின்ன அம்மா கொடுத்த தினந்தோறும் கொடுக்கும் காசுகளை மிச்சம் பிடித்து வைத்திருந்தேன். அந்த காசை வைத்துக்கொண்டு வார இறுதியில் வாடகை சைக்கிள் எடுத்து ஓட்டுவோம். சின்ன பசங்க சைக்கிள் பழக என்று சின்ன சைக்கிள் ஒன்று இருக்கும். அதை பார்த்தாலே எனக்கு பிடிக்காத்து. அது ஏதோ சர்க்கஸில் வரும் பபூன் போல கோமாளியாக தெரியும். எனக்கு பெரிய சைக்கிள் ஓட்டத்தான் ஆசை. ஆனால் கால் எட்டாது. குரங்குப்பெடல் போட கேட்டால் கூட கடைக்காரர் தரமாட்டார். அதை எங்களிடம் கொடுத்தால் பெரும்பாலும் பெரியவர்களுக்கு வேறு வாடகை சைக்கிள் இருக்காது. தவிர பெரிய சைக்கிளை எடுத்துக்கொண்டு போகும் சிறுவர்கள் கற்றுக்கொள்ளும்போது சைக்கிளை கீழே போட்டு ஏதாவது சேதமடைந்தால் என்ன செய்வது? அதற்கு பயந்துதான் சிறுவர்களாகிய எங்களுக்கு எந்தக்கடையிலும் யாரும் பெரிய சைக்கிளை வாடகைக்கு தருவதேயில்லை.

ஆனால் அன்று ஏதோ பெரிய மனது வைத்து சைக்கிள்கடைக்காரர் எங்களுக்கு அட்லஸ் சைக்கிளை கொடுத்தார். நானும், ராஜேந்திரனும் அந்த சைக்கிளை ரயிலடி பின்னால் இருந்த குட்ஷெட்டுக்கு தள்ளிக்கொண்டுச் சென்றோம். அங்குதான் பகலில் கூட அவ்வளவாக ஆள் நடமாட்டம் இருக்காது. பெரும்பாலும் ரயில்வே போர்ட்டர்கள் அரிசி குடோன் முன்பு இருக்கும் ஆலமரத்தடியில் உட்கார்ந்து ஆடுபுலி ஆட்டம் ஆடிக்கொண்டிருப்பார்கள். இல்லாவிட்டால் நன்றாக குறட்டைவிட்டு தூங்கிக்கொண்டிருப்பார்கள். அவர்களை தவிர வேறு யாரும் அங்கு வரமாட்டார்கள். நாங்கள் இருவரும் அங்குதான் சைக்கிளில் குரங்குபெடல் போட கற்றுக்கொண்டோம். சின்ன சைக்கிளை நாங்கள் அருமையாக ஓட்டுவோம். ஏன் கைகளை ஹேண்டில்பாரிலிருந்து எடுத்து அகல விரித்தபடியே கூட ஓட்டுவோம். ஆனால் பெரிய சைக்கிளை முதலில் ஓட்டப்பழகிக்கொண்டது அன்றுதான். அன்றுதான் ராஜேந்திரன் என்னிடம் திட்டமொன்றை சொன்னான். முதலில் எனக்கு பயமாக இருந்தாலும் அதில் இருந்த சாகசம் என்னை கவர்ந்தது. ஒரு பெரிய பாறாங்கல் அருகே சைக்கிளை கொண்டுச்சென்றோம். நான் சைக்கிளை பிடித்துக்கொள்ள ராஜேந்திரன் பாறாங்கல் மேல் ஏறி சீட்டில் உட்கார்ந்தான். ராஜேந்திரன் என்னை விட உயரம். ஆனாலும் அவனது கால்கள் பெடலை எட்டவில்லை. உடம்பை வலதுபக்கம் லேசாக சாய்த்தும் எட்டவில்லை. அவனுக்கு பயம் வந்துவிட இறங்கி என்னிடம் சைக்கிளை கொடுத்தான். நான் சைக்கிள் மீது உட்கார்ந்தபிறகுதான் தெரிந்தது. பெடலுக்கும் எனது காலுக்கும் இடையே நான்கு அடியாவது இடைவெளி இருந்தது. டேய் டேய் என்று பயத்தில் கத்த அவன் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் சிரித்தபடியே என்னை சைக்கிளின் கேரியரில் கைவைத்து என்னை அப்படியே முன்னால் தள்ளிவிட்டான். நான் பயத்தில் கத்தியபடியே அவ்வளவு பெரிய சைக்கிளில் பயணம் செய்யும் எலிக்குஞ்சுபோல முன்னால் சென்றுக் கொண்டிருந்தேன். முன்னால் வேறு பெரிய மண்சரிவு. சரிவில் வண்டி உச்சக்கட்ட வேகத்தில் இறங்கியது. எப்படி சைக்கிளை நிறுத்துவது? பிரேக் போட்டாலும் தரையில் காலை ஊன்ற முடியாது. தடுமாறிக்கொண்டிருக்க சைக்கிள் அப்படியே வலதுப்பக்கம் விழுந்தது. நான் தரையில் ரத்த சிராய்ப்புகளுடன் கிடக்க எனது தொடையின் மேல் அந்த கனத்த சைக்கிள் கிடந்தது. அப்போதுதான் அட்லஸ் சைக்கிளின் பலம் புரிந்தது. முரட்டு இரும்பை ஆலையில் உருக்கி வார்ப்புகளில் ஊற்றி தயார் செய்யப்பட்ட எல்லா அட்லஸ் சைக்கிள்களும் அப்போது ஒரே நிறத்தில்தான் இருந்தன. ஒரு துளிக்கூட பிளாஸ்டிக் இல்லை. இப்போதெல்லாம் கலர்கலராக நிறைய பிளாஸ்டிக் சைக்கிள்கள் வந்துவிட்டன.

அது போன்ற ஒரு பிளாஸ்டிக் சைக்கிளை ஓட்டி வந்த ஆளைத்தான் கேகே நகரில் பார்த்தேன். ஷேர் ஆட்டோ மோதியதில் ஜிம்னாஸ்டிக் செய்யும் பெண்களின் பாவனைபோல விநோதமான தோரணையில் உடம்பை வளைத்து கிடந்தது. அன்று அந்த அட்லஸ் வாடகை சைக்கிள் அவ்வளவு பெரிய மண்சரிவிலிருந்து கீழே விழுந்தும் ஹெட்லைட் மட்டும் உடைந்துப்போனது. அந்த வாடகை சைக்கிள் கடைக்காரன் எனது அப்பாவிடம் சொல்ல அன்று எனக்கு வீட்டில் பிரம்படி விழுந்தது. மறுநாள் எனக்கு காய்ச்சல் வந்தது. ஒரு வாரம் பள்ளிக்கூடம் செல்லவில்லை. எனது படுக்கையருகே அமைதியாக நடந்து வந்த அப்பாவை பார்த்து “எங்களை ஒரேடியா கொன்னுடுங்க” என்று அம்மா சீறிக்கொண்டு வந்தார். அப்பா சட்டையை எடுத்து அணிந்து மவுனமாக வீட்டை விட்டு வெளியே சென்றதையும் படுக்கையில் படுத்தபடியே பார்த்துக்கொண்டிருந்தேன். அதற்கு பிறகு அட்லஸ் சைக்கிளை பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஏக்கமாக இருக்கும். அந்த ஏக்கம் எப்படி மறைந்தது என்று நினைத்துப்பார்த்தால் சரியாக சொல்ல தெரியவில்லை.

இப்போது என்னிடம் போர்டு கார் இருக்கிறது. அட்லஸை விட பலமடங்கு கனத்த உருவம் கொண்ட அசுரன். சைக்கிள் மேலே விழுந்தால் கூட உயிருக்கு ஒன்றும் நேராது. ஆனால் கார் விழுந்தால்? சைக்கிளை விட கார்தானே வலிமையானது? ஒருநாள் ஈசிஆரில் இருக்கும் மாயாஜாலுக்கு படம் பார்க்க மனைவியோடு காரில் சென்றிருந்தேன். ஓர் இளைஞன் பல்சரில் நூறு கிலோமீட்டர் வேகத்தில் வந்து திரையரங்கு வாசலில் சடன்பிரேக் அடித்தான். பல்சரின் முன்சக்கரம் தாழ்ந்து பின்னிருக்கை சற்று உயர்ந்து நின்றது. பல்சரின் பின்னால் உட்கார்ந்திருந்த ஜீன்ஸ் அணிந்த அழகான இளம்பெண்ணொருத்தி வாவ் என்று அதீத திகைப்புடன் அவனை இறுக்கி கட்டிக்கொண்டாள். எனது மனைவி என்னிடம் “நீங்க ஏன் இருசக்கர வாகனம் வாங்கக்கூடாது?” என்று கேட்டாள். பெண்களுக்கு காரைவிட இருசக்கர வாகனம்தான் பிடிக்கிறது என்று எனக்கு அன்றுதான் தெரிந்தது. அன்றிலிருந்து கார் மீதான எனது பார்வை மாறிப்போனது. நான் பத்தாவது படிக்கும்வரை எனக்கு கிளர்ச்சியூட்டும் கனவொன்று அடிக்கடி வரும். ஏதாவது ஒரு பெண்ணை சைக்கிளின் முன்பக்கம் இருக்கும் முன்பாரில் உட்கார வைத்து நான் ஊருக்கு வெளியே தனியாக காடு,மலை என்று சைக்கிள் ஓட்டிச்செல்வது போல. அப்படி சைக்கிள் ஓட்டிச்செல்லும்போது அந்த பெண்ணின் உடலோடு எனது தொடைகள் உரசும்போது பெரும்பாலும் கனவிலிருந்து விழித்துக்கொள்வேன். உடம்பு வியர்த்து தொண்டை வறட்சியாக உணர்வேன். எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தகிக்கும் அந்த வேட்கை அடங்காமல் தூக்கமும் வராமல் அவஸ்தையாக இருக்கும். இப்போது சைக்கிள் பற்றிய எந்த நினைவுகளும் என்னை வருத்தம் கொள்ள செய்வதில்லை. எப்போதாவது அபூர்வமாகவே கனவுகள் வரும். அதில் சைக்கிள் வராது. மனிதனுக்கு ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு பொருள் மீது காதல். ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு கனவுகள். வெளியில் சொல்லமுடியாத எத்தனையோ ஏக்கங்கள்.

சென்னையில் சைக்கிள் ஓட்டிச்சென்றால் சிரிப்பார்கள். சென்னையில் பெரும்பாலும் சேரிமக்களே சைக்கிள் ஓட்டுகிறார்கள் என்பது எனது கண்டுபிடிப்பு. நான் அமெரிக்காவுக்கும்,ஜெர்மனிக்கும் அலுவலக வேலை நிமித்தம் சென்றிருக்கிறேன். அங்கு எனது பிராஜக்ட் மேனேஜர்கள் சிலர் ஒருசில நாட்களில் சைக்கிளில் அலுவலகம் வந்துச்செல்வதை பார்க்க வியப்பாக இருக்கும். அமெரிக்கர்களுக்கு பிறகு சென்னையில் இருக்கும் விளம்புநிலை மனிதர்கள்தான் வெட்கப்படாமல் சைக்கிள் ஓட்டுகிறார்கள் என்பது எனது கண்டுபிடிப்பு. பொருளாதாரத்தில் முன்னேறிய மக்களுக்கும் சைக்கிள் பிடித்திருக்கிறது. ஏழைகளுக்கும் சைக்கிளே உற்றத்தோழன். ஏன் சென்னையில் இருக்கும் நடுத்தரமக்கள் பலருக்கும் சைக்கிள் வாங்கி ஓட்ட வெட்கமாக உள்ளது என்று யோசித்ததுண்டு. கேகேநகரில் இன்று காலை ஒரு சைக்கிள் விபத்தை பார்த்தேன் என்று சொன்னேன் அல்லவா? அந்த பொம்மை சைக்கிளை போன்றே மேலும் சில பொம்மை சைக்கிள்களை எனது வீட்டருகே பள்ளிச்சிறுமிகள் ஓட்டி கவனித்துள்ளேன். அந்த சைக்கிள்களில் பிஎஸ்ஏ என்று பொறிக்கப்பட்டிருப்பதை பார்த்து திகைப்பாக இருந்தது. ஒருவேளை இப்போது உறுதியான முரட்டு இரும்பை விட கவர்ச்சியான வண்ண சைக்கிளைத்தான் மக்கள் விரும்புகிறார்களோ?

அட்லஸ் சைக்கிள் பற்றி நினைக்கும்போதெல்லாம் எனக்கு ஹெர்குலிஸ் என்ற இன்னொரு சைக்கிள் நினைவுக்கு வரும். இதுபற்றி அப்போது எங்களுக்குள் பெருந்த சண்டையே நடக்கும். அட்லஸ் சைக்கிளில் இருக்கும் மாவீரனின் லோகோவை சிலர் ஹெர்குலிஸ் என்று தவறாக நினைத்ததுண்டு. சேதுராமனின் அப்பா ஒரு சைக்கிள் வாங்கியிருந்தார். அந்த சைக்கிளின் பெயர் ஹெர்குலிஸ். எனக்கும்,ராஜேந்திரனுக்கும் ஏனோ ஹெர்குலிஸ் சைக்கிளை பிடிக்காது. ஆனால் சேதுராமன் எங்களை கிண்டல் செய்துக்கொண்டே இருப்பான். ஹெர்குலிஸ்தான் மாவீரன், அட்லஸ் வீரன் இல்லை என்று சொல்வான். எங்களுக்கு வரலாறு பாடம் எடுத்த சொக்கலிங்கம் சார்தான் அந்தக்கதையை எங்களுக்கு சொன்னார். அந்தக்கதையை கேட்டபிறகும் சேதுராமன் எங்களிடம் ஹெர்குலிஸ்தான் மாவீரன் என்றே தொடர்ந்து வாதிட்டான்.

முன்னொரு காலத்தில் இந்த உலகத்தில் பிரம்மாண்டமான, வலிமையான உடலை கொண்ட ஒரு மனித இனம் இருந்தது. அந்த இனத்திற்கு ‘டைடன்ஸ்’ என்று பெயர். அதில் இனத்தில் ஒருவன்தான் அட்லஸ்.

ஒருமுறை டைடன்ஸுகளுக்கும், கிரேக்க கடவுள்களுக்கும் பெரிய யுத்தம் ஆரம்பித்தது. அதில் டைடன்கள் அனைவரும் தோற்றுப்போய் கடவுளர்களால் தண்டிக்கப்பட்டனர். அவ்வளவு பெரிய தண்டனையை அட்லஸ் என்ற மாவீரன் தனது இனத்துக்காக ஏற்க தானாகவே முன்வந்தான். தனது தோளில் பூமியை தூக்கி சுமக்க வேண்டும் என்பதுதான் அட்லஸுக்குக் கிடைத்த தண்டனை. அட்லஸ் அந்த தண்டனையை ஏற்று பல பல யுகங்கள் தனது தோளில் பூமியை சுமந்துகொண்டு நின்றிருந்தான்.

ஒருநாள் இன்னொரு கிரேக்க மாவீரன் ‘ஹெர்குலிஸ்’ அட்லஸை சந்திக்க வந்தான். ஹெர்குலிஸ் கிடைத்தற்கரிய தங்க ஆப்பிள்களை தேடி அலைந்துக்கொண்டிருந்தான். ஆனால் அந்த ஆப்பிள்கள் இருக்குமிடத்தை அட்லஸ் மட்டுமே அறிவார். அதனால் அட்லஸ் ஹெர்குலிஸிடம் தான் சென்று அந்த ஆப்பிள்களை கொண்டு வருவதாகவும் அதுவரை பூமியை சுமக்கும்படியும் கேட்டுக் கொண்டார். அட்லஸைப் போலவே ஹெர்குலிஸும் பெரிய கனத்த உருவத்துடனும்,மாவீரனாகவும் இருந்ததால் பூமியை சுமக்க ஒப்புக்கொண்டான்.

பல யுகங்கள் கழித்து அட்லஸ் தங்க ஆப்பிள்களுடன் திரும்பி வந்தபோது, ஹெர்குலிஸ் பூமியை தூக்கமுடியாமல் வியர்த்து தடுமாறிக்கொண்டு இருந்தான். அப்போதுதான் அட்லஸுக்கு பூமியைத் தூக்கி சுமப்பது எத்தனை கடினமான காரியம் என்று புரிந்தது.

எதாவது தந்திரம் செய்து ஹெர்குலிஸையே பூமியை சுமக்கும்படி செய்துவிட்டுத் தான் சுதந்திர மனிதனாக இருக்கலாம் என்று அட்லஸ் நினைத்தான். ஆனால் அட்லஸ் மனதில் நினைத்தது ஹெர்குலிஸுக்குத் தெரிந்துவிடுகிறது. அட்லஸிடம் சற்று நேரம் மட்டும் இந்த பூமியை பிடித்துக்கொள். எனது ஒரு தோளில் இருந்து இன்னொரு தோளுக்கு மாற்றி வைத்துக்கொள்கிறேன். உதவி செய் என்று சொல்ல . அட்லஸ் அதை நம்பி ஹெர்குலிசிடம் இருந்து பூமியை வாங்குகிறான். பூமியை கொடுத்தும் ஹெர்குலிஸ் அங்கிருந்து ஓடிவிடுகிறான்.

திகைத்துப்போன அட்லஸ் வேறுவழியில்லாமல் யுகயுகமாக தனது பாரத்தை சுமந்தபடியே மலையாக சமைந்துவிடுகிறான். வடமேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள மலைகள் ‘அட்லஸ் தி டைடன்’ என்றே அழைக்கப்படுகின்றன. அம்மலைகள் இன்றும் சொர்க்கத்தை தூக்கிப் பிடித்திருப்பதாக நம்பப்படுகிறது.

சொக்கலிங்கம் சார் எங்களிடம் சொன்ன கதை இதுதான். பல வருடங்கள் சென்றபிறகும் இன்றும் அந்த கிரேக்க கதை அதே காவியச்சுவையுடன் என்னை வசீகரிக்க வைக்கிறது. சில நாட்கள் சென்றபிறகு சேதுராமனின் தாத்தா அவனிடம் ஒரு கதை சொன்னதாக எங்களிடம் சொன்னான். அந்த புராணக்கதையில் ஒரு கடவுள் பன்றி அவதாரம் எடுத்து உலகத்தை தாங்கி பிடித்ததாக சொன்னான். பன்றி எப்படி உலகத்தை தூக்கமுடியும் என்று எதிர்கேள்வி கேட்டோம். அவனுக்கு சரியாக பதில் சொல்ல தெரியவில்லை.

எனது வாழ்க்கையில் மறக்கமுடியாத நாளென்று ஒன்றை சொல்ல வேண்டும். அது நான் எனது சித்தப்பாவின் அட்லஸ் சைக்கிளை எடுத்து ஓட்ட ஆரம்பித்த தினம். நன்றாக நினைவுள்ளது. அன்று அப்பா ஊரில் இல்லை. வேலைக்குச் சென்றிருந்தார். வேலைக்கு கிளம்பிச்செல்வதற்கு முன்பு “தம்பியாடி அவன். குடும்ப மானத்தையே வாங்கிட்டான்” என்று சொல்லிவிட்டு அம்மாவின் முடியை இழுத்துப்போட்டு அடித்தார். எதற்கு அம்மாவை அடிக்கிறார் என்று தெரியாமல் நான் நடுக்கத்துடன் சுவர்பல்லி போல கட்டிலின் மூலையில் தொடைநடுங்க ஒளிந்துக்கொண்டேன். எனது டவுசரில் இரண்டொரு சொட்டு சிறுநீர் கூட கழித்துவிட்டேன். அப்பா கோபத்துடன் கிளம்பி வேலைக்கு கிளம்பிவிட்டார். அன்று அப்பா கையில் டிபன்பாக்ஸ் இல்லை. வாசல்வரை சென்ற அப்பா “மானங்கெட்டவன். அவன் வீட்டுப்பக்கம் போனா உன்னை வெட்டி போட்டுடுவேன். எனக்கே தம்பி இல்லைன்னு ஆச்சு. உனக்கு என்னடி பாசம். பத்துமாசம் சுமந்து பெத்தவ மாதிரி” என்று ஊருக்கே கேட்கும்படி கத்திவிட்டு ரபப்ர் செருப்பை காலில் மாட்டிக்கொண்டு விடுவிடுவென தெருவில் இறங்கி நடந்துப்போனார்.

அவர் சென்றபிறகு நான் கட்டில் மூலையிலிருந்து வெளியே வந்தேன். எனது உடம்பு நடுங்கிக்கொண்டிருந்தது. அம்மா என்னை பார்த்து கைகளை நீட்டினார். நான் கோழிக்குஞ்சு போல குடுகுடுவென ஓடிச்சென்று அம்மாவின் கைகளுக்குள் எனது சின்ன உடலை புதைத்துக்கொண்டேன். அம்மாவின் இளஞ்சூடு எனக்கு ஆசுவாசமாக இருந்தது. வெகுநேரம் வரை விசும்பிக்கொண்டிருந்த அம்மா ஏதோ தீர்மானமாக எழுந்து முகம் கழுவி என்னை அழைத்துக்கொண்டு சித்தப்பா வீட்டுக்கு கிளம்பிச்சென்றார். சித்தப்பா வீட்டுக்குள் சோகமாக உட்கார்ந்திருந்தார். வீட்டு திண்ணையில் ஆண்களில் சிலர் ஏதேதோ பேசிக்கொண்டும், கத்திக்கொண்டும் உட்கார்ந்திருந்தார்கள். சிலர் அமைதியாக இருந்தார்கள். அவர்களில் பலர் எங்கள் தூரத்து உறவினர்கள். அக்கம்பக்க வீட்டிலிருந்த பெண்கள் ரகசியமாக ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்து ஏதோ அவர்களுக்குள் கிசுகிசுத்துக்கொண்டிருந்தார்கள். திண்ணையில் உட்கார்ந்திருந்த ஆண்களை பார்த்த சில பெண்கள் அவசரமாக ஜன்னலை மூடிக்கொண்டார்கள். அம்மா வேகமாக சித்தப்பாவின் வீட்டுக்குள் நுழைந்தார். நேராக சமையல்கட்டுக்கு சென்று வயர்கூடையை எடுத்த அம்மா தெருவில் இறங்கி நடந்தார். தெரு முனையில் பெட்டிக்கடை இருந்தது. பால்பாக்கெட்டுடன் திரும்பி வந்த அம்மா வீட்டுக்குள் நுழைந்து காபி போட்டு மணக்க மணக்க எடுத்து வந்தார். சித்தப்பா குடிக்கவில்லை. திண்ணையில் அமர்ந்திருந்த ஆண்கள் அனைவரும் வீட்டுக்குள் வந்து சித்தப்பாவை வற்புறுத்தி குடிக்க வைத்தார்கள். சித்தப்பா அழுதபடியே காபியை குடித்தார். வந்திருந்தவர்கள் எல்லாரும் மெல்ல மெல்ல கலைந்துப்போனார்கள்.

நான் சித்தப்பாவின் வீட்டுக்குள் போகாமல் தெருவில் திண்ணையை ஒட்டி நின்றுக்கொண்டிருந்த சைக்கிள் பக்கத்திலேயே நின்றுக்கொண்டிருந்தேன். அந்த அட்லஸ் உருவத்தின் மீதான காதல் எனது மனதில் நாள்தோறும் வளர்ந்துக்கொண்டே சென்றது. அட்லஸ் சாதாரண ஆள் இல்லை. புலிவாலை கையால பிடிச்சு அந்தரத்துல சுழற்றி தரையில அடிப்பான். மலையை பெயர்த்து கடலுக்குள்ள வீசுவான் என்று ராஜேந்திரன் சொன்னதே மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. இருக்காதா பின்ன. உலகத்தையே தோளில வச்சு தூக்கிட்டானே என்று யோசித்துக்கொண்டிருக்கும்போது சித்தப்பா உள்ளிருந்து வந்தார். அவர் முகம் வீங்கி கண்கள் கருத்துப்போய் கிடந்தன. அவர் கையில் சைக்கிளின் சாவி இருந்தது. என்னால் நம்பவே முடியவில்லை. சித்தப்பாதானா? காற்றில் மிதப்பதுபோல உணர்ந்தேன்.

சந்தோஷத்துடன் சாவியை வாங்கிக்கொண்டு குரங்குப்பெடல் போட்டுக்கொண்டே பக்கத்துக்கு தெருவுக்கு வந்தேன். ராஜேந்திரன் கண்கள் அகலவிரித்தபடியே ஆச்சர்யத்துடன் என்னை நோக்கி ஓடிவந்தான்.

“டேய்…எப்படிடா உங்க சித்தப்பா சைக்கிளை கொடுத்தார்?”

“அதாண்டா எனக்கும் தெரியல. ஒரே சந்தோஷமா இருக்கு”

சைக்கிள் ஹெட்லைட்டில் புதுமஞ்சள் துணி சுற்றியிருந்தது. இரண்டு வீல்களிலும் நடுவில் தூசிபடியாமல் இருக்க மாட்டிவிட்டிருந்த கலர்ப்பூ பார்க்க கவர்ச்சியாக இருந்தது. ராஜேந்திரன் முன்வீலில் இருந்த கலர்ப்பூவை தொட்டு பார்த்துவிட்டு பறவை றெக்கை மாதிரி கலர் கலரா இருக்குடா என்றான். நாங்கள் நின்று பேசிக்கொண்டிருந்த தெருவில் எங்கள் பக்கவாட்டில் இருந்த சைக்கிள் கடை பூட்டிக்கிடந்தது.

“சைக்கிள கொடுத்ததுக்கு உங்க சித்தப்பா ஒண்ணும் சொல்லலையாடா?”

ராஜேந்திரன் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று நான் அன்று பெரிதாக யோசிக்கவோ, கவலைப்படவோ இல்லை. என் கண்கள் எல்லாம் சைக்கிளின் மீதே பதிந்திருந்தன. நான் இருட்டும்போதுதான் சித்தப்பா வீட்டுக்கு சென்றேன். சித்தப்பா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். சைக்கிளின் சாவியை சித்தப்பாவிடம் கொடுத்தேன்.

“நீயே வச்சுக்கடா. வீட்டுக்கு எடுத்துட்டுப்போ’ என்றார். எனக்கு திகைப்பாக இருந்தது. நம்பமுடியாமல் அவர் என்னிடம் கொடுத்த சாவியை வாங்கிக்கொண்டு வாசலுக்கு வந்தேன். ஹாலில் மாட்டியிருந்த சித்தப்பா திருமணப்போட்டோவை காணவில்லை. அடுத்தடுத்த நாட்களில் நானும், ராஜேந்திரனும் பூட்டிக்கிடந்த சைக்கிள்கடை பின்னாலிருந்த காலித்திடலில் உற்சாகமாக கத்தியபடியே சைக்கிளை மாற்றி மாற்றி கொண்டாட்டத்துடன் கால்வலிக்கும்வரை ஓட்டினோம்.