Saturday, September 26, 2009

"சிங்கம்" - நவீன விருட்சம் கவிதை

நவீன விருட்சம் வலைப்பூவில் எனது சிங்கம் என்ற கவிதை வாசிக்கலாம்

சிங்கம்
------
சிங்கம் என்றால்
சிறுவயது முதலே
எனக்கு பயம்.
கதை கதையாக கேட்டிருக்கின்றேன்.
சிங்கம் என்று சொல்லி
ஊட்டிவிட்டால் முரண்டுபிடிக்காமல்
வாங்கிக்கொள்வேனாம்.
தொலைக்காட்சிப் பெட்டிகளில்
கூரான நகங்களால்
மான்களின் வயிற்றை
கிழித்துண்பதை பார்த்து
நடுங்கியிருக்கின்றேன் பலமுறை.
அடிக்கடி எனக்குள் வியர்க்கும்.
என்னை தின்றுவிடுமோ
என்னும் பயம்.
பலநாள் கழித்து
பரிதாப சிங்கமொன்றை பார்த்தேன்.
வண்டலூர் மிருகக்காட்சிசாலையில்
முடிக்கொட்டி,உடல்மெலிந்து
சிறுவர்கள் சப்பிப்போட்ட ஐஸ் குச்சிகளை
எதிர்க்க திராணியற்று கம்பிகளுக்கு அப்பால்.
இப்போதும் எனக்குள் பயம். வேறுவிதமாக.
என்னை தின்றிருந்தால் கூட
வந்திருக்காது இந்த பயம்.

நன்றி
என்.விநாயக முருகன்

Friday, September 25, 2009

பிறப்பு - வார்ப்பு.காம்

வார்ப்பு.காமில் வெளியான எனது பிறப்பு கவிதை வாசிக்க...

பிறப்பு
------
நண்பருக்கு
குழந்தை பிறந்திருப்பதையறிந்து
வாழ்த்துச்சொல்ல கிளம்பினேன்.
பனிக்காலையில் பூத்தமலர்
போல உறங்கிக்கொண்டிருந்த
குழந்தையை கொஞ்சநேரம்
ரசித்துவிட்டு நண்பருடன்
பேசிக்கொண்டிருந்தேன்.
நல்ல ஸ்கூல்
கிடைக்கவேண்டுமென்று
கவலைப்பட்டார் என்னிடம்.

-நன்றி
என்.விநாயக முருகன்

Thursday, September 24, 2009

ரயில் ‌விளையா‌ட்டு.. கோடுகள்.. மவுன விளையாட்டு - வார்ப்பு.காம்

வார்ப்பு.காமில் வெளியான எனது மூன்று கவிதைகளை வாசிக்க...


01.
ரயில் ‌விளையா‌ட்டு
----------------------------

வரிசையாக ஐந்து வாண்டுகள்
ஒன்றின் இடுப்பை
ஒன்று பிடித்து ‌விளையா‌ட
காடு மலை பள்ளமென்று
சளைக்காமல் சென்றது ரயில்.
நடுவில் திடீரென
மண்டிப்போட்டு தவழும்
குழந்தையொன்று வர
திடீரென பதறிப்போய்
நின்றது ரயில்.
நானும் ச்சும்மாங்காட்டி
ரயில் கடக்கும் வரை
காத்திருந்து நடந்தேன்.



02.
கோடுகள்
--------------
கையெழுத்து நேராக
வரவேண்டுமென்பதற்காக
கோடுப்போட்ட நோட்டு
ஒ‌ன்றை வாங்கி தந்தேன்
ஐந்து வயது‌ மகளுக்கு.
எப்படி முயற்சித்தும்
எவ்வளவு திட்டினா‌‌‌லும்
கோட்டுக்குள் அடங்க மறுத்து
வெளியே வெளியே
வ‌ந்து விழுந்தன எழுத்துக்கள்.
கோபத்தில் இரண்டு அடியும்
வைத்தேன். சற்றுக் கழித்து
கோடுபோடாத நோட்டொன்றில்
கிறுக்கியவள் எழுத்துக்களுக்கு
ஏற்றாற்போல அழகாக கோடுகள்
வரைந்து என்னிடம் நீட்டினா‌‌‌ள்.



03.
மவுன விளையாட்டு
-------------------------

வீட்டு விசேசமொன்றிற்கு
வ‌ந்த குழந்தைகள்
இங்கும் அங்குமாய்
ஆடி ஓடி கூச்சலிட்டு
துரத்திக்கொண்டு
ஆர்ப்பாட்டமாய் விளையாடினா‌‌‌ர்கள்.
யாரோ அதட்டினா‌‌‌ர்கள்.
சொன்னா ‌‌‌கேக்க மாட்டீங்க?
மவுனமாக விளையாடுங்க.
பிறகு குழந்தைகள்
மவுனத்தை கத்தியபடியே
அறையெங்கும் ஆடி ஓடி
அலைந்து சொன்னார்கள்.


-நன்றி
என்.விநாயக முருகன்

Wednesday, September 23, 2009

"பணமா? பாசமா? " - திண்ணை.காம் கவிதை

திண்ணை.காமில் எனது இந்த கவிதை வாசிக்கலாம்...


பணமா? பாசமா?
———————————————
பட்டிமன்றமொன்றில்
பணமா…பாசமாவென்று பேச
பாசத்துடன் அழைத்தார்கள்.
பாசமென்ற தலைப்பில்
பத்துப்பக்கம் எழுதிச்சென்றிருந்தேன்.
கடைசிநேர ஆள்பற்றாக்குறையாம்.
பணம் கொஞ்சம் சேர்த்துத்தருவதாக
அணி மாற சொன்னார்கள்.
பாசத்தையெல்லாம் அடித்து
பணமென்று மாற்றிக்கொண்டிருந்தேன்.
சற்றுக்கழித்து வந்த தகவலில்
நடுவருக்கு வர இயலாமல் போனதாம்.
நடுவில் அமர சொன்னார்கள்.
பாசம் அடிக்கப்பட்ட பேப்பர்களில்
பணத்தை கழித்துவிட்டு
பொதுவான தீர்ப்பொன்று
சொல்லி திரும்பினேன்.

-நன்றி
என்.விநாயக முருகன்

Tuesday, September 22, 2009

தொடர் பதிவு -2

பா.ராஜாராம் அழைத்த தொடர் பதிவு இது...

- அன்பு - அனேகமாக ஒருவனை அடித்துவிட்டு அவனிடம் போதிப்பது

- ஆழி சூழ் உலகு - சமீபத்தில் படித்தது (பரிந்துரைத்தவர் ஜ்யோவ்ராம் சுந்தர்)

- இறைவன் - இ‌து வரை பார்த்ததில்லை. எங்க சிரிக்க வுடுறாங்க ஏழைகளை?

- ஈயென இரத்தல் இழிந்தன்று (இ‌து பிச்சை எடுப்பவர்களுக்கு சொன்னது)
அதனெதிர் ஈயேனென்றல் அதனினும் இழிந்தன்று
(இ‌து பிச்சைக்காரர்களை உருவாக்கும் அரசாங்கத்துக்கு சொன்னது )

- உழைத்தால் பெரிய ஆளாக ஆகலாம் என்று சொல்வதெல்லாம் பித்தலாட்டம்.
உழைப்பை எப்படி புத்திசாலித்தனமாக மாற்றுகின்றீர்கள் என்பதில்தான் எல்லாம்
இருக்கிறது.

- ஊரை விட்டு ஓடி வ‌ந்து பதினைந்து வருடங்கள் மேல் ஆகின்றது. சொந்த ஊர் ரொம்பவே மாறிவிட்டது.

- எனக்கு யாருமில்லை
நான் கூட
(நகுலன்)
இன்று வரை இந்த கவிதை எனக்கு மண்டை காய வைக்கின்றது. இதன்
உண்மையான அர்த்தம் தெரிந்தவர்கள் என்னோடு பகிரவும்.

- ஏமாற்றம் ஒன்றே ஏமாறாதது. அதனால் ஏமாற்றுவதில்
தப்பில்லை.காசு வாங்கிட்டு தாராளமாக மாற்றி ஓட்டுப் போடலாம்.தப்பில்லை.

- சட்டென எதுவும் நினைவுக்கு வரவில்லை. கவிஞர் ஐராவதம்
பிறகு ஐஸ்வர்யாராய்..ம்ம்ம் யோசிக்கனும்.

- 'ஒ'ரு கவிதை சொல்லலாமா?

காந்தள் மென்விரல்
கடிந்தாள் எஸ்.எம்.எஸில்
சாயங்காலம் வர்றப்ப
சக்தி புளிமிக்ஸ் வாங்கிட்டு வாங்க.
கூடவே வாரணம் ஆயிரம்
பால்கனி டிக்கட் இரண்டு.
ஓ.கே செல்லம் பதிலில்
சிவந்தாள் என் மகள்.

- ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம். (தீவிர வாசிப்பு பழக்கம்)

ஒள - ஒளவையார் வேடம் போட்டு ஒரு பாடலின் (மகாநடிகன்) ஆரம்பக்காட்சியில்
மும்தாஜ் வருவார். எனக்கு ஒளவையார் பாடல்கள் ரொம்ப பிடிக்கும்.

- ஆயுத எழுத்து. தமிழில் இது வழக்கொழிந்து விட்டது. யாரும் இப்போது இந்த எழுத்தை அவ்வளவாக பயன்படுத்துவதில்லை. வளர்ந்த நாடுகள் கவனிக்குமா?



A - Available/single? Married (Unfortunately)
I can available (Just said for speaking)

B - BF -Best Friend - Books

C - Cat - Why most of the poets like and use "Cat" in their Poem?
(Another Name of Cat is Pussy)

D - Date of Birth ( 14-06- Year Vendam)

E - Essential Item?
We have Two Essential items in our body .
One is tongue.Another? Guess.....
Use both of them carefully .


F - Franz kafka's "Metamorphosis" (I have read recently)


G - Germany (I have visited one and only country)

H - Humour - Without this what is in Life?


J - Joke?
What is the difference between viagra & niagara
Niagara - Falls
Viagra - Never Falls

K - Kumbakonam (My Birth Place)

L - Life is Nonsense


N - I like N (Nayanthara & Namitha)
(Ofcourse i am Non-veg)



P - Phobias/Fears? Girls,God and Gold


Q - Questions - Always easy to ask. But tough to ask brillinat questions.


S - Smoke Often (Not a chain Smoker)

T - Thenkachi KO.Swamintahan - May his soul Rest In Peace





ஞ்சரைக்குள்ள வண்டி படத்துக்கு
றுமணி டிக்கட் எடுத்த நண்பன்
ன்று இப்படம் கடைசி
கா தியேட்டருக்கு
டனே வரவுமென்று
ருக்கே கேட்கும்படி போனில் கத்தினா‌‌‌ன்.
ண்ணூரிலிருந்து விரைந்தவனுக்கு
மாற்றமாய் போனது.
ந்தாவது ரீலில் பிட்டு சரியில்லையாம்.
யுத எழுத்துக்கு டிக்கட் எடுத்தானாம்.
ங்கி விட்ட அறையில்
டதம் போடும்படி நேர்ந்தது
ஆயுத எழுத்தைத்தான் பார்க்கமுடியவில்லை
இறுதிவரைக்கும்......


இந்த தொடர்பதிவை தொடர நான் அன்புடன் அழைப்பது மண்குதிரை, அனுஜன்யா, ஜ்யோவ்ராம் சுந்தர்...

Monday, September 21, 2009

"பூங்குழலி" - "பூ நடிகை" - உயிரோசை கவிதைகள்

இந்த வார உயிரோசை மின்னிதழில் எனது இரண்டு கவிதைகளை வாசிக்கலாம். கவிதைகளை வெளியிட்ட உயிரோசைக்கு நன்றி.


பூங்குழலி
--------

மின்சார ரயிலில்
பார்வையற்ற சிறுமியொருத்தி
பாட்டுப் பாடியபடியே
பிச்சை எடுத்துக்கொண்டிருந்தாள்.
பூமுடித்தாள் இந்தப் பூங்குழலி
புதுச் சீர் அடைந்தாள் வண்ணத் தேனருவியென்று
தொடங்கினா‌‌‌ள்.
தேனருவியின் வேகம் குறைந்தது.
அம்மம்மா தம்பி என்று நம்பி…
அடுத்த பாடல் பைசா பெறவில்லை.
பூங்குழலி அசரவில்லை.
மூன்றாவது பாடல் பாடினாள்.
தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா…
ஜன்னல் பக்கம் சிலர்
திருப்பிக்கொண்டார்கள் முகத்தை.
பல்லாக்கு வாங்கப் போனேன் ஊர்வலம்போக…
நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே…
வரிசையாகப் பாடினா‌‌‌ள்.
திடீரென நிறுத்தினா‌‌‌ள்.
இரண்டு நிமிடம் கனத்த மெளனம்.
பாட்டு தீர்ந்துவிட்டதா?
பதறிப்போனது எனக்கு .
சற்று நேரம் தயக்கம் அவளிடம்.
என்ன நினைத்தாளோ?
பூங்குழலி உற்சாகமாய்ப் பாடினாள்.
பூமுடித்தாள் இந்தப் பூங்குழலி
புது சீர் அடைந்தாள் வண்ணத் தேனருவியென்று
மீண்டும் ஆரம்பித்தாள்.
நல்லவேளை…யாரும் கவனிக்கவில்லை.


பூ நடிகை
---------
பூ நடிகைக்கும்,
நான்கெழுத்து தெலுங்கு நடிகருக்கும்
ரகசிய திருமணம் திருப்பதியிலென்று
செய்தி போட்டிருந்தார்கள்.
நானும் எனக்குத் தெரிந்த
பூவையெல்லாம் நினைவில் பொருத்திப் பார்த்தேன்.
மல்லிகை, சாமந்தி , குண்டுமல்லி
கனகாம்பரம், பிச்சி, செம்பருத்தி.
எதுவும் பொருந்தவில்லை.
அடுத்த நாள்
பூ நடிகை விவாகரத்து
எ‌ன்று செய்தி வந்தது.
பூவைக் கண்டுப்பிடித்துவிட்டேன்.
எந்த நடிகையென்றுதான்
தெரியவில்லை.
கடைசியில்
ஏதொவொரு நடிகையின் தலையில்
எனக்குப் பிடித்த பூவொன்றை சூட்டிவிட்டேன்.


-நன்றி
என்.விநாயக முருகன்

Sunday, September 20, 2009

பசங்க

பசங்க
-----


மவுன விளையாட்டு
———————————————————

வீட்டு விசேசமொன்றிற்கு
வ‌ந்த குழந்தைகள்
இங்கும் அங்குமாய்
ஆடி ஓடி கூச்சலிட்டு
துரத்திக்கொண்டு
ஆர்ப்பாட்டமாய்
விளையாடினா‌‌‌ர்கள்.
யாரோ அதட்டினா‌‌‌ர்கள்.
சொன்னா ‌‌‌கேக்க மாட்டீங்க?
மவுனமாக விளையாடுங்க.
பிறகு குழந்தைகள்
ஒவ்வொரு அறையாக
மவுனத்தை ஆடி ஓடி
பிரச்சாரம் செய்தார்கள்.


எதிர்வீட்டு கிருஷ்ணஜெயந்தி
——————————————————————————
புதிதாக குடிவந்த
எதிர்வீட்டு வாசலிலிருந்து
உள்நோக்கி சின்ன சின்ன
பாதச்சுவடுகளும்
பால்கோலமும்
கோணலும் மாணலுமாய்
கிறுக்கியபடி போயிருந்தது.
கிருஷ்ணஜெயந்தி அலங்காரமொன்றை
மனைவியிடம் குறைச்சொல்கையில்
உள்ளிருந்து வந்த
அழகான குழந்தைக்கு
காலொன்று வளைந்திருந்தது.


கவிதையெழுதி
——————————————
என்னருகே அமர்ந்த
கைக்குழந்தையொன்று
கொஞ்சமும் எதிர்பாராமல்
சட்டென கிழித்துவிட்டது.
பிரசுரமாகாத கவிதையொன்றை.
இனி
கவிதையெழுதி என்ன கிழித்தாயென்று
கேட்பவர்களுக்கு சொல்லவும்
மிச்சமிருக்கிறது ஏதோவொன்று.

கவலை

கவலை
———————
கல்லிருந்தால்
நாயைக் காணோம்.
நாயிருந்தால்
கல்லைக் காணோம்
எ‌ன்று அடிக்கடி புலம்புவான்
எ‌ன் நண்பன்.
நேற்று
கல்லுமிருந்ததாம்,நாயுமிருந்ததாம்.
அந்த தகவலைச் சொல்ல
நான் பக்கத்திலில்லையாம்.

Saturday, September 19, 2009

"கேள்விகள்" - சொல்வனம் கவிதை

இந்த வார சொல்வனம் மின்னிதழில் வெளியான "கேள்விகள்" கவிதை வாசிக்க...
கவிதை வெளியிட்ட சொல்வனம் ஆசிரியர் குழுவினற்கு எனது நன்றி...

கேள்விகள்
----------
நண்பனொருவனை
நீண்ட நாட்கள் பிறகு
சந்திக்க நேரிட்டது.
எப்ப கல்யாணம்?
எங்க கல்யாணம் நடந்துச்சு?
காதல் திருமணமா?
ஏன்டா பத்திரிக்கை அனுப்பல?
பொண்ணு எந்த ஊரு?
வேலைக்கு போறாங்களா?
எத்தன புள்ளங்க?
பல கேள்விகள்,
பல பதில்கள்,
பல விசாரிப்புகள்.
இனி
கேட்பதற்கு எந்த
கேள்விகளும் இல்லாமல்
சந்தோசமாக உணர்ந்து
விடைபெறுகையில்
விவாகரத்துக்கு விண்ணப்பித்திருப்பதாக
தயங்கியபடியே சொன்னான்.


-நன்றி
என்.விநாயகமுருகன்

Monday, September 14, 2009

"விடுமுறை நாள்" - உயிரோசை கவிதை

இந்த வார உயிரோசையில் எனது ‌சில கவிதைகளை வாசிக்கலாம்.
இந்த கவிதைகளை வெளியிட்ட கவிஞர் மனுஷ்யபுத்திரன் அவர்களுக்கு எனது நன்றி...





விடுமுறை நாள்
-----------------
ஞாயிறு காலை ஆறு மணிக்கு
பாட்டிக்கு நெஞ்சுவலி.
படுக்கையிலேயே
உயிர் போனதாக
தொலைபேசித் தகவல் வந்தது.

அசோக்நகர் எனக்கு
பக்கம்தான்.
அண்ணனுக்கு கே.கே.நகர்.
அக்கா வீடு வளசரவாக்கம்.
அக்கா வரும்போதே
பெசண்ட் நகர் மின்சார
சுடுகாட்டுக்குத் தகவல்
சொல்லிவிட்டதாகத் தெரிவித்தாள்.
கறுப்புநிற அமரர் ஊர்திக்கு
பேரம் பேசி கூடவே
அழைத்து வந்திருந்தான்
அண்ணன்.

பத்து மணிக்குள்
மாமா கொண்டு வந்த
மலர்கள், பன்னீர் பாட்டில்கள்
கண்ணாடிப்பெட்டி எ‌ன்று
மாறி இருந்தது வரவேற்பறை.
ஓரளவு தெரிந்தவர்கள் வந்திருந்தார்கள்.

மூன்று மணிக்கு
மெயின்ரோட்டைச் சுற்றி
அவரவர் வாகனத்துடன்
கிளம்பினோம்.
மின்சார சுடுகாட்டில்
மிச்சமான சாம்பலை
கேரிஃபேக்கொன்றில்
கவனமாகச் சுற்றிக்
கொடுத்தார்கள்.
கூடவே அவசியம் தேவையென்று
மரணச்சான்றிதழ் தந்தார்கள்.

இதெல்லாம்
பத்துமணி நேரத்தில் முடிந்தது.
அடுத்தநாள் திங்கட்கிழமை.
அலுவலக தினம்.
அதிகம் சிரமம் தரவில்லை பாட்டி.


இரண்டு மின்விசிறிகள்
------------------------
1.
ஒரு இறக்கையை
இன்னொரு இறக்கை
துரத்த அதை இன்னொன்று
துரத்தவென்று
முடிவிலியாய் நீள்கிறது
மின்விசிறி கீழே
தனிமையின் நினைவுகள்.

2.
அறைக்குள் நுழைந்தவுடனேயே
ஆண்டுகள் கடந்த
மனைவியின் சலிப்பு போல
முத‌லில் கொஞ்சம்
சலித்து முனகி பிறகு
வழக்கம்போல கடமையாக
சுழல ஆரம்பித்தது.


மகளிர் மட்டும்
---------------
தெருமுனை
மருந்துக்கடையில்
பு‌திதாக வேலைக்கு
வந்திருந்தாள்
இளம்பெண்ணொருத்தி.
அப்போதுதான் கவனித்தேன்.
அதுவரை இல்லாத
குழப்பமும் தயக்கமும்
குடிவந்தது.
ஆணுறை பாக்கெட்
வாங்கச் சென்றவன்
தேவைப்படாத
தலைவலி மாத்திரையொன்றை
வாங்கிக்கொண்டு
அடுத்த தெரு மருந்துக்கடைக்கு
நகர்ந்தேன்.
இடையில் ஒருத்தி
அடுத்த தெருவிலிருந்து
இந்தக்கடை நோக்கி வந்தாள்.
இதுவரை இல்லாத
அன்னியோன்னியமாய்
அவர்கள் பேசிக்கொண்டார்கள்.
என்னவென்றுதான் தெரியவில்லை.




-நன்றி
என்.விநாயக முருகன்

Sunday, September 13, 2009

"சிறுமழை" - நவீன விருட்சம் கவிதை

சிறுமழை
----------
முன்னிருக்கையில்
அமர்ந்திருக்கும் சிறுமி
ஓய்ந்து முடிந்த
மழை முத்துக்கள் சொட்டும்
பேருந்தின் ஜன்னல் கம்பிகளை
விரலால் தொட்டு தொட்டு
வெளியே சுண்டுகிறாள்.
சிறுமழையொன்று பெய்கிறது.

(நன்றி: நவீன விருட்சம்)

Saturday, September 5, 2009

கைப்பழக்கம்

கைப்பழக்கம்
-------------
நகரின் பிரபலமான
சித்த மருத்துவரை
ஒரு நேர்காணலுக்காக
சந்திக்க நேரிட்டது.
சொப்பன ஸ்கலிதம்,
கைகால் நடுக்கம்,
ஞாபக மறதி, உடல் அசதி
பற்றி விவரித்தார்.
வாலிப வயோதிக அன்பர்களை
அன்பாக கடிந்தவர் ‌சில
அறிவுரைகள் சொன்னார்.
பேட்டி முடிந்து பேசினோம்
பொதுவான ‌சில விஷயங்கள்
முன்னப் போல
யாரும் வருவதில்லையென்று
குறைப்பட்டார்.
ஆறும் பெண் குழந்தைகள்
கரையேத்தனுமில்ல
கவலைப்பட்டார்.
ஆறா...? சற்று வியப்புடனே கேட்டேன்.
என்ன இருக்கு நம்ம கையில
எல்லாம் கடவுள் கொடுத்தாரென்று
மேலே கைகாட்டினா‌‌‌ர்.

Friday, September 4, 2009

"அலையும் ஆவியொன்று" - நவீன விருட்சம் கவிதை

நவீன விருட்சம் வலைப்பூவில் வெளியான எனது "அலையும் ஆவியொன்று" கவிதையை வாசிக்க...
(நன்றி திரு. அழகியசிங்கர் அவர்களுக்கு)

அலையும் ஆவியொன்று
--------------------------------

என் வீட்டுப்பரணில்
கிடக்கும் பழைய
டிரங்க் பெட்டியில்
உடைந்துப்போன சிலேட் குச்சிகள்,
பச்சைநிற பிளாஸ்டிக் முனையுடன்
தகர சிலேட்டொன்று,
புழுக்கையாகிப்போன ‌
கலர் பென்சில்கள்,
பிலிம் துண்டுகள், ஒரு மயிலிறகு,
இவற்றோடு ஒரு சிறுவயது
ஆவியும் சுற்றிக்கொண்டு திரிகிறது.
நான் எப்போது
பெட்டியை திறந்தாலும்
உயிர்கொள்ளத் துடிக்கும்
அந்த ஆவி என் உடலின்
நீள அகல பருமன்களை
கண்டு திகைத்து மீண்டும்
பெட்டிக்குள் உறங்கிவிடுகிறது.


-நன்றி
என்.விநாயக முருகன்

"திருமணமொன்றில்" - திண்ணை.காம் கவிதை

திண்ணை.காமில் வெளிவந்த எனது "திருமணமொன்றில்" கவிதை வாசிக்க...

திருமணமொன்றில்
——————————————————
நான் சென்ற
திருமணமொன்றில்
மண்டப வாசலில்
அழகான நீண்ட
கூந்தலுடன்
இரண்டு கைகளை கூப்பி
தலையை லேசாக குனிந்து
புன்னகையோடு வரவேற்ற
பெண்ணொருத்தி
பொம்மையென்று
சற்று தாமதித்தே
உணர முடிந்தது.
பக்கத்தில்
பன்னீர் தெளிக்கும்
ஆண் உருவமும்
மின்சார பொம்மையென்று
யாரோ சொன்னார்கள்.
அட்சதை போடுமுன்
ஏனோ மேடையை
ஒருமுறை
உற்றுப் பார்த்தேன்.


-நன்றி
என்.விநாயக முருகன்

நண்பரொருவரின் வீட்டில்

நண்பரொருவரின் வீட்டில்
———————————————————————

நண்பரொருவரின் வீட்டுக்கு
நீண்ட நாட்கள் பிறகு
செல்ல நேரிட்டது.
முன்புற வாசலில்
கன்றுக்குட்டி உயரத்தில்
நாயொன்று பயமுறுத்தியது.
சிரித்தபடியே அறிமுகப்படுத்திய
நண்பர் ஷேக்ஹேண்ட்
தரச் சொன்னார்.

புரோட்டின் கலந்த உணவு
மாத இறுதியில்
மருத்துவ சோதனை கூட
தடுப்பூசி போடுவதாக சொன்னார்.
நகங்களை சீராக
வெட்டிவிட வேண்டுமாம்.

ஜவ்வுகளை திங்காது.
துண்டுக்கறித்தான் உகந்தது.
கோழித் தொடையை
கிழிக்கத் தெரியாது.
பிய்த்து துண்டாக்கி
போட வேண்டுமாம்.

எலும்புகளை பச்சையாக
போடக்கூடாதாம்.
குக்கரில் வேகவைத்து
கொஞ்சம் மசித்து
கொடுக்க வேண்டுமாம்.

எல்லாம் சரி,
நாயின் பெயரென்ன?
நண்பரிடம் கேட்டேன்.
என்னை முறைத்தபடியே தொடர்ந்தார்.
நாயென்று சொல்லக்கூடாதாம்.
சரிதான்.

Wednesday, September 2, 2009

பாரதி நகர்

பாரதி நகர்
——————————
ஊருக்கு வெளியே
நாற்பது கிலோமீட்டர் தள்ளி
நெடுஞ்சாலை கிளைபிரிக்கும்
அத்துவானக் காட்டில்
காலிமனைகளை
காண்பித்தான்.
பத்தடியில் சுவையான குடிநீர்
இரண்டு கிலோமீட்டரில்
பள்ளிக்கூடம் மற்றும்
பொறியியல் கல்லூரிகள்
கூப்பிடு தூரத்தில் மருத்துவமனை
உடனே வீடுக்கட்ட
உகந்தது என்றான்.
காலிமனை சுற்றியிருந்த
நிறைய தென்னைமரங்களை,
கத்தும் குயில்களை
காட்டினா‌‌‌ன்.
மஞ்சள் பெயர்ப்பலகை காட்டி
தன் பெயரும் பாரதிதானென்றான்.
அப்படியே
உங்க சொந்தத்தில
ஏதாவது பத்தினிப் பெண்ணிருந்தா
சொல்லுங்கவென்று
வந்தது வாய்வரை.



பொய்
—————
பொய் சொன்னால்
சாமி கண்ணைக் குத்துமென்று
சொன்னேன்
சிறுமி ஒருத்தியிடம்.
வாயைத்தானே…?
சந்தேகமாக கேட்டாள்.

"தொலைந்துப் போனவைகள்" - கீற்று.காம் கவிதை

கீற்று.காமில் வெளியான எனது "தொலைந்துப் போனவைகள்" கவிதைகளை வாசிக்க...

தொலைந்துப் போனவைகள்
----------------------------
1

தொலைந்துப்போன பொருளை
கண்டுபிடிக்கவும்
கவ்வி இழுக்கவும்
பழக்கப்பட்டிருந்த
மோப்ப நாயொன்று
முன்பு எப்போதோ
தாயைக்கூட தொலைத்திருந்தது.

2

பேருந்தின் படிக்கட்டில்
தொங்கிச் சென்றவன்
நழுவவிட்ட செருப்பொன்று
சாலையில் கிடந்தது
அநாதையாக அடிப்பட்டபடி.
எப்படி வலிக்குமோ
எங்கோ கிடக்கும்
இன்னொரு செருப்புக்கு

3

தொலைந்துப்போன
பழைய நண்பனொருவனை
நீண்ட நாட்கள் கழித்து
பார்க்க நேரிட்டது.
அவன்
பு‌திதாய் சேர்ந்த வேலை
பு‌திதாய் வாங்கிய கார்
பு‌திய மாடல் மொபைல்
பு‌திதாய் கட்டும் வீடு
சமீபத்தில் செ‌ன்றுவ‌ந்த
நாட்டைப்பற்றிய பு‌திய தகவல்கள்
இவற்றோடு எனக்கு
பு‌திய நண்பனொருவனை
பரிசாக தந்துவிட்டு சென்றிருந்தான்



நன்றி
என்.விநாயக முருகன்

Tuesday, September 1, 2009

பறவை நிபுணர்

பறவை நிபுணர்
——————————————

பறவைகளை பற்றிய
கவிதைகளுக்காக
பறவைகளை தேடி
சதுப்புக்காடுகளில்
அலைந்த ஒருநாளில்
நிபுணரொருவனை
சந்திக்க நேரிட்டது.

பறவைகள் பற்றி
பல தகவல்களை
சொன்னா‌‌‌ன்
சலீம்அலி பற்றி
நிறைய பேசினா‌‌‌ன்

அரிவாள் மூக்கன்
அபூர்வமாய் வருகிறதாய்
சொன்னா‌‌‌ன்

கூழைக்கடா
கூடுக்கட்டுவதை சிலாகித்து
சொன்னா‌‌‌ன்

நீண்டநாள் சந்தேகமான
நெற்குருவிக்கு இன்னொரு பெயர்
வானம்பாடியென்பதை
உறுதி செய்தான்

பெயிண்டட்ஸ்டாக் அல்லது வண்ணநாரை
ஸ்னேக்பேர்ட் அல்லது பாம்புத்தாரா
ஸ்பூன்பில் அல்லது துடுப்புவாயன்
விசிலிங்டக் அல்லது மரத்தாரா
பெயர்களை அடுக்கியபடியே நடந்தான்

சற்றுமுன் பார்த்த
செனகல் கிளிகள்
ஆப்பிரிக்காவிலிருந்து
வருடம் தவறாமல்
வருவதாக சொன்னான்

முன்னி வௌவால்
முக்குளிப்பான் கூட
நாமக்கோழி
நீர்க்கோழிப்பற்றியும் விவரித்தான்

இறுதியாக
புறாக்கறி லேசாக தித்திக்கும்
என்ற தகவலையும்
சொன்னா‌‌‌ன்