Friday, July 19, 2013

பூட்டுத்திருடன்

இன்று காலை ஹாங்காங்கில் இருக்கும் எனது அலுவலக நண்பர் கெளதம் போன் செய்திருந்தார். பேஸ்புக்கில் பெண் ஐடிக்களில் வருபவர்களை பற்றி நான் சமீபத்தில் எழுதியிருந்த ஒரு பதிவை படித்து விட்டு கருத்து சொன்னார். அப்போது எங்கள் உரையாடல் எதேச்சையாக மென்பொருள் பாதுகாப்பு பற்றியும்,Fake ஐடிக்கள் பற்றியும் , குறிப்பாக நிக்கி செள பற்றியும் திரும்பியது.

"நிக்கி செள இறந்து விட்டார் தெரியுமா?" என்றார் கெளதம். எனக்கு தூக்கி வாரி போட்டது.

"எப்போ என்றேன்?"

"தெரியல. ஒரு நண்பர் சொன்னார்."
"என்னாச்சு?"

"ஏதோ படகு விபத்தாம். கடல்ல மூழ்கி பாடி கூட கெடக்கல. அதுக்கு மேல  எனக்கும் ஒன்னு தெரியாது " என்றார்.
 
நிக்கி செள (Niki Chow) வை நான் முதன்முறையாக சந்தித்தபோது அது ஒரு கோடைக்காலம். தாஜ் ஹோட்டலில் டின்னர் இடைவெளியின்போது தயங்கி தயங்கி அவரிடம் என்னை அறிமுகம் செய்துக்கொண்டேன். ஐந்தரை அடி உயரத்தில் சின்ன கண்களுடன் ஆனால் முதல் பார்வையிலேயே மனிதர்களை கவர்ந்து இழுக்கும்படியான சிரிப்புடன் வசீகரமாக இருந்தான். தனது சொந்தகிராமத்தில் நண்பர்கள் தன்னை பூட்டுத்திருடன் என்று பட்டப்பெயர் வைத்து அழைப்பார்கள் என்று உடைந்த ஆங்கிலத்தில் சொல்லி சிரித்தார்.


எங்கள் அலுவலகத்தில் வருடந்தோறும் ஏதாவதொரு தொழில்நுட்ப மாநாடு நடக்கும். உலகெங்கும் இருக்கும் தலைச்சிறந்த கணினி தொழில்நுட்ப ஆட்கள் ஒரு இடத்தில் ஒன்றாக கூடுவோம். அங்கு அவர்களது அனுபவங்களை புதிய தொழில்நுட்பங்களை விவாதிப்பார்கள். அந்த வருட மாநாடு ஏப்ரல் மாதத்தில் சென்னை தாஜ் ஹோட்டலில் நடந்தது. ஐபிஎம் நிறுவனத்தில் பணியாற்றும் பலர் வந்திருந்து ஐபிஎம் நிறுவன மென்பொருள் தயாரிப்புகளை சந்தைப்படுத்திக் கொண்டிருந்தார்கள். மூன்று நாட்கள் நடந்த மாநாட்டில் இரண்டாம் நாள் மாநாட்டில் நிக்கி செள வந்திருந்து மென்பொருள் பாதுகாப்பு பரிசோதனை (Software Security Testing) என்ற தலைப்பில் உரையாற்றினார். 

அன்று ஐந்து பேர் மாநாட்டில் பேசினார்கள். ஆனால் நிக்கி செளதான் அங்கு எல்லாருக்கும் ஹீரோ. அவரது பேச்சின்போது நாங்கள் அனைவரும் ஏதோ மந்திரத்துக்கு கட்டுப்பட்டது போல அமர்ந்திருந்தோம்.நிக்கி செள ஒரு எத்திக்கல் ஹாக்கர். அதாவது மின்னஞ்சல்களை உடைப்பது,பாஸ்வேர்டு திருடுவது, எங்கெல்லாம் பாதுகாப்பு சரியில்லையோ அதை கண்டுபிடிப்பது , பின்பு அந்த பாதுகாப்பு குறைபாடுகளை அறிக்கை தயார் செய்து மென்பொருள் தயாரிக்கும் நிறுவனங்களிடம் கொடுப்பது. மென்பொருள் நிறுவனங்கள் உடனே தங்களிடம் இருக்கும் ஓட்டை,உடைசல்களை சரிசெய்துக்கொள்வார்கள். நிழல் உலக தாதாக்கள் போல இருக்கும் இவர்களை போன்ற ஆட்களை பெரும்பாலும் நிறுவனங்கள் வெளியில் சொல்லாது. காரணம் அவர்கள் பாதுகாப்பின் குறைபாடுகள் வெளியில் தெரிந்துவிடும். போட்டி நிறுவங்கள் இது போன்ற ஆட்களை பணத்தை காட்டி வாங்கி விடுவார்கள்.

3 Iron. கொரிய மொழியில் வெளியான ஒரு திரைப்படம் நீங்கள் பார்த்திருக்கலாம். கிம்கிடக் இயக்கியது. .அதில் வரும் கதாநாயகன் பூட்டிய வீடுகளாக பார்த்து அங்கு செல்வான். பூட்டை உடைப்பான். வீட்டின் உரிமையாளர் அநேகமாக வெளியூர் சென்றிருப்பார். இவன் வீட்டுக்குள் செல்வான். உரிமையாளர் வரும்வரை அந்த வீடு இவனுடையது. அந்த வீட்டினுள் சமைத்து சாப்பிடுவான். டிவி பார்ப்பான். தூங்குவான். துணி துவைப்பான். வீட்டை பெருக்குவான். பழுதான பொருட்களை சரி செய்வான். அந்த வீட்டின் உரிமையாளர் வருவதற்குள் வீட்டை விட்டு வெளியே சென்று விடுவான். ஆனால் ஒரு பொருளை கூட திருடிக்கொண்டு செல்ல மாட்டான். வீட்டின் உரிமையாளர் அங்கு வந்து பார்க்கும்போது அப்படி ஒரு நாள் அங்கு வந்து போனதற்கான அடையாளம் கூட இருக்காது.        

நிக்கி செளவின் நண்பர்கள் அந்த படத்தின் கதாநாயகனுக்கு பூட்டுத்திருடன் என்று செல்லமாக பெயர் வைத்து அழைப்பார்களாம். அதே பெயரையே நிக்கி செளவுக்கும் வைத்து விட்டார்கள். அது போன்றுதான் இந்த எதிக்கல் ஹாக்கர் என்று அழைக்கப்படுபவர்கள். நிக்கி செள உலகின் டாப் டென் ஹாக்கர்களில் ஒருத்தன். உண்மையில் அவன் ஐபிஎம்மில் வேலை செய்யவில்லை. அவன் ஒரு ப்ரீலான்சர். எந்த நிறுவனம் பணம் தருகின்றதோ அந்த நிறுவனத்தின் மின்னஞ்சல் செர்வர்களின், இணைய தளங்களின் பாதுகாப்பு அம்சங்களை சரிபார்த்து வேறு யாரும் ரகசியங்களை திருடாமல் பாதுகாப்பு அம்சங்களை பலபடுத்தி தருவது அவன் வேலை

செமினார் முடித்த களைப்புடன் இருந்த நிக்கி செளவுடன் அன்று அதிகம் பேச முடியவில்லை. எனது மின்னஞ்சல் முகவரியையும் ,தொலைபேசி எண்ணையும் வாங்கி வைத்துக்கொண்டார். மறுநாள் நேரம் இருந்தால் சந்திப்பதாக சொன்னார். மறுநாள் அவரே எனக்கு போன் செய்தார். அவரது பயணத்தில் ஒரு சின்ன மாறுதல் இருந்ததால் என்னை சந்திக்க விருப்பம் தெரிவித்தார்.

மறுநாள் தாஜ் ஹோட்டலில் நாங்கள் சந்தித்தபோது நிறைய பேசினோம். அவருடன் உரையாடியதிலிருந்து அவர் கிழக்கு சைனாவில் ஏதோவொரு குக்கிராமத்தில் பிறந்தவர் என்றும் ஹாங்காங்கில் கணிப்பொறிப் படிப்பை முடித்தவர் என்றும் இரண்டு ஆண்டுகள் முன்பு அவர் காதலி அவரை விவாகரத்து செய்து விட்டு போய் விட்டார் என்பது வரைக்கும் தெரிந்தது. நிக்கி செளவுக்கு சின்ன வயதிலிருந்தே புதிர்களை விடுவிப்பதில் மிகுந்த ஆர்வம் இருந்ததாம். பள்ளிக்கூடங்களில் நடந்த பல புதிர் அவிழ்ப்பு போட்டிகளில் கலந்துக்கொண்டு பரிசும் வாங்கியுள்ளாராம். கல்லூரி செஸ் விளையாட்டில் சாம்பியன்ஷிப்பாம். மனித மனம் அதன் விநோதம் பற்றி அறிந்துக்கொள்ளும் சைக்கியாரிஸ்ட்டாக ஆகவேண்டுமென்பது அவரது கனவாக இருந்துள்ளது. ஆனால் தவறி போய் எப்படியோ கணிப்பொறித் துறைக்கு வந்துவிட்டதாக சொன்னார். ஆனாலும் இந்த ஹாக்கர் வேலையை நான் மிகவும் நேசிக்கின்றேன். கிட்டத்தட்ட இதுவும் ஒரு சைக்கியாரிஸ்ட் வேலை போன்றுதான் என்றார் .

நான் ஆச்சர்யமாக அவரை பார்த்தேன்.

“முதலில் விளையாட்டாக அடுத்தவர்களது மின்னஞ்சல் பாஸ்வேர்டை திருடுவதில் ஆரம்பித்தேன். பிறகு ஒருகட்டத்தில் அதில் நிபுணத்துவம் வந்து விட்டது. என்னால் சொடக்கு போடும் நேரத்தில் ஒரு மின்னஞ்சலை திருடி அவர்களது ரகசியங்களை பார்க்க முடியும். இதுவரை ஒரு லட்சம் மின்னஞ்சல்களை உடைத்திருப்பேன் என்றார்.எத்தனையோ பாதுகாப்பு பூட்டுகள் மிகுந்த இணைய தளங்களை ஒரு நிமிடத்தில் உடைத்துள்ளேன்” என்றார்.

“ஆனால் ஒருமுறை கூட நான் மற்றவர்களது ரகசியங்களை வெளிப்படுத்தியதில்லை. எதிக்கல் ஹேக்கர் இல்லையா?” என்று சொல்லி சிரித்தார்.

“இது வரை எது மாதிரியான தளங்களை உடைத்துள்ளீர்கள்?” என்றேன்.

ஒரு பிரபல வங்கியின் பெயரை சொன்னார். பிறகு ஒரு இராணுவ வெப்சைட்டின் பெயரை சொன்னார். ஒரு மருத்துவமனையின் பெயரை குறிப்பிட்டார். ஒரு புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனத்தின் பெயரை சொன்னார் அவர் அடுக்கிக்கொண்டே போக எனக்கு பிரமிப்பாக இருந்தது.

“தனிநபர்களது மின்னஞ்சல்களை உடைத்து பார்த்ததுண்டா?” என்று கேட்டேன்.


“நிறையவே. தனிநபர்கள் மின்னஞ்சல்களில் பெரும்பாலும் செக்ஸ் ஸ்காண்டல் வீடியோக்கள், பெண்கள் அவர்களது காதலர்களோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், நிர்வாண வீடியோக்கள், வங்கி நிதிநிலை அறிக்கைகள் என்று எதெல்லாம் அவர்கள் ரகசியமென்று நினைக்கின்றார்களோ அதெல்லாம் பார்த்துள்ளேன். பொது வாழ்க்கையில் உத்தமர்களாகவும், புனிதர்களாகவும் தங்களை காட்டிக்கொள்ளும் எத்தனையோ பிசினஸ் மேன்கள், அரசியல் தலைவர்கள், மத குருமார்கள் எல்லாருமே தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் எவ்வளவு அழுக்குடன் நிர்வாணமாக நிற்கின்றார்கள் என்று தெரிந்துக்கொள்ள அவர்களது மின்னஞ்சலை உடைத்தால் போதும். உலகப் புகழ்பெற்ற ஒரு பிரபல மதகுருமாரின் மின்னஞ்சலை உடைத்துள்ளேன். அவர் அந்த மடத்தில் இருக்கும் பெண் சீடர் ஒருத்திக்கு காம ரசம் சொட்ட சொட்ட அனுப்பிய கடிதத்தை படித்துள்ளேன். ஒரு கம்யூனிஸ்ட் தலைவரின் மின்னஞ்சலை உடைத்துள்ளேன். அவருக்கு க்யூபாவில் எத்தனை வங்கிகளில் கணக்கு உள்ளது என்ற விவரம் தெரிந்தது. இவ்வளவு ஏன் இந்த வருடம் அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரை செய்யப்பட்ட ஒரு அரசியல் தலைவரின் மின்னஞ்சலை உடைத்துள்ளேன். அவர் தனது சொந்த நாட்டில் எப்படி இனக்கலவரத்தை தூண்டி விடுகின்றார் என்று தெரிந்தது. நான் தெரிந்துக்கொண்ட ரகசியங்களை வைத்து ஒரு போதும் நான் பிளாக் மெயிலோ பணம் பறித்ததோ இல்லை. எனது தொழில் மனிதர்களை பார்த்து ஏ அற்ப மனிதர்களே. இந்த உலகத்தில் ரகசியம் என்று எதுவும் இல்லை. நீங்கள் இந்த உலகத்தில் ரகசியமாக செய்யும் எந்த ஒரு விஷயத்தையும் யாரோ ஒருத்தர் கவனித்துக்கொண்டேதான் இருக்கின்றார் . எனவே ரகசியங்களை பாதுகாக்கவும் என்று அவர்களுக்கு வலியுறுத்துவதுதான்” என்றார்.

எனது தேநீர் கோப்பையில் தேநீரை நிரப்பியபடியே சொன்னார்.

"உன்னிடம் இரண்டு தேர்வுகள் இருக்கின்றன. முதல் தேர்வில் ஒரு திறந்து கிடக்கும் அறை முழுவதும் தங்கம் இருக்கின்றது. அடுத்து பூட்டிய அறையொன்றில் என்ன இருக்கின்றது யாருக்கும் தெரியாது. நீ எதை தேர்வு செய்வாய்? எனது பதிலுக்கு காத்திராமல் அவரே சொன்னார். நான் பூட்டிய அறைகளையே தேர்வு செய்வேன். காரணம் நான் பூட்டுகளை திருடவே விரும்புகின்றேன் . எனக்கு தேவை மனிதர்களின் ரகசியங்கள் அல்ல. நான் அதை விரும்புவனும் இல்லை. எனக்கு தேவை பூட்டுகள்தான். பூட்டுகளின் மீதான வேட்கையே என்னை அதை திறந்து பார்க்க வைக்கின்றது."

தேநீர் குடித்தபடியே ,"Fake ஐடிகளிலிருந்து வரும் நபர்களை உங்களால் கண்டு பிடித்து அவர்களது ரகசியங்களை எடுக்க முடியுமா?" என்றேன். கேட்ட பிறகுதான் அப்படி ஒரு கேள்வியை கேட்டே இருக்கக்கூடாதோ என்று தோன்றியது.

“நானே எனது ஹேக்கிங் ஆய்விற்காக நூற்றுக்கணக்கான Fake ஐடிக்களை உருவாக்கி வைத்துள்ளேன்" என்றார்.

"இணையம் என்று வந்த பிறகு ஒரிஜினல் என்ன போலி என்ன. எல்லாத்தையும் உடைத்து பார்க்க முடியும். எத்தனையோ அரசியல்வாதிகள் ,எழுத்தாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மின்னஞ்சல்கள் வைத்துக்கொண்டு தங்களுக்கு தாங்களே பாராட்டி எழுதிக்கொள்வதை நான் கண்டுபிடித்துள்ளேன். ஒரே நபர் ஆண் பெயரிலும், பெண் பெயரிலும் வந்து தனக்குதானே மின்னஞ்சல் அனுப்பிக்கொள்வதையும் பார்த்துள்ளேன் . அவர்களது பைத்தியக்காரதனத்தை நினைத்து எனக்குள் சிரித்துக் கொள்வேன் . நீங்கள் இணையத்தில் செய்யும் எல்லா செயல்களையும் யாரோ ஒருவர் கவனித்துக்கொண்டுதான் இருக்கின்றார். ஒருவேளை அவருக்கு உங்கள் தகவல்கள் தேவைப்பட்டிருக்காது. அதனால் உங்களை தொந்தரவு செய்யாமல் இருக்கலாம். மற்றபடி ரகசியம் என்று எதுவும் இங்கு இல்லை” என்றார்.


சற்று நேரம் இருவரும் எதுவும் பேசாமல் எங்கள் சிகரெட்டுகளை மவுனமாக புகைத்து கொண்டிருந்தோம்.

"மனிதர்கள் விசித்திரமானவர்கள். கேவலம் ஒரு அக்றினை பொருளை நம்பி தங்கள் ரகசியங்களை ஒப்படைக்கின்றார்கள். ஆனால் சக மனிதர்களோடு உரையாட சிநேகம் கொள்ள நட்பு பாராட்ட தயங்குகின்றார்கள். பிம்பங்களோடு நாள் முழுவதும் கலவிக்கொண்டு திரிகின்றார்கள். எப்படி நேரில் பார்க்கும் ஒரு நடிகையோடு திரையில் தெரியும் நடிகை ஈர்க்கின்றாரோ அது போல சதா சர்வ காலமும் இணைய பிம்பங்களில் மூழ்கி திளைக்கின்றார்கள். எப்படி நார்சிஸஸ் அரசன் தண்ணீரில் விழுந்த தன் பிம்பத்தை பார்த்து தன்னைத்தானே காதலித்து கடைசியில் இறந்து போனானோ அது போல ஒரு நாள் இந்த மனிதர்களும் மடிந்து போவார்கள் பாருங்கள்" என்றார்.


நிக்கி செளவிடமிருந்து எங்களது மென்பொருள் பாதுகாப்பு பரிசோதனைகள் பிராஜக்ட் குறிப்புகள் சிலவற்றின் ஆலோசனைகளையும் சில விளக்க குறுந்தகடுகளையும் பெற்றுக்கொண்டு விடைபெற்றேன்     
 
விடைபெறும்போது அவரிடம், "இணையத்தில் உங்களால உடைக்க முடியாத பூட்டே இல்லையா?" சிரித்தபடியே கேட்டேன்.      

"இந்த உலகத்தில ரகசியம் என்றும் எதுவுமில்லை. எல்லா ரகசியங்களும் ஒரு நாள் வெளிப்பட்டே தீரும். என்னால இன்னமும் திறக்க முடியாத பூட்டு எதுனாச்சும் இருக்குமென்றால் அது மனிதர்களின் இதயம்தான். ஒவ்வொரு இதயத்திற்குள்ளும் ஆயிரம் ஆயிரம் ரகசியங்கள் ஒளிஞ்சுக்கிட்டிருக்கு. என்னால ஒரு போதும் நிஜ வாழ்க்கையில வாழும் மனிதர்களின் இதய பூட்டை திறக்க முடியுமென்று தோன்றவில்லை."
 
இன்று காலையில் நிக்கி செள இறந்து விட்டார் என்ற தகவலை கேட்டதிலிருந்து மனதுக்குள் ஏனோ ஒரு இனம் புரியாத தவிப்பு. வழக்கமா இருபத்தி நாலு மணி நேரமும் இணையத்திலேயே செலவு செய்யும் என்னால் இன்று பேஸ்புக் பக்கம் கூட செல்ல முடியவில்லை .

இந்த உலகின் எத்தனையோ மனிதர்களின் ரகசியங்களை கண்டுபிடித்த மனிதன் சர்வசாதாரணமாக பெயர் தெரியாத தீவொன்றில் படகு விபத்தில் உயிரிழந்து அவன் உடல் கூட கண்டுபிடிக்க முடியாமல் போனதை வாழ்க்கையின் முரண் நகையென்று சொல்லாமல் என்ன சொல்வது? அவன் உயிர் இழந்தது அவனது முன்னால் காதலிக்கு தெரியுமா? கடைசியாக அவன் எந்த மனிதனது இதயப்பூட்டை உடைத்து பார்க்க முயன்றிருப்பான்? ஒருவேளை 3 Iron படத்தில் வரும் கதாநாயகன் போல விர்சுவல் உலகில் கரைந்து போயிருப்பானா? இங்கேயே சுற்றிக்கொண்டு நமக்கே நமக்கு மட்டும் தெரியுமென்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் நமது Fake ஐடிக்களின் பாஸ்வேர்டுகளை உடைத்து நாம் ஒவ்வொருவரும் இணையவெளியில் நிகழ்த்தும் அபத்தங்களை,சண்டைகளை ,ஆபாசங்களை பார்த்து ரசித்துக் கொண்டிருப்பானா? தெரியவில்லை. எதுவுமே பிடிபடவில்லை.

1 comment:

  1. நிக்கி சௌ என்று ஒருவர் இல்லாவிட்டாலும் இதில் உள்ள அந்தரங்கத்தின் மேல் ஈடுபாடுள்ள கருத்துக்கள் மிக்க அருமை. இது போன்ற மனிதர்களை சந்திக்க கிடைக்கும் வாய்ப்பு ஒரு வரப்ரசாதம். இது போன்ற அளப்பறிய திறமைகள் உள்ளவர்கள் மிக குறைந்தநாட்கள் வாழ்கிறார்கள் என்பது மனவேதனை.

    ReplyDelete