Monday, November 30, 2009

பிடித்த 10 பிடிக்காத 10

பிடித்த 10 பிடிக்காத 10

நண்பர் அசோக் என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார்.

இன்னைக்கு பிடிக்கறவங்க நாளைக்கு பிடிக்காமல் போகலாம். இன்னைக்கு பிடிக்காதவங்களை நாளைக்கு பிடித்து போகலாம். மாறுவது மனம் எ‌ன்ற சப்டைட்டிலுடன் செல்வதால் இங்கு பிடிக்காதவர் பட்டியலில் வரும் நண்பர்கள் கோவிச்சுக்க வேண்டாம்

1.நடிகை

பிடித்தவர் : வேற யாரு? நமீதா :)

பிடிக்காதவர்: வேற யாரு? அம்மா வேஷத்துல நடிக்கற நடிகைகள் அனைவரும்


2.அரசியல்வாதி

பிடித்தவர் : தமிழருவி மணியன் (யாருப்பா இவரு? நீங்கள் கேட்பது காதில் விழுகின்றது)
வை.கோ (அய்யோ பாவம்)

பிடிக்காதவர்: அனைவரும்

3. உணவு

பிடித்தவை : நிற்பதுவே! நடப்பதுவே! பறப்பதுவே நீங்கள் எல்லாம் (உடும்புக்கறி
சாப்பிட்டிருக்கீங்களா? சூப்பரா இருக்கும் )

பிடிக்காதவை: ரசம்

4. இயக்குனர் :

பிடித்தவர் : முன்னாள் பாரதிராஜா
பிடிக்காதவர் : இன்னாள் பாரதிராஜா , பாலசந்தர், ராம நாராயணன்

5. எழுத்தாளர்

பிடித்தவர் : தி.ஜா, தஞ்சை ப்ரகாஷ்,கரிச்சான்குஞ்சு, சாரு,இ.பா(ஊர் பாசம்)
பிடிக்காதவர் : இன்னாள் பாலகுமாரன்

6. இசையமைப்பாளர்

பிடித்தவர் : இளையராஜா, எ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ்,எம்.எஸ்.வி,டி.எஸ்.பி
பிடிக்காதவர் : ம்ம்.. யோசிக்கனும்

7. கவிஞர்கள்

பிடித்தவர் : பாரதி,தேவதச்சன்,நகுலன்,கல்யாண்ஜி,முன்னாள் மனுஷ்ய புத்திரன்,
ஞானக் கூத்தன் ,முகுந்த் நாகராஜன்

பிடிக்காதவர் : பிடிக்காதவர் எ‌ன்று சொல்ல முடியாது, மனதை அவ்வளவாக
பாதிக்காதவர் வைரமுத்து

8. ஊர்கள்

பிடித்தது : கும்பகோணம் (பிறந்தது), சென்னை (வாழவைப்பது)

பிடிக்காதது: புதுக்கோட்டை (சரியான தூங்குமூஞ்சி ஊர்)

9. பதிவர்


பிடித்தவர் : என்.விநாயக முருகன்
(இந்த மூஞ்சிக்கே இந்த மூஞ்சிய பிடிக்கலனா‌‌‌ வேற எந்த மூஞ்சிக்கு நம்மள பிடிக்கும்)

பிடிக்காதவர்: அனானிமஸ் பெயரில் பின்னூட்டம்,இடுகை எழுதுபவர்கள்.(ராஸ்கல்ல்ஸ்ஸ்)

10. காமெடியன்

பிடித்தவர் : கவுண்டமணி, வடிவேலு, விவேக், என்.எஸ்.கே

பிடிக்காதவர் : சோ, தங்கபாலு, சு.சுவாமி

நாலு பேரை கூப்பிடனும்..

1. கதிரவன்

2. மண்குதிரை

3. சி.கருணாகரசு

4. நந்தா

5. அனுஜன்யா

Sunday, November 29, 2009

குழப்பம்

ஜ்யோவ்ராமின் குழப்பத்துக்கு ஒரு CounterPart கவிதை

குழப்பம்
—-------
அசோகர் மரம் நட்டார்
குளம் வெட்டினார்
அப்புறம் என்ன ஆச்சு?
ஆறாம் வகுப்பு
சிறுவன் கேட்டான்
மரத்தை வெட்டி
காகிதம் செய்தார்கள்
இப்படி எழு‌தினார்கள்
அசோகர் மரம் நட்டார்
குளம் வெட்டினார்

குளம் என்ன ஆச்சு?
குழம்பித்தான் போச்சு

Saturday, November 28, 2009

தப்பில்லை & இரக்கம்

தப்பில்லை
----------
வெளியில் தெரியாத வரை
கடவுளை கூட புணரலாம்
கனவிலும், கற்பனையிலும்
தப்பில்லை


இரக்கம்
---------
அலுவலகம் முடிந்து
வீடு திரும்பும்போதெல்லாம்
பின்னிரவில் பார்க்க நேரிடுகிறது
பிளாட்பாரத்தில் உறங்கும் குழந்தைகளை

இருப்பதிலேயே அழகான
ஏதாவது குழந்தையை
மனதுக்குள் தத்தெடுத்து
வீடுவரை அழைத்துசெல்கிறேன்
வீட்டினுள் செருப்பை கழட்டியவுடன்
அதையும் துரத்தி விடுகின்றேன்

Friday, November 27, 2009

பசங்க

வலி
—–--
குழந்தைகள் புழங்கும்
வீட்டில்
பொம்மைகள்
நசுங்க நசுங்க
பெருகுகிறது
சந்தோஷத்தின் வலி.

திருஷ்டி பொட்டு
———--------——–
பிறந்த குழந்தையை
பார்க்க வந்தவர்கள்
எவ்வளோ அழகென்று
தூக்கி கொஞ்சிவிட்டு சென்ற
தினம் முதல்
திருஷ்டி பொட்டொன்று மின்னியது.
எவ்வளோ அழகென்று
பொட்டையும் கூடவே
கொஞ்சிச் சென்றார்கள்.

அழகுப்படுத்தியது
———————————
பூந்தோட்டத்தில் பூத்த
வெள்ளைநிற பூக்களுக்கு
மஞ்சள் வண்ணமும்
மஞ்சள் பூக்களுக்கு
நீலநிறமும்
நீலப்பூக்களுக்கு பச்சை வண்ணமும்
தந்து அழகுப்படுத்தியதுப்போல
இருந்தது
மழலையர் பள்ளியின்
மாறுவேட போட்டியொன்றில்.

படைப்புத்தொழில்
————————-

குழந்தை உடைத்து
நொறுக்கிய பொம்மைகள்
கொண்ட மூட்டையை
பரணிலிருந்து திட்டியபடியே
பிரித்தாள் மனைவி

சிதறி தெறித்த
கரடி யானை
சிங்கம் புலி
குரங்கு எ‌ன்று
வீடெங்கும் காடான‌‌‌து

கரடியின் கால்களோடு
சிங்க உடலை சேர்த்துக்கொண்டு
புலி முகத்தில் ஜீவனொன்று
உலவ ஆரம்பித்தது காட்டினுள்

Wednesday, November 25, 2009

எட்டாவது வார்டிலிருந்து

எட்டாவது வார்டிலிருந்து
----------------------

தேங்கிநின்ற மழைநீருக்கு
மனு கொடுக்க சென்றிருந்தேன்
எல்லாம் சரியாகிவிடுமென்றார்
அடு‌த்த இரண்டுநாட்களில்
வெயில் அடித்து காய்ந்துவிட்டது

வெயிலுக்கு நிழற்குடை நிறுத்தம்
வேண்டி சென்றிருந்தேன்
எல்லாம் சரியாகிவிடும்
சொல்லி முடிக்கவில்லை
மழை கொட்ட ஆரம்பித்தது

மழைநீரில் அறுந்துக்கிடந்த
மின்சார கம்பிக்கு சென்றிருந்தேன்
எல்லாம் சரியாகிவிடுமென்றார்
அடு‌த்த நாலுநாள் பவர்கட்

கடைசியாக சென்றபொழுதும்
காதுகொடுத்து கேட்டார்
இதுவும் கடந்துப்போகுமென்றார்
எட்டாவது வார்டின் ஜென்குரு

Monday, November 23, 2009

சும்மா ஒரு கவிதை

ஜ்யோவ்ராம் சுந்தரின் சும்மா இருத்தல் கவிதை படித்ததும் எனக்கும் சும்மா ஒரு கவிதை எழுத தோன்றியது.சும்மா படித்து பாருங்க


சும்மா ஒரு கவிதை
——————————————————

எப்படி இருக்க?
என்பதை தொடர்ந்து
என்ன செய்கிறாய்?
எ‌ன்று கேட்டேன்
நீண்டநாட்களுக்கு பிறகு சந்தித்த
நெருங்கிய நண்பனை

சும்மா இருப்பதாக
சொன்னான்
சும்மா எப்படி இருப்பது
எதார்த்தமாக கேட்டேன்
சும்மா இருப்பதின்
சுமைகள் பற்றி
அரைமணிநேரம் பேசினா‌‌‌ன்.

சும்மா இருந்த சங்கை
ஊதி கெடுத்த ஆண்டியை
பற்றி சொன்னான்

பால்வண்ணம் பிள்ளை
இறுதியில் சொன்ன
சும்மா கெட, சவமே
வரியை மேற்கோள் காட்டினான்

பாடல்பெற்ற தலமொன்றில்
சும்மா இருக்கும் சிவனை பற்றி
ஐந்து நிமிடம் பேசினா‌‌‌ன்

சற்று வேகமாக
ஊதி கெடுத்த
வருத்தத்துடன் திரும்பினேன்

Friday, November 20, 2009

இரண்டு கவிதைகள்

திணைமயக்கம்
—————————————
தேநீர் கடையில் நின்றிருந்தவர்
தமிழ் ஆர்வலராம்
கோபத்தோடு கத்தினார்
கலாச்சார கண்றாவி
கசக்கி வீசினார் செய்தித்தாளை

காசிமேடு அருகே
கள்ளக்காதல் எதிரொலியாம்
கணவன் வெட்டி கொலை
மனைவி கைது
திருச்சியை சேர்ந்த
வாலிபருக்கு வலைவீச்சு
செய்தித்தாளை எட்டிப் பார்த்தேன்

அட.…திணைமயக்கம்
குறிஞ்சி நெய்தல்
பெருந்திணை எ‌ன்று
ஒரு நிமிடம் ஓடியது

Tuesday, November 17, 2009

"இரண்டு கவிதைகள்" - நவீன விருட்சம்

நவீன விருட்சம் வலைப்பூவில் எனது இரண்டு கவிதைகள் வாசிக்கலாம்...

கண்ணீர் அஞ்சலி
-----------------

நான்கு நாட்கள் முன்பு
தெருமுனை மின்சார
கம்பத்தில் அவரை பார்த்தேன்

கண்ணீர் அஞ்சலி
எழுத்துகளுக்கு கீழே
இரண்டு கண்கள் படம்
யாருடையதென்று தெரியவில்லை
அழுதுக்கொண்டிருந்தன

கண்களுக்கு கீழே
சோகமாக பார்த்துக் கொண்டிருந்தார்.
புகைப்படத்திற்கு கீழே
வருந்துகிறோம்
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்
எ‌ன்று அச்சாகி இருந்தது.

இரண்டாவது நாள்
குடும்பத்தினரை காணவில்லை.
நண்பர்கள் மட்டும் உட‌ன் இருந்தனர்

மூன்றாவது நாள்
நண்பர்களை
மாடு நக்கி கொண்டிருந்தது.

நான்காவது நாள்
கிழிந்து தொங்கிக்கொண்டிருந்தார்
யாரோ ஒருத்தன்
சிறுநீர் அடித்துக்கொண்டிருந்தான்

இறுதி வரை அழுதுக்கொண்டிருந்தன
இரண்டு கண்கள்
யாருடையதென்று தெரியவில்லை

ஒருநாள்
அதுவும் மறைந்து விட்டது



விசாரித்தல்
-----------------
எங்கு பார்த்தாலும்
அன்புடன் விசாரிப்பார்
எனது நண்பர்

சினிமா தியேட்டரில் விசாரிப்பார்
என்ன படம் பார்க்க வந்தீங்களா?
மருத்துவமனையில் விசாரிப்பார்
என்ன டாக்டரை பார்க்க வந்தீங்களா?
துணிக்கடையில் விசாரிப்பார்
என்ன துணி எடுக்க வந்தீங்களா?
கோயிலில் விசாரிப்பார்
என்ன சாமி கும்பிட வந்தீங்களா?

ந‌ல்ல மனுசன்.நெஞ்சுவலியாம்.
ஒருநாள் இறந்தும்விட்டார்

ஒருநாள் போயிருந்தேன்
என்ன சமாதியாக வந்தீங்களா?
என்ன சொல்வதென்று தெரியவில்லை.


-நன்றி
என்.விநாயக முருகன்

Friday, November 13, 2009

குழந்தைகள் தின வாழ்த்துக்கள்

முந்தைய பதிவை போஸ்ட் செய்த பிறகே இன்று குழந்தைகள் தினம் எ‌ன்று தெரிய வந்தது. எங்கள் அலுவலக வலைப்பூவில் எழு‌திய ‌சில கவிதைகள்...


பங்கு
—————

முன்பொருநாள்
அண்ணன்களோடு
கடல் அலைகளில்
கால் நனைத்து
ரோலர் கோஸ்டரில்
குட்டிக்கரணமடித்து
குதிரைச் சவாரி பிறகு
மணலில் சிறிது
புரண்டு இளைப்பாறி
நீண்ட சாப்பாட்டு மேசையின்
இரண்டுபுறமும் அமர்ந்து
உற்சாகமாய் சாப்பிட்டது
நிழலாடுகிறது
அன்று
பேமிலி தோசையை
பங்கு பிரிக்காமல்
எப்படி சாப்பிட்டோமென்று
இன்றுவரை நினைவில்லை



திருடன் போலீஸ்
————————————————
நான் திருடன்
நீ போலீஸ் என்று
சொன்ன சிறுவன்
ஆட்டத்தின் சிறிய
இடைவெளியில்
நீ திருடன்
நான் போலீஸ் எ‌ன்று
உத்யோகம் மாறி
விளையாடுகிறான்
ஆட்டத்தின் இறுதியில்
உத்யோகம் பறிபோன
முன்னாள் போலீசும்
திருந்திய இந்நாள்
திருடனும்
ஒருவரையொருவர் பார்த்து
சிரித்தபடி செல்கிறார்கள்



தீபாவளி இரவன்று
————————————————
தீபாவளி இரவன்று
சாலையை கடந்துச்
செல்கையில்
மூடப்பட்ட கடைகளின்
ஷட்டர் முன்னால்
வெடிக்காத வெடிகளை
சேகரித்தபடி அமர்ந்திருந்திருந்தான்
பேப்பர் பொறுக்கும் சிறுவனொருவன்

அவன் சேகரித்த வெடிகளில்
ஏதாவது ஒன்றின் திரி
நமத்துப்போகாமல் இருக்க
கடவுளை பிரார்த்திக்கிறேன்



கவிதையெழுதி
——————————————

என்னருகே அமர்ந்த
கைக்குழந்தையொன்று
கொஞ்சமும் எதிர்பாராமல்
சட்டென கிழித்துவிட்டது.

பிரசுரமாகாத கவிதையின்
பல துண்டுகளோடு
சிரித்தது கடவுளொன்று
எதுவும் நடக்காததுபோல

இனி
கவிதையெழுதி என்ன கிழித்தாயென்று
கேட்பவர்களுக்கு சொல்லவும்
மிச்சமிருக்கிறது ஏதோவொன்று



பேய்க்கதைகள்
—————————————
குழந்தைகளை
கூட்டி வைத்துக்கொண்டு
பேய்க்கதைகள் சொன்னேன்.
வித ‌விதமாக கற்பனை செய்து
புது புது பேய்களை நானே
உருவாக்கினேன்.
இ‌து வரை கேட்டறியாத
ஒலிகளையெழுப்பி
கதைகளை நீடித்தேன்.
பிறகு வீட்டின்
அறையிலிருந்து வெளிவருகையில்
திடீரென என் முன்னால்
நான் கேட்டறியாத ஒலிகளுடன்
குதித்து பயமுறுத்தி ஓடுகையில்
கொஞ்சம் பயந்துத்தான் போனேன்
ஒருவேளை பேய் இருக்குமோ?


கண்திருஷ்டி
———————————
அம்மாடியோவ் எவ்ளோ உசரமென்று
குதித்த குழந்தையொன்றை
வைத்தகண் வாங்காமல்
வியப்போடு பார்த்தார்
தெருமுனையில்
பு‌திதாக வந்திருந்த
நாற்பதடி கண்திருஷ்டி விநாயகர்.
வீட்டுக்கு போய் சுத்திப்போட
சொன்னார்கள் யாரோ.
சுத்திப்போட்ட ஆறாம்நாள்
கரைந்துப்போனது.

ரிக்‌ஷா

ரிக்‌ஷா
------


நேற்று இரவு அகநாழிகை வாசு அவர்களுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது என் இரண்டு வயது‌ மகள் அருகே வ‌ந்து என்னை பேசவிடாமல் சத்தமாக கத்தி தொந்தரவு செய்துக்கொண்டிருந்தாள்.

தொலைபேசியில் பேசும்போது மட்டும் என் மகளுக்கு என்ன தோன்றுமோ தெரியவில்லை.

எங்கள் வீட்டில் யார் தொலைபேசி பேசினாலும் அவள் காதில் ‌சில வினாடிகள் தொலைபேசியை வைக்க வேண்டும். எதிர்முனையில் இருப்பவர்கள் பேசுவது அவளுக்கு புரியுமோ புரியாதோ எனக்கு தெரியாது. அந்த பேச்சு சத்தம் எங்கிருந்து வருகிறது என்பதை பார்ப்பதில் அவளுக்கு அப்படி ஒரு ஆர்வம். குழந்தைகள் நாம் பேசுவதை நமது முகம்,நாக்கு உடல் அசைவுகள் மூலம் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பிக்கின்றார்கள். இவை எதுவும் இல்லாமல் கையடக்க ஒரு மின்னணு கருவியில் இருந்து பேச்சு வந்தால் அவர்களுக்கு எப்படி வினோதமாக இருக்கும். இரண்டு அல்லது மூன்று வயது குழந்தைகளுக்கு தொலைக்காட்சியில் வரும் குரல்கள் கூட அவ்வளவாக பிடிப்பதில்லை. தொலைக்காட்சியில் உருவங்கள் பேசுவதை பார்த்து பழகி இருக்கலாம். நிறைய குழந்தைகளை நுண்மையாக கவனித்துள்ளேன். தொலைபேசி/மொபைல் போன்கள் எப்போதும் அவர்களுக்கு ஒரு வசீகரமாகவே இருக்கின்றது. உருவமே இல்லாமல் யாருடா இது நம்ம அப்பா அம்மாவிடம் பேசிக்கொண்டிருப்பது. ஒருவேளை சின்ன வயசுல நம்ம கனவுல வந்து சிரிக்க வைத்து பின்பு காணாமல் சென்று விட்ட கடவுளா என்று கூட நினைத்திருக்கலாம்


நானும் வாசுவும் பேசிக்கொண்டிருக்கையில் குழந்தைகளின் மொழித்திறன் பற்றி பேச்சு சென்றது. என் மகளின் ஆர்ப்பாட்டம் கேட்டு வாசு விசாரித்தார். கெளதம சித்தார்த்தனின் நீல ஊமத்தம் பூ படித்தீர்களா என்று கேட்டார். எனக்கு தர்மசங்கடமாகி விட்டது. நான் அகநாழிகையில் அஜயன்பாலா கட்டுரை பிறகு கவிதைகள் தவிர எதுவும் படிக்கவில்லை. சங்கடத்துடன் இல்லை என்றேன். பிறகு இரவு அந்த கதை படித்துப்பார்த்தேன். அருமையான கதை. நான் இங்கு சொல்ல வந்தது அந்த கதை பற்றி அல்ல. அந்த கதையை ஒட்டி நான் அறிந்த சில உண்மைகள்.


நாம் நினைப்பதுபோல குழந்தைகள் மொழியை கற்பதில் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை. அவர்கள் வினோதமான ஒலிகள், வித்தியாசமான முக அசைவுகள், சப்தங்களின் கலவைகள் இவற்றை மட்டுமே கூர்ந்து கவனிக்கின்றார்கள். மொழியின் அரசியல் அவர்களுக்கு பிடிப்பதில்லை. நாம்தான் களிமண்ணை அழகிய பானையாக்குகின்றோம் என்ற பெயரில் நமது மொழியை அவர்கள் மேல் திணிக்கின்றோம். உண்மையில் நாம் அழகிய பானையை உடைத்து களி மண்ணாக்குகின்றோம். மொழியின் அரசியலை அவர்களுக்கு சிறுவயதில் கற்று தந்து அதை தேர்வில் அப்படியே வாந்தி எடுக்க வைக்கின்றோம்.

குழந்தைகள் மொழியை விட ஒலிக்குறிப்புகள், சப்தங்களை மட்டுமே ரசிக்கின்றார்கள் என்பதை நான் குருட்டாம்போக்காக சொல்லவில்லை. ஏதாவது பறவைகள் அல்லது விலங்குகளின் சரணாலயத்துக்கு வரும் குழந்தைகளின் உற்சாகத்தை கவனித்து பாருங்கள். அதே நேரம் செயற்கையான உள்விளையாட்டரங்கு, ஷாப்பிங் மால், சினிமா தியேட்டர்களுக்கு அழைத்து வரும் குழந்தைகளை கவனித்து பாருங்கள். இரண்டு குழந்தைகளுக்குமிடையில் உள்ள உற்சாகம் புரியும். நமது ஆழ்மனதில் காடு எப்போதும் ஒரு படுகையாக படிந்து கிடக்கின்றது. இயற்கையான ஒலிகள் மூலமே ஆதிமனிதன் மொழியை கற்றான். எஸ்.ராவின் பதினெட்டாம் நூற்றாண்டு மழை சிறுகதைத்தொகுப்பில் "இந்த ஊரிலும் பறவைகள் இருக்கின்றன" எ‌ன்ற அருமையான ஒரு கதை உள்ளது. படித்து பார்க்கவும். வாய்பேச முடியாத தன் ஆறுவ்யது மகளை தோளில் சுமந்தபடி ஒவ்வொரு பறவையாக அது கூவும் குரலுக்காக தேடிச்செல்லும் தகப்பனின் தகப்பனின் அவலம் பற்றிய கதை. மொழியை அதன் இலக்கணங்களை மொழியின் அரசியலை நாம் திணிக்காதவரை குழந்தைமை அப்படியே இருக்கின்றது. மொழியின் அரசியல் புரிய ஆரம்பித்ததும் அவர்களிடம் ஒரு வித செயற்கை தன்மை வந்து அழகு போய்விடுகிறது..

ஐந்து வயதிலேயே திருஞானசம்பந்தர் பாடல்கள் எழுத ஆரம்பித்தது எனக்கு அதிகப்பிரசிங்கித்தனமாக படுகிறது. (எனக்கு பத்து வயது வரை சரியாக பேச வராது. அந்த பொறமை கூட கரணம் என்பது வேறு விசயம்) குழந்தைகள் இயற்கையான சப்தங்கள் ஒலிக்குறிப்புகளை வைத்து தாங்களாகவ்ய ஒரு சிம்பொனியை தயார் செய்கின்றார்கள். அந்த சிம்பொனி பெரியவர்களுக்கு புரிவதே இல்லை. நாம் சொல்லும் இலக்கணம் நாம் வரையறுத்த விதிமுறைகளில் இது அடங்குவதில்லை. அசோகமித்திரனின் அருமையான ஒரு பக்க சிறுகதை. இதை படித்து பாருங்கள்.


ரிக்ஷா
——————
அப்பா அப்பா ரிஷ்கா ரிஷ்கா என்று ரவி உள்ளே என்னிடம் ஓடி வந்தான். ரவிக்கு மூன்று வயது. வாசலில் ரிக்‌ஷா ஒன்று போய்க்கொண்டிருந்தது. வீட்டில் வேறு யாரும் இல்லை.

“ரிஷ்கா இல்லை. ரிக்‌ஷா ”

ரவி அருகே வந்தான்.

“எங்கே சொல்லு - ரிக்‌ஷா”

“ரிஷ்கா”

“ரிக்-ஷா”

“ரிஷ்கா”

“ரிக்‌ஷா ”

“ரிஷ்கா”

“அப்படி இல்லை, இதோ பார், ரிக்,”

“ரிக்.”

“ஷா”

“ஷா”.

“ரிக்ஷா”

“ரிஷ்கா”

ஊம்கூம், மறுபடியும் சொல்லு,ரிக்.”

“ரிக்.”

“ரிக்.”

“ரிக்.”

“ஷா.”

“ஷா.”

“ஷா.”

“ரிக்‌ஷா ”

“ரிஷ்கா”

சிறிது நேரம் மௌனம் நிலவியது.

“பார் ரவி, என்னைப் பார்த்துச் சொல்லு. ரீ.”

“ரீ.”

“இக்.”

“இக்.”

“ஷா.”

“ஷா.”

“ரிக்‌ஷா .”

“ரிஷ்கா.”

“ரிக்‌ஷா.”

“ரிஷ்கா.”

உலகம் ஷணகலம் அசைவற்று இருந்தது.

“ரவி.”

“அப்பா.”

“சரியாச் சொல்லு. ரிக் ரிக் ரிக்.”

“ரிக் ரிக் ரிக் ரிக்”

“ரிக் ரிக் ரிக் ரிக்”

“ரிக் ரிக் ரிக் ரிக்”

“ஷா ஷா ஷா”

“ஷா ஷா ஷா”

“ஷா ஷா ஷா”

“ஷா ஷா ஷா”

“ரிக்ஷா,ரிக்ஷா”

“ரிஷ்கா,ரிஷ்கா”

“ரிக்‌ஷா ,”

“ரிஷ்கா,ரிஷ்கா”

காய்கறி வாங்கப் போன மனைவி திரும்பி வந்துவிட்டாள். வந்த பிறகுதான் அவள் குடையை மறந்துவிட்டு வந்தது தெரிந்தது.

“ஐயோ அவ்வளவு தூரம் மறுபடியும் போக வேண்டுமே!” என்றாள்.

“ரிக்‌ஷாவில் போய்விட்டு வந்துவிடேன்” என்றேன்.

மனைவி என்னை ஏதோ மாதிரி பார்த்தாள்.

“என்ன?” என்றேன்.

“இப்போது நீங்கள் என்ன சொன்னீர்கள்?”

“ரிக்‌ஷாவில் போய் விட்டுவா என்றேன்.”

“ஏதோ ரிஷ்கா என்கிற மாதிரி விழுந்தது” என்றாள்.

நான் ரவியைப் பார்த்தேன். ரவி விளையாடிக் கொண்டிருந்தான்.


குழந்தைகள் , மொழி ,பாடம் ,பரீட்சை எ‌ன்ற பேச்சு வரும்போதெல்லாம் அசோகமித்திரனின் இந்த சிறுகதையை நினைத்துக் கொள்வேன்.

நகல் செய்தல்

ஜ்யோவ்ராம் சுந்தர் தளத்தில் ஒரு கவிதை படித்தேன். சிலநாட்கள் முன்பு இதேபோல ஒரு கவிதை எழுதி உயிரோசைக்கு அனுப்பி வைத்தேன். ஏனோ அவர்களுக்கு பிடிக்கவில்லை போலும். எனக்கும் அவ்வளவாக திருப்தி இ‌ல்லை. பெட்டிக்குள் இருந்து மீண்டும் எடுத்து படித்தேன். இதே போன்ற ஒரு பார்வை சுந்தருக்கும் இருந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. தொலைக்காட்சி அபத்தங்களை கொஞ்சம் அவதானித்தால் போதும். இத‌ன் வக்கிரம் பிடிபடும்


நகல் செய்தல்
---------------
மனைவியுடன் கூடும்போதும்
பாடாய்படுத்துகிறது
சற்றுமுன் டி.வி யில்
பார்த்த நடன பெண்களின்
மார்புகளும் இடுப்புகளும்
எந்த நடிகரின் அல்லது
எந்த நடிகையின் ஜாடையில்
பிறந்து தொலைக்கப்போகிறதோ
இன்று நிகழும்
ஜனன முயற்சியின் முடிவில்

Thursday, November 12, 2009

நான்கு கவிதைகள்

நான்கு கவிதைகள்
—————————————————





ஜி-8
————
ஜி-8 மாநாட்டை சீர்குலைக்க
வ‌ந்த தீவிரவாதிகளை
நீண்ட புலனாய்வுக்கு பிறகு
கண்டுபிடித்தார்களாம்.

உயர்பாதுகாப்பு அதிகாரி
செய்தியாளர்களிடம் சொன்னார்.
பிடிபட்டது மூன்று பேராம்.
நீண்ட கூரான ஆயுதங்கள்
மொத்தம் ஆறு வைத்திருந்தார்களாம்.
கண்டனம் தெரிவிக்க
கருப்புநிற ஆடைகள் அணிந்திருந்தனராம்.
குறிப்பாக தாடி வைத்திருந்தார்களாம்.
சந்தேகமே இல்லை. அவர்களேதான்.

மென்மையான விசாரிப்புக்கு பிறகு
இரண்டுபேர் குற்றங்களை
ஒப்புக்கொண்டார்களாம்.

ஒன்று மட்டும்
இன்னமும் பிடிவாதமாக
மே..மே…மே… எ‌ன்று கத்திக்கொண்டிருக்கிறதாம்.


ஓடிப்போனவன்
——————————————–

ஓடிப்போன நண்பன்
நாலு நாள் கழித்து
வீடு திரும்பினா‌‌‌ன்.

விம்மியபடி வாசல் வந்து
கட்டிக்கொண்டாள் அவனின் மனைவி.
ஐந்துவயது மகனுக்கு
கால்கள் தரையில் இல்லை
கொள்ளிப்போட வந்த
சந்தோசத்தில் அப்பா.
அப்பாடாவென்று
ஆனந்தப்பட்டார்கள் நண்பர்கள்.
பாவம்
என்ன கஷ்டமோ?
என்ன ஞானமோ?
பாதியில் வந்துவிட்டான்.

நிதானமாக விசாரிக்க வேண்டும்
பாதி புத்தனை.



மழை- ஒரு உண்மை
————————————————————
மழை எனக்கு பிடிக்கும்.
அதிலும் குறிப்பாக
மழைப்பற்றி கவிதையெழுதுவது
இன்னும் பிடிக்கும்.
இன்னும் குறிப்பாக
ஜன்னலுக்கு வெளியே
பெய்யும் மழையை எழுத பிடிக்கும்.
இறுதி குறிப்பாக
ஜன்னலுக்குள்ளிருந்து எழுத பிடிக்கும்.

Monday, November 9, 2009

"இரண்டாவது நாள்" - உயிரோசை கவிதை

இந்த வார உயிரோசையில் வெளிவந்த "இரண்டாவது நாள்" கவிதை வாசிக்க...

இரண்டாவது நாள்
----------------
சிவப்புநிற சிக்னலில்
கார் கதவை தட்டுகின்றாள்
பொம்மை விற்கும் சிறுமியொருத்தி.
சாப்பிட்டு இரண்டு நாள் ஆகின்றது.
கடந்த சிக்னலில் கேட்ட அதே ஓலம்.
இன்னொரு பொம்மை
வாங்கவும் ஒப்பவில்லை மனம்.
பார்வையைத் தவிர்த்து
பச்சை நிறம் நோக்கி வீசுகின்றேன்.
ஒரு பொம்மை, ஒரு சிறுமி,
ஒரு சிக்னலுக்கு ஏங்குகின்றது மனம்.
ஒரு நாள் பட்டினிக் கூட பழகியிருந்தது.


-நன்றி
என்.விநாயக முருகன்

Sunday, November 8, 2009

நிஜம் - திண்ணை.காம் & கீற்று.காம் கவிதை

இந்த வார திண்ணை.காம் மற்றும் கீற்று.காமில் வெளியான நிஜம் கவிதை...


நிஜம்
ஆறு வாரங்கள் ஓடிய
தொலைக்காட்சி நிகழ்ச்சியின்
ரியாலிட்டி ஷோவொன்றில்
ஆறாவது வாரம் நடந்தது
நிஜமான கல்யாணமாம்.
ஆறு வாரமும் நடந்த
சுயம்வர ஒளிப்பரப்பும்,
நேர்காணல்களும் நிஜமாம்.
எல்லாம் முடிந்தபின்னர்
எட்டாவது வாரம் நடந்ததும்
நிஜமான விவாகரத்தாம்.
ஆறாவது நிஜத்துக்கும்,
எட்டாவது நிஜத்துக்கும்
ஆறு வித்தியாசங்களாம்.


- நன்றி
என்.விநாயக முருகன்

Saturday, November 7, 2009

Mountain Patrol - உலகத்திரைப்படம்

Mountain Patrol - உலகத்திரைப்படம்

கடல் மட்டத்திலிருந்து 4700 மீட்டர் உயரத்தில் இருப்பது திபெத்திய கோஜெலி மலைக்கிராமம். இங்கு வசிக்கும் அ‌ரிய வகை கலைமான்களின் தோலுக்காக சட்டத்தை மீறி வேட்டையாடுகின்றார்கள் சிலர். அவர்களை பிடிக்க மக்களே சேர்ந்து சில தன்னார்வ காவல் குழுக்களை அமைக்கின்றார்கள்.

நாலு வரி செய்தி. நாலு வரியை வைத்து அதிகம் போனா‌‌‌ல் ஐந்து நிமிட ஆவணப்படம் எடுக்க முடியும்? ஆனா‌‌‌ல் இயக்குநர் லூசான் இதை தனது இயக்கத்தால் அற்புதமான 90 நிமிட திரைப்படமாக உருவாக்கியுள்ளார்.

சுற்றிலும் ஏகாந்த பனிமலைகள். நடுவில் சமவெளியில் ஒரு ஜீப்.
ஜீப்பினுள் ரோந்துப்பணியில் இருக்கும் காவலர் ஒருவர் அசந்து உறங்கிக்கொண்டிருக்கின்றார்.பக்கத்தில் நீண்ட துப்பாக்கி.
ஜீப் கதவை ஒரு வயதான நபர் தட்டுகின்றார். கண்விழிக்கும் காவலர் வெளியே பார்க்கின்றார். அந்த வயதான நபர் பின்னால் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள். காவலர் சுதாரித்து துப்பாக்கியை தொட முயல்கின்றார். அதற்கு முன்னால் வெளியே நிற்கும் அனைவர் துப்பாக்கிகளும் காவலர் நெஞ்சுக்கு குறிவைக்கின்றன.

கோஜெலி என்னும் மலைக்கிராமத்தில் மான் வேட்டைக்காரர்களால் சுடப்பட்டு இறந்துப்போன காவலருக்கு இறுதி சடங்குகள் நடக்கின்றன. அதைப்பற்றி செய்தி சேகரிக்க பீஜிங்கிலிருந்து காயூ எ‌ன்ற ரிப்போர்ட்டர் வருகின்றான். மான் வேட்டைக்காரர்களை பிடிக்கும் சிறப்பு காவல்படை ரிதாய்யை காயூ சந்திக்கின்றான். காவல்படை மான் வேட்டைக்காரர்களை தேடி பனிமலைகளில் பயணிக்கின்றனர். காயூவும் இவர்களோடு சேர்ந்து கேமராவுடன் செல்கின்றான். வழியில் நூற்றுக்கணக்கான தோல் உறிக்கப்பட்ட இறைச்சி வெட்டியெடுத்த மான்களின் எலும்புக்கூடுகள். தினசரிகளில் மான் வேட்டை நபர் கைது எ‌ன்று வெறும் ஒற்றை வரிச்செய்தியாக நாம் தாண்டிச்செல்கின்றோம். திரைப்படத்தின் இந்தக்காட்சி மனதுக்குள் கத்திப்போல இறங்கி செல்கின்றது.

மான் வேட்டைக்காரர்கள், அவர்கள் தரும் தோலை எடுத்துச்செல்லும் கிராமத்து மனிதர்கள் (கேரியர்கள) அவர்களது மான் வேட்டையை தடுக்கும் காவல்குழுவின் சிரமங்கள். சம்பளம் கூட இல்லாமல் அவர்கள் தன்னார்வக்குழுவாக பணிபுரிவது. கடத்தல்காரர்களிடமிருந்து பிடிபடும் தோலை சிலநேரங்களில் விற்று மருந்து,உணவுகள் வாங்கிக்கொள்வது எ‌ன்று படம் முழுக்க அற்புதமாய் ஆவணப்படுத்தியுள்ளார்கள்.
காவல்குழுவை சேர்ந்த ஒருவன் தனியாக ஜீப்பில் வரும்போது
புதைமணலில் சிக்கி கொஞ்சம் கொஞ்சமாக உயிர் விடும் காட்சி நெஞ்சை பதறவைக்கின்றது.

மிகுந்த சிரமத்துக்கிடையில் பனிப்பொழியும் திபெத்திய மலைகள், புதைமணல்கள் நிரம்பிய பாலைகளிடையில் இந்த படத்தை எடுத்துள்ளார் இயக்குநர் லூசான். பலன்? ஆறு உலகத்திரைப்பட விருதுகள். சீன அரசாங்கம் இந்தப்படம் வெளியானவுடன் கோஜெலி பகுதியை பாதுகாக்க சட்டம் இயற்றியது. கலைமான்களை பாதுகாக்க சட்டம் இயற்றியது. இதைவிட ஒரு கலைஞனுக்கு வேறு என்ன வேண்டும்?

நேஷனல் ஜியாக்ரபிக் இந்தப்படத்தை தயாரித்துள்ளது.

Friday, November 6, 2009

பளிச் கவிதை - 2 --- "நட்பு"

இந்த வார திண்ணை.காமில் வ‌ந்த நாவிஷ் செந்தில்குமார் கவிதையொன்று...

நட்பு

"சாப்பிட்டேன்" என
அம்மாவிடமும்
"கவலைப்பட வில்லை" என
அப்பாவிடமும்
"அடுத்த மாதத்திற்குள்
வேலை வாங்கிவிடுவேன்" என
அண்ணனிடமும்
"முதல் மாதச் சம்பளத்தில்
உனக்கொரு மடிக்கணினி" என
தங்கையிடமும் சொல்ல முடிந்தது...
"காலையிலிருந்து சாப்பிடல…
ரொம்பப் பசிக்குதுடா,
ஏதாவது வாங்கிக்கொடு"
என நண்பனிடம்
மட்டும் தான் கேட்க முடிந்தது...


நாவிஷ் செந்தில்குமார் எனது அலுவலகத்தில்தான் பணிபுரிகின்றார். எங்கள் அலுவலகத்தின் வலைப்பூக்களில் நிறைய கவிதைகள் எழுதியுள்ளார். தவிர திண்ணை.காம், கீற்று.காமில் இவரது பல கவிதைகள் தொடர்ந்து பிரசுரமாகி வருகின்றன.


-நன்றி
என்.விநாயக முருகன்


பளிச் கவிதை-1

Tuesday, November 3, 2009

தெகிமாலா நாட்டு சரித்திரம் - ஒரு கதை

கீற்று.காமில் முன்பு எழுதிய கதையொன்றை இப்போது படித்துப்பார்த்தேன். இன்னும் கொஞ்சம் ரெய்டு விட்டிருக்கலாமோ எ‌ன்று தோ‌ன்றியது.சமீப காலமாக இந்த தாத்தாக்கள் அடிக்கும் கொட்டம் தாங்க முடியவில்லை....



தெகிமாலா நாட்டு சரித்திரம்
என்.விநாயக முருகன்


முன்னொரு காலத்தில் கடல் கொண்ட லெமூரியாக் கண்டத்தில் தெகிமாலா என்றொரு நாடு இருந்தது. இந்த நாட்டில் பாலும் தேனும் ஆறாக ஓடியது. தெகிமாலா நாட்டு மக்கள் கொடுத்து வைத்தவர்கள். அங்கு உணவு பஞ்சம் என்று எதுவும் இல்லை. நகத்தால் பூமியை கீறினாலே போதும் தண்ணீர் பீறிட்டெழும். வானத்தில் இருந்து அடிக்கடி தேவதைகள் தெகிமாலா நாட்டில் இறங்கி இளைப்பாறி செல்வர். தேவதைகளும், மனிதர்களும், தேவதூதர்களும் சந்தோசமாக ஒன்றாக இருந்த அந்த தெகிமாலா நாடு பார்ப்பதற்கு இந்திரனுக்காக மயன் வடிவமைத்த இந்திரலோகம் போல இருந்ததாக லெமூரியா கல்வெட்டு ஒன்்று சொல்கிறது. தெகிமாலா நாட்டு தெ‌ன்கிழக்கே கடல் நடுவில் இகிமாலா என்றொரு சொர்க்கப்புரி தீவு நாடு இருந்தது. தெகிமாலா நாட்டு மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.

ஆனா‌‌‌ல் இந்த சந்தோசம் நீண்ட நாள் நிலைக்கவில்லை. ஒருநாள் திடீரென தெகிமாலா நாட்டில் எல்லோருமே வயதாகிப் போனார்கள். அதாவது நாட்டில் எல்லாருமே தாத்தாக்கள், பாட்டிகளாக மாறித் திரிந்தார்கள். அனைவரும் வயதான மனிதர்களாக இருந்ததால் சண்டை சச்சரவு இன்றி சந்தோசமாக கலை, இலக்கியமென்று பொழுதைக் கழித்தார்கள். தெகிமாலாவின் முக்கிய பொழுதுப் போக்கு தெருக் கூத்து மற்றும் மந்திர பொட்டிகள் தரும் (பின்னால் சொல்கிறேன்) மாயாஜாலங்கள். தேவதைகளின் நடனம். தெகிமாலா நாட்டு மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.

அனைவரும் இப்படி வயதானவர்களாக மாற அந்த நாட்டில் ஏற்கனவே இருந்த ‌சில வயதான மனிதர்கள்தான் என்று தெகிமாலா நாட்டின் சரித்திரத்தை உளவியல் ரீதியாக ஆராய்பவர்கள் சொல்கிறார்கள். அப்படி ஏற்கனவே இருந்த ‌சில வயதான மனிதர்களைப் பற்றிய ‌சில குறிப்புகள் லெமூரியா கல்வெட்டில் காண கிடைக்கிறது. தாத்தாக்கள் என்றறு இவர்களை தெகிமாலாவில் விளித்து வந்தார்கள்.

தாத்தா நம்பர்-1

தெகிமாலா நாட்டில் ஒரு கவிஞர் தாத்தா இருந்தார். அவர் தெருக்கூத்து கலைக்கு பாடல்கள் எழுதி வந்தார். இவரது பாடல்கள் தெகிமாலா நாட்டு மக்கள் மத்தில் பிரபலம். இவரது பாடல்களை தெகிமாலா மக்கள் அடிக்கடி முணுமுணுப்பார்கள். தெகிமாலா நாட்டு ராஜா அளவுக்கு இல்லை என்றாலும் ஒரு மந்திரி அளவுக்கு இவரிடம் செல்வம் இருந்தது. எல்லாமே தெருக்கூத்துப் பாடல்கள் எழுதி ஈட்டியது. ஒரு தெருக்கூத்து பாடலுக்கு ஒரு லட்சம் பொற்காசுகள் ஈட்டியதாக கல்வெட்டு செய்தியொன்று கூறுகிறது. தெகிமாலா நாட்டில் எப்போதாவது போர் வந்தால் இவருக்கு கோபம் வந்து உணர்ச்சிக் கொந்தளிப்பில் சில கவிதைகள் எழுதுவார். அவை மக்களுக்கான கவிதைகள் என்று சொல்லப்பட்டது. அனேகமாக அந்த கவிதைகள் நாலு வரியில் இப்படி இருக்கும்.

ஏ விதியே
உனக்கு கண்கள் இல்லையா?
என் செய்தாய்?
என் இன தெகிமாலா மக்களை
விதியே உன்னை திருத்துவேன்
வந்தால் நின்னை நசுக்குவேன்.

ஆனால் அடுத்த நாளே இந்த கவிஞர் தெருக்கூத்தொன்றில் வேறு பாட்டு எழுத சென்று விடுவார். பெண்களின் அங்க அசைவுகளையும், தெகிமாலா மலர்களையும் ஒப்பிட்டு இவர் எழுதும் பாடல்கள் தெகிமாலா இளைஞர்கள் மத்தியில் பிரபலம். இவர் எழுதும் பாடல்களின் உண்மையான உள்ளர்த்தம் தெரியாமல் தெகிமாலா மக்களும் இவரை கவி ராஜா என்று புகழ்ந்து வந்தார்கள். பூக்களால் ஆன கதவுகளே தாழ்ப்பாளை திறந்து விடுவாயா? என்று இவரது பாடல் வரிகள் தெகிமாலாவில் பிரசித்தம். கேட்பதற்கு இலக்கியத்தரம் போல தெரிந்தாலும் இதன் மறை பொருளில் ஒளிந்திருக்கும் கொச்சைத்தனம். மற்ற தெகிமாலா நாட்டு இலக்கியக் கவிஞர்களிடம் இவரது போலியான சமகால கவிதைகள், இலக்கியம் என்ற பெயரில் இசைக்கு ஏற்ப வார்தைகளை போட்டு நிரப்பும் பம்மாத்து எல்லாம் கடும் விமர்சனத்துக்கு உட்பட்டன.

நான் சொல்ல வந்தது இது இல்லை.

தெகிமாலா நாட்டில் இவரைத் தவிர்த்து மற்ற சில கவிஞர்களும் இருந்தார்கள். பாவம் சமகாலத்தில் வாழ்ந்த அவர்கள் எல்லாம் சோற்றுக்கு வழி இல்லாமல் செத்தார்கள். இந்த கவிஞர் தாத்தாவுக்கு தெகிமாலா நாட்டு ராஜாவுடன் அரண்மனையில் அமர்ந்து விருந்து சாப்பிடும் அளவு நட்பு இருந்தது. ராஜா என்ன தப்பு செய்தாலும் இடித்துக் கூறும் பழக்கம் இந்த தாத்தாவுக்கு இல்லை. தவிர யார் ராஜாவானலும் அவர்களிடம் நட்பு பாராட்டும் வழக்கமும் இந்த தாத்தாவுக்கு இருந்தது. அரண்மனையில் அவ்வப்போது ஆஜராகி ராஜாவை போற்றி நானூறு வரி கவிதையொன்றை பாடி பொற்காசுகளை பெற்று வருவார் (கவனிக்க - மக்களுக்கான கவிதைகள் நாலு வரிகள் மட்டுமே)

நான் சொல்ல வந்தது இது இல்லை.

இவர் தேவதைகளை காதலியுங்கள் என்று தெகிமாலா நாட்டு இளைஞர்களுக்காக எழுதிய பாடல்கள் பிரசித்தம். இவை ஓலை சுவடிகளில் பொறிக்கப்பட்டு தெகிமாலா நாடெங்கும் ஒரு பொற்காசுக்கு விற்கப்பட்டன. தெகிமாலா நாடெங்கும் வானிலிருந்து தேவதைகள் இறங்கி வந்தவண்ணமாக இருந்ததால் தெகிமாலா இளைஞர்களுக்கு தேவதைகள் கிடைப்பதில் அதிக சிரமம் இருந்ததில்லை. தேவதைகளை காதலிப்பதன் மூலமே தெகிமாலா மனிதர்கள் சிறப்புற்று வானுள் உறையலாம் என்பது இவர் தத்துவம். தெருக்கூத்து பாடல்களில் தேவதைகளை காதலிக்க சொன்னார். தேவதைகளும் இதை ஆமோதித்தன. இவ்வாறு தெகிமாலா மக்கள் காதல் வாழ்க்கை மெல்ல மெல்ல இந்த கவிஞர் தாத்தாவால் தெருக்கூத்து மூலமாக மாற்றி அமைக்கப்பட்டு புது பரிணாமத்தில் மிளுங்க ஆரம்பித்தது. தெகிமாலா மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.

நான் சொல்ல வந்தது இது இல்லை.

தாத்தா நம்பர்- 2

தாத்தா நம்பர்- 2 பெயரைச் சொன்னாலே தெகிமாலா நாட்டில் விசில் பறக்கும். நடந்து வந்தால் (எப்படி தாத்தா இந்த வயதில் இவ்வளவு சுறுசுறுப்பாக நடக்கிறார் என்பது யாருக்கும் புரியாத தங்கமலை ரகசியம்) அனல் பறக்கும். இவர் ஒரு தெருக்கூத்து கலைஞர். தெகிமாலா நாட்டின் அர‌சிய‌ல், கலை, இலக்கியங்களில் முக்கியமான ஆளுமை செலுத்தக்கூடிய நபர். இந்த தாத்தா ஒருபோதும் பாட்டிகளுடன் ஜோடியாக கூத்தில் நடிக்க மாட்டார். தன் பேத்திக்கு பேத்தி வயதில் உள்னள பெண்களுடன்தான் நடிப்பார். ஒரு தெருக்கூத்தில் தப்பு தப்பு தப்பு தப்பு தப்புக் கிழவி என்று பாடி வைக்க அந்த தெருக்கூத்துக்கு கிழவிகளின் கூட்டம் வராமல் போனது பெரும் சோகம். கூத்து செம பிளாப். பிறகு இவர் தெகிமாலா நாட்டின் பக்கத்தில் உள்ள கெகிமாலா நாட்டுக்கு சென்று ஆயில் மசாஜ் செய்து நாடி, நரம்புகளை நீவி தெம்பாக கூத்துக் கட்ட வந்தார். கூத்தும் களைக் கட்டியது. தெகிமாலா மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.

நான் சொல்ல வந்தது இது இல்லை.

இந்த தாத்தா நம்பர்- 2 க்கு ஒரு வினோத பழக்கம் இருந்தது. இவர் அடிக்கடி கண்களை மூடிக்கொண்டு வானத்தைப் பார்த்து விரல்களை மடக்கி தேவதைகளை பார்த்து ஏதோ சொல்வார். தேவதைகள் என்னை தூக்கி வடக்குத் திசையிலுள்ள ‌சில கடவுளின் தூதர்களிடம் சென்றுவிடும். அங்தகே கடவுளை பார்த்து விட்டு மீண்டும் தெகிமாலா திரும்பி விடுவேன் என்று அடிக்கடி சொல்வார். தெகிமாலா மக்கள் இவரையே கடவுளாக நம்பி கன்னத்தில் போட்டுக்கொள்வார்கள். தெகிமாலா மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.

நான் சொல்ல வந்தது இதுத இல்லை.

இந்த தாத்தா நம்பர்-2 வின் மூத்த மகள் ஒரு பையனைக் காதலித்தாள். அந்த பையனும் ஒரு இள‌ம் கூத்து நடிகன். அந்த பையனுக்கும் ஒரு வினோத பழக்கம் இருந்தது. தாத்தா போல இல்லாமல் இவன் அடிக்கடி பூமியை பார்த்து விரல்களை காட்டுவான். பூமிக்குள் இருந்து பாதாள பைரவிகள் வ‌ந்து என்னை தூக்கிச் சென்று பாதாள உலக கடவுளிடம் அழைத்துப் போவார்கள் என்று பீலா விடுவான்.

இவனது பீலா தாத்தாவுக்கு பிடிக்காமல் போக அவர் தனது மகளை இன்னொரு தெருக்கூத்து பையனுக்குக் கட்டி வைத்தார். அவளும் தெரிஞ்ச நாயைக் காட்டிலும் தெரியாத பேய் மேல் என்று காதலை உதறி தாத்தா நம்பர்-2 பேச்சுக்கு கட்டுப்பட்டாள். இந்த நிஜக் கூத்தெல்லாம் தெகிமாலா நாட்டு மக்களுக்கு கொஞ்ச நாள் வரை கிளுகிளுப்பாக இருந்தது. தெகிமாலா மக்கள் கொடுத்து வைத்தவர்கள். கொஞ்ச நாள் வெறும் வாய்க்கு அவல் கிடைத்தது.

நான் சொல்ல வந்தது இதுக இல்லை.

தாத்தா-2 க்கு உள்ளுக்குள் ஒரு ஆசை. அது தெகிமாலா நாட்டுக்கு ஓரே ஒரு நாள் ராஜாவாகி விட வேண்டும் என்பதுதான். ஆனா‌‌‌ல் அதை வெளியில் சொல்ல மாட்டார். கூத்துக்கலையில் மயங்கிய மக்களும் கேட்டுப் பார்த்து விட்டார்கள். உங்களுக்கு ராஜா ஆசை இருந்தால் சொல்லி விடுங்கள். கண்ட கண்ட ……... யெல்லாம் ராஜாவா இருக்காங்க. உங்கள ராஜாவாக்க மாட்டோமா?

தாத்தா நம்பர்-2 மக்களை பார்த்து சொன்னது இதுதான். வானத்து தேவதைகள், தூதர்கள் மனது வைத்தால் நான் ராஜாவாகி விடுவேன். எனக்கு ராஜா ஆசை இல்லை. ஒருவேளை நான் ராஜாவானால் அது நான் ராஜா ஆனதால் நடந்தது என்று அர்த்தம். இந்த அறிவிப்பை சொல்லி விட்டு அவர் ஒரு தெருக்கூத்து நடிக்க அகிமாலா நாட்டுக்கு சென்று விட்டார். தெகிமாலா மக்கள் மண்டையை பிச்சிக்கிட்டு அலைந்தார்கள்.

நான் சொல்ல வந்தது இது் இல்லை.

தெகிமாலா மக்கள் ஞாபக மறதிக்காரர்கள். தாத்தா அகிமாலாவிலிருந்து திரும்ப மூன்று வருடங்கள் ஆகும். மக்களுக்கு போரடிக்க ஆரம்பித்தது. அப்போதுதான் தாத்தா நம்பர்-3 பரபரப்பாக பேசப்பட்டார்.

தாத்தா நம்பர்- 3

இந்த தாத்தா நம்பர்-3 கொஞ்சம் பவர்புல் மனிதர். எழுதவே பயமாக இருக்கிறது. இவர்தான் தெகிமாலா நாட்டு ராஜா. இவரைப் பற்றி நாம் பேசுவதற்கு முன் தெகிமாலா நாட்டில் ஒரு பாட்டியின் கதையை பார்த்து விடலாம். இந்த பாட்டி நிலவில் வடை சுட்டுக் கொண்டிருந்தபோது தெகிமாலா நாட்டு தெருக்கூத்து மேல் ஆர்வம் வந்து, கூத்துக்கட்டும் ஆசையில் எண்ணெய் சட்டியைக் கூட இறக்காமல் ஓடி வந்து விட எண்ணெய் சட்டி சூடேறி வெடித்து விட்டது. நிலவு முழுதும் கொழுந்து விட்டு பற்றி எரிந்துக் கொண்டிருந்தது நெருப்பு.

நான் சொல்ல வந்தது இது இல்லை.

தாத்தா நம்பர்-3 பற்றி. ராஜாவாக இருந்தாலும் இவரும் தெருக் கூத்திலிருந்துதான் வந்தார். ஆரம்பத்தில் தெருக்கூத்தில் வசனம் எழுதி வந்தார். அந்த வசனம் பாட்டியின் அடுப்பை விட சூடாக இருந்தது. மக்கள் இதயத்தை சுட்டது. தெகிமாலா மக்கள் தாத்தா நம்பர்-3 ஐ ராஜாவாக்கி விட்டார்கள். தாத்தா நம்பர் 3 க்கும் நிலவு பாட்டிக்கும் ஒருபோதும் ஒத்து போவதில்லை, ஒரு விசயம் தவிர. அது தெகிமாலா மக்களை தங்கள் பேச்சால், சிந்தனையால் குழப்புவதை தவிர.

உதாரணம் தாத்தா நம்பர்3:- நீ என்ன நிலவிலிருந்து வந்த பாட்டியா? எனக்கு ஏட்டிக்கு போட்டியா?

நிலவு பாட்டி :- நான் நிலவிலிருந்து வந்தாலும் இந்த தெகிமாலா நாட்டில் பிறந்தவள்தான். வடை சுடுவதற்காக நிலவுக்கு சென்றேன். இப்ப என் சொந்த நாட்டுக்கு வந்து விட்டேன்.

தாத்தா நம்பர் 3:- நிலவுக்கு சென்ற அரசியே? அங்கிருந்து எடுத்து வருவாயோ தண்ணி நூறு டி.எம்.சியே.

நிலவு பாட்டி :- நான் ராணியானால் பற்றி எரியும் நிலவிலிருந்து நூறு என்ன நூறு கோடி டி.எம்.சி தண்ணீர் எடுத்து வருவேன். செய்வீர்களா

என்று மக்களை பார்த்துக் கேட்க தெகிமாலா மக்களும் அவரை ராணியாக்கி விட்டார்கள். ராணி செய்த முதல் வேலை. வேண்டாம் விட்டு விடுங்கள். அப்புறம் நான் வாங்கிக் கட்டிக்கொள்ளப் போகிறேன். சிறிது காலம் சென்ற பிறகு ராணிப் பாட்டி சென்று மீண்டும் ராஜா தாத்தா அரியணையில் வந்து அமர்ந்தார். தெகிமாலா மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.

நான் சொல்ல வந்தது இது இல்லை.

குட்டித்தீவு :-

தெகிமாலா நாட்டுக்கு தென்கிழக்கே ஒரு குட்டித் தீவு இருப்பதாக சொன்னேன் அல்லவா? அந்த குட்டித் தீவின் பெயர் இகிமாலா. இங்க எப்ப பார்த்தாலும் சண்டை. இங்க இருக்கற ராஜா ஒரு சாடிஸ்ட் தாத்தா. அவருக்கு தினமும் நூறு பறவைகள் (சொந்த நாட்டு பறவைகள்) ரத்தத்தை குடிக்கனும். சமீப காலமாக அவர் பறவை இனத்தையே அழித்து விட வேண்டும் என்று தீவிரமாக இறங்கியிருந்தார். ரத்த வெறி அதிகமாகி நூறு என்ற எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்து விட்டது.

நான் சொல்ல வந்தது இது இல்லை.

Back To தெகிமாலா

ஒரு நாள் ராஜா தாத்தா நம்பர்-3 கடற்கரையில் வாக்கிங் செல்கிறார். அதிகாலை. மறைந்திராத நிலவை பார்க்கிறார். இது் வரை சூரியனையே பார்த்து வ‌ந்த அவர் முத‌ல் முறையாக நிலவை பார்க்கிறார். நிலா ரத்த சிவப்பாக இருக்கிறது. அய்யகோ… இதென்ன கொடுமை என்றறு வினவ உட‌ன் சென்றவர்கள் திகைக்கின்றனர். அவர்களுக்கு தெரியும் இதுன நிலவு பாட்டியின் அடுப்பு வெடித்து தீப்பற்றி எரியும் நிலாவென. ஆனா‌‌‌ல் அவர்கள் மாற்றிச் சொல்லி விடுகிறார்கள்.

இகிமாலா தீவில் தினமும் ஆயிரக்கணக்கான பறவைகள் செத்து மடிகின்றன. அவற்றின் ரத்தம் நிலவில் பட்டு தெறித்து நிலா சிவப்பாக மிளுங்குகிறது. அவதானித்தால் கடல் நீலம் இழந்து ரத்த நிற சோபையுடன் இருப்பதை பார்க்கலாம். (இந்த மிளுங்குகிறது-அவதானிப்பு இதெல்லாம் தெகிமாலா நாட்டு இலக்கிய மோஸ்தர்) மேலும் கடற்கரை முழுதும் செத்து ஒதுங்கிய பறவைகளின் உடல்கள்.

தாத்தா ராஜாவுக்கு தலை சுற்றுகிறது. அய்யகோ நிலவு ரத்தம். கலங்கியது என் சித்தம். தெளிந்தது உன்மத்தமென கால் நடுங்கி பீச்சில் சாப்பிடாமல் அமர்கிறார். காட்டுத்தீ போல் தெகிமாலா எங்கும் விசயம் பரவுகிறது. தாத்தா ராஜா ஆதரவாளர்கள் தெகிமாலா முழுதும் சாப்பிடாமல் அமர்கிறார்கள். வாக்கிங் வ‌ந்த மக்கள் திகைக்கிறார்கள். பன்னிரெண்டு மணிக்கு ராஜாவுக்கு பசி வருகிறது. அரண்மனைக்கு எழுந்து போய் விடுகிறார். சரி. அப்படினா‌‌‌ இகிமாலாத் தீவில் பறவைகளை கொல்வது நின்று விட்டதா என் று ‌நீ‌ங்க‌ள் கேட்கலாம். வேண்டாம் விட்டு விடுங்கள். அப்புறம் நான் வாங்கிக் கட்டிக்கொள்ளப் போகிறேன்.

நான் சொல்ல வந்தது இது இல்லை.

மந்திரப்பொட்டிகள்

தெகிமாலா நாட்டு ராஜா தாத்தாவுக்கு இரண்டு மனைவிகள். ஐந்து பிள்ளைகள். இருபது பேரக் குழந்தைகள். பேரக் குழந்தைகளில் ஒருவருக்கு ஒருநாள் ஒரு அதிசய மந்திர பொட்டிக் கிடைக்கிறது. இதைக் கொண்டு உலகின் ஏன் பிரபஞ்சத்தின் எந்த மூலையில் நடக்கும் விசயத்தையும் பார்க்க முடியும். இந்த மந்திர பொட்டியை மிக திறமையாக பயன்படுத்தினா‌‌‌ல் ஒருவனை மிக வல்லமை படைத்தவனாக மற்ற முடியும். அதே நேரம் இது மக்கள் கைக்கு கிடைத்தால்? அவர்களில் யாராவது வல்லமை பெற்று விட்டால். ஐயோ… நினைக்கவே பயமாக இருக்கிறது.

அப்போதுதான் பேரனுக்கு ஒரு ஐடியா வருகிறது. இந்த மந்திர பொட்டியை தயாரித்து தெகிமாலா மக்கள் எல்லாருக்கும் தந்து விடலாம். நம் நாட்டில் பிரபலமாக உள்ள தெருகூத்துக் கலையை மந்திர பொட்டியில் காட்டி விடலாம். மக்கள் அதில் மயங்கி மூழ்கி விடுவார்கள். ஐடியா ந‌ல்ல இருக்கிறதல்லவா? அந்தக் காலத்தில் இதற்குதான் ராஜ தந்திரம் என்ளறு பெயர். அன்று முதல் தெகிமாலா மக்கள் மந்திர பொட்டி முன்பு மகுடிக்கு கட்டுப்பட்ட நாகமாக மயங்கி கிடந்தார்கள். மந்திர பொட்டிகளில் தேவதைகள் தோன்றி இளைஞர்களை வசியம் செய்தார்கள். சில தாத்தாக்கள் பேசியே மயக்கினார்கள். பகல் பொழுதுகளில் தேவதைகள் தலையை விரித்து போட்டுக் கொண்டு லிட்டர் லிட்டராக கண்ணீர் வடித்தார்கள். தெகிமாலா இல்லத்தரசிகளும் அவர்களை கண்டு கண்ணீர் வடித்தார்கள். தெகிமாலா மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.

நான் சொல்ல வந்தது இது இல்லை.

இந்த விசயம் நிலவு பாட்டிக்கு எட்டியது. நிலவு பாட்டி கைக்கும் சில மந்திர பொட்டிகள் சென்றது. அவற்றை வைத்து நிலவு பாட்டியும் தெகிமாலா மக்களை குழப்ப, தெகிமாலா மக்கள் ஒருக்கட்டத்தில் சுத்தமாக சிந்திக்கும் திறனை இழந்தார்கள். அவர்கள் தாத்தாக்கள், பாட்டிகள் சிந்தனையை மெல்ல உள் வாங்கினார்கள். கொஞ்சம் கொஞ்சமாக மாறினார்கள். ஒருக்கட்டத்தில் தெகிமாலா மக்கள் அனைவருமே தாத்தாக்கள், பாட்டிகளாக உருமாற்றம் அடைந்தார்கள். தெகிமாலா மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.

நான் சொல்ல வந்தது இதுவும் இல்லை.

நான் சொல்ல வந்தது

தெகிமாலா நாட்டில் இந்த மூன்று தாத்தாக்கள் தவிர மேலும் பல தாத்தாக்கள் இருந்தனர். பத்து வேடம் கட்டிய ராஜ பார்ட் தெருக்கூத்து தாத்தா (தாத்தா-2 போல இவரும் பேசுவது யாருக்கும் புரியாது). பட்டிமன்ற தாத்தா (பேசும்போது தன் நிறத்தை தானே கிண்டல் செய்துக் கொள்வார்) முண்டாசுக் கட்டிய பெரிய ராஜா தாத்தா, லொள்ளுத் தாத்தா, கொள்ளுத் தாத்தா, புல்லுத் தாத்தா தேசமெங்கும் தாத்தாக்கள்தான். இத்தனை தாத்தாக்கள் இருந்தும் தெகிமாலா மக்களின் சமகால தலையெழுத்தை மாற்றியமைத்ததில் பெரும் பங்கும் பெருமையும் அந்த மூன்று தாத்தாக்களுக்கும், நிலவு பாட்டிக்கும்தான் சேரும்.

மந்திர பொட்டிகள் வழியாக இவர்கள் தெகிமாலா வீட்டுக்குள் அவர்களை அறியாமலேயே செ‌ன்று தெகிமாலா இளைஞர்களை தாத்தாக்களாகவும், இளைஞிகளை பாட்டிகளாகவும் மாற்றி விட்டார்கள். ஒரு வகையில் தெகிமாலா நாட்டில் எல்லோரும் தாத்தாக்களாகவும், பாட்டிகளாகவும் மாறிப்போனதும் நல்லதே. எப்படி என்லறு கேட்கிறீர்களா? முன்பு தெகிமாலா சிறுவர்கள் இப்படி பாடுவார்கள்.

தாத்தா தாத்தா தை
தாத்தா கையில நெய்
மோந்து பார்த்தால் ஆய்


இப்போது தேசமெங்கும் எல்லோருமே தாத்தாக்களாக மாறிப் போனதில் யாருமே தாத்தாக்களை கிண்டல் செய்வதில்லை. தேசமெங்கும் தாத்தாக்கள் என்ற பொது அடையாளம் ஒரு வகையில் சோஷியலிசமே. தெகிமாலா மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.

நான் சொல்ல வந்தது இதுவும் இல்லை...

Monday, November 2, 2009

பார்த்ததில் ரசித்தது - நேற்று...இன்று

நேற்று















இன்று

முத‌ன் முதலாய்

முந்தைய போஸ்ட்டில் இருந்த காதல் கவிதைகள் கல்லூரி படிக்கையில் கிறுக்கியவை. இப்போதெல்லாம் ரொமான்ஸ் கவிதைகளுக்கு பதில் இ‌து போன்ற ஏடாகூட கவிதைகள்தான் வ‌ந்து விழுகின்றன.

முத‌ன் முதலாய்
---------------
நண்பனுடன் சென்றிருந்த
சந்து வீடொன்றில்
எப்படி ஆரம்பிப்பது
என்ன பேசுவதென்று தெரியவில்லை.
இதுதான் முத‌ல் முறை
எனக்கென்று ஆரம்பிக்க
எப்படியோ தொடங்கியது.
எல்லாம் முடிந்து திரும்புகையில்
அடு‌த்த முறை தொடங்க
என்ன பேசுவதென்று குழம்பியது.