Thursday, February 17, 2011

நினைவெனும் கொடுஞ்சுமை



கடந்த வருடம் “என் பெயர் சிவப்பு” நாவலுக்கு என் வலைத்தளத்தில் ஒரு விமர்சனம் எழுதியிருந்தேன். அதைப் பார்த்துவிட்டு ஜி.குப்புசாமி அவர்கள் எனக்கு ஒரு நன்றி மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அவருக்கு மரியோ வர்கஸ் யோசா நாவல்களை மொழிபெயர்க்கும்படி வேண்டுகோளுடன் பதில் அனுப்பினேன். அவர் ஜான்பான்வில்லின் புக்கர் விருது நாவலை தற்பொழுது மொழிபெயர்த்துக் கொண்டிருப்பதாக பதிலனுப்பினார். இந்த வருட புத்தககண்காட்சியில் வாங்கப்படவேண்டிய பட்டியலில் “கடல்” என்ற இந்த நாவலையும் குறித்துக்கொண்டேன்.

கடல் நாவலை வாங்குவதற்கு இரண்டு காரணம். ஒன்று ஜான்பான்வில். அவரது நாவல்களின் நடை கொஞ்சம் புரிந்துக் கொள்ள சிரமப்பட வைக்கும். இந்நூலின் முன்னுரையில் குறிப்பிடப்பட்டிருப்பதுபோல ஜான்பான்வில்லின் எழுத்துநடை மர்மமான வார்த்தைகள், அசந்தர்ப்பமான சமயங்களில் எதிர்பாராத விநோத உவமைகள் என்று உரைநடையை அசாத்திய தளத்திற்கு கொண்டு செல்லும். மொழிபெயர்ப்பு இருந்தால் இலகுவாக படிக்கலாம். கடல் நாவலை வாங்குவதற்கு இரண்டாவது காரணம். ஜி.குப்புசாமி. "என்பெயர் சிவப்பு" நாவல்,ஹாருகி முரகாமி எழுத்துக்களை அருமையாக மொழிபெயர்த்திருந்தார். சில மொழியாக்கம் கடமுடாவென்று பயமுறுத்தும். சில்வியா பிளாத்தின் கவிதைகளை அப்படியே ஆங்கிலத்தில் படித்தால் எளிமையாக புரிந்துக்கொள்ளலாம். நாகார்ச்சுனன் மொழிபெயர்ப்பில் கவிதைகளை படித்தால் அவ்வளவுதான். ஆனால் ஜி.குப்புசாமியின் மொழிபெயர்ப்பு தமிழில் படிக்க சிரமப்படாமல் இருக்கும். அதேநேரம் மூலப்பிரதியின் கலையமைதி கெடாமல் இருக்கும். தமிழ் இலக்கிய உலகில் ஜி.குப்புசாமியின் மொழிபெயர்ப்புகள் விசேஷ கவனம் பெற்று பலரால் பாராட்டப்படுகிறது. இந்நாவலில் அவரது உழைப்பு தெரிகிறது. இந்ந்நாவலின் மொழிப்பெயர்ப்புக்காக அவர் அயர்லாந்து பயணம் செய்துள்ளார். இந்நாவலில் வரும் புற உலகின் சித்தரிப்புகள், கடல் அருகாமை நிலக்காட்சிகள் நுட்பமாக அமைய அவரது பயணம் உதவியுமுள்ளது.

இனி நாவலைப்பற்றி:-

மேக்ஸ் மார்டன் என்னும் வரலாற்று ஓவியர் அவரது மனைவி அன்னா கேன்சரால் இறந்தபிறகு ஒரு கடற்கரை கிராமத்திற்கு செல்கிறார். மேக்ஸ் மார்டன் சிறுவயதில் கோடை விடுமுறையை கழிக்க அடிக்கடி அந்த கடற்கரைக்கு செல்வதுண்டு. அந்த கடற்கரை யிலிருந்தபடி தனது கடந்தகால நினைவுகளை மீட்டுருவாக்கம் செய்வதுதான் நாவலின் பின்புலம். சிறுவயதில் கடற்கரைக்கு ஒரு பணக்கார ஐரீஷ் குடும்பம் விடுமுறையை கழிக்க வந்துள்ளது. மேக்ஸ் மார்டன் அந்த குடும்பத்தில் இருக்கும் ஒரு பெண்மணியையும் அவளது மகளையும் சந்தி த்து பழகுகிறார்.. அந்த பெண்மணி மிசஸ் கிரேஸ். அவளது மகளின் பெயர் க்ளோயி. பதின்ம பருவத்தில் எல்லா சிறுவர்களுக்கும் வருவது போல மேக்ஸ் மார்டனுக்கு மிசஸ் கிரேஸ் மீது ஒருவித பால் கவர்ச்சி வருகிறது. சிலநாட்களிலேயே அது களைந்து அவள் மகள் க்ளோயி மீது காதல் ஏற்படுகிறது. மேக்ஸ் மார்டன் சிறுவயதில் சந்தித்த அந்த இரண்டு பெண்களையும் , பால்யகால அனுபவங்களையும், அந்த இரண்டு பெண்களையும், தன் மனைவி அன்னா, மகள் க்ளேர் பற்றிய நினைவுகளையும் மாற்றி,மாற்றி அசைபோடுகிறார். கிட்டத்தட்ட தமிழில் ஆதவன் நாவல்களில் வருவது போல மனதின் உள்அடுக்குகளிலேயே நாவலின் கதை பிரயாணப்படுகிறது. ஏழ்மையான பிண்ணனியிலிருந்து வரும் மேக்ஸ் மார்டன் பணக்கார ஐரீஷ் குடும்பத்துடன் பழகும்போது அவர்களுக்குள் சமூக அந்தஸ்துகள் எப்படிபட்ட முரணையும், உறவு சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது என்பதையும் நாவல் நுட்பமாக சொல்கிறது. பால்யகாலத்தில் க்ளோயிடம் காதலில் விழும்போதும் சரி. மனைவி அன்னாவிடம் குடும்பம் நடத்தும்போதும் சரி. மேக்ஸ் மார்டனுக்கு இந்த பொருளாதார சமூக அந்தஸ்தை தாண்டி இயல்பாக பழகுவது பெரிய பிரச்சினையாக இருக்கிறது. நாவலின் இரண்டாம் பகுதி முழுக்க இதை உணர முடியும். நாவலின் முற்பகுதியில் மிசஸ் க்ரேஸை ஒரு சராசரி பெண்மணியாக ஜான்பான்வில் காட்டுகிறார். இதை மாக்ஸ் மார்டன் அவரது நினைவுகளை சொல்வதன் மூலம் அறிந்துக்கொள்ளலாம். ஆனால் இரண்டாம் பகுதியில் மிஸ்டர் க்ரேஸுக்கும் ரோஸுக்கும் இடையில் இருக்கும் காதலை மிசஸ் க்ரேஸ் மிக இயல்பாக எடுத்துக்கொள்வது சற்று குழப்பமாக இருக்கிறது. மனிதன் வயதாக வயதாக அதிகமாக பால்யகால நினைவுகளை அசைபோடுகிறான். இறக்கும் தருவாயில் பால்யகால நினைவுகளை அசைபோடுவதன் மூலம் கடந்த காலத்துக்கு சென்று ஒளிந்துக்கொள்ள முயற்சி செய்கிறான். காலத்தை கயிறு கட்டி பின்னுக்கு இழுத்துச் செல்வதன் மூலம் வாழ்வை நீட்டிக்க முயற்சி செய்கிறான். ஆனால் நிகழ்கால நினைவுகள் அவ்வபொழுது வந்து கடந்தகால நினைவுகளை முன்னுக்கு தள்ளி அவனை சாவுக்கு பக்கமாக தள்ளிவிடுகிறது.இந்த நாவல் முழுக்க ஒரு மனிதனின் நினைவுகள்.நினைவுகள்.நினைவுகள் மட்டுமே. மேக்ஸ் மார்டனுக்கு நினைவுகள் சோகத்தை தருகின்றன. வலியை அதிகமாக்குகிறது. அவர் நினைவுகளை உதற முயற்சிக்கிறார். முடியவில்லை. மனிதன் இறக்கும்வரை அவனது நினைவுகள் இருந்துக்கொண்டே இருக்கும். நினைவெனும் கொடுஞ்சுமையை மனிதனால் ஒருபோதும் உதறித்தள்ள முடியாது. ஒருவேளை அவன் இறந்துப்போனாலும் அவன் வேறு யாராவது உயிரோடு இருக்கும் இன்னொரு மனிதனின் நினைவுகளை வந்து நிறைப்பான்.

நாவலிலிருந்து எனக்கு பிடித்த சில சில வரிகள்:-

“இறந்தவர்களை நாம் இறக்கும்வரைதான் சுமக்கிறோம். அதன்பின் நாம் சிலகாலம் சுமக்கப்பட்டு வருவோம். பின் நம்மை சுபப்பவர்கள் அவர்களுக்கான நேரம் முடிந்து சாய்ந்தபிறகு என்னைப்பற்றிய ஞாபகத்தீற்றலே இல்லாத எண்ணத்தொலையாத தலைமுறைகள் தொடர்ந்து வரும். அன்னாவை நான் நினைவில் வைத்திருக்கிறேன். எங்கள் மகள் க்ளேர் அன்னாவை நினைவில் வைத்திருப்பாள். பிறகு க்ளேர் மறைந்துவிடுவாள். அப்போது அவளை நினைவில் வைத்திருப்பவர்கள்தான் இருப்பார்கள். எங்களை நினைவில் கொண்டிருப்பவர்கள் இருக்கபோவதில்லை. அதுதான் எங்களது இறுதி கரைவாக இருக்கும். எங்களுடையது ஏதாவது மிச்சம் இருக்கலாம். மங்கியிருக்கும் ஒரு புகைப்படம். ஒரு முடிக்கற்றை. சில விரல் ரேகைப் பதிவுகள், நாங்கள் இறுதி மூச்சைவிட்ட அறையில் சிதறியிருக்கும் சில அணுத்துகள்கள். ஆனால் நாங்கள் இருப்பதும் இருந்ததும் எப்போதுமே நாங்களாக இருக்க முடியாது. மரித்தவர்களின் மக்கிய புழுதிதான் கடைசியில்”


நாவல் ஆசிரியரைப் பற்றி:-

ஜான்பான்வில் ஐரீஷ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர். கடல் நாவல் 2005 -ஆம் ஆண்டிற்கான புக்கர் விருது பெற்றது. இதுவரை பதிமூன்று நாவல்களை எழுதியுள்ளார். பலமுறை புக்கர் பரிசுக்கு இவரது நாவல்கள் கதவைத்தட்டி கடைசியில் கடல் நாவல் ஜெயித்துள்ளது. சக எழுத்தாளர்கள், விமர்சகர்களோடு ஒத்துபோகாத மனநிலையிலேயே இயங்கி வரும் ஜான்பான்வில்லை தான் அயர்லாந்து சென்றபொழுது சந்திக்கவே முடியவில்லையென்று நாவலின் முன்னுரையில் ஜி.குப்புசாமி குறிப்பிடுகிறார். அவர் சொல்வது போல ஜான்பான்வில் தொட்டாற்சிணுங்கியாகத்தான் இருக்க வேண்டும். அல்லது தனிமை விரும்பி. அல்லது ஒருவித தாழ்வு மனப்பான்மையில் சக மனிதர்களிடமிருந்து துண்டித்து கொள்ள விரும்புதல். இந்நாவலின் கதாநாயகன் மேக்ஸ் மார்டனின் பாத்திரப்படைப்பு அப்படித்தான் இருக்கிறது. எது எப்படியோ
புக்கர் விருது பரிசை வென்ற இந்த நாவலை அப்படியொன்றும் பிரமாதமான நாவலென்று கண்ணை மூடியபடி சொல்ல முடியாது. தமிழில் இதே கருவில் எழுதப்பட்ட சில நாவல்கள் கடலை விட அருமையாக அமைந்துள்ளது. வேற்றுமொழி இலக்கியத்தோடு ஒப்பிட்டால் நமக்குள் பொதிந்து கிடைக்கும் பொக்கிஷங்களின் அருமை தெரியவருகிறது. நகுலனின் ‘நினைவுப்பாதை’ லா.ச.ராவின் ‘அபிதா’ போன்ற நாவல்களை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தால் நோபல் பரிசு கூட கிடைக்கலாம்.

கடல் (நவீன உலக கிளாசிக் வரிசை)
ஜான் பான்வில்; தமிழில்: ஜி. குப்புசாமி;
விலை:- ரூ. 125
காலச்சுவடு பதிப்பகம்
பக்கங்கள் 207