Monday, December 2, 2013

எறும்புத் தின்னி


எப்போதாவது

சாலையோரம்

கையிலிருக்கும் காந்தக்குச்சியால்

தரையை துடைத்துக்கொண்டேச் செல்லும்

இரும்பு பொறுக்கியை சந்தித்ததுண்டா



ஓர் எறும்புத்தின்னியின்

பசியுடன் நடக்கும்

அவனைக் கண்டு

பூட்டிலிருந்து சாவிக்கள் உதிர்கிறன



அவனைக் கண்டு

சிறுசிறு ஆணிக்கள் பின்தொடர்கிறன

வீடுகளின் மேற்கூரையிலிருந்து

இரும்புச்சட்டங்கள் விடுபடுகிறன

கொடிக்கம்பங்கள் சாய்ந்து வளைகிறன



இரும்புக்கதவுகளை இறுக தாழிட்டுக் கொள்கிறார்கள்

இருசக்கர வாகனங்களை இறுகப் பிடித்து கொள்கிறார்கள்

இரும்பு பணப்பெட்டிகளை பூட்டி வைக்கிறார்கள்

தொடர் வண்டிகள் மெதுவாக செல்கிறன

தண்டவாளங்கள் நெளிகிறன



அவனைக் கண்டு மனிதர்கள் பயப்படுகிறார்கள்

அவனைக் கண்டு நாய்கள் குரைக்கிறன

அவனைக் கண்டு பறவைகள் பதறி பறக்கிறன

அவனைக் கண்டு கடவுளுக்கு பயம் வருகிறது



ஓர் எறும்புத்தின்னியின்

பசியுடன் நடக்கும்

அவனைக் கண்டு

ஒருக்கணம் உலகம் பதறி

மீண்டும் சுழல ஆரம்பிக்கிறது  

2 comments:

  1. வித்தியாசமான சிந்தனை வரிகள்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்!

    ReplyDelete