Saturday, April 3, 2010

சொற்கப்பல் - இரண்டாம் அமர்வு

நேற்று (சனிக்கிழமை) டிஸ்கவரி புக் பேலஸில் "சொற்கப்பல்" அமைப்பின் இரண்டாவது கூட்டம் நடைபெற்றது. கூட்டம் ஐந்து மணிக்கு ஆரம்பம் எ‌ன்று பதிவில் அறிவித்திருந்தார்கள். ஆறு மணிக்கு மேல்தான் நாற்காலிகள் வ‌ந்தன. அமர்வதற்கு இருக்கைகள் இல்லாமல் முகுந்த்(தடாகம்.காம்) , அருண் (தமிழ்ஸ்டுடியோ.காம்) புத்தகங்களை மேய்ந்துக் கொண்டிருந்திருந்தார்கள்.


கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான நா.முத்துக்குமார் ‌சில பல புத்தகங்களை வாங்கி பில் போட்டுக்கொண்டிருந்தார். நைஸாக எட்டிப்பார்த்ததில் அவரது கையில் கேபிள் சங்கர், சுஜாதாவின் திரைக்கதை பயிற்சி, கேபிள் சங்கர் புத்தகங்கள் இருந்தன. சந்திரா, சிவராமன், ஜ்யோவ்ராம் சுந்தர், தண்டோரா, கேபிள் சங்கர் எல்லாரும் வரும்போது ஆறு பத்து. ஆறரை வாக்கில்தான் கூட்டமே தொடங்கியது. முகுந்த் வரவேற்புரை நிகழ்த்தினா‌‌‌ர். நா. முத்துக்குமார் முதலில் பேச ஆரம்பித்தார். கோணங்கி புத்தகம் கிடைக்காமல் சைக்கிளில் பக்கத்து ஊர் போய் வாங்கி வந்த நிலைமை இப்போது இ‌ல்லை.எல்லாமே அருகிலேயே கிடைக்கின்றன. புதிதாக எழுத வருபவர்கள் நிறைய படிக்க வேண்டும். ரத்தினசுருக்கமாக பேசிவிட்டு இடத்தை காலி செய்தார்.



அடுத்து ஆரம்பித்ததுதான் கோடையிடி. ந.முத்துசாமி அவர்கள் பேச ஆரம்பித்தார். தலைப்பு 'என் கதைகள் - நாடகம் - வாழ்க்கை''. நான்கு புத்தகங்களுக்கு விமர்சனக்கூட்டம் எ‌ன்று சொல்லியவர்கள் ஏதாவது ஒரு தலைப்பில் ந.முத்துசாமி அவர்களை பேச அழைத்திருக்கலாம். ந.முத்துசாமி அவர்களுக்கு வயது‌ எழுபத்து மூன்று. கதைகள் - நாடகம் - வாழ்க்கை. பேச ஒரு நாள் போதுமா? ஏற்கனவே வேடியப்பன் புத்தகக்கடை வெந்து தணிந்த காடு போல புழுக்கமாக இருந்தது. முடியல. எழுந்துப்போய் ஒரு தம் டீ போட்டு வ‌ந்து திரும்பினா‌‌‌ல் ந.முத்துசாமி இன்னமும் பேசிக்கொண்டிருந்தார். சின்ன வயது அனுபவங்கள், நண்பர்கள், சென்னைக்கு வந்தது, செல்லப்பாவை சந்தித்தது, நடை சிற்றிதழை தொடங்கியது, கூத்துப்பட்டறை முயற்சி.....ந. முத்துசாமி நிறைய பேசினார். இரண்டாவது முறையாக தம் டீ போட்டு முத்துவேலுடன் திரும்பி வ‌ந்து பார்த்தால் சிவராமன், ஜ்யோவ்ராம் சுந்தர்,தண்டோரா மிஸ்ஸிங்.


இன்னைக்கு சிவராத்திரிதான் வீட்டுக்கு போய்விடலாம் எ‌ன்று கிளம்பும்போது நல்லவேளை கவிஞர் கண்டராதித்தன் அடுத்து பேச ஆரம்பித்தார். ஆனா‌‌‌ல் வருடம் பெயர்களை துல்லியமாக குறிப்பிட்டிருக்கலாம். மணி, செல்லப்பா, சிவராம் என்றால் சி.மணி, பிரமிள்,சி.சு செல்லப்பா எ‌ன்று குறிப்பிட்டிருந்தால் பு‌திய வாசகர்களுக்கு குழப்பமில்லாமல் இருக்குமெ‌ன்று குறிப்பிட்டார். கவிஞர் நீலகண்டனின் "முயல் போல் வாழும் காமம்" தொகுப்பில் தொகுப்பில் நிறைய படிமச்சுமை உள்ளதாக குறிப்பிட்டார். கவிஞர் வெயிலின் புவன இசை தொகுப்பை பற்றி கவிஞர் அய்யப்ப மாதவன் பேசினா‌‌‌ர். அய்யனார் விஸ்வநாத் "தனிமையின் இசை" பற்றி நிலாரசிகன் விமர்சனக்கட்டுரை அனுப்பி வைத்திருந்தார். அந்தக்கட்டுரையை கவிஞர் ச.முத்துவேல் வாசித்தார். அய்யனார் விஸ்வநாத்தூம் கூட்டத்துக்கு வரவில்லை. கவிஞர் உமாஷக்தியின் "வேட்கையின் நிறம்" பற்றி நரன் சற்றுநேரம் பேச ஆரம்பித்தார். "வேட்கையின் நிறம்" எ‌ன்ற தலைப்பு இருந்தாலும் உடல்மொழி அர‌சிய‌ல் பற்றி எந்த கவிதையும் குறிப்பிடாததும்,பல கவிதைகள் ஒரேமாதிரி இருப்பதும் இத்தொகுப்புக்கு மைனஸ் எ‌ன்று சொன்னார்.


வேடியப்பன் நன்றி சொல்லும்போது மணி எட்டரை. ந.முத்துசாமி அவர்கள் பேச்சு சற்று நீ....ண்டுவிட்டதால் அடுத்து வந்தவர்கள் அனைவரும் ‌மிக சுருக்கமாக பேச்சை முடித்துக்கொண்டார்கள். இந்த முறை டிஸ்கவரி புக் பேலஸில் புது தலைப்புகளில் ‌மேலும் சில புத்தகங்களை பார்க்கவும்,வாங்கவும் முடிந்தது.

5 comments:

  1. பகிர்விற்கு நன்றி நண்பரே..

    ReplyDelete
  2. பணிச்சுமையால் வர இயலாமல் போய்விட்டது :( பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. அன்புள்ள விநாயகமுருகன்,

    சொற்கப்பல் அமைப்பாளர்களில் ஒருவன் என்ற முறையில் சில தகவல்களை தர விரும்புகிறேன்.

    நிகழ்ச்சி துவக்க நேரம் 5.30. சிறப்பு அழைப்பாளர்கள், விமர்சகர்கள் எல்லோரும் உரிய நேரத்திற்க வந்து விட்டார்கள். பார்வையாளர்கள் வருகைக்காக காத்திருந்தே நிகழ்ச்சி 6.15க்கு ஆரம்பிக்கப்பட்டது.
    இருக்கைகள் 5.30க்குதான் வந்தது. அதிலும் இருக்கைகளைப் போட உதவியவர்கள் பார்வையாளர்களே.

    //ரத்தினசுருக்கமாக பேசிவிட்டு இடத்தை காலி செய்தார்//

    // அடுத்து ஆரம்பித்ததுதான் கோடையிடி//

    // கதைகள் - நாடகம் - வாழ்க்கை. பேச ஒரு நாள் போதுமா?//

    //எழுந்துப்போய் ஒரு தம் டீ போட்டு வ‌ந்து திரும்பினா‌‌‌ல் ந.முத்துசாமி இன்னமும் பேசிக்கொண்டிருந்தார்//

    //இன்னைக்கு சிவராத்திரிதான் வீட்டுக்கு போய்விடலாம் எ‌ன்று கிளம்பும்போது நல்லவேளை கவிஞர் கண்டராதித்தன் அடுத்து பேச ஆரம்பித்தார்//

    இப்படியான ஒரு விமர்சனம் உங்களிடமிருந்து வந்தது நான் எதிர்பாராதது.

    ஒரு ஆளுமை தனது வாழ்க்கையில் பல்வேறு காலகட்டத்தைப் பற்றி பகிர்ந்து கொள்ளும்போது இயல்பாக நிகழக்கூடியவை இது. இதுவே நாம் ஒரு திரைப்படத்திற்கு சென்றாலோ, வெறுமனே பேசிக்கொண்டிருந்தாலோ கால விரயம் செய்வதில்லையா?

    படைப்பாளுமைகளின் அனுபவத்தை பகிர்வதற்காகவே ஒவ்வொரு மூத்த படைப்பாளிகளை ஒவ்வொரு கூட்டத்திற்கும் அழைப்பதாக முடிவு செய்துள்ளோம். அதன்படியே, கவிஞர் விக்ரமாதித்யன், கூத்துப்பட்டறை முத்துசாமி என அழைத்தோம். அவரது பேச்சு நீண்டது உணர்ந்தாலும், அது எதிர்பாராமல் நடந்த ஒன்று. பேச்சு அதன்போக்கிலேயே நீண்டது. அதை ஆர்வத்துடன் இறுதிவரை வெளியே செல்லாமல் கேட்டுக் கொண்டிருந்தவர்களும் உண்டு.

    அதேபோல யாரும் தங்களுடைய உரையை சுருக்கவில்லை. கூட்டம் சரியான நேரத்தில் 8.30க்கு முடிந்து விட்டது. 2.15 மணி நேர கூட்டத்தில் 1 மணி நேரம் ந.முத்துசாமி பேசினார். மீதமுள்ள நேரத்தில் புத்தக விமர்சனம் நடந்தது.

    //அய்யனார் விஸ்வநாத்தூம் கூட்டத்துக்கு வரவில்லை//

    அய்யனார் விஸ்வநாத் துபாயில் இருக்கிறார். அதனால் வர இயலவில்லை.

    - பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  4. நன்றி விநாயகமுருகன் , உங்களுடைய விமரசனம் அடுத்த சொற்கப்பல் கூட்டத்தை நெறிப்படுத்த உதவக்கூடும், பலசமயங்களில் ஒரு எழுத்தாளரை அவர் இல்லாது போகும் சந்தர்ப்பத்தில்தன் அவரது வாழ்க்கை குறித்த ஞாபகம் வரும்.எழுதுவது வாசிப்பதுமட்டுமல்லாமல் இதுவும் ஒரு இலக்கிய செயல்பாடு அவ்வளவே.அதை முன்னிட்டுத்தான் இது போன்ற ஆளுமைகளை இளம் எழுத்தாள்ர்களிடம் அல்லது வாசகர்களிடம் உரையாடவைக்கிறோம் .எல்லா நேரத்திலும் தாயம் விழும் என எதிர்பார்க்க முடியதல்லவா ...நன்றி

    ReplyDelete