Sunday, September 26, 2010

பரத்தை கூற்று
















சமீபத்தில் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். தலித் பிரச்சினை பற்றி அந்த வலியை அனுபவித்த ஒரு உண்மையான தலித்தால் மட்டுமே அதை துல்லியமாக எழுத முடியுமென்றார். பெண்களின் வலியை பற்றி பெண் கவிஞர்கள் எழுதும்போது இருக்கும் வலியும்,வீர்யமும்,உக்கிரமும் ஆண் கவிஞர்கள் எழுதும்போது இருப்பதில்லையென்றார். அவர் சொன்னது பெரும்பாலும் உண்மை.

காமத்தை பற்றிய நவீனக்கால எழுத்துகளில் ஜி.நாகராஜன், தஞ்சை பிரகாஷ்,வா.மு.கோமு போன்றோரும் (சிறுகதைகள், நாவல்கள்) கவிதைகளில் கலாப்ரியா, விக்கிரமாதித்தியன், மகுடேஸ்வரன் போன்ற சில ஆண் படைப்பாளிகள் மட்டுமே ஆங்காங்கு சில பாய்ச்சல்களை காட்டியுள்ளார்கள்.

குறிப்பாக பரத்தையர் உலகம் பற்றியும் அவர்களது அக உலகின் சிக்கல்களையும் பற்றி மிகச்சில ஆண் எழுத்தாளர்களே எழுதியுள்ளார்கள். பரத்தையர் என்ற சங்ககால சொல் வேசி, விபச்சாரி என்றெல்லாம் மாறி இறுதியில் பாலியல் தொழிலாளி என்று இன்று உருமாறியுள்ளது.

தமிழில் அருவி என்றொரு சொல் உள்ளது. ஆங்கிலத்தில் இருந்த Watter Falls என்ற சொல்லை நீர்வீழ்ச்சி என்று தமிழ் படுத்தியது போல, Sex Worker என்ற சொல்லை பாலியல் தொழிலாளி என்று பொது வழக்கில் கொண்டுவந்துள்ளோம். பரத்தை என்ற சொல் இருந்தபோது அவர்களுக்கு என்ன பிரச்சினைகள் இருந்தனவோ, அவையே வேசி என்னும் சொல் இருந்தபோதும் இருந்தன. விபச்சாரி என்ற சொல் இருந்தபோதும் இருந்தன. பாலியல் தொழிலாளி என்ற சொல் இருந்தபோதும் இருக்கின்றன. அன்று இன்று எல்லாக் காலங்களிலும் பெண்கள் ஒரு பண்டமாகவே பார்க்கப் படுகின்றார்கள். வீட்டில் வளர்க்கும் ஒரு பசுமாட்டை பார்க்கும் அதே அணுகுமுறையில்தான் பெண்களும் பார்க்கப் படுகிறார்கள்.அதிலும் குறிப்பாக பாலியல் தொழிலாளிகளது வாழ்க்கை இன்னும் கொடுமை. அது மேட்டுக்குடி பெண் பாலியல் தொழிலாளியாக இருந்தாலும் (Female Escort) சரி. லாரிகளை மறிக்கும் சாலையோர பாலியல் தொழிலாளியாக இருந்தாலும் சரி. அவரவர்கள் மட்டத்தில் அவரவர்களது பொருளாதார அளவுகளில் சுரண்டப்படுகிறார்கள். சுரண்டல் என்பது பணம் என்ற அளவீட்டில் மட்டும் அர்த்தம் கொள்ளகூடாது. போலீஸ் தொந்தரவு-கெடுபிடி.சக மனிதர்களது ஏளனப் பார்வை,இழிச்சொல் எல்லாம்...சரவணகார்த்திகேயனின் "பரத்தையர் கூற்று" என்ற கவிதைத்தொகுப்பை வாசித்தேன். பல இடங்களில் அந்த வலியை உணர முடிகின்றது.

இத்தொகுப்பில் வரும் பரத்தையர்கள் கோபப்படுகிறார்கள். சமூகத்தை பார்த்து திட்டுகிறார்கள். சலித்துக்கொள்கிறார்கள். சில இடங்களில் கிண்டல் செய்கிறார்கள்.இடங்களில் பெருமைப்படுகிறார்கள். அதே பெருமையை களைந்துவிட்டு அழுகிறார்கள். சில கேள்விகளை முன் வைக்கிறார்கள். வரிசையாக இருக்கும் கவிதைகளில் இவையெல்லா உணர்ச்சிகளையும் மாறி,மாறி தருகிறார்கள்.

தொகுப்பில் இருக்கும் ஒரு கவிதை...

ஓரிரவில் பதினோரு பேர்
இது எனது ரெக்கார்ட்-ம்!
அதெல்லாம் அந்தக்காலம்.

இந்த வலியை சொல்லும் பெண் ஒரு மூதாட்டியாக இருக்கலாம். அல்லது நோயுற்று மெலிந்து மரணப்படுக்கையில் கிடக்கும் ஒரு நடுத்தர வயது பெண்ணாக இருக்கலாம். அவளை பற்றிய சித்திரம் மனதில் ஓடுகிறது.அதைவிட அந்த சித்திரம் ஏற்படுத்தும் வலி அதிக அதிர்வுகளை தருகின்றது.

கண்களும் காம்புகளும்
பெரிதாயிருக்க வேண்டும்
உதடுகளும் பிளவுகளும்
சிறிதாயிருக்க வேண்டும்
நேயர் விருப்பம்

தொகுப்பில் எனக்கு பிடித்த கவிதை இது.

பரத்தையர் பற்றிய பார்வையில் கவிஞரின் சில கவிதைகளில் முரண்பாடுகள் தெரிகின்றன. தொகுப்பின் முதல் கவிதை இப்படி இருக்கிறது.

சுதந்திரமென்பது
புணர்தலல்ல;
புணர மறுப்பது

அடுத்த பக்கத்திலேயே இன்னொரு கவிதை இப்படி சொல்கிறது.

என்ன இருந்தாலும்
எம் மகளிரைப் போல்
ஆண்களை உறவுக்கு
அழைக்கும் மறுக்கும்
உரிமையில்லையுன்
இல்லக்கற்பரசிகட்கு.

இந்த கவிதை பரத்தையர்க்கு புணர மறுக்கும் சுதந்திரம் இருப்பதாக சொல்கிறது.

சிறிசு பெருசு கருப்பு சிவப்பு
ஒல்லி தடிமன் கூர்மை மொக்கை
வகைவகையாக் குறிகளை
உள்வாங்கிக் களைக்கிறெதென்
திருயோனி பெருஞ்சரிதம்

சரவண கார்த்திகேயனின் இந்த கவிதை 'எல்லா அறிதல்களோடும் விரிகிறெதென் யோனி ' என்னும் சல்மாவின் வரிகளை நினைவூட்டுகிறது.

படிமங்களின் சுமையோ, இருண்மையோ இன்றி மிக எதார்த்தமாக இருக்கின்றன இத்தொகுப்பிலுள்ள கவிதைகள்.பின்னட்டையில் பொன்.வாசுதேவன் சொல்லியிருப்பது போல,வடிவம் சார்ந்த அணுகுதல்களுக்க்கப்பாற்பட்டு, மரபு வடிவ கவிதைகளாகவோ வெறும் துணுக்குகளாகவோ இல்லாமல் இக்கவிதைகளின் உன்னதக் கேள்விகள் முக்கியமானவையாகப் படுகிறது.

பரத்தை கூற்று (கவிதைகள்)
சி.சரவணகார்த்திகேயன்
வெளியீடு : அகநாழிகை
விலை : ரூ.50/-

Monday, September 20, 2010

பலூன்கள்


உயிரோசை இணைய இதழில் வெளியான எனது பலூன்கள் எ‌ன்ற சிறுகதை...








காட்சி-1
————–

ஏறுவெயில் லேசாகச் சுட கட்டுமரமொன்றின் மறைவில் அமர்ந்தபடி கடலலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். எதிரே கடலலைகள் இரைச்சல் போட்டுக்கொண்டிருந்தது. வெயில் சுள்ளென்று அடிக்க, மேலே பார்த்தேன். சில தட்டான்கள் உயரத்தில் பறந்து கொண்டிருந்தன. அடிக்கும் இந்த வெயிலுக்கு சாயங்காலம் மழை பெய்யலாம். கடற்கரையில் கூட்டம் அவ்வளவாக இல்லை. சற்றுத்தள்ளி இன்னொரு கட்டுமரம் அருகில் இளம் காதல்ஜோடி ஒன்று உலகத்தை மறந்து சிரித்துக் கொண்டிருந்தார். இடதுபக்கம் பார்த்தேன். தூரத்தில் ஒரு புள்ளி மெதுவாக வந்துகொண்டிருந்தது. ஒரு சில மூடிக்கிடந்த தள்ளுவண்டி கடைகள் மீது கட்டியிருந்த நீல நிற படுதாக்கள் காற்றில் பறந்துகொண்டிருந்தது. புள்ளி அருகே வந்தது. புள்ளியிலிருந்து புறப்பட்ட உருவத்தில் ஒரு பெரியவர் தெரிந்தார் . நிதானமாக நடந்து வந்து கொண்டிருந்தார். வயது எழுபது இருக்கலாம். வெள்ளை வேட்டியா, காவி வேட்டியா என்று தெரியவில்லை. ஒருவேளை வெள்ளையாக இருந்த வேட்டி அழுக்கேறி காவி நிறமாக மாறியிருக்கலாம். சட்டை கொஞ்சம் தொள தொளவென்றிருந்தது. தூரத்தில் நின்றபடியே கடலைப் பார்த்தார். அவருக்குப் பக்கத்தில் ஒரேயொரு காலி தள்ளுவண்டி நின்றிருந்தது. பெரியவருக்கு சற்று தள்ளி பலூன் சுடும் கடை இருந்தது. சற்று முன் அந்தக் கடையைத் தாண்டி நான் வரும்போது அவன் ஏதோ ஒரு பாக்கெட் நாவல் படித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். பலூன் கடைக்காரன் இரும்பு ஸ்டூலில் அமர்ந்தபடி இன்னமும் அதே நாவலைத்தான் சுவாரசியமாகப் படித்துக்கொண்டிருந்தான். பெரியவர் அந்தக் கடையை நோக்கி நகர்வதைப் பார்க்க முடிந்தது. பலூன் சுடும் அந்தக் கடை முன்னால் தயக்கத்துடன் நின்றார். கடைக்காரன் படிப்பதை நிறுத்திவிட்டு தலையைத் தூக்கி அவரை ஆச்சர்யமாகப் பார்ப்பது தெரிந்தது. கடைக்காரனிடம் ஏதோ பேசுவது தெரிந்தது.இந்த தூரத்திலிருந்து பேச்சுக்குரல் கேட்காது. எனக்கு ஏதோ சுவாரசியமாகப் பட அந்த பெரியவரையும் பலூன் சுடுபவனையும் பார்க்க ஆரம்பித்தேன்.

பெரியவர் முன்னால் ஒரு மரத்தட்டியில் பச்சை,நீலம், சிவப்பு மஞ்சள் என்று விதம்விதமாய் ஊதப்பட்ட பலூன்கள் கட்டித் தொங்கிக்கொண்டிருந்தன. பலூன்கள் கடல் காற்றில் படபடப்பதை இங்கிருந்தே பார்க்க முடிந்தது. அவன் அமர்ந்திருந்த இரும்பு ஸ்டூல் பக்கத்தில் கீழே சில அட்டைப்பெட்டிகள் கிடந்தன. ஒரு எவர்சில்வர் தூக்குவாளி வெயில் பட்டு கடற்கரையெங்கும் மின்னியது. பெரியவர் பலூன்களைக் கையால் சுட்டிக்காட்டி ஏதோ கேட்பது போல தெரிந்தது. கடைக்காரன் சிரித்தபடியே ஏதோ சொன்னான். பெரியவர் அந்த நீண்ட மரத்துப்பாக்கியையும், ஈயக்குண்டுகளிருந்த பெட்டியையும் பார்த்துக் கடைக்காரனிடம் கேட்டார். அவர்கள் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. திடீரென அந்தப் பெரியவர் ஒருமுறை கடற்கரையை சுற்றி நோட்டம் விட்டார். அவர் பார்வை எல்லைகள் வரை யாரும் இருந்திருக்க வாய்ப்பில்லை. அவர் நின்றிருக்கும் இடத்திலிருந்து காதல்ஜோடிகளைப் பார்க்க வாய்ப்பிருக்காது என்று நினைத்தேன். ஒருவர் மடியில் ஒருவர் கட்டுண்டு இருந்த காதல் ஜோடிகள் இந்த உலகத்தில் இல்லை. எனக்குக் காதல் ஜோடிகளைப் விட அந்த பலூன் சுடும் கடையும், அந்த பெரியவரும் வசீகரம் நிறைந்ததாக பட்டது. கடைக்காரனிடம் அந்தப்பெரியவர் ஏதோ சொல்ல கடைக்காரன் பெரியவரை ஒருவித சந்தேகத்துடனும், ஆச்சர்யத்துடனும் பார்த்தான். கடைக்காரன் அந்தப் பெரியவர் பின்னால் வந்து நிற்க, பலூன் கட்டியிருந்த தட்டியில் பலூன்கள் காற்றில் பட படவென அடித்துக்கொண்டன. கடைக்காரன் சிரித்தபடியே அந்தப் பெரியவரிடம் துப்பாக்கியைக் கொடுத்தான். அவர் கை லேசாக நடுங்கியது. கடைக்காரன் ஏதோ சில உத்திகளை அவருக்குச் சொல்லித்தருவது போல எனக்குப் பட்டது. கடைக்காரன் இப்போது அவரை விட்டு சென்றிருந்தான் .அந்த பெரியவர் சில விநாடிகள் குறிபார்த்தபடியே நின்றிருந்தார். டொப்பென ஒரு சிவப்புநிற பலூன் உடைந்தது. பெரியவர் சந்தேகத்துடன் துப்பாக்கியை ஒருகணம் பார்த்தார். மேலே சூரியனைப் பார்த்தார். மீண்டும் சுட்டார். இன்னொரு பலூன் உடைந்தது. அடுத்து சுட எதுவும் உடையவில்லை. இரும்பு மடக்கு நாற்காலியில் அமர்ந்திருந்த கடைக்காரன் பீடியொன்றைக் கடல்காற்றை எதிர்த்து லாவகமாக பற்றவைத்தான். டொப் டொப்பென வரிசையாக பலூன்கள் உடைந்து கொண்டே வந்தன. ஜிப்பாக்குள் கைவிட்ட பெரியவர் கடைக்காரனிடம் ஏதோ சொல்ல, கடைக்காரன் தலையை அசைத்தான். ஒன்றிரண்டு குறி தப்பினாலும் பெரியவர் எல்லா பலுன்களையும் ஏறக்குறைய சரியாகவே சுட்டார். ஒரேயொரு பச்சை நிற பலூன் மட்டும் இரண்டாவது வரிசையில் எஞ்சியிருந்தது. பெரியவர் தயங்கி நிற்பது போல தெரிந்தது. பிறகு ஒரு முடிவுடன் துப்பாக்கியால் குறி பார்த்தார். பலூன் காற்றில் படபடத்தது. அந்தக் காதல் ஜோடி இப்போது இடத்தை காலிசெய்து என்னைத் தாண்டி சென்றார்கள்.

இந்த வயதில் இவ்வளவு சரியாகச் சுடுகிறாரே. பால்யத்தில் போலீசாக இருந்திருப்பாரோ என்று எனக்கு மனதில் தோன்றியது. இவர் வயதில் எத்தனை என்கவுண்டர் செய்திருப்பார்? ச்சே..ச்சே இருக்காது. ஏதாவது துப்பாக்கி சுடும் வீரராகக் கூட இருந்திருக்கலாம்.இல்லை. கிராமத்தில் கவண் வைத்து கொக்கு.குருவி அடித்த அனுபவம் கூட இருந்திருக்கலாம். அவரை ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன். கடைக்காரன் பெரியவரை ஆச்சர்யமாகப் பார்த்தான்.நீண்ட தயக்கத்துக்குப் பிறகு டொப்பென அந்த பச்சைபலூனும் உடைந்தது. பெரியவர் கடைக்காரனிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு அவசர அவசரமாய் நடந்தார். அவர் இந்தப் பக்கமாகத்தான் வந்துகொண்டிருந்தார். கிட்டே வருகையில்தான் அவரது சவரம் செய்யப்படாத வெண்மை நிற முள் தாடியும், முன் வழுக்கையும், குழி விழுந்த கண்களும் தெளிவாகத் தெரிந்தது. அவர் என் பக்கம் வரவில்லை. எனக்கு முன்னால் சற்று தூரத்தில் நின்றார்.காதல்ஜோடி முன்பு அமர்ந்திருந்த கட்டுமர மறைவில் அமர்ந்தார். திடீரென அவரது உடல் குலுங்க ஆரம்பித்தது. கேவல் சத்தமாக இருந்தது. அவரது கேவல் சத்தம் கடல்காற்றையும் மீறி சன்னமாக என் காதுகளில் ஒலித்தது. எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் எழுந்து இந்த பக்கமாக சாலையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். என் முதுகுக்குப் பிறகு அந்த பெரியவர் கட்டுமர மறைவில் தனிமையில் பலமாக அழுது கொண்டிருப்பதை உணர முடிந்தது. கண்டிப்பாக அந்த பலூன்கள் உடைந்ததற்கு அவர் அழுதிருக்கமாட்டார் என்று உறுதியாகப் பட்டது எனக்கு.



காட்சி-2
—————

ம்யூசிக் வேர்ல்டு கடையில் ஆங்கிலப்பட டி.வி.டி.க்களை மேய்ந்துவிட்டு வெளியே வந்தேன். வெளியே லேசாக மழை தூறுவது போலிருந்தது.ஸ்பென்சரில் இன்று அவ்வளவாக கூட்டம் இல்லை. பக்கத்துக் கடையில் ஒரு கோக் வாங்கிக்கொண்டு முதல் மாடியில் இருக்கும் எஸ்கலேட்டர் அருகிலிருந்த தூண் ஓரமாக நின்று கொண்டேன். செல்போனில் பீப்,பீப் என்று ஒலித்தது. ஏதோ விளம்பர எஸ்.எம்.எஸ். மணியைப் பார்த்தேன். நான்கு பத்து என்று காட்டியது. கோக்கைக் குடித்தபடியே எதிர் வரிசைக்கடைகளை வேடிக்கை பார்த்தேன். ஸ்பென்சருக்கு வந்த மக்கள் எல்லாரும் கையிலோ, காதிலோ அலைபேசி வைத்திருந்தார்கள்.

முதல் மாடியில் நான் நின்றிருந்த தூணுக்கு எதிர் வரிசைக் கடைகளில் ஒன்றிரண்டு பூட்டிக்கிடந்தது. மற்ற கடைகள் மந்தமாக இயங்கிக்கொண்டிருந்தன. எதிர்ப்புறம் தூணுக்குப் பக்கத்தில் ஒரு செருப்புக்கடை இருந்தது. செருப்புக்கடை முன்னால் நீலநிற ஜீன்சும்,வெள்ளைநிற டி-ஷர்ட்டும் அணிந்திருந்த அந்தப் பெண் நின்று கொண்டிருந்தாள். தோளில் ஒரு லெதர் பை தொங்கிக் கொண்டிருந்தது. போனி டெய்ல் ஹேர் அவளுக்கு அழகாக இருந்தது. வயது இருபதா அல்லது பதினெட்டா என்று தெரியவில்லை. நேற்று பார்த்த இந்திப் படமொன்றில் வந்த புது கதாநாயகியை நினைவூட்டுவது போல உயரமும், தெலுங்கின் முன்னணி நடிகையொருத்தியின் உடலும் அவளுக்கு இருந்தது. மார்புகளின் வளர்ச்சி விசேஷ கவனம் பெற்றிருந்தது. அவள் கையிலும் செல்போன் இருந்தது. அவள் பதற்றமாக இருப்பதை என்னால் உணர முடிந்தது. இடது கையிலிருந்த செல்போனில் இரண்டு விரல்களால் ஏதேதோ வேகமாக டைப் செய்வதை இங்கிருந்து பார்க்க முடிந்தது. யாருக்கோ எஸ்.எம்.எஸ். அடித்துக் காத்திருக்கின்றாள் என்று யூகிக்க முடிந்தது. சில வினாடிகள் கழித்து கோபத்துடன் யாருக்கோ அலைபேசியில் போன் செய்தாள். நம்பர் பிஸியா அல்லது எதிர்முனை நபர் பேசவில்லையா என்று தெரியவில்லை. சலிப்புடனும், கோபத்துடனும் செல்போனை இடது கையில் வைத்தபடி வலது கையில் இருந்த பலூனில் அடித்துக் கொண்டிருந்தாள். சுற்றிலும் ஒருமுறை பார்த்தபடி கைக்குட்டையால் கண்களை நாசூக்காகத் துடைத்துக்கொண்டாள்.

அப்போதுதான் கவனித்தேன். அவள் வலது கையில் இதய வடிவ பலூனொன்று இருந்தது. சற்றுமுன் மூன்றாவது தளத்தில் சிறப்புத் தள்ளுபடியென்று பொம்மைத் தலையை முகத்தில் மாட்டியபடி நின்றிருந்த ஒருவன் போவோர், வருவோருக்கெல்லாம் அச்சடித்த தாள்களையும், பிங்க் நிறத்தில் இருக்கும் இதய வடிவ பலூன்களையும் விநியோகித்துக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. ‘நோ தேங்க்ஸ்’ சொல்லி வாங்காமல் தவிர்த்துவிட்டு வந்த அந்த பலூன்தான் அவள் கையில் இருந்தது. அவள் முகத்தில் மட்டும் வருத்தமும் சோகமும் இல்லாமல் இருந்திருந்தால்,அவள் கையில் அந்த பலூன் அமர்ந்திருப்பது காதல் தேவதை புன்னகை பூத்து நின்றிருப்பது போல இருக்கும். தூணுக்கு இந்தப் பக்கம் நான் நின்றிருந்த இடத்திலிருந்து அவளை நான் பார்க்க முடிவது போல, அந்தப் பக்கமிருந்து அவளால் என்னைப் பார்க்க முடியுமென்று தோன்றவில்லை. அவளது செய்கையை பார்க்க பயமாகவும் இருந்தது. பாவமாகவும் இருந்தது. யாருக்கோ நீண்ட நேரமாகக் காத்திருப்பதன் வலியும்,ஏமாற்றமும் அவளது முகத்திலும் அவள் அங்குமிங்குமாய் நடந்து எஸ்கலேட்டரையும், லிஃப்ட்டையும் பார்க்கும் பார்வையிலிருந்து தெளிவாகவே ஊகிக்க முடிந்தது. என் கையிலிருந்த குளிர்பானம் தீர்ந்து போக அதை அருகிலிருந்த குப்பைக்கூடையில் வீசினேன்.

அவள் யாருக்கோ வேக வேகமாக எஸ்.எம்.எஸ். டைப் செய்வது தெரிந்தது. செருப்புக் கடைக்காரன் கல்லாவில் அமர்ந்தபடியே அருகே தூங்கிக் கொண்டிருந்தான். அவள் எஸ்.எம்.எஸ். அடித்து முடித்தவுடன் கைக்குட்டையால் கண்களைத் துடைத்துக் கொண்டாள். எஸ்கலேட்டரில் ஒரு தலை மேலேறி வருவது தெரிந்தது.அவள் ஆர்வமாக எஸ்கலேட்டரைப் பார்த்தாள். எஸ்கலேட்டரிலிருந்து வெளியே வந்த நடுத்தர வயது மனிதர் மெதுவாக கடைகளின் விளம்பர போஸ்டர் பெண்களைப் பார்த்தபடியே மெதுவாக நடந்தார். எதிரே பார்த்தேன். அவள் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. செல்போனை பார்த்தபடியே நின்றுக்கொண்டிருந்தாள்.வெளியே நல்ல மழையாக இருக்க வேண்டும். வெளியே சென்று தம்மடித்து விட்டு வீட்டுக்குக் கிளம்ப எத்தனித்தேன். எதிரே பார்த்தேன். அவள் இன்னமும் செல்போனில் யாரையோ அழைக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள். இந்த முறையும் எதிர்முனையிலிருந்து பதில் வரவில்லை என்று நினைக்கின்றேன். அவள் முகம் இறுகி இருந்தது. உறுதியான தீர்மானத்துக்கு வந்தவள் போல தெரிந்தது. அங்குமிங்கும் நடப்பதை நிறுத்திவிட்டு லெதர்பையைத் திறந்தாள். கைப்பையை திறந்து ஏதோ பாக்கெட்டை எடுப்பது போல தெரிந்தது. இங்கிருந்து பார்க்கத் தெளிவாக தெரியவில்லை. என்ன அது? அவள் தலையை சற்று உயர்த்தி வலது கையில் இருந்து எதையோ எடுத்து வாயில் போட்டாள். இடது கையிலிருந்த தண்ணீர் பாட்டிலை அப்படியே வாயில் கடகடவென கவிழ்த்தாள். அது கண்டிப்பாக மாத்திரைதான். மாத்திரை தவிர வேறு என்ன இப்படி விழுங்க முடியும்? என்ன மாத்திரையாக இருக்கும்? தெரியவில்லை. அது என்ன மாத்திரையென்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் கொஞ்சம் கூடுதலாகவே எழுந்தது. விழுங்கியவுடன் அவள் கண்கள் கலங்கியிருந்தன. கைக்குட்டையால் வாயையும்,கண்களையும் துடைத்துக் கொண்டாள். எஸ்கலேட்டரில் இறங்க ஆரம்பித்தாள்.

எஸ்கலேட்டரில் இறங்கிய அவள் ஸ்பென்சர் வாசலை நோக்கிச் செல்வதை முதல் மாடியிலிருந்து பார்க்க முடிந்தது. வாசல் அருகே இருந்த ஸ்நாக்ஸ் கடை முன்பு ஒரு கணம் அவள் தயங்கி நின்றாள். அவள் ஏதோ கேட்க, கடைக்காரன் சந்தேகத்துடன் அவள் கையிலிருந்த ரூபாய்த்தாளைப் பார்த்தபடி கல்லாப்பெட்டியைத் திறந்து சில்லறைகளை எண்ணிப் பார்த்தான். கடைக்காரன் அவளிடம் ஆவிபறக்கும் கப்பையும், மீதி பணத்தையும் தர, அதை வாங்கிக்கொண்டு முதல் தளத்தில் இருந்த தூணுக்கு மறைவில் அமர்ந்தாள். அவள் ஒரு கையில் காபி கப்பும் இன்னொரு கையில் அந்த இதய வடிவ பிங்க் பலூனும் இருந்தது. செல்போன் கையில் இல்லை. லெதர் பேக்கைப் பார்த்தேன். காபியைக் குடிக்காமல் பலூனையே வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

நான் எஸ்கலேட்டரில் இருந்து இறங்கினேன். அவளைத் தாண்டிதான் வாசலுக்குச் செல்லவேண்டும். முதல் தளத்திலும் கூட்டம் இல்லை. கடைக்காரன் ஏதோ பில்லிங் மெஷினை நோண்டிக்கொண்டிருந்தான். டொப்பென மெலிதாக ஏதோ சத்தம் கேட்டது. தூணுக்கு அந்தப் பக்கம் அமர்ந்திருந்தவள் கையிலிருந்த பலூன் வெடித்தது. அவளைக் கடந்து வாசலுக்கு சென்று கொண்டிருந்தேன். அவளின் சன்னமான விசும்பலொலியும், மூக்கை உறிஞ்சும் சத்தமும் என் முதுகுக்குப் பின்னே கேட்டது. திரும்பிப் பார்ப்பது அநாகரிகமாகப் பட்டது. வாசலிற்கு வந்தேன்.வெளியே மழை கொட்டிக்கொண்டு இருந்தது.



காட்சி–3
—————

ஏர்போர்ட்டில் காரை பார்க் செய்துவிட்டு செல்போனைப் பார்த்தேன். செல்போனில் மணி ஏழு என்று காட்டியது. துபாயிலிருந்து இந்நேரம் பிளைட் வந்திருக்கலாம். பார்வையாளர் பகுதியை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தேன். ராஜாராமைப் பார்த்து பத்து வருடங்கள் இருக்கும்? ஆள் இப்போது எப்படியிருப்பான்? வீட்டில் அப்பாவுடன் சண்டை போட்டு ஓடிவந்த ராஜாராமை நண்பர்களோடு வடபழனி கோயிலுக்கு அழைத்துச் சென்று அவனுக்குக்கும், ஸ்வேதாவுக்கும் திருமணம் நடத்தி வந்த தினம் மங்கலாக மனதில் ஓடியது. முன்னால் நல்ல கூட்டமாக இருந்தது. வெள்ளை யூனிஃபார்மில் நின்றிருந்த சில டிரைவர்கள் பெயர் அட்டைகளை வைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தார்கள். யாரோ ஒரு மத்திய அமைச்ச்சர் மலேசியாவிலிருந்து திரும்புகிறாராம்.கரைவேட்டி அணிந்திருந்தவர்கள் மாலைகளுடன் நின்று கொண்டிருந்தார்கள். ராஜாராமா அது? பக்கத்தில் குண்டாக கழுத்து நிறைய நகைகளோடு. பக்கத்தில் கூட நடந்து வருபவர்கள் அவன் குழந்தைகளாகத்தான் இருக்க வேண்டும். பத்து வருடங்கள் சந்திக்கவில்லையே தவிர, போனில் அவ்வபொழுது பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். ராஜாராமை பார்த்ததும் அடையாளமே தெரியவில்லை. சதைப்போட்டிருந்தான். ராஜாராமுக்கும் என்னைப் பார்த்தவுடன் சட்டென அடையாளம் தெரியவில்லை. சிலவிநாடிகள் சுதாரிப்புக்குப் பிறகே என்னை நோக்கி கையை அசைத்தான். அருகே வந்து என் கைகளை இறுகப் பற்றிக்கொண்டான். அவன் மனைவி என்னைப் பார்த்து நலம் விசாரிக்க, ராஜாராம் அவன் குழந்தைகளிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தான். அங்கிள் என்று சொல்லும்போது என்னைப் பார்த்து லேசாக சிரித்தான். அவர்களை அழைத்துக்கொண்டு கார் பார்க் செய்யும் இடத்திற்கு நகர்ந்தேன். பின்னால் மத்திய அமைச்சருக்காக வாழ்க..வாழ்க வென்று கத்திக்கொண்டிருந்தார்கள். மழை வருமா? காற்று சற்று வேகமாக வீசுவது போல இருந்தது. ராஜாராமை பக்கத்து சீட்டில் அமர, அவன் மனைவி,குழந்தைகள் பின்சீட்டில் அமர்ந்துகொள்ள காரைக் கிளப்பினேன். "ஊருல நல்ல மழை போலிருக்கு…"விசாரித்தான். சென்னை டிரேட் சென்டரில் நாளை ஒரு கான்பிரன்ஸ் என்றும், இன்னும் இரண்டு தினங்கள் மட்டும் தங்கவிருப்பதாக சொன்னான். சென்னையில் எனது வீடு இருக்க அவன் ஹோட்டலில் தங்குவது எனக்குப் பிடிக்கவில்லையென்று சொன்னேன். உண்மையில் எனது சிங்கிள் பெட்ரூம் அபார்ட்மெண்ட்டில் இரண்டு பேருக்கு மேல் தங்கமுடியாது. ஒருவேளை ராஜாராம் எனது வீட்டில் தங்க முடிவெடுத்திருந்தால் எனக்கு மிகப் பெரிய தர்மசங்கடமாய் இருந்திருக்கும். தேங்க் காட். அவன் சிரித்தபடி நாளை கான்பிரன்ஸ் முடிந்து குழந்தைகளை அழைத்து வீட்டிற்கு வருவதாகச் சொன்னான். எனது மகள், மனைவி பற்றி விசாரித்தான்.

. "ராயல் மெரிடியன்ல புக் பண்ணியிருக்கலாம்ல..? டிரேட் சென்டர் பக்கமாச்சே..?" கேட்டேன்.

"எங்க ஆபீஸ்ல புக் பண்ணிக்கொடுத்திருக்காங்க..வழக்கமான பார்க்லதான் புக் பண்ணுவாங்க" சொன்னான்.

பார்க் செல்லும்போது மணி எட்டு. முன்பதிவு செய்து வைத்திருந்த ரூம் விபரங்களை ஹோட்டல் ரிசப்ஸனிஸ்ட் பெண்ணிடம் கேட்டுக்கொண்டிருந்தேன். ராஜாராம் மனைவி செல்போனில் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தாள். ராஜாராம் மகனும்,மகளும் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்தார்கள். காரில் வரும்போது அந்தக் குழந்தைகள் என்னுடைய கேள்விகளுக்கெல்லாம் சரளமாக ஆங்கிலத்திலேயே பதில் சொன்னார்கள். அவர்களுக்குத் தமிழ் ஒரு வார்த்தைக்கூட தெரியாது. ராஜாராம் என்னிடம் பெருமையாகச் சொன்னான். துபாயில் பள்ளிக்கூடங்கள் கல்வி தரமாய் இருப்பதாகச் சொன்னான். ரூம்பாய் சூட்கேஸ்களைச் சுமந்தபடி ரூமிற்கு அழைத்துச் சென்றான். ராஜாராம் ரூமில் அவனது மனைவி, குழந்தைகளை விட்டுவிட்டு என்னுடன் புறப்பட்டுக் கீழே வந்தான். "ஹோட்டலில் பார் தரமாக இருக்கும்ல?" கேட்டான். சிகரெட் பற்றவைத்து இருவரும் பேசிக் கொண்டிருந்தோம். பொதுவான ஊர் வம்புகளைக் கதையடித்துக் கொண்டிருந்தோம். சென்னையின் போக்குவரத்து நெரிசல், மெட்ரோ ரயில், ஆயிரம் கோடி ரூபாய் ஊழல், அடுத்த எலக்சன், மாவோயிஸ்ட்டுகள்…. ராஜாராம் ஒரு வார்த்தை கூட ஊரில் இருக்கும் அவன் அப்பா பற்றிக் கேட்கவேயில்லை. எனக்கு அதைப்பற்றிக் கேட்கவும் தர்மசங்கடமாக இருந்தது. ராஜாராம் அவன் அப்பாவுடன் சண்டைபோட்டு ஸ்வேதாவைத் திருமணம் செய்து கொண்ட அடுத்த மாதமே அவளை அழைத்துக்கொண்டு துபாய் சென்றுவிட்டான். ராஜாராம் ரூம் பாயிடம் அவன் மனைவி,குழந்தைகளை டின்னர் ஹாலுக்கு வரச் சொல்லி அனுப்பினான். இருவரும் டின்னர் ஹாலுக்குச் சென்றோம்.

டின்னர் ஹால் செல்லும் வழியில் பலூன்கள் கட்டித் தொங்க விடப்பட்டிருந்தன. மாடிப்படியெங்கும் பலுன்கள் பறந்து கொண்டிருந்தன. எதிரே நடந்து வந்த வெயிட்டரிடம், என்ன விசேஷமென்று விசாரிக்க, யாரோ ஒரு பிஸினஸ்மேன் பிறந்தநாளென்று சொன்னான். டின்னர் முடிந்து ராஜாரமுடன் தம்மடிக்கச் சென்றேன். அவன் மனைவி ரூமுக்குப் புறப்பட்டு செல்லக் குழந்தைகள் எங்களுடன் புறப்பட்டு வெளியே வந்தார்கள். அங்கிள்..அங்கிள் இந்த பலூனை ஊதித் தாங்கவென்று அவன் குழந்தைகள் ஆங்கிலத்தில் கேட்டார்கள். சாப்பிட வந்தவர்களில் குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் ஒரு வெயிட்டர் பலூன்களைக் கொடுத்துக் கொண்டிருந்தான். ஊதிய பலூனை எடுத்தபடியே விளையாட ஓடினார்கள். எனது செல்போன் ஒலிக்க பாக்கெட்டிலிருந்து வெளியே எடுத்தேன். மனைவி நம்பர் தெரிந்தது. சிக்னல் வீக்காகி சத்தம் கேட்கவில்லை. ராஜாராமிடம் சைகை காட்டிவிட்டு சற்று வெளியே மெயின்கேட் அருகே வந்து பேச ஆரம்பித்தேன். ராஜாராமுடன் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டதாகச் சொன்னேன். மனைவி சீக்கிரம் வரச்சொன்னாள். செல்போனில் பேசி முடிக்கையில் பின்னால் டொப்..டொப்பென ஏதோ உடைவது போலிருந்தது. திரும்பினேன். ராஜாராம் சின்னக் குழந்தை போல குழந்தைகள் கையிலிருந்த பலூன்களை சிகரெட்டால் சுட்டு உடைத்துக் கொண்டிருந்தான். குழந்தைகள் ஆர்வமாக கைகொட்டிச் சிரித்துக்கொண்டிருந்தார்கள். கடைசி பலுனையும் சிகரெட்டால் சுட்டு உடைக்க அவன் குழந்தைகள் கைதட்டி உற்சாகமாய் எம்பிக் குதித்தார்கள்.



ராஜாராமை ஹோட்டலில் சந்தித்துவிட்டு காரில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். சாலையில் போக்குவரத்து குறைந்திருந்தது. பலர் கடைகளை அடைத்துவிட்டுக் கிளம்பிக்கொண்டிருந்தார்கள். கடை ஷட்டர்களை இழுக்கும் ஒலிகள் சாலையில் விட்டு விட்டுக் கேட்டுக் கொண்டிருந்தது. கோடம்பாக்கம் பாலம் முன்னால் இருக்கும் கடையில் பெட்ரோல் போட வேண்டும். சாலையைப் பார்த்தேன். மூடியிருந்த கடைகளின் வாசலில் எரிந்து கொண்டிருந்த ட்யூப்லைட்டுகளின் வெளிச்சமும். சாலையிலிருக்கும் மெர்க்குரி லைட்டுகளின் வெளிச்சமும் கலந்து ஒரு விநோதமான ஒளிக்கலவையை சாலையில் வழிய விட்டிருந்தது. அந்த வெளிச்சத்தில் சாலையெங்கும் மாலை பெய்த மழை ஈரம் சேர்ந்து ஆங்காங்கே மின்னிக்கொண்டிருந்தது.

எதிரே தூரத்தில் ஒரு உயரமான கட்டிட மாடியில் மெகா சைசில் காற்றடைத்த பலூன் பறந்து கொண்டிருந்தது. துணி விளம்பரத்துக்காகவோ, நகை விளம்பரத்துக்காகவோ கட்டிவிடப்பட்டிருந்த அந்த பலூன் பறந்துக் கொண்டிருந்தது. பலூன் பறந்துவிடாமல் இருக்க தரையிலிருந்து இறுகப் பிடித்த பலமான இரும்புக் கயிறுகளில் சின்னச் சின்ன சீரியல் பல்புகள் கட்டியிருந்தது இருட்டில் பார்க்க அழகாக இருந்தது. காலையிலிருந்து நான் பார்த்த பலூன்கள் யாவற்றிலும் பெரிதாக பறந்து கொண்டிருந்தது. அந்த பலூன் பறக்கும் உயரத்திலிருந்து நின்று பார்த்தால் இந்த நகரம் முழுவதும் பார்வைக்குத் தெரியும் என்று தோன்றியது.



நன்றி
-என்.விநாயக முருகன்

Sunday, September 12, 2010

கடற்கரையில் காந்தி

நேற்று கடற்கரையில்
காந்தியை பார்த்தேன்

என்னைப் பார்த்து சிரித்தார்
முன்னொரு தினம் சந்தித்தது
அடையாளம் தெரிந்தது
காற்று வாங்கியபடியே
காலாற நடந்தோம்

கடற்கரையில்
கார் பார்க்கிங் வசதி
முறையாக இல்லையென்று
குறைப்பட்டார்.

அவருக்கு மூச்சு வாங்கியது
கையிலிருந்த
மினரல் வாட்டர் பாட்டிலை குடித்தார்

கிராமங்களிலும்
கார்பார்க்கிங் வசதி
கிடைக்க வேண்டுமென்றார்

எனக்கு குழம்பியது

விளைநிலங்கள் தோறும்
வணிக மையங்கள்
வரவேண்டுமென்றார்

தரிசுநிலங்களில்
தனியார் நிறுவனங்களை
அமைப்போமென்றார்

மக்கள் மகிழ்ச்சியாக வாழ
மானாவாரி நிலங்களில்
மல்டிபிளக்ஸ் திரையரங்கள்
அவசியம் கட்டவேண்டும்
பிடிவாதமாக சொன்னார்

எல்லா கிராமங்களிலும்
முறையான சாலைகள்
சுங்கசாவடிகள்
மின்சாரம் குடிநீர்
மளிகை கடைகள்
உடற்பயிற்சி கூடங்கள்
பொறியியல் கல்லூரிகள்
தனியார் வங்கிகள்
இன்னும்...இன்னும்
சொல்லிக்கொண்டே போனார்

கிராம பொருளாதார திட்டத்திற்கு
வெளிநாட்டு வங்கியில்
கடன் கிடைக்குமென்றார்

இறக்குமதி ஆடைகளை
அணிய சொன்னார்
கிராம மக்களுக்கு
தன்னம்பிக்கை தருமென்றார்

ஏதோ கேட்க
வாயெடுத்தவனை பார்த்து
இந்தியா கிராமங்களில் வாழ்கிறது
என்றார்

Friday, September 10, 2010

ஸ்பென்சர் பிளாசாவில் காந்தி










நேற்று
ஸ்பென்சர் பிளாசாவில்
காந்தியை சந்தித்தேன்
அடையாளம் தெரியவில்லை
ஆள் சற்று சதைப்போட்டிருந்தார்.
கைத்தடியை காணவில்லை.
மூக்குக்கண்ணாடிக்கு பதில்
ரேபான் கிளாஸ் இருந்தது.
கதர்வேட்டி இருந்த இடத்தில்
லீ ஜீன்ஸ்(நீலநிறம்) இருந்தது.
காதில் ப்ளூடூத் இருந்தது
கையில் நோக்கியா மொபைல் இருந்தது

நீ..நீங்க காந்திதானே
கேட்ட என்னை
புன்னகையோடு பார்த்து
ஐ'யாம் மிஸ்டர் கேண்டி சொன்னார்

மிஸ்டர் கேண்டியும்,நானும்
நந்திகிராமம் முதல்
தண்டகாரண்யம் வரை பேசிக்கொண்டோம்
நமீதா முத‌ல்
நயன்தாரா வரை
மிஸ்டர் கேண்டிக்கு தெரிந்திருந்தது
ஆயிரம் கோடி ஊழலை
ஆச்சர்யப்படாமல் கேட்டுக்கொண்டார்

எந்திரன் பட வெளியீடு
தள்ளிப்போவதை சொல்லி
கவலைப்பட்டார்
சுதந்திரதினத்துக்கு
தொலைக்காட்சியில்
என்ன பட்டிமன்றம்
ஆர்வத்தோடு கேட்டார்

ஆட்டுப்பால் வேர்க்கடலையை விட
கோக்கும் பீட்சாவும்
உடலுக்கு உகந்ததென்றார்

மிஸ்டர் கேண்டியிடம்
ஆட்டோகிராப் வாங்க
அவசரத்துக்கு எதுவும் கிடைக்காமல்
ஐநூறு ரூபாய் தாளை தந்தேன்
ரூபாய் நோட்டை பார்த்த
மிஸ்டர் கேண்டி
முன்னிலும் அதிகமாய்
பொக்கைவாய் தெரிய
புன்னகைத்தார் நட்பாய்