Thursday, August 26, 2010

என் பெயர் சிவப்பு



பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது ஓர் ஓவியத்தை பார்த்த நினைவு. ஒரு வயதான பெரியவரின் முகம் கோட்டோவியமாக தீட்டப்பட்டிருக்கும். முகமெங்கும் சுருக்கங்கள் இருக்கும். அந்த கோட்டோவியத்தின் சுவாரசியத்தன்மையே அதனுள் ஒ‌ளிந்திருக்கும் ஒ‌ன்றிற்கும் மேற்பட்ட உருவங்களை கண்டுபிடித்து விளையாடுவதே. ஓவியத்தின் காதை நன்றாக உற்றுக் கவனித்தால் காதிற்கு பின் ஒரு நாய் சுருண்டு படுத்திருக்கும் ஓவியம் புலனா‌‌‌கும். கண்களை உற்று கவனித்தால் இரண்டு படகுகளின் ஓவியங்கள் புலனா‌‌‌கும். ஓவியத்தின் வசீகரத்தன்மை என்பது அது வெளிப்படுத்தும் உருவத்திலும், கோடுகளிலும், வர்ணங்களிலும் மட்டும் இல்லை. அது வெளிப்படுத்தாத கோடுகளிலும், வர்ணங்களிலும் கூட அதன் நீட்சி இருக்கலாம் எ‌ன்று அந்த விளையாட்டு சொல்லாமல் சொல்லும்.

My Name is Red நாவல் படிக்கும்போது சின்ன வயதில் நாங்கள் அந்த புதிரான ஓவியத்தின் ஊடே மீண்டும்,மீண்டும் ஒடி ‌விளையாடி களைத்து குதூகல தருணங்கள் நினைவுக்கு வந்தன.

ஒரு அழகான காதல் அதனூடே ஒரு கொலை இரண்டு வர்ணங்கள் குழைத்து பாவு நூலினிடையே ஊடு நூலை விட்டு தறியில் அடிக்கும் தேர்ந்த நெசவாளியின் லாவகம் போல ஓரான் பாமுக் இந்த நாவலை படைத்துள்ளார். கிழக்கின் மதக்கட்டுப்பாடுகளையும்,மேற்கின் கலாச்சார படையெடுப்பையும்
இந்த இரண்டு புள்ளிகளும் சேரும் இடத்தில் கலை அதன் இருப்பு குறிப்பாக கலைஞர்களின் சுதந்திரம் அவர்களின் வீழ்ச்சியை நாவல் விவாதிக்கிறது.

நாவலின் பின்புலம்:-

16ஆம் நூற்றாண்டு. துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல்லில் கதை செல்கிறது. ஓட்டாமன் சாம்ராஜ்ஜியத்தின் சுல்தான் மூன்றாம் மூராத் ஹிஜ்ரா முஸ்லீம் ஆண்டின் ஆயிரமாவது தொடக்கத்தைக் குறிக்கும் விழா மலரை உருவாக்க விரும்புகிறார். அதற்காக தேசத்தின் தலைசிறந்த ஓவியர்களை ஒருங்கிணைத்து விழா மலரில் ஓவியங்கள் வரைய சொல்கிறார். ஓட்டாமன் பேரரசின் சிறப்புகளையும், தனது பெருமைகளையும் உலகம் அறியும் வகையில் அந்த ஓவியங்கள் இருக்கவேண்டுமென்று சொல்கிறார்.

நாவலின் கதைச்சுருக்கம் :-

சிறு வயதில் ஊரைவிட்டு ஓடிய கருப்பு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இஸ்தான்புல் திரும்புகிறான். அவனது மாமா எனிஷ்டே எஃபண்டியின் ஓவியக் கூடத்தில் இஸ்தான்புல் சுல்தானின் ஆணைப்படி ஆண்டு மலர் தயாரிக்கப்படுகிறது. கருப்பும் ஒரு ஓவியன்தான். கருப்பு இஸ்தான்புல்லுக்கு திரும்பும் இந்த பன்னிரண்டு வருடத்தில் ஊருக்குள் எல்லாம் மாறி இருக்கிறது. சிறுவயதில் அவன் நேசித்த மாமாவின் மகள் ஷெகூரேவுக்கு திருமணம் ஆ‌கி இரண்டு மகன்கள் இருக்கின்றன. ஷெகூரே மணந்துக்கொண்ட ஸ்பாஹி குதிரை வீரன் போருக்கு செ‌ன்று திரும்பவேயில்லை.அவன் உயிரோடு இருக்கிறானா‌‌‌ இல்லையாவென்றே தெரியாத நிலையில் ஷெகூரே ஆண்டுக்கணக்காய் மகன்களோடு காத்திருக்கிறாள். ஷெகூரே கணவனின் தம்பி ஹாசன் ஷெகூரே மேல் காமுற்று அவளை மணம் செய்துக்கொள்ள துடிக்கிறான். இந்நிலையில் ஊருக்கு திரும்பிய கருப்பு மேல் ஷெகூரேவுக்கு காதல் மலர்கிறது. ஆனாலும் ஷெகூரேவால் உறுதியாக தனது காதலை கருப்பிடம் வெளிப்படுத்த இயலவில்லை. கணவன் இறந்துவிட்டதாக யாராவது நீதிபதிகள் முன்பு சாட்சி சொன்னால் அவள் விதவை எ‌ன்று சட்டம் சொல்லும். பிறகு கருப்பை தாராளமாக மணந்துக்கொள்ளலாம். ஹாசனின் அட்டகாசமும் குறையும். இருந்தாலும் ஷெகூரேவுக்கு அவளது இரண்டு மகன்களின் எதிர்காலம் கண்முன் வ‌ந்து காதலை பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வரசெய்யாமல் தடுக்கிறது.

இந்நிலையில் இஸ்தான்புல் சுல்தான் ஆணைப்படி உருவாகும் ஆண்டுமலரில் இறு‌தி‌ ஒவியம் தீட்டுபவர்கள் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்கள். முதலில் அழகன் எஃபண்டி. அடுத்து ஷெகூரேவின் அப்பா எனிஷ்டே எஃபண்டி கொல்லப்படுகிறார். இவர்களை யார் கொல்கிறார்கள்? அவர்கள் இஸ்தான்புல் சுல்தானுக்காக அவர்கள் தீட்டும் அந்த ஓவியத்தில் அப்படி என்னதான் பிரச்சினை?

நாவலின் நடை :-

காரா (கருப்பு) , எனிஷ்டே எஃபண்டி (கறுப்பின் மாமா), ஷெகூரே (எனிஷ்டே எஃபண்டியின் மகள்) , ஷெவ்கெத் (ஷெகூரேவின் மூத்த மகன்) , ஒரான் (ஷெகூரேவின் இளைய மகன்) , ஹாசன் (ஷெகூரேவின் கொழுந்தன்) , ஹாரியே(எனிஷ்டே எஃபண்டியின் அடிமைப்பெண்) , எஸ்தர் ,நஸ்ரத் ஹோஜா மற்றும் ஆலீவ், பட்டர்ஃபிளை, நாரை ,மாஸ்டர் ஒஸ்மான் அவ்வளவு ஏன் சிவப்பு வர்ணம், நாய் , குதிரை, ஓவியத்தில் இருக்கும் இரண்டு துறவிகள் எ‌ன்று என பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் அடுத்தடுத்து நாவலை அவர்கள் பார்வையில் நகர்த்தி செல்லும் பின்நவீன உத்தியில் நாவலின் நடை இருக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் ஓர் ஒவியம் போல காட்சியளிக்கின்றன.

நாவலின் முதல் அத்தியாயத்தில் ஒரு கொலை நடக்கிறது. ஓவியன் அழகன் எஃபெண்டி கொலை செய்யப்பட்டு ஒரு பாழடைந்த கிணற்றில் தலை நசுங்கி கிடக்கிறான். அவனது பிரேதம் முத‌ல் அத்தியாயத்தில் கதை சொல்கிறது. அவனை யார் கொலை செய்திருப்பார்கள்; என்ன காரணம்? அந்த கொலைக்காரன் ஆணா? பெண்ணா? ஓர் ஓவியத்தை முதல்முறை பார்க்கும்போது அந்த ஓவியத்தின் முழு வெளித்தோற்றம் எப்படி பிரமிப்பு தருமோ அப்படி முத‌ல் அத்தியாயம் செல்கிறது. ஓவியத்தின் கோடுகள், வர்ணங்கள் முத‌ல் பார்வைக்கு தட்டுப்படாதது போலவே கொலைக்காரன் யாரென்று தெரியாமல் முதல் அத்தியாயம் கடந்து செல்கிறோம்.

நாவலின் நான்காவது அத்தியாயத்தில் கொலைகாரன் பார்வையில் கதை நகர்கிறது. கொலைக்காரன் பெயர் என்ன அவன் நிறம் என்ன? குள்ளமா? உயரமா எதுவுமே தெரிவிக்கப்படாமல் கொலைக்காரன் தரப்பு தகவல்கள் பதிவு செய்யப்படுகின்றன. கொலைகாரன் என்ற ஒவியத்தின் மீதான ஈர்ப்பும்,ஆவலும் இன்னும் அதிகமாகின்றது. நாவலின் 58 ஆவது இந்த ஓவியம் லேசாக புரியும். 59 ஆவது அத்தியாயத்தில் இந்த ஓவியம் முழுமையாக புரியும். ஓவியத்தை நீங்கள் உணரத்தொடங்கும் அந்த தருணத்தில் அந்த ஓவியத்தின் இருப்பு சிதைக்கப்படுகிறது. ஹாசனால் அவன் கொல்லப்படுகிறான்.
ஒரான் பாமுக்கின் படைப்புலகம்:-

ஒரான் பாமுக் காட்டும் நுண்ணோவிய உலகம் அதி அற்புதமானது. மனிதர்கள் பல வண்ணக் கலவைகளால் ஆனவர்கள். ஓவியர்கள் எப்போதும் வரைந்துக்கொண்டே இருக்கிறார்கள். வரைந்து,வரைந்தே கண்கள் குருடாகிப்போவதை பாக்கியமாக கருதுகிறார்கள். குருட்டுத்தன்மை என்பது இன்ஷா அல்லாஹ்வால் வழங்கப்படும் கொடை எ‌ன்று கருதுகிறார்கள். ஒரான் பாமுக் உலகத்தில் நடமாடும் ஓவியர்கள் கண்களால் ஒரு குதிரையை வரைவதேயில்லை. ஆண்டாடுக் காலமாய் அவர்கள் நினைவில் தங்கிவிட்ட மனப்படிமத்திலிருந்தே குதிரைகளை வரைகிறார்கள். ஒரு குதிரையை நேரில் பார்த்து வரைபவன் ஒருநாளும் சிறந்த ஓவியத்தை தீட்டமுடியாது. அவர்கள் குதிரையின் முகத்தையோ, உடலையோ முதலில் வரைவார்கள். குதிரையை மனதில் இருந்தே வரைபவர்கள் குதிரையின் குளம்புகளை முதலில் வரைய ஆரம்பிப்பார்கள். மனக்கண்ணால் பார்க்கும் ஓவியக்கோணமே அல்லாஹ் அவர்களின் பார்வையில் இருந்து பார்க்கும் பார்வைக்கோணம். அதனாலேயே கண்களை குடுடாக்கிக் கொள்கிறார்கள்.

பெரும்பாலான ஓவியர்கள் தங்கள் படைப்பை பற்றி பெருமிதமும், அதீத முகஸ்துதி வேண்டி விழைபவர்களாகவும் வருகிறார்கள். கலையையும்,மரபுகளையும் கட்டிக் காக்க கொலை கூட செய்கிறார்கள். பிற்பாடு அவர்களே பணம்,புகழுக்காக கொள்கைகளை துறந்து கரைந்து காணாமல் போகும் பரிதாப நிலையும் ஏற்படுகிறது.

My Name is Red எ‌ன்ற இந்நாவலை தமிழிற்கு ‌மிக அருமையாக மொழிப்பெயர்ப்பு செய்திருக்கும் ஜி.குப்புசாமியின் உழைப்பு போற்றத்தக்கது. இலக்கிய மொழிப்பெயர்ப்பில் தொடர்ந்து கவனம் பெற்று வரும் ஜி.குப்புசாமியின் இட‌ம் குறிப்பிடத்தக்கது. தமிழில் ஓவிய உலகத்தை பற்றிய பரந்துப்பட்ட நாவல் இதுவரை வெளிவரவில்லை (அகிலனின் ‘சித்திரப்பாவை’ நூலை சொன்னால் கோபம் வரும்) அந்த வகையில் இந்நாவல் முன்னோடி எனலாம் (மொழிப்பெயர்ப்பாக இருந்தாலும்)

என் பெயர் சிவப்பு
(தமிழில் ஜி.குப்புசாமி)
காலச்சுவடு பதிப்பகம்
விலை 350
பக்கங்கள் 663

Saturday, August 14, 2010

அ கவிதை அல்லது A கவிதை

அ கவிதை அல்லது A கவிதை

ச்சீய்
------
பத்தாம் வகுப்புத் தோழன்
சங்கரநாராயணன் ஞானப்பழம்
என்ன சொன்னா‌‌‌லும் வெட்கப்படுவான்
ச்சீய் எ‌ன்பான்


மச்சி அந்த ஃபிகர பார்த்தியா?
ச்சீய்
ஜோதில பிட்டு படம் போகலாமா?
ச்சீய்
கொழந்தை எப்படி பொறக்குது தெரியுமா?
ச்சீய்
இந்த புத்தகம் பார்த்தியா? ஆயில் பிரிண்ட்...
ச்சீய்
ஹனிமூன் எங்கடா போவே?
ச்சீய்
கல்யாணம் ஆனா‌‌‌ல் என்னடா செய்வ?
ச்சீய்...ச்சீய்


பத்தாண்டுகளுக்கு பிறகு
சங்கரநாராயணனை
சத்திரம் பேருந்து நிலையத்தில் பார்த்தேன்


என்னடா செய்யுறே?
ஆசிரமத்தில சேர்ந்துட்டேண்டா
ச்சீய்


நன்றி
-என்.விநாயக முருகன்

Sunday, August 8, 2010

ஆடும் கூத்து- கலையின் உச்சம்













உயிரோசையில் அந்த கட்டுரையை படிக்கும் வரையில் தமிழில் இப்படியொரு படம் வந்திருப்பது சத்தியமாக எனக்கு தெரியவே தெரியாது.

அந்த திரைப்படத்தை பற்றி கேள்விப்பட்டவுடன் பர்மா பஜார், தெரிந்த டிவிடி கடைகளில் எல்லாம் ஏறி இறங்கினேன். எல்லாரும் என்னை ஏற இறங்க பார்த்தார்கள். ஒருவேளை இப்படியொரு படம் வந்திருக்காதோ? என்று திகைப்பாக இருந்தது. அந்த படத்தை தேடி சோர்ந்துப்போன நிலையில் யூட்யூபில் எதேச்சையாக பார்க்க நேர்ந்தது. நான் தேடிய அதே திரைப்படத்தின் பெயர். கடவுளே இது அதுவாகத்தான் இருக்க வேண்டும். லிங்கை கிளிக் செய்தேன்.

என் வாழ்வின் மகத்தான மணித்துளிகள். வேறு என்ன சொல்வதென்று தெரியவில்லை. இந்த திரைப்படத்தில் சேரன்,நவ்யாநாயர்,தலைவாசல் விஜய், பாண்டியராஜன், பிரகாஷ்ராஜ், சீமான் ,மனோரமா, கொச்சின் ஹனீஃபா,ரேகா இன்னும் பலர் நடித்துள்ளார்கள்.இருந்தும் ஏன் இந்த படம் பேசப்படவில்லை? வருத்தமாக இருக்கிறது. தமிழ் சமூகத்தின் மீது ஆத்திரமாகவும் இருக்கிறது. தமிழ் சமூகத்தை தரமற்ற குப்பை படங்களால் நிரப்பி வைத்திருக்கும் ஆட்கள் மீது கோபம் வருகிறது . இந்த படம் ஏன் வெற்றியடையவில்லை. சாட்டிலைட் டிவிக்களை, தமிழின் கமர்ஷியல் டைரக்டர்களை மட்டும் குறை சொல்ல முடியாது. இது போன்ற படங்களை ஊக்குவிக்காத பேசாத நானும், நீங்களும் கூட குற்றவாளிதான். ஈரானிய டைரக்டர் மஜீத் மஜீதியின் படங்களை இந்த படம் தரமானது. அடித்து சொல்வேன். உலக சினிமா,உலக சினிமா என்று சொல்கிறார்களே.. அந்த தர வரிசையில் இந்த திரைப்படத்தை தாராளமாக சேர்க்கலாம். மிக தேர்ந்த பிண்ணனி இசை. ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ,திரைக்கதை, ஒவ்வொரு நடிக, நடிகைகளின் கச்சிதமான நடிப்பு, முகபாவங்கள், கேமரா கோணம் என்று எல்லாம் சமச்சீரான விகிதத்தில் அடுத்தடுத்து நிற்க ஒரு வானவில் போல என் மனதில் அழகாய் விசுவரூபமெடுத்து நிற்கிறது அந்தப்படம். இன்னும் பல வருடங்களுக்கு என் நினைவில் இந்த படம் நிற்க போவது உறுதி.



‘வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட- வெறும்
வெளியி லிரத்தக் களியொடு பூதம்பாடப்- பாட்டின்
அடிபடு பொருளின் அடிபடு மொழியிற் கூடக்- களித்
தாடுங் காளீ! சாமுண்டீ! கங் காளீ!
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.’


-இருட்டான திரையில் டைட்டில் ஓட ஒருவித புதிர்தன்மையோடு கூடிய இசைப் பிண்ணனியில் பாரதியின் வரிகளை கொண்ட பாடல் ஒலிக்கிறது. படத்தில் ஏதோ அமானுஷ்யம் இருக்கிறது என்று பார்வையாளர்களுக்கு ஓரளவு முன்கூட்டியே கணித்துக்கொள்ள தோதுவாக இருக்கிறது அந்த பாடலின் இசை கம்போஸிங்.

டைட்டில் முடிந்ததும், ஒரு ஊரின் வாய்க்கால் காட்டப்படுகிறது. இரவு நேரம். ஒரு வாய்க்காலில் மூன்று பேர் சேர்ந்து ஒரு ஆளை அரிவாளால் வெட்டுகிறார்கள். கேமரா அப்படியே கிரேன் ஷாட்டில் மேலே சென்று சற்று தள்ளியிருக்கும் ஊரை காட்டுகிறது. ஊருக்குள் திருவிழா. ராட்டினம் சுற்றுகிறது. ராட்டினத்தில் மேலிருந்து ஒரு பெண் அந்த கொலையை பார்த்து விடுகிறாள். ராட்டினத்தை அவசர ,அவசரமாக கீழிறக்க சொல்லி அவளது அப்பாவிடம் தான் பார்த்த கொலையை சொல்கிறாள். அவளது அப்பா "மற்றவர்கள் கண்ணுக்கு தெரியாததெல்லாம் உன் கண்ணுக்கு எப்படித்தான் தெரியுதோ?" என்று கேட்கிறார். இந்த வசனம்தான் படத்தின் கருவே.

மணிமேகலை பின்னால் அவளது அப்பா மற்றும் ஊர்க்காரர்கள் சென்று வாய்க்காலை பார்த்தாள் அங்கு எதும் இல்லை. கொலை நடந்ததற்கான துளி அடையாளம் கூட இல்லை. மணிமேகலை திகைக்கிறாள். தான் பார்த்தது பிரமையா? மணிமேகலை வீடு திரும்பியதும் எல்லாரும் அவளை கிண்டல் செய்கிறார்கள்.
"மணிமேகலைக்கு ராட்டினத்துல சுத்தும்போது கூட கனவு வருதா?" கிண்டல் செய்து சொல்லி சிரிக்கிறார்கள்.
மணிமேகலைக்கு ஆத்திரமாக வருகிறது. "அப்படினா நான் கண்டது பொய்யா?" சாப்பிடாமல் கோபித்து கொண்டு அவள் அறைக்குள் அமர்ந்திருக்கிறாள்.

மணிமேகலை (நவ்யாநாயர்) துடுக்குத்தனம் நிறைந்த ஒரு கிராமத்துப்பெண். பெரிய படிப்பாளி. தமிழின் இலக்கிய நூல்களை, சிறந்த ஆளுமைகளை தேடி படிப்பவள். அப்பா அழகியநம்பி பிள்ளை (தலைவாசல் விஜய்) யை பெயர் சொல்லி அழைத்து கிண்டல் செய்யுமளவுக்கு அப்பா செல்லம். அழகியநம்பி பிள்ளையின் சொந்த ஜவுளிக்கடையில் வேலை செய்பவன் முத்து. முத்துவுக்கு அழகியநம்பி பிள்ளை மாமன் முறை. மணிமேகலை மாமன் மகள். இருவரும் காதலிக்கின்றார்கள். முத்து திருவிழாவில் வாங்கிய வளையல்களை காதலி மணிமேகலைக்கு பரிசாக தருகிறான். "இந்த வளையல் அதிசயமானது. பழைய கறுப்பு வெள்ளை திரைப்படங்களின் வேஸ்ட் பிலிம்ரோலில் இருந்து இந்த வளையல் செய்யப்பட்டது. இந்த வளையல்களுக்கும் ஒவ்வொரு கதை இருக்கிறது" என்று முத்து சொல்ல, மணிமேகலை சிரிக்கிறாள். முத்துவின் அப்பாவித்தனமான இந்த பேச்சு அவளுக்கு பிடித்திருக்கிறது.

"உன்னை வளையல் கடைக்காரன் நல்லா ஏமாத்தியிருக்கான்" என்று கிண்டல் செய்கிறான். மறுநாள் மணிமேகலை ஆற்றுக்கு துணிதுவைக்க செல்கிறாள். தனியாக அமர்ந்து துணி துவைத்துக்கொண்டிருக்கும்பொது அந்த வளையலில் இருந்து கறுப்புவெள்ளை ஒளிக்கீற்றுகள் கிளம்புகின்றன. பழைய கறுப்பு வெள்ளை திரைப்படமொன்று அவள் கண் முன்னால் ஓடுகிறது. ஒரு இளம் காதல் ஜோடிகள் கூத்து ஆடுகிறார்கள். (காதலனாக நடித்திருப்பது நடிகர் சேரன்) அதை தொடர்ந்து கிராமத்து கொடுமைக்கார ஜமீன்தார் சிலரை காட்டி வைத்து சவுக்கால் அடிக்கும் திரைப்படக் காட்சி. (ஜமீன்தாராக நடித்திருப்பது பிரகாஷ்ராஜ்)

மணிமேகலை அந்த கறுப்புவெள்ளை திரைப்படத்தை பார்த்து பயந்து ஊருக்குள் ஓடிபோய் முத்துவிடம் தகவலை சொல்கிறாள். முத்துவுக்கு பயம் வந்து அவன் மாமாவிடம் மணிமேகலைக்கு ஏதோ ஆகிவிட்டது. அவள் என்ன என்னவோ உளறுகிறாள் என்று சொல்கிறான். மணிமேகலைக்கு ஏதோ ஆகிவிட்டது என்று அனைவரும் வீட்டுக்கு டாக்டரை அழைத்து வருகிறார்கள். பிற்பாடு அந்த ஊரில் நிஜமாகவே ஒரு பிணம் கண்டெடுக்கப்படுகிறது. அனைவரும் மணிமேகலை சொன்னது பொய்யில்லை உண்மையென்று நம்புகிறார்கள்.

1975 ஜீன் 27 ஆம் வருட நாளிதழை முத்து மணிமேகலையிடம் காட்டுகிறான். அதில் அந்த வருடம் கடையநல்லூர் என்ற கிராமத்தில் படப்பிடிப்பு எடுக்கப்பட்டு நின்றுபோன ஒரு பழைய தமிழ் திரைப்படம் பற்றிய தகவல் இருக்கிறது. ஒரு பெண்ணை மொட்டையடித்து மரத்தில் கட்டிவைத்து அடித்த தகவலும் செய்திதாளில் இருக்கிறது. மணிமேகலை அந்த செய்தித்தாளை படித்து அதிர்ச்சியடைகிறாள். முத்துவும். மணிமேகலையும் உடனே கடையநல்லூர் செல்கிறார்கள்.

அந்த ஊரில் வயதான வாத்தியார் ஒருவர் வசிக்கிறார். ஊருக்கு வெளியே தனியாக வீடெடுத்து வசிக்கிறார். அவர் பெயர் லூயிஸ் பாபு. (லூயிஸ்பாபு வேடத்தில் நடித்திருப்பவர் பிரகாஷ்ராஜ்) 1975-ல் ஒரு படப்பிடிப்பு பாதியில் நின்றுபோனதாகவும் அந்த படத்தின் டைரக்டர் பெயர் டைரக்டர் ஞானசேகரன்(டைரக்டர் வேடத்தில் நடித்திருப்பவர் சேரன்) என்றும் தகவல் சொல்கிறார். அந்த திரைப்படம் ஏன் நின்றுபோனது என்பதற்கும் அவர்களுக்கும் விடை கிடைக்கிறது. தலித் பிரச்சினை, 1977-ல் இந்திராகாந்தி ஆட்சியில் நடந்த எமர்ஜென்சி போனஆ பிரச்சினைகளை மையப்படுத்தி அழகான பிளாஷ்பேக் விரிகிறது. அந்த படம் ஏன் நின்றுப்போனது? அந்த படத்தில் நடித்த நடிக,நடிகைகள் என்ன ஆனார்கள் என்று லூயிஸ் பாபு விவரிக்கிறார்.

திரைப்படத்தில் மெல்லிய அங்கதம் ஆங்காங்கு விரவி கிடக்கிறது. மணிமேகலைக்கு மனநிலை சரியில்லையென்று அவள் வீட்டுக்கு ஒரு சைக்கியாரிஸ்டை அவளாது தந்தை அழைத்து வருகிறார். மணிமேகலை பெரிய படிப்பாளி என்று அவள் அப்பா டாக்டரிடம் சொல்கிறார். டாக்டர் அவள் என்ன மாதிரி புத்தகங்களை படிக்கிறாள் என்று கேட்க அவளது தந்தை மாடியில் இருக்கும் மணிமேகலை அறையை காட்டுகிறார். டாக்டரும் மணிமேகலை அறைக்கு செல்கிறார். புதுமைப்பித்தன்,மெளனி, ஜெயகாந்தன், பஷீர்,தி.ஜா,அசோகமித்திரன், பாரதியார்.... டாக்டர் பயந்துபோய் பேயை பார்த்தது போல அலறியடித்துக்கொண்டு மாடி அறையிலிருந்து வெளியே ஒடி வருகிறார்.

"ஒரு ஆள் இரண்டு ஆள் இல்லை..பிள்ளைவாள்...உள்ளே ஒரு நாசகார கும்பலே இருக்கிறது. வெரி டேஞ்சரஸ் கைஸ்" சொல்லியபடியே பயந்துபோய் வீட்டை விட்டு வெளியே ஓடுகிறார்.
மணிமேகலை தந்தை அந்த புத்தகங்களையெல்லாம் ஒளித்து வைக்கிறார். பிற்பாடு ஒரு காட்சியில் மணிமேகலை நார்மலாகத்தான் இருக்கிறாள் என்று அவர் ஆசுவாசப்படுத்திக்கொள்ளும்போது, மணிமேகலை தயங்கியபடியே ஒளித்து வைத்த அந்த புத்தகங்களையெல்லாம் எடுத்து வந்து தந்தையிடம் கேட்கிறாள்.

“நான் சொன்னது பொய்யில்லைனா...இவங்க சொல்றதும் பொய்யில்லைலே? இவங்கள உள்ளே சேர்த்துக்கலாமா?” என்று கேட்கும் இடம்.

இன்னொரு காட்சி. தன் அப்பாவை மோசமாக விமர்சித்து திரைப்படம் எடுப்பதாக கேள்விப்பட்டு அடியாட்களுடன் கோபமாக வருகிறார் ஜமீன்தார் மகன்(நடிகர் சீமான்) . அவர் முதன்முறையாக அப்போதுதான் ஷூட்டிங் பார்க் க்கிறார். அவர் பிரகாஷ்ராஜிடம் வெகுளித்தனமாக படப்பிடிப்பு பற்றி கேள்வி கேட்பது. மணிமேகலையிடம் காதலை சொல்லும் அவளது தமிழ் வாத்தியாரை கண்டு மணிமேகலை சிரிப்பது.. சொல்லிக்கொண்டே போகலாம்.

சேரனின் நடிப்பு பிரமாதம். மணிமேகலை கனவில் அவர் நடனம் ஆடும்போதெல்லாம் பிண்ணனி இசை ஒன்று ஒலிக்கும்.கேட்டு பாருங்கள். நாதஸ்வரம், உருமி எல்லாம் கலந்து நாட்டுபுறக்கூத்து இசை. அந்த இசையில் சொக்கி போய் மீண்டும்,மீண்டும் கேட்டேன். அதைவிட சேரன் ஆடும் அந்த துள்ளலான நடனம்..அட..அட.. அட. அருமை. அருமை. இந்த படத்தின் இயக்குனர் டி.வி. சந்திரன். எடிட்டர் வேணுகோபால். இசையமைத்திருப்பவர் ஐசக்.தாமஸ்.கோட்டுகாபள்ளி.

Sunday, August 1, 2010

நூறு சதவீத பொருத்தமான யுவதியை ஓர் அழகிய ஏப்ரல் காலையில் பார்த்தபோது



சிறுகதைகளின் பல்வேறு பரிமாணங்களையும், சாத்தியக்கூறுகளையும் தமது எழுத்தில் கொண்டு வரும் ஹாருகி முரகாமியின் படைப்புலகம் வித்தியாசமானது. தமிழில் ஹாருகி முராமியின் சிறுகதைகள் அடங்கிய முதல் மொழிபெயர்ப்பு நூல் அண்மையில் வெளிவந்து வாசகர்களிடையே பெரும் வரவேற்பையும், பரவலான கவனத்தையும் பெற்றுள்ளது. தொகுப்பிலுள்ள கதைகளை ஜி.குப்புசாமி, ராஜகோபால், செழியன் அருமையான மொழிபெயர்த்துள்ளார்கள். இத்தொகுப்பில் ஆறு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.


சாலையில் இறங்கி நடந்து செல்கிறோம். நூறு சதவீத பொருத்தமான யுவதியை பார்க்கின்றோம். அப்படியொரு யுவதியை சந்தித்ததும் எத்தனை பேர் உடனே அவளிடம் தயக்கமில்லாமல் பேச ஆரம்பிக்கின்றோம்? ஒரு சதவீதம் கூட பொருத்தமானவர்களுடன் வாழ்க்கை முடிச்சு போட்டு விடுகிறது. வாழ்க்கை விசித்திரமானது. அது விளையாடும் இன்னொரு விளையாட்டு பதினான்கு ஆண்டுகளுக்கு பிறகு அதே யுவதியை சந்திக்கின்றோம். அதே எண்ணம் மனதில் ஓடலாம். ஆனால் அதே தயக்கம் இன்னமும் மனதில் இருக்கிறது. ஏன்? விதியின் விளையாட்டா? வாழ்க்கை போடுகின்ற எண்ணற்ற புதிர் விளையாட்டுகளில் இதுவும் ஒன்று. அழகிய இந்த கதையின் தலைப்பையே தொகுப்பிற்கும் வைத்துள்ளார்கள்.


தொகுப்பில் எனக்கு பிடித்த கதை இது. கதையின் பெயர் "ஷினாகவா குரங்கு". ஒரு பெண்ணுக்கு அவளது பெயர் மறந்து விடுகிறது. விநோதமான இந்த பிரச்சினையால் அவள் ஆலோசனை மையத்தை தேடிச் செல்கிறாள். பிறரை சக மனிதர்களை நேசிப்பதையும் அதைவிட சக மனிதர்களால் நேசிக்க படுவதையும் இழந்தால் வரும் உளவியல் பிரச்சினை இந்த கதையின் ஆதார புள்ளி.


"டோக்கியோவை காப்பாற்றிய தவளை" கதை ஹாஸ்யத்துடன் ஆரம்பிக்கின்றது. மேஜிக்கல் ரியலிச பாணி கதை இது. கதை மெதுவாக மெதுவாக உள்ளே இழுத்து சென்று கனவுலகின் அற்புதங்களையும், நனவுலகின் அபத்தங்களையும் மாற்றி, மாற்றி கலைத்துப்போட்டு வாழக்கையின் புதிர் வட்டங்களில் தூக்கி எறிந்து அலைக்கழிக்க வைக்கின்றது. ஹாருகி முரகாமி முன் வைக்கும் இன்னொரு பிரச்சினை, நவீன வாழ்க்கையில் மனித மனம் பாலியல் சிக்கல்களை எப்படி எதிர்கொள்கிறது என்பதை. இதை அருமையாக பதிவு செய்திருக்கும் சிறுகதை "என் தலைமுறைக்காக ஒரு நாட்டார் இலக்கியம்: பிற்கால முதலாளித் தத்துவத்தின் ஒரு முன் சரித்திரம்". "குடும்ப விவகாரம்" என்ற மற்றொரு கதையில் அண்ணனும்,தங்கையும் நகரத்தில் ஒரு வாடகைவீடு எடுத்து ஆளுக்கொரு அறையில் தங்கியிருக்கிறார்கள். பணிக்குச் செல்லும் அவர்கள் வார இறுதியில் மட்டும் பார்த்துப் பேசிக்கொள்கிறார்கள். அவர்களுக்குள் இருக்கும் உறவே வித்தியாசமானது. அண்ணன் அவள் தங்கையிடம் "கைப்பைக்குள் ஆணுறையை வைத்துக்கொண்டு வெளியே செல்லவேண்டாம். உன்னை வேசை என்று நினைப்பார்கள்." என்று சொல்கிறான். அவளை பற்றிய இவ்வாறான மதிப்பீடுகள் கொண்ட அவன் தங்கைக்க்காக அவளது பாய்பிரெண்ட் குடும்பத்தாரிடம் பேசிவிட்டு வரும்போது முதன் முதலில் தனது இருப்பை பற்றி யோசிக்கின்றான். நவீன வாழக்கையின் சிக்கலே இதுதான். பெருநகரம் இளைஞர்களுக்கு கட்டற்ற பாலியல் சுதந்திரத்தை தந்துள்ளது. ஆனாலும் அவர்கள் மனதின் அடி ஆழத்தில் ஏதோ ஓர் குற்றவுணர்வு சமூகம் காலம்காலமாய் வலியுறுத்தி வந்துள்ள பழைய மதீப்பீடுகளின் சுமை முள்ளாய் குத்திக்கொண்டே இருக்கிறது. பாலியல், பொருளாதார சுதந்திரம் பெற்ற நகரத்தில் வாழ்ந்தாலும் முந்தைய தலைமுறையின் பாலியல் மதிப்பீட்டுகளை மீறமுடியாமல், மீறினாலும் சகஜமாக இருக்கமுடியாததொரு இருப்பை உணர்கிறார்கள். இதுவும் தொகுப்பிலிருக்கும் முக்கியமான சிறுகதை.


ஹாருகி முரகாமியின் கதைகளில் யாராவது தொலைந்து கொண்டே இருக்கிறார்கள். ஒரு பெண் பெயரை தொலைக்கின்றாள். "தேடுதல்" கதையில் ஒரு மனிதன் அவனது அடுக்குமாடி குடியிருப்பின் 24 ஆம் தளத்திற்கும் 26 ஆம் தளத்திற்கும் இடையே தொலைந்துபோகிறான். மனிதன் நினைவுகள் தொலைந்துபோகின்றன. கனவுலகத்திலிருந்து மீண்டு வரும்போது கனவுகள் தொலைந்துபோகின்றன. இருப்புக்கும், இழப்புக்கும் அல்லது கனவுக்கும்,நனவுக்கும் இடையே மனிதர்கள அலைந்துக்கொண்டே இருக்கின்றார்கள். அதுதானே உண்மையும் கூட. மனித வாழ்க்கை என்பதே கனவுக்கும்,நனவுக்கும் இடையே பெண்டுலம் போல ஊசலாடுவதுதானே. இதை ஒரு பொது விதியாக ஹாருகிமுரகாமி கதைகளில் காண முடிகிறது.தொகுப்பிலுள்ள ஆறுகதைகளும் ஒவ்வொரு நடையில் எழுதப்பட்ட சிறுகதைகள். இத்தொகுப்பில் ரியலிச கதையும் இருக்கிறது. மேஜிக்கல் ரியலிச கதையும் இருக்கிறது. ரியலிசத்திற்கும் மேஜிக்கல் ரியலிசத்திற்கும் தாவி,தாவி செல்லும் கதையும் உள்ளது. வண்ண வண்ண பூக்களை கொண்டு கட்டப்பட்டிருக்கும் அழகிய பூங்கொத்து போல இந்த தொகுப்பு இருக்கிறது.


நூறு சதவீத பொருத்தமான யுவதியை ஓர் அழகிய ஏப்ரல் காலையில் பார்த்தபோது
(நவீன ஜப்பானியச் சிறுகதைகள்)
மூலம்-ஹாருகி முரகாமி.
மொழிபெயர்ப்பு: ஜி.குப்புசாமி, ராஜகோபால், செழியன்.
வம்சி வெளியீடு
திருவண்ணாமலை. விலை ரூ80