Wednesday, May 21, 2014

ஒரு பீரோவின் வரலாறு

மலைகள்.காம் ஐம்பதாவது இதழில் எனது ஒரு பீரோவின் வரலாறு என்ற சிறுகதை வெளியாகியுள்ளது. மலைகள்.காமிற்கு நன்றி      

எங்கள் வீட்டில் ஒரு பழைய மரப்பீரோ இருந்தது. இப்போது அது எங்கள் வீட்டில் இல்லை. மதுரையில் இருக்கும் எனது பெரிய அண்ணனின் வீட்டுக்கு அதை தள்ளிவிட்டாச்சு. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் கடலூரில் வசிக்கும்போது கடிலம் ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக எனது அம்மா அடிக்கடி சொல்வார்கள். இப்போது எனது அம்மாவின் வயது எழுபது. அப்படி வெள்ளப் பெருக்கு வந்த தினத்தன்று எனது தந்தையும், அவரது நண்பர்களும் தங்கள் அலுவலக ஜீப்பை எடுத்துக் கொண்டு கடலூரின் சுற்றுப்பக்க கிராமங்களுக்குச் சென்றார்களாம். எனது அப்பா தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத்துறையில் அலுவலகராக பணியாற்றியதால் இந்த காலரா மருந்து கொடுப்பது, மலேரியா தடுப்பு ஊசி, யானைக்கால் வியாதிகளுக்கு மாத்திரை கொடுப்பது போன்ற வேலைகள் அவருக்கு. வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதி மக்களின் சேரிகளை பார்வையிட சென்றபோது கடிலம் ஆற்றில் பெரிய காட்டு தேக்கு மரம் வந்து ஒதுங்குவதை பார்த்துள்ளார்கள். அந்த காட்டு மரத்தை பற்றி எனது அம்மா, அந்த காலத்து ஆசாமிகள் எல்லாம் விவரிக்கும்போது காது கொடுத்து கேட்க முடியாது. அவதார் திரைப்படத்தில் வரும் நூற்றாண்டு பழமை வாய்ந்த அந்த பெரிய கல்மரம் அளவுக்கு இருக்கும். அவர்கள் சொல்லும் கதையை வைத்து அப்படியே ஒரு வரலாற்று ஆவணப்படம் எடுத்துவிடலாம். அவ்வளவு விவரணைகளோடும், ஏராளமான நுண்ணிய அடுக்குகளுடன் கூடிய தகவல்களுடன் அந்தக் கதை இருக்கும்.

நல்லவேளை நான் அப்போது பிறந்திருக்கவில்லை. பிறந்திருந்தால் அந்த அதீதக்கதைகளை எல்லாம் அப்போதே சுக்குநூறாக உடைத்திருப்பேன். சரி. அடிச்சு விடுறாங்கன்னு கதை கேட்பேன். அதெப்படி கோடாலியால் கூட பிளக்க முடியாத ரம்பத்தால் கூட அறுக்க முடியாத மரம் இருக்கும்? அதென்ன மரமா? அல்லது கருங்கல் பாறையா? மரத்தை வெட்ட வெட்ட கோடாலிகள் உடைந்துப் போனதுதான் மிச்சம் என்று எனது அம்மா சொல்வார். என் அம்மா சொல்லித்தான் மரங்களின் வயதை எப்படி கணக்கிடுவது என்று எனக்கு தெரிய வந்தது. மரங்களை குறுக்காக வெட்டினால் வளையங்கள் வருமல்லவா? அந்த வளையங்களின் எண்ணிக்கையை வைத்துதான் மரத்தின் வயதை கணிப்பார்களாம். மாமரம் என்றால் குறைந்த வளையங்களும், ஆலமரம் என்றால் அதிக எண்ணிக்கையிலான வளையங்களும் இருக்குமென்று எனது அம்மா சொல்வார். வளையங்களின் எண்ணிக்கை பெருக பெருக அந்த மரத்துக்கு காற்றுக்கும், புயலுக்கும் தாக்குக்கொடுக்கும் திறன் அதிகரிக்கும். தேக்கு மரம் நூறாண்டுகள் தாண்டியும் வளரும் என்று சொன்னார்கள். சில மரங்கள் ஒவ்வொரு பத்தாண்டுக்கு ஒருமுறை வளையங்களை உருவாக்குமென்றும், சில மரங்கள் ஒவ்வொரு ஐம்பதாண்டுகளுக்கு ஒருமுறை வளையங்களை உருவாக்குமென்றும் சொன்னார். அப்படியென்றால் ஐநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த மரங்கள் கூட இருக்குமல்லவா? கேட்டேன். இருக்கலாம். யார் கண்டது? இந்த பீரோ செய்ய எடுத்துட்டு வந்த மரமே நூறாண்டு பழமையானது என்று அம்மா சொன்னார். ஒவ்வொரு மரங்களும் ஒவ்வொருவித பொருட்கள் செய்ய உதவும். பனை மரமென்றால் உத்திரம் அமைக்கும் சட்டங்கள் செய்யவும், மாமரம் என்றால் சின்ன சின்ன நாற்காலி சட்டங்கள் செய்யவும், பலாமரமென்றால் இசைக்கருவிகள் செய்யவும் உதவும். இதெல்லாம் என் அம்மா சொல்லித்தான் தெரியும். ஒருமுறை நாங்கள் திருவண்ணாமலையில் குடியிருந்தபோது எங்கள் வீட்டு கொல்லைப்பக்கம் இருந்த பனைமரத்தில் இடி விழுந்தது. சொன்னால் நம்ப மாட்டீர்கள். மழையிலும் மரம் பற்றிக்கொண்டு எரிந்தது. ஆனால் மாந்தோப்பிலோ, தென்னந்தோப்புகளிலோ இடி விழவில்லை. அது ஏன் பனைமரத்தில் மட்டும் சரியாக இடிவிழுந்தது என்று எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. மற்ற மரங்களை விட பனை மரங்களுக்கு இடியை கடத்தும் தன்மை அதிகம். தென்னையை விட பனையின் வேரில் அதிகம் நீர் நிறைந்திருக்கும். அதனால் இடி வேகமாக இறங்குமென்று சொன்னார்கள். பனை மரம் மின்னலை கடத்தும் கடத்தி என்று பின்னாட்களில் கல்லூரியில் இயற்பியல் வகுப்பெடுத்த ஆசிரியரும் சொன்னார். சரி. அதெல்லாம் போகட்டும் கடிலம் ஆற்றில் கண்டெடுத்த மரத்தின் கதைக்கு வருகிறேன்.

அந்த மரத்தை ஐம்பது ஆட்கள் இரண்டு மூன்று குழுக்களாக பிரிந்து மூன்று நாட்கள் கஷ்டப்பட்டு கரைக்கு இழுத்து வந்தார்களாம். கயிற்றை நம்ப முடியாது. காட்டுக்கொடிகள் உறுதியானவை என்பதால் தடிமனான கயிறுகளோடு காட்டுக்கொடிகளையும் பிணைத்து வெள்ளத்திலிருந்து நாணல் புதர்கள் நிறைந்த கரைக்கு முதலில் இழுத்து வந்துள்ளார்கள். பிறகு கரையில் இருந்த பெரிய மரங்கள், பாறைகளோடு கயிற்றின் இன்னொரு நுனியை கட்டி வைத்துள்ளார்கள். மூன்றாம் நாள் ஆற்றில் வெள்ளம் குறைந்தபோது கூலிக்கு யானை கொடுக்கும் ஆட்களை தேடியுள்ளார்கள். ஆனால் மழைக்காலம் என்பதால் பெரும்பாலான யானைப்பாகன்கள் வரவில்லையாம். ஒருவழியாக எனது அப்பாவின் அலுவலகத்தில் வேலைபார்க்கும் கொசுமருந்து அடிக்கும் ஆட்கள் வழியாக அவர்கள் வசிக்கும் குப்பத்தில் இருந்து ஐம்பது பேர்களை திரட்டி ஆற்றங்கரைக்கு அழைத்து வந்து அந்த காட்டு மரத்தை கரையேற்றியுள்ளார்கள். பிறகு அந்த மரத்தை அரசு அதிகாரிகள் எல்லாம் சேர்ந்து வெட்டி ஆளாளுக்கு பங்கு போட்டுக் கொண்டார்களாம். பெரிய துண்டுகளை எல்லாம் மேலதிகாரிகளும், கிளைத்துண்டுகளையெல்லாம் கீழ்நிலை அதிகாரிகளும் பிரித்துக்கொண்டார்களாம். அப்படி பிரித்ததில் ஒரு பெரிய துண்டு எங்க வீட்டுக்கு வந்தது. அந்த மரத்துண்டை வந்து பார்த்த உள்ளூர் ஆசாரிங்க வியந்து போய் தங்களால் இந்த மரத்தை செதுக்கி பீரோ செய்ய முடியும். ஆனால் தங்களுக்கு வேலைப்பாடுகள் செய்ய அவ்வளவாக வராது என்று கைவிரித்துவிட்டார்கள். பிறகு அப்பாவின் நண்பருக்கு தெரிந்த இரண்டு ஆசாரிங்க சிதம்பரத்திலிருந்து வந்தார்களாம். மரத்துண்டை ஒரு லாரியில் ஏற்றி சிதம்பரம் கொண்டுச்சென்று அங்கு அவர்கள் தச்சுப்பட்டறையில் வைத்து பீரோவுக்கான வேலைப்பாடுகளை செய்தார்களாம். பீரோவின் தலைப்பகுதியில் இரண்டுப்பக்கங்களிலும் இருந்து இரண்டு அன்னப்பறவைகள் எதிரெதிரே இடமும்,வலமும் அமர்ந்து முத்தமிட்டுக்கொள்வது வடிவமைப்பு இருக்கும். மயில் தரையில் அமர்ந்திருக்கும்போது அதன் நீண்ட தோகை மண்ணில் படிந்திருப்பது போன்றதொரு வடிவமைப்பை பீரோவின் கால்பகுதியில் செதுக்கியிருந்தார்கள். எனக்கு கால்பகுதியை விட தலைப்பகுதியைத்தான் அதிகம் பிடிக்கும். அந்த அன்னப்பறவைகள் முத்தமிட்டுக்கொள்வது சற்று கிளர்ச்சியை தூண்டுவது போன்று கூட இருக்கும். இப்போதிருக்கும் இரும்பு பீரோக்கள் போல இரண்டு கதவுகள் இருக்காது. ஒரே கதவுதான். இரண்டு கதவுகள் இருந்தால் மரத்தின் உறுதி போய்விடுமென்று யாரோ அனுபவம் வாய்ந்த ஆசாரி தச்சுப்பட்டறையில் சொன்னாராம். கதவின் இடுக்கு வழியாக காற்றின் ஈரப்பதம் நுழைந்து நாளடைவில் கதவின் இரண்டு பக்கங்களிலும் தேய்மானம் பூச்சி அரிப்பு வந்துவிடுமென்று ஆலோசனை சொன்னாராம். அப்பா சரியென்று ஒரே கதவை வைக்க சொல்லிவிட்டார். திண்டுக்கல்லிலிருந்து வரவழைக்கப்பட்ட பித்தளைப்பூட்டை கதவின் முனையில் பொருத்தியிருந்தார்கள். நாங்கள் இதுவரை குடியிருந்த எத்தனையோ வீடுகளில் இந்த பிரச்சினையை சந்தித்துள்ளோம். மழைக்காலம் வந்துவிட்டால் மரக்கதவு, ஜன்னல்களில் ஈரம் இறங்கி உப்பி விடும். கதவுகளை, ஜன்னல்களை தாழிட சிரமமாக இருக்கும். சரியாக தாழ்ப்பாளில் பொருந்தாது. ஆனால் இந்த பீரோவின் கதவை மட்டும் எப்படி நாற்பது வருடங்களாக எந்த சிறுப்பிரச்சினையும் இல்லாமல் தாழிட முடிகிறது என்று வியப்பாக இருக்கும்.

அந்த பீரோ செய்துவிட்டு மிச்சமிருந்த துண்டில் ஒரு கட்டிலும் செய்தார்கள். கட்டில் கூட அவ்வளவு விசேஷம் இல்லை. அந்த பீரோதான் என்னை எப்போதும் கவர்ந்திழுக்கும். எட்டடி உயரமும் ஐந்தடி கொஞ்சம் குறைவான அகலமும் இருந்ததா என்று சரியாக நினைவில்லை. பள்ளிக்கூட நாட்களில் தீபாவளி நேரம் நெருங்க நெருங்க காசு சேர்த்து வாங்கும் வெடிகளை எல்லாம் அந்த பீரோவில்தான் ஒளித்து வைப்போம். சிறுவர்களாகிய எங்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசிய அறைகளை கொண்டது. வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் கொடுக்கும் ரூபாய்த்தாள்களை நானும், எனது அண்ணன்களும் அந்த பீரோவில்தான் ஒளித்து வைப்போம். நான் வைப்பதை அவனாலும், அவன் வைப்பதை என்னாலும் ஒருபோதும் கண்டுபிடிக்க முடிந்ததில்லை. இந்த பீரோ மரமாக இருந்தபோது இதில் எத்தனை குருவிகள் கூடுக்கட்டியிருக்குமென்று ஒருநாள் நினைத்துக்கொண்டேன். எத்தனையோ பாம்புகளும், பல்லிகளும், சிறுத்தைகளும் இந்த மரத்தில்தானே ஊர்ந்துச்சென்றிருக்கும். அப்போதெல்லாம் இந்த மரத்தில் வசித்த பறவைகள் தங்கள் முட்டைகளை எதிரிகளிடமிருந்து பாதுகாக்க இப்படித்தானே ரகசிய பொந்துகளை உருவாக்கி அதில் மறைத்து வைத்திருக்குமென்று தோன்றியது. அப்பாவிற்கு அரசாங்க வேலை என்பதால் அடிக்கடி இடமாற்றம் செய்வார்கள். ஊர் ஊராக பெட்டியை கட்டிக் கொண்டு ஓடுவோம். நான் பிறந்த பிறகும் அப்படிதான். ஒவ்வொரு வாடகை வீடு மாறும்போதும் அந்த மரப்பீரோவை தூக்க ஐந்து பேர் வேண்டும். பொணக்கணம் என்பார்களே. அது இதுதான். இந்த பீரோவோ இந்தக்கணம் இருக்கே. அந்த பெருமரம் எப்படியிருந்திருக்கும் என்று யோசிக்கவே மலைப்பாக இருக்கும்.

அப்பா, அம்மாவின் சொந்த ஊர் கும்பகோணம். நான் பிறந்தது கூட கும்பகோணத்தில்தான். அப்பாவை கடலூரிலிருந்து கும்பகோணத்துக்கு பணி மாற்றம் செய்ததில் அம்மாவுக்குதான் சந்தோஷம். ஊர் ஊராக அலைந்துக்கொண்டிருக்காமல் கும்பகோணத்துக்கே வந்தாச்சே. வந்து இரண்டாவது வருடம் நான் பிறந்தேன். மருத்துவமனையிலிருந்து ரிக்சா பிடித்து வீட்டுக்கு வந்து தொட்டிக்கட்டி என்னை போடும்போது கண்டிப்பாக அந்த பீரோ இதேதுடா புதுவரவு வந்திருக்கு என்று என்னை ஆச்சர்யத்துடன் பார்த்திருக்கும். நானும் அந்த பளபளவென்று மின்னும் பீரோவை பார்த்து சிரித்திருக்கலாம். இதென்ன எல்லாரும் நகர்கிறார்கள். இது மட்டும் நகராமல் இருக்கே என்னவென்று எனது பாஷையில் கேட்க எல்லாரும் குழப்பத்தோடு எனது தொட்டிலுக்கு மேலே கிலுகிலுப்பையை ஆட்டி எனக்கு விளையாட்டு காட்டியிருக்கலாம். நினைவில்லை. ஆனால் முதல்முதலில் என் கையில் கிடைத்த ஸ்டிக்கரை கொண்டு வந்து அந்த பீரோவில் ஒட்டியது இன்னமும் நினைவில் உள்ளது. ஒருநாள் பாய் கடையில் பபிள்கம் வாங்கும்போது பாய் இலவசமாக ஒரு ஸ்டிக்கர் கொடுத்தார். அந்த ஸ்டிக்கரில் இருந்த உருவத்தை பார்த்து எனது பள்ளிக்கூட நண்பன் பால்ராஜ் இதுதான் சூப்பர் ஸ்டார் ரஜினி என்றான். அப்போதெல்லாம் எங்கள் தெருவில் ஏன் எங்கள் ஊரிலேயே தொலைக்காட்சிகள் அவ்வளவாக இல்லை. சினிமா திரையரங்குதான் ஒரே பொழுதுபோக்கு. பிறகு நான் அம்மாவுடன் சினிமா செல்லும்போதெல்லாம் ரஜினி நடித்த திரைப்படத்துக்கு அழைத்துச்செல்ல அடம்பிடிக்க ஆரம்பித்தேன். பில்லா, பொல்லாதவன், முரட்டுக்காளை என்று நிறைய ரஜினி படங்கள் அடிக்கடி வந்து எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தின. பெட்டிக்கடைகளில் எல்லாம் மிட்டாய் வாங்கினால் ரஜினி ஸ்டிக்கர்கள் இலவசமாக கிடைக்கும். அல்லது பத்துகாசு கொடுத்தால் ஐந்து ஸ்டிக்கர்கள் விற்றார்கள். அதை எல்லாம் வாங்கி வந்து பீரோவில் ஒட்டுவேன். அதுக்காக பலமுறை வீட்டில் அடிவாங்கியுள்ளேன். ஸ்டிக்கரை கிழித்தெடுக்கும்போது பீரோவில் நகக்கீறல்கள் பட்டு தேய்வு ஏற்பட்டது. அதை தவிர்க்க ஸ்டிக்கரை கையால் கிழித்துவிட்டு ஈரத்துணியை வைத்து தேய்த்து அழுத்தினால் ஸ்டிக்கர் பிசிறுகள் மறைந்துவிடும். ஆனால் அந்த இடம் மட்டும் கரை படிந்தது போல அசிங்கமாக இருக்கும். ஒருநாள் போகிப்பண்டிகை என்று நினைக்கிறேன். ஒரு ஆசாரி வந்தார். பீரோவை நான்கைந்து பேர்கள் வீட்டுக்கு வெளியே தூக்கிச்சென்று வைத்தார்கள். அந்த ஆசாரி கையில் இருந்த உப்புத்தாளால் பீரோ எங்கும் தேய்த்தார். இப்போது பீரோவின் பளபளப்பு சுத்தமாக இல்லை. பிறகு நான் பள்ளிக்கூடம் சென்று வந்து பார்த்தபிறகு அந்த பீரோ பளபளவென்று முன்னைக்காட்டிலும் மின்னிக்கொண்டிருந்தது. அது பெயின்ட் இல்லை. வார்னிஷ் என்று பால்ராஜ் சொன்னான். அவங்க வீட்டு பீரோவில் கூட அப்படித்தான் நான்கைந்து வருடங்களுக்கு ஒருமுறை வார்னிஷ் அடிப்பார்களாம். ஆனால் எனக்கு விபரம் தெரிந்து இரண்டு முறை மட்டுமே பீரோவுக்கு வார்னிஷ் அடித்தோம். தேக்கு மரங்களுக்கு இயல்பிலேயே எண்ணெய் கசிந்து பளபளப்பு விடும் தன்மை உண்டு. அதனால்தான் பீரோ இப்படி பளபளப்பாக இருக்கிறது என்று அப்பா சொல்வார்.

எனது அப்பா இறந்தபிறகும் ஒவ்வொரு வீடாக அந்த பீரோவை தூக்கிக் கொண்டு சுற்றியலைந்தோம். கட்டிலை தூக்குவதில் எங்களுக்கு சிரமம் இருக்கவில்லை. கட்டில் சட்டங்களை கழற்றி மாட்டிவிடும் வசதி இருந்தது. நான்கு பெரிய நீண்ட எக்கு ஆணிகளை மட்டும் ஸ்பேனர் வைத்து கழற்றி விட்டால் போதும். நான்கு கால்களும் இரண்டிரண்டாக வந்துவிடும். நான்கு பெரிய நீள் பக்கவாட்டு சட்டங்களையும், குறுக்குவாட்டு சட்டங்களையும் இரண்டு ஆட்கள் தாராளமாக தூக்கி சுமந்து நடந்து செல்லலாம். ஆனால் அந்த பீரோதான் தொல்லை செய்யும். கட்டிலை எனக்கு பிடிக்காமல் போனதுக்கு இன்னொரு காரணமும் உள்ளது. எங்க பாட்டி மரணித்தபோது அந்த கட்டிலில்தான் படுத்திருந்தார். அப்பாவும் பக்கவாதம் வந்து ஆறுமாதங்கள் அந்த கட்டிலில்தான் கிடந்தார். படுக்கும் மெல்லிய அட்டை மூத்திரம் இறங்கி ஊறிப்போய் சொதசொதவென்று இருக்கும். அதெல்லாம் பலவருடங்கள் முன்பு நடந்த கதை.

அப்பா இறந்தபிறகு எனது கல்லூரி மேற்படிப்பும் முடிய நாங்கள் சென்னைக்கு வந்துவிட்டோம். இப்போது சென்னையில் வளசரவாக்கத்தில் குடியிருக்கின்றோம். இத்தனை வருடங்களில் அப்பாவின் சாம்பாத்தியத்தில் சொந்தமாக வீடு வாங்கியதில்லை. எல்லாமே வாடகை வீடுகள்தான். அப்பாவுக்கு தெரிந்த ஆட்கள் ஒருமுறை காட்டில் இருந்து மலைத்தேன் எடுத்து வந்து தந்தார்கள். பிறகு சந்தனக்கட்டை வந்தது. கோடைக்காலங்களில் அதைத்தான் வேர்க்குருவுக்கு அரைத்து தேய்ப்போம். பிறகு காட்டுப்பலாக்கள் வரும். அப்பா அரசு அதிகாரியாக இருந்ததால் இப்படி எத்தனையோ பொருட்கள் வந்துக்கொண்டே இருக்கும். ஆனா கடைசி வரை அவர் ஏன் சொந்த வீடு எதுவும் வாங்கியதில்லை என்று நினைத்தால் எனக்கு அவர் மீது கோபம்தான் வரும். நாங்கள் இதுவரை எத்தனையோ முறை வீடுகள் மாறியுள்ளோம். ஒவ்வொரு முறையும் வீடு மாறும்போதும் அந்த பீரோவை தூக்கிக்கொண்டு அலைந்தோம். முன்ன போல இப்ப யாருங்க மரப்பீரோ வச்சிருக்காங்க? இப்ப எல்லாம் ஸ்டீல் பீரோ வந்தாச்சு. தூக்கிப்போட்டு வேற வாங்குங்க என்று தெரிந்தவர்கள் சொன்னார்கள். அந்த பீரோவை பார்க்கும்போதெல்லாம் எனக்கும் எங்க அம்மாவுக்கும் பெரிய சண்டையே நடக்கும்.

“உனக்கு இதோட வரலாறு தெரியாது” என்பார்.

“என்ன பெரிய நெப்போலியன் வரலாறு? திருட்டுத்தனமா ஆத்துல இறங்கி கவர்மென்ட்டுக்கு தெரியாம காட்டுமரத்தை அமுக்கிட்டு வந்த ஆளுதானே?” என்று திட்டுவேன்.

வாடகைக்கு வீடு மாறுவது போன்ற கொடுமையான விஷயங்கள் எதுவும் இல்லை. சென்னைக்கு நான் வந்த புதிதில் இங்கு சேரிகளிலும், கூவம் கரையோரங்களிலும் வசிக்கும் சிலரை பார்த்துள்ளேன். அவர்களிடம் மரச்சாமான்கள் எதுவும் இருக்காது. மிஞ்சிப்போனால் ஐந்தாவது படிக்கும் பையன் கூட தூக்கி சுமக்குமளவுக்கு எடை கொண்ட சின்ன மர நாற்காலி இருக்கும். அவ்வளவுதான். அவர்களிடம் இருப்பதெல்லாம் பிளாஸ்டிக் குடங்கள், எளிதில் மடக்கக்கூடிய இரும்பு கட்டில்கள், தகர பீரோக்கள். சென்னையில் வசிக்கும் சேரி மக்கள் தவிர பெரும்பாலான நடுத்தர மக்கள் கூட இப்படி தங்களை சுற்றியுள்ள எல்லா விஷயங்களையும் எளிமையாகவே வைத்துள்ளார்கள் என்று நினைக்கும்போது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. தலைக்கு மேலே பறக்கும் போர் விமானங்கள் சத்தம் கேட்டதும் குடுகுடுவென்று கைக்கு கிடைத்த பொருட்களுடன் ஓடிச்சென்று பதுங்குகுழிக்குள் மறைந்துக்கொள்ளும் மனித எலிகள் போலவே சென்னை மக்கள் தெரிந்தார்கள். புதுவீடுகளுக்கு குடிமாறுபவர்களை சென்னையில் வீதிக்களில் பார்த்துள்ளேன். சேரிகளில் வசிப்பவர்கள் என்றால் அதிகபட்சம் ஒரு மீன்பாடி வண்டியோ, தள்ளுவண்டியோ போதும். நடுத்தர மக்கள் வீட்டை காலி செய்யும்போது மினிலாரி போதும். ஆனால் எங்கள் வீட்டுக்கு ஒரு லாரி தேவைப்படும். தேவையற்ற தட்டுமுட்டு சாமான்கள். குடைத்துணி இல்லாத வெறும் குடைக்காம்புகள், எப்போதோ நாங்கள் விளையாடிய மரப்பாச்சி பொம்மைகள். (அவையெல்லாம் எங்கள் குழந்தைகள் வைத்து விளையாட அம்மா பத்திரமாக எடுத்து வைத்திருந்தாள்) இதெல்லாம் போதவில்லை என்று அந்த பொணக்கனம் இருக்கும் பீரோ. உண்மையில் சவத்தை சுமப்பது போலவே நாங்கள் ஒவ்வொரு முறையும் அந்த பீரோவை சுமந்துக்கொண்டு அலைந்தோம். நகரத்தில் சுமை தூக்கும் கூலியாட்கள் கிடைப்பதே அபூர்வம். அதுவும் அவர்கள் என்ன கிராமத்து ஆட்கள் போல நல்ல ஆஜானுபாகுவாகவா உள்ளார்கள்?

சென்னை வந்த இந்த பதினைந்து வருடங்களில் வளசரவாக்கத்திலேயே நாங்கள் ஐந்து முறை வீடு மாறிவிட்டோம். சென்னையில் இன்னொரு விநோதமான பழக்கம் உள்ளது. மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே வீட்டில் குடியிருந்தால் அந்த வீட்டின் உரிமையாளர் அங்கு குடியிருப்பவர்களுக்கு இல்லாத தொல்லைகள் கொடுப்பார். ஐந்து வருடங்களுக்கு மேல் ஒரே வீட்டில் குடியிருந்தால் அந்த வீட்டில் குடியிருப்பவரே வீட்டின் உரிமையாளர் ஆகி விடுவார் என்று பாழப்போன நம்பிக்கையை யாரோ தவறாக எப்போதோ எங்கோ சொல்லியிருந்தார்கள். அதை நம்பிக்கொண்டுதான் சென்னையில் இருக்கும் வாடகைக்கு வீடு விடும் மனிதர்கள் அப்படி நடந்துக்கொள்கின்றார்கள்.

ஒருமுறை மதுரையிலிருந்து எனது பெரிய அண்ணன் வந்திருந்தார். அவர் முப்பது வருடங்களுக்கு முன்பு மதுரையில் செட்டில் ஆனவர். மதுரையில் சொந்த வீடு வைத்துள்ளார். அவரிடம் எனது கஷ்டத்தை சொல்ல அவர் இந்த பீரோவை நான் எடுத்துட்டு போறேன் என்றார். அம்மாவுக்கு அந்த பீரோவை அண்ணனிடம் கொடுக்க விருப்பமில்லை. நான்தான் அவரை திட்டி சம்மதிக்க வைத்தேன் அப்படியே அதே மரத்துல செஞ்ச இந்த கட்டிலையும் தூக்கிட்டு போங்க என்று சொன்னேன். எனக்கு அந்த கட்டிலை பார்க்கும்போதெல்லாம் இறுதிவரை ஒரு சொந்த வீடு கூட வாங்க முடியாமல் கடைசிக்காலத்தில் பக்கவாதம் வந்து கட்டிலில் படுத்து இறந்துப்போன அப்பாவும், அவரது மேலுள்ள எனது வெறுப்பும் நினைவுக்கு வரும்.

போரூரில் அண்ணனுக்கு தெரிந்த லாரி சர்வீஸ் ஆட்கள் இருந்தார்கள். அவர்களிடம் சொன்னோம். போரூரில், வளசரவாக்கத்தில், கே.கே.நகரில் எங்குமே சுமை தூக்கும் ஆட்கள் இல்லை. ஒருவழியாக லாரி சர்வீஸ் ஆட்கள் எங்கேயோ அலைந்து தேடி மூன்று பேர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். வீட்டுக்கு வந்தவர்களிடம்

நான் எட்டு ஆட்கள் இல்ல கேட்டேன் என்று சொன்னேன்.

எட்டா? இந்த பீரோவை தூக்க மூன்று பேர் போதுமே. நீங்க வேடிக்கை மட்டும் பாருங்க என்று அலட்சியமாக சொன்னார்கள். நான் எதுவும் பேசாமல் சட்டையை அணிந்துக்கொண்டு தெருமுனையில் இருந்த கடைக்கு சென்று சிகரெட் பிடித்து வீட்டுக்கு திரும்பி வரும்போது அந்த ஆட்கள் மிகவும் சோர்ந்துபோய் வெயில் காலத்தில் நாக்கு வெளியே தள்ளி மூச்சு வாங்கும் நாய் போல தெரிந்தார்கள். எனக்கு சிரிப்பு வந்தது. அதென்ன மரமா? பாறையில் செய்த கல் பீரோ ஆச்சே. பிறகு எப்படியோ கூடுதலாக ஆட்களை அழைத்து வந்து பீரோவை லாரியில் ஏற்றி மதுரைக்கு அனுப்பி வைத்தோம். வீட்டுக்குள் நுழைந்தபோது பீரோ, கட்டில் இருந்த இடம் வெறுமையாக இருந்தது. நிம்மதியாக இருந்தாலும் மனதை ஏதோ செய்தது. பிறகு இரண்டு நாட்கள் கழித்து ஊரிலிருந்து எனது அண்ணி போன் செய்தார்கள். அம்மாவிடம் பேசிவிட்டு என்னிடம் பேசினார்கள்.

“என்ன அண்ணி. அந்த பீரோ நல்லபடியா வந்துச்சா? அதை வீட்டுக்குள்ள எடுத்துட்டு வர்றதுக்குள்ள உயிர் போயிருக்குமே?” என்று சிரித்தபடியே கேட்டேன்.

“நீங்க எல்லாம் சுத்த வேஸ்ட்டுடா. ஒரு மரப்பீரோவை தூக்க முடியுதா? ஒருத்தன் வந்தான். உங்க அண்ணனுக்கு தெரிந்த நண்பர் அவனை எங்கேயோ ஆவணிவீதியிலிருந்து அழைத்து வந்திருந்தார். அவன் அந்த பீரோவை அப்படியே முதுகில தூக்கிட்டு வந்து வீட்டுக்குள்ள வச்சுட்டு போயிட்டான்”

“என்னது? பீரோவை முதுகிலேயே தூக்கிட்டு வந்தானா?

“ஆமா. ஒரே ஆள். பார்க்க கடோத்கஜன் மாதிரி இருந்தான். அவன் தனியாத்தான் வந்தான். அவன்தான் தனியாவே பீரோவை முதுகில தூக்கிட்டு வந்தான்”

“சான்ஸே இல்லை அண்ணி. அதெப்படி அந்த பீரோவை ஒரு தனி ஆள் லாரியில இருந்து இறக்க முடியும்?”

“நான்கைந்து பேர்கள்தான் இறக்கினாங்க. ஆனா அவன் தனியாகத்தான் முதுகில தூக்கிட்டு வந்தான்”

“ஐயோ..கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க. எனக்கு ஒண்ணும் புரியலை”

எனது அண்ணி சிரித்தபடியே, ‘அது பெரிய கதை. லாரி சர்வீஸ் ஆளுங்க பக்கத்துக்கு தெருவிலேயே பீரோவை இறக்கி வச்சுட்டாங்க. தெரு குறுகலா இருந்ததால வீட்டு வாசல் லாரிய எடுத்துட்டு வரமுடியாதுன்னு சொல்லிட்டாங்க. தெருமுனையிலேயே லாரியை நிறுத்திட்டாங்க. டிரைவரும், கிளீனரும் லாரியோட பின் கதவை திறந்து ஒரு பெரிய பலகையை தரைக்கும்,லாரியின் உடம்புக்கும் இடையே சரிவாக வச்சாங்க. அப்புறம் பீரோவோட அடிப்பாகத்துல கால்மிதிக்கற துணியை வச்சாங்க. லாரி மேல இருந்து மூன்று ஆட்கள் பீரோவை மெதுவா பலகையில சரிச்சுட்டே வர கீழேயிருந்து மூன்று பேர் பிடிச்சு கொஞ்ச கொஞ்சமா இறக்கி வச்சுட்டாங்க. எல்லாருக்கும் வேர்த்து விறுவிறுத்து போச்சு”

அவர் சொன்னதை கேட்டதும் எனக்கு காட்டு யானைகளை லாரியில் ஏற்றிச்சென்று சரணாலயங்களில் இறக்கி விடும் காட்சி நினைவுக்கு வந்தது.

“அப்புறம் என்ன நடந்தது?”

அந்த பீரோவை இறக்கி வச்சுட்டு லாரி சர்வீஸ் ஆளுங்க போயிட்டாங்க. அரைமணிநேரம் கழிச்சு அந்த கடோத்கஜன் ஆள் வந்தான். அவன் கையில் பெரிய தாம்புக்கயிறு வச்சிருந்தான். இன்னொரு கையில போர்வை மாதிரி பெரிய துணி இருந்துச்சு. அவன் சட்டையை கழற்றி வச்சுட்டு அந்த துணியை உடம்பில சுத்திக்கிட்டான். அப்புறம் அந்த தாம்புக்கயிற்றை இரண்டா மடிச்சு சுருக்கு மாதிரி செஞ்சான். அவன் சுருக்கு போட்ட விதமே விநோதமா இருந்துச்சு. ஒரு நொடியில சரசரன்னு கயித்தை இரண்டா மடிச்சு வளையம் போல பின்னி வச்சுட்டான். அது கொக்கி போல இருந்துச்சு. நெல் மூட்டை தூக்குறவங்க கையில வச்சிருக்கும் இரும்பு கொக்கி போலவே அந்த துணி சுருக்கு இருந்துச்சு. அப்புறம் பீரோவோட பின்பக்கம் போனான். அந்த கயித்தை அப்படியே பீரோ குறுக்கால வச்சு அந்தப்பக்க முனையை வலது கையிலேயும், இந்தப்பக்க முனையை இடது கையிலேயும் பிடிச்சுக்கிட்டான். அப்படியே முன்னால குனிஞ்சு கயித்தை இறுக்கி பீரோவை கொஞ்சம் கொஞ்சமாக முதுகுக்கு சாய்ச்சுக்கிட்டான். அப்படியே அலேக்காக உப்பு மூட்டை மாதிரி முதுகிலேயே தூக்கிட்டு வந்து வீட்டுக்குள்ள வச்சுட்டான்”

எனக்கு வயிற்றில் அமிலம் பெருகியது.

“விளையாடாதீங்க..ஒரே ஆளா? திரும்ப கேட்டேன்”

“நான் என்ன பொய்யா சொல்றேன். வேணா உங்க அண்ணன்கிட்ட கேளு” என்று சொல்லி போனை வைத்துவிட்டார்.

என்னால் நம்ப முடியவில்லை. ஒரே ஆள் எப்படி அந்த பீரோவை தூக்கினான். எனது அம்மாவுக்கு மயக்கமே வந்துவிட்டது. ஒரு ஆள் கண்டிப்பாக தூக்க முடியாது. அது எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும். ஏன்னா இருபத்தைந்து வருடமாக அந்த பீரோவை எனக்கு தெரியும். அம்மாவுக்கு ஐம்பது வருடங்களாக பீரோவை தெரியும். சரி அண்ணி ஏதோ விளையாட்டு காட்டுறாங்க என்று அண்ணனிடம் கேட்க அவரும் அதையேத்தான் போனில் சொன்னார். ஒரு ஆள்தான். எப்படி தூக்கினான்னு எனக்கும் தெரியல. முதுகில தூக்கிட்டு வந்துட்டான் என்றார். நான் அந்த ஆளை ஆறடி உயரம். கருப்பு நிறம். அர்னால்டு போல கற்பனை செய்துக் கொண்டேன். ஆனால் அந்த கற்பனை எதுவும் பொருந்தவில்லை. எனக்கு இப்போது கடிலம் ஆறு, ஆற்றில் மிதந்து வந்த காட்டு மரம், மன்னர்களுக்கு மர சிற்பங்கள் செய்த தச்சு ஆசாரிங்க கதைகள், எனது பால்யகால கதைகள் எல்லாமே பின்னுக்கு சென்றுவிட்டன. எங்கு திரும்பினாலும் பீரோவை தூக்கிய அந்த மாவீரனே கண்ணுக்குள் நின்றான். அந்த சம்பவம் நடந்து இன்றோடு பத்து வருடங்கள் ஆகின்றன. அன்றிலிருந்து அந்த பேய் பீரோவை தூக்கின அந்த காட்டு மனுசனை சந்திக்க வேண்டும். அவன் யார் என்று தெரிந்துக்கொள்ள வேண்டுமென்று அடிக்கடி ஆர்வம் தோன்றும். ஆனால் எங்கே மதுரைக்கு செல்வது? ஓயாத வேலை. நிமிர்ந்து பார்ப்பதற்குள் பத்து வருடங்கள் ஓடிவிட்டன. இந்த பத்து வருடங்களில் சென்னையில் சொந்தமாக அடுக்குமாடி வீடும், காரும் வாங்கியிருந்தேன். அம்மாவுக்கு கண் அறுவை சிகிச்சை நடந்தது. அம்மாவுக்கு ஒருவகையில் நிம்மதி. அந்த மரப்பீரோவை யாரோ முகம் தெரியாத ஆளிடம் விற்காமல் அண்ணன் வீட்டில் பத்திரமாக உள்ளதை நினைத்து.

இன்று காலை ஏதோ ஒரு விஷயமாக நான் மதுரையில் வசிக்கும் அண்ணனின் நண்பரோடு பேசிக்கொண்டிருந்தேன். பேச்சினூடாக அவர், “இப்ப எல்லாம் கூலிக்கு ஆளுங்க கிடைக்கவே சிரமமா இருக்கு. வீட்டுல கொஞ்சம் வேலை இருக்கு. ஆளுங்க தேடினா கிடைக்க மாட்டேங்குறாங்க” என்று சொன்னார். அப்போது நான் பலவருடங்கள் முன்பு பீரோவை ஒத்தையாக தூக்கின ஆளை பற்றி விசாரித்தேன்.

“அந்த ஆள் செத்துப்போய் ஒரு வருடம் ஆச்சு. தல்லாக்குளம் டாஸ்மாக் கடை வாசலில் ரத்த வாந்தி எடுத்தே செத்து போனான். அளவுக்கு மீறிய குடி”

மனதுக்கு சங்கடமாக இருந்தது. இனி என்னால் அவனை சந்திக்க முடியாது. இப்போது நினைத்தால் கூட நான் ரயிலையோ, விமானத்தையோ பிடித்து மதுரை சென்று அண்ணனின் வீட்டில் இருக்கும் அந்த பீரோவை பார்த்துவிட்டு வந்துவிடலாம். ஆனால் என்னால் ஒருபோதும் மனதில் இருக்கும் அந்த மாவீர பிம்பத்தை நேரில் பார்க்கவே முடியாது. எத்தனையோ வருடங்களுக்கு முன்பு ஏதோவொரு பறவை அடர்ந்த காட்டின் ஊடாக பறந்துச்சென்றிருக்கும். அப்படி பறக்கும்போது அதன் எச்சம் அந்த காட்டில் விழுந்து அதிலிருந்து விருட்சமொன்று முளைத்திருக்கலாம். அது எத்தனையோ மழை,புயல், இடி,வெள்ளப்பெருக்கை பார்த்திருக்கலாம். நூற்றாண்டுகள் பழமைமிக்க அந்த விருட்சத்திலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட துண்டுகள் வேறு வேறு ஊர்களில் வேறு வேறு கதைகளை சுமந்துக்கொண்டு திரிய போகிறதென்று அந்த பறவைக்கு அப்போது தெரிந்திருக்குமா? தெரியவில்லை. எல்லாமே வியப்பாக இருந்தது. எல்லா வரலாற்றுக்கதைகளையும், எல்லா வணக்கத்துக்குரிய பிம்பங்களையும் கால் அடி உயரம் கூட இருக்காத இந்த டாஸ்மாக் பாட்டில் அடித்து விட்டதே என்று நினைக்கும்போது வியப்பிலும் வியப்பாக இருந்தது. எல்லா வரலாற்று கதாநாயகர்களும் சாதாரணத்திலும், சாதாரணமாக செத்துப்போனதை போல.

Tuesday, May 6, 2014

நிலம் - ராஜீவ் காந்தி சாலை

(2014 ஆண்டுக்கான மலைச்சொல் விருது ராஜீவ் காந்தி சாலைக்கு வழங்கப்பட்டது. விருது வழங்கும் விழாவில் மதிப்புக்குரிய எஸ்.வி.ஆர் அவர்கள் வாசித்த கட்டுரை. இந்த கட்டுரை உயிர் எழுத்து ஏப்ரல் 2014 இதழில் ‘நிலம்’ என்ற கட்டுரையாக அச்சு வடிவத்தில் வெளியானது)

சென்னை நகரத்தில் நாற்பதாண்டுக் காலத்திற்கும் மேலாக வாழ்ந்த, தென் மாவட்டங்களைச் சேர்ந்த இரு முக்கியப் புனைவிலக்கியப் படைப்பாளிகள் தொடர்ந்து கிராமப்புறம் சார்ந்த படைப்புகளையே வழங்கி வந்துள்ளனர். அவை சிறந்த இலக்கியப் படைப்புகள் என்பதில் ஐயமில்லை. இருவரும் ஒருகாலத்தில் இடதுசாரி இயக்கத்தோடு த்டர்பு கொண்டிருந்தவர்கள். எனது மதிப்புக்கும் மரியாதைக்கும் என்றும் உரியவர்கள். அவர்களிலொருவர் சில வாரங்களுக்குமுன் என்னிடம் தொலைபேசியில் பேசும்போது, தனது சொந்த கிராமத்திற்குச் சென்று சில மாதங்கள் அங்கேயே தங்கி தான் எழுத உத்தேசித்துள்ள நாவலொன்றை எழுதப்போவதாகக் கூறினார். ‘மண் வாசனை’ மிக்க மற்றொரு நாவலாக அது வெளிவரும் என்றும் ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்காலத்தில் அவரது கிராமப்புறத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார, அரசியல், பண்பாட்டு மாற்றங்கள், இந்த மாற்றங்களுக்கெல்லாம் தாக்குப்பிடித்து இன்னும் உயிர்ப்போடு இருக்கும் சாதியக் கட்டமைப்பு ஆகியவை அந்த நாவலில் பதிவு செய்யப்படும் என்றும் எதிர்பார்ப்பதில் தவறில்லை. ஆனால் நாற்பது, நாற்பத்தைந்து ஆண்டுக்காலத்தில் சென்னை நகரில் ஏற்பட்டுள்ள மிகப் பிரமாண்டமான மாற்றங்களினூடாகத்தான் இந்த எழுத்தாளர்களின் வாழ்க்கையும் கழிந்திருக்கிறது. இந்த மாற்றங்கள் அவர்களது படைப்பு மனங்களில் ஏன் எந்தவித சலனத்தையும் ஏற்படுத்தவில்லை என்னும் கேள்விக்கு என்னால் பதில் காண முடியவில்லை.


எனக்கும் சென்னைக்கும் ஏறத்தாழ 60 ஆண்டுக்கால உறவு. முறிந்துபோன கல்லூரிப் படிப்புக்காக இரண்டாண்டுகளும் பிழைப்புக்காகவும் அரசியல் பணிக்காகவும் 24 ஆண்டுகளுமாக இருமுறை தொடர்ச்சியாக சென்னையில் என் வாழ்வு கழிந்திருக்கிறது. 1955 இல் அறிமுகமான சென்னைக்கும் 2014 இல் உள்ள சென்னைக்குமுள்ள வேறுபாடு எனக்குள் திகைப்பையும் கோபத்தையும் வருத்தத்தையும் ஒன்றிணைக்கின்றன. என் கண் முன்னாலேயே நெல் வயல்கள் காணாமல் போயிருக்கின்றன; மாந்தோப்புகள் அழிக்கப்பட்டிருக்கின்றன; எத்தனையோ குளங்களும் ஏரிகளும் நிரப்பப்பட்டு அவற்றின் மேல் காங்கிரீட் காடுகள் முளைத்திருக்கின்றன; வேளச்சேரியிலிருந்து தொடங்கி கிட்டத்தட்ட மகாபலிபுரம் வரை பரந்துவிரிந்திருந்த காடுகளின் பரப்பு வெகுவாகவும் விரைவாகவும் வெட்டிக்குறுக்கப்பட்டு கிண்டி மான் பூங்காவாகச் சுருங்கியிருக்கிறது. அந்தக் காலத்தில் கட்டடங்களே தெரியாதவாறு சோலைகளால் சூழப்பட்டிருந்த சென்னை கிறிஸ்துவக் கல்லூரி வளாகமோ, அதைவிடச் சற்றுக் குறைந்த அளவில் இருந்தாலும் பசுமைக் கோலம் பூண்டிருந்த லயோலா, பச்சையப்பன் கல்லூரி வளாகங்களோ இன்று செம்மண் கோலம் பூண்டிருக்கின்றன. இன்ன இடம் என்று குறித்துச் செல்லப்படக்கூடிய பல ‘லேண்ட்மார்க்குகள்’ வரலாறாகிவிட்டன. ‘பாதசாரிகள்’ என்று ஒருகாலத்தில் அழைக்கப்பட்டு வந்த மனிதப் பிரிவுகளுக்கு இடமே இல்லாமல் செய்துவிட்டன அகலப் பாதைகள்; 1930 களில் சுயமரியாதை இயக்க முன்னணி வீரர் சா. குருசாமியுடன் சென்னையிலிருந்து மகாபலிபுரம் வரை படகில் சென்று வரவும் அந்த அனுபவத்தின் அடிப்படையில் பாரதிதாசனின் ‘ஓடப்பாட்டை’ எழுத வைத்ததுமான பக்கிங்ஹாம் கால்வாய் அடுத்த இருபதாண்டுகளுக்குள் மாசுப்பட்டுப் போயிருந்தாலும், 1950 களிலும்கூட ஆந்திராவரை சரக்குப் போக்குவரத்துப் படகுகளுக்குப் பயன்பட்டுவந்தது என்பதை நினைத்தாலே ஆச்சரியமாக இருக்கின்றது. திரு.வி.க. குளித்தெழுந்ததாகச் சொல்லப்படும் கூவம் எண்பதாண்டுகளுக்கும் மேலாகவே சாக்கடையாகத்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. எனினும் பல்லாயிரக்கணக்கான வக்கற்ற மனிதர்கள் தங்குமிடமாக இருந்த அதன் கரையோரங்களும்கூட அவர்களை வஞ்சிக்கும்படி செய்துவிட்டன. ஆளும் வர்க்கங்களின் ‘ அழகுத் திட்டங்கள்’ சென்னை நகரம் முழுவதையுமே ஒரேபடித்தான இரைச்சல் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. இந்த மாற்றங்களை உன்னிப்பாக அவதானித்து வந்த ஏதேனுமொரு படைப்பு மனம், அவற்றைப் புனைவிலக்கியமாக வடித்துத் தரும் இரசவித்தையில் ஈடுபடாதா என்னும் எதிர்பார்ப்பு என்னைப் போன்ற வாசகர்களுக்கு நீண்ட நாள்களாகவே இருந்துவந்தது. இந்த எதிர்பார்ப்பை மிக அருமையாக நிறைவு செய்திருக்கிறது விநாயக முருகனின் ‘ ராஜீவ் காந்தி சாலை’ (உயிர்மைப் பதிப்பகம், சென்னை, டிசம்பர் 2013, 328 பக்கங்கள், விலை ரூ 240/-)

‘ராஜீவ் கொலை’ தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அது ஏற்படுத்திய தாக்கம் இன்றுவரை பல்வேறு அரசியல் கட்சிகளால் வெவ்வேறு வகைகளில் தங்கள் சொந்த அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல 1992 இல் நடந்த பாபர் மசூதி இடிப்பு, இந்திய சமூகத்தைக் கிடை நிலையிலும், செங்குத்து நிலையிலும் பிளவுபடச் செய்திருக்கிறது. 1984 இல் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து காங்கிரஸ் கட்சியின் ஊக்குவிப்போடு சீக்கியர்களின்மீது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்களின் காரணமாக சீக்கியர்கள் கணிசமான அளவில் பாஜக ஆதரவாளர்களாயினரே தவிர (இந்திய அரசுக்கு எதிரான சீக்கியப் போராளிகள் ஒடுக்கப்பட்டுவிட்டனர்) இந்துக்களுக்கும், சீக்கியர்களுக்குமிடையே பகைமை உருவாகவில்லை. 1991 , 1992 நிகழ்வுகள் இரண்டும் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் பெரிதும் பண்பாட்டுத்தளத்திலேயோ, அரசியல் தளத்திலேயோ உள்வாங்கப்பட்டு ‘மதச்சார்பின்மை-மதவாதம்’, ‘இந்திய தேசியம்-தமிழ் தேசியம்’ என்னும் எதிர்வுகளுக்குள், கிட்டத்தட்ட அனைத்து அரசியல் சொல்லாடல்களையும் சிறைபிடித்து வைத்துள்ளன.

இந்தச் சிறையிலிருந்து யதார்த்த நிலையை – பல இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வை, இயற்கை வளங்களை, நிலப்பரப்பை, சமூக உணர்வை, மரபான விழுமியங்களை புரட்டிப்போட்டுவிட்ட யதார்த்த நிலையை – எடுத்துக்காட்ட ‘ராஜீவ் கொலை’யிலிருந்து ‘ராஜீவ் சாலை’க்கு நம்மை அழைத்துவந்திருக்கிறார் விநாயக முருகன். தமிழகத்தில் மட்டுமன்றி, இந்தியா முழுவதிலும் முப்பதாண்டுகளுக்கும் மேலாக கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின், விவசாயிகளின், கீழ் – மத்தியதர வர்க்கத்தினரின் வாழ்க்கையைச் சீரழித்து வருகின்ற, அனைத்து மக்களின் ஆதாரத் தூணாக உள்ள இயற்கை வளங்களைச் சூறையாடுகின்ற நவ-தாராளவாதப் பொருளாதாரக் கொளைகை நரசிம்ம ராவின் ஆட்சிக்காலத்தில்தான் கொண்டுவரப்பட்டது என்றாலும் ,அந்த ஆட்சி ஏற்படுவதற்கு மூல காரணமாக இருந்தது ராஜிவ் கொலைதான்; இந்தப் பொருளாதாரக் கொள்கைக்கான பாதையை வகுத்துக் கொடுத்தவர் ‘அதி நவீன இந்தியாவின்’ பிம்பமாக முன் நிறுத்தப்பட்ட உயிரோடு இருந்த ராஜீவ் காந்திதான். ஆக, விநாயக முருகன் யதார்த்தமாகச் சித்தரித்துக் காட்டும் சென்னை ‘ராஜீவ் காந்தி சாலை’யை இன்றைய இந்தியா முழுவதற்குமேயான ஓர் உருவகமாகவும் நம்மால் காணமுடிகின்றது.

விநாயக முருகனுக்கு எதேனுமொரு குறிப்பிட்ட இடதுசாரிக் கருத்துநிலைக் கண்ணோட்டம் (ideological outlook) இருக்கிறதா என்பது நமக்குத் தெரியாது. ஆனால், முதலாளியப் பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்தும் பாரதூரமான மாற்றங்களைப் பற்றி, அவை மனிதர்களின் புறவாழ்வில் மட்டுமன்றி அகவாழ்விலும் ஏற்படுத்தும் மாற்றங்கள் பற்றி , சூழலியல் கேடுகள் பற்றி மார்க்ஸ், ஏங்கெல்சோடு இணைத்து எழுதிய ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’, அவர் தனியாக எழுதிய ‘பொருளாதார, தத்துவக் கையெழுத்துப் படிகள்’ , ‘மூலதனம்’, எங்கெல்ஸின் ‘டூரிங்குக்கு மறுப்பு’ போன்ற நூல்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் கூர்மையான அவதானிப்புகளும் அவற்றின் அடிப்படையில் அவர்கள் பொதுமைப்படுத்திக் கூறிய கருத்துகளும் இந்த நாவல் முழுவதிலும் இழையோடுவதை என்னால் உணரமுடிந்தது.


பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக சிறுசிறு மாற்றங்களை மட்டுமே கண்டுவந்த ஒரு பெரும் நிலக்காட்சி, நவீன முதலாளித்துவத்தின் முக்கியப் படைக்கலன்களிலொன்றான தகவல் தொழில்நுட்பத் தொழில் நிறுவனங்கள் நிறுவப்படும்போது அதன் நீண்டகால அடையாளத்தை ஒருசில ஆண்டுகளிலேயே இழந்துவிடுவதையும் அந்த நிறுவனங்களினதும் அவற்றில் பணிபுரியும் மனிதர்களினதும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் துணைத் தொழில்கள் பல முளைப்பதையும். மனிதனை மனிதன் தின்னவைக்கும் இந்த மாற்றங்கள் ‘வலியவரே எஞ்சுவர்’ (survival of the fittest) என்று டார்வின் இயற்கையில் கண்ட நியதி மானுட சமுதாயத்திற்குள் இயங்குவதையும் ‘காலம்’, ‘சாலைகள்’ ஆகியவற்றை முக்கியப் பாத்திரங்களாக கொண்டுள்ள இந்த நாவலின் முன்னுரையில் எடுத்த எடுப்பிலேயே கச்சிதமாகச் சொல்லிவிடுகிறார் நாவலாசிரியர்.

ராஜீவ்காந்தி சாலை எனப்படும் பழைய மகாபலிபுர சாலைக்கு நான் முதலில் சென்ற வருடம் 1996. அங்கு நடக்கும் பருவநிலை மாற்றங்களை கவனித்து வருகிறேன். அங்கிருந்து புலம் பெயர்ந்து சென்ற மனிதர்களோடு தேநீர் அருந்தியுள்ளேன். அங்கு புதிதாக வந்து சேர்ந்த மனிதர்களோடு வேலை செய்துள்ளேன். செய்துக் கொண்டிருக்கிறேன். மத்திய கைலாஷுக்கும், சிறுசேரிக்கும் தினமும் ஷேர் ஆட்டோக்களில், ஏசி பேருந்துகளில், அலுவலக பேருந்துகளில் என்று மாறி மாறி பயணம் செய்திருக்கிறேன். அந்த சாலையின் ஆன்மாவை பதினேழு ஆண்டுகளாக கவனித்துக்கொண்டிருக்கிறேன். சாலைகளுக்கு உயிர் உண்டு. அதற்கும் கதைகள் உண்டு. பதினேழு வருடங்களுக்கு முன்பு ஏன் ஐந்து வருடங்கள் முன்பு வரை கூட செம்மஞ்சேரி தாண்டி கிராமங்களாகத்தான் இருந்தன. அப்போதெல்லாம் அங்கு எதுவும் இருக்காது. எதுவும் இருக்காது என்றால் நவீன வெளிநாட்டு கார்கள் இருக்காது. ஆறு லேன்கள் இருக்காது. ஐடி கம்பெனிகள் இருக்காது. உணவு விடுதிகள் இருக்காது. அடுக்குமாடி குடியிருப்புகள் இருக்காது. முக்கியமாக இவ்வளவு பைத்தியங்கள் அங்கு இருந்ததில்லை. ஐடி கம்பெனிகள் கட்ட அங்கு இடம் தேர்வு செய்யப்பட்டவுடன் அங்கிருந்த மனிதர்கள் கூட்டம் கூட்டமாக இடம் பெயர்ந்து சென்றதையும், பலர் விவசாய வேலைகளை விட்டுவிட்டு ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கியதையும் (பார்த்தேன்) , ஐடி கம்பெனிகள் வந்தவுடன் மிகப்பெரிய வணிக வளாகங்கள், உணவு விடுதிகள் வந்தன. நவநாகரீக மனிதர்கள் இறங்கினார்கள். அழகான இளம் பெண்கள் வந்தார்கள். இறக்குமதிக் கார்கள் வந்தன. அதையெல்லாம் அங்கு காலங்காலமாக குடியிருந்த எளிய கிராமத்து மனிதர்கள் வியப்போடும், திகைப்போடும் பார்த்தார்கள். ஒரு பெருநகரம் எப்படி உருவாகியது, அது அங்கு என்னவிதமான பண்பாட்டு தாக்குதல்களை நடத்தியது,எப்படி மனிதர்களை மாற்றியது என்பதை மிக நெருக்கமாக அருகிலிருந்து பார்த்துள்ளேன். என் கண்முன்னேதான் அவையெல்லாம் நடந்தன. தற்கொலை செய்துக் கொள்வதற்கும், பைத்தியம் பிடிப்பதற்கும் உள்ள இடைவெளி அதிகம் இல்லை. நூலளவுதான்”. மேற்சொன்ன விவரங்கள் மீண்டும் கவிதையாக ஊற்றெடுக்கின்றன ‘வைகறை’ என்னும் அத்தியாயத்தில்.

மிக அண்மைக்காலம் வரை ஒலித்துக்கொண்டிருந்த விதம்விதமான குரல்கள் யாவற்றையும் சாலையின் இரைச்சல் என்னும் ஒற்றைக்குரல் அடக்கி ஒடுக்கி விடுகின்றது: “ஒவ்வொரு குரலும் ஒவ்வொரு விதமாய் இருக்கும். கட்டைக்குரல். கீச்சுக்குரல் என்று. ஒவ்வொரு குரலுக்கும் ஒவ்வொரு தாளலயம் இருக்கும். சில குரல்கள் பழகியவர்களுக்கு மட்டுமே புரியும்படி சங்கேதமாய் இருக்கும்.அலுமினியப் பாத்திரங்கள் விற்பவர் விநோதமாய் கூவிக்கொண்டு வருவார். ஒரு வார்த்தைகூட புரியாது. ஒரு சைக்கிளில் பாத்திரக்கடையையே தொங்கிக் கொண்டு வருவது பார்க்க அதிசயமாய் இருக்கும். பிற்பகல் தெருக்களில் குறிசொல்பவர்கள், கைரேகை சொல்பவர்கள்,கிளி ஜோஸ்யமென்று குரல்கள் நிரம்பியிருக்கும். சிலருக்குப் பழையச் சோறு கூட கிடைக்கும். உண்டு விட்டு ஏதாவது மரத்தடியில் குட்டித்தூக்கம் போடுவார்கள். யாராவது ஒரு பொடியன் கிளியிடம் வம்பு இழுக்க கிளி ஜோஸ்யக்காரன் தூக்கத்திலேயே அதட்டுவான். மாலை வேளைகளில் தேங்காய்பன், கைமுறுக்கு,சோன் பப்டி என்ளறு விதவிதமாய் விற்றுக் கொண்டு வருவார்கள்... தெருக்கள் முழுதும் குரல்கள் ததும்பிக் கொண்டேயிருக்கும். யாரும் கதவை அடைத்துக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் எல்லாருமே அந்த ஊரைச் சேர்ந்தவர்களாய் இருக்க மாட்டார்கள். வெளியூரிலிருந்து வரும் வியாபாரிகளாக இருப்பார்கள். அதெல்லாம் அந்தக் காலம் ஊருக்குள் இப்போதெல்லாம் குரல்கள் கேட்பதில்லை. இப்போதெல்லாம் தெருக்களில் குரல்களுடன் அலைபவர்களை மக்கள் சந்தேகத்துடனேயே பார்க்கின்றார்கள் என்று செட்டியார் நினைத்துக்கொண்டார். குரல்களை விட மக்களுக்கு இரைச்சல்கள் பிடித்து விட்டதா...” ஆம், சிட்டுக் குருவிகளைக் காணாமல் போக அடித்த செல்போன் டவர்களின் உலகம் இது.

ஐடியில் நாவலாசிரியரின் சக பணியாளர்களாக இருக்கும் அவரது நெருக்கமான நண்பர்கள் எவரது பார்வைக்கும் படாத பெரிய மாற்றங்கள், நுண் மாற்றங்கள் எல்லாவற்றையும் ஓர் ஆழமான சமூகவியல் ஆராய்ச்சி அறிஞர் போல பதிவு செய்துள்ளார் இந்த நாவலில்.

ஐடி உலகமே ஒரு ‘மாயாஜால்’ தான். ஐந்து இழக்க , ஆறு இலக்க சம்பளத்தொகை கிடைக்கும் என்னும் மாயக்கவர்ச்சியைக் காட்டும் இந்த மாய உலகத்தில், ‘மனிதரனைவர்க்கும் வாய்த்த விலைமகள்’ என்பாரே ஷேக்ஸ்பியர், அந்த விலைமகளான பணம், மனிதர்களின் பன்முக ஆற்றல்கள் அனைத்தையும் பணவேட்டை என்னும் ஒரே குறிக்கோளாகச் சுருக்கிவிடுகின்றது. மார்க்ஸ் கூறிவதுபோல “புனிதர்களின் திருச்சின்னங்களும்கூட, விற்கவோ வாங்கவோ முடியாதென்று கருதப்படுகின்றன இன்னும் நுண்மையான தெய்விகப் பொருள்களும்கூட இந்த இரசவாதத்திலிருந்து தப்பமுடியவில்லை.” இந்த இரசவாதத்திற்கு உட்படுத்தப்படுத்தப்படுகின்ற மனிதர்களிடம், அவர்களது, உறவுகளிலேயே மிக இயல்பானதும் மிக இன்றியமையாததுமான பாலுறவுகள்கூட வக்கரித்துப் போய்விடுகின்றன. உள்ளார்ந்த காதலோடு இணைகின்றவர்கள்கூட, உடலின் இயல்பான வேட்கைகளை பூர்த்தி செய்ய வாய்ப்போ நேரமோ வழங்காத ஐடி பணிகளால் சோரம் போகின்றார்கள்.

மனிதர்களைத் தனது மாயவலையில் வீழவைக்கும் இந்த உலகத்திலும் செயல்படுவது சமூக டார்வினியம்தான். இது ஒரு ‘அவுட்ஸோர்ஸிங் உலகம்; மென்பொருள் எழுதுவது, பிஓ வேலை ஆகியவற்றை அமெரிக்க கம்பெனிகள் இந்தியர்களைக் கொண்டு ‘அவுட் ஸோர்சிங்’ செய்கின்றன என்றால், இந்திய நிறுவனங்கள் செக்யூரிட்டி, கேப்மேன், துப்புரவு வேலை முதலியவற்றை இந்திய சாமானிய மக்களிடமிருந்து ‘அவுட்ஸோர்ஸிங்’ செய்துகொள்கின்றன. ‘அவுட்ஸோர்ஸிங்’ மட்டுமல்லாது, ஆன்ஸைட் வேலை, புரோகிராமிங், மேனேஜ்மெண்ட், கன்சல்டிங், பெஞ்சிங் எனப் பலதரப்பட்ட வேலைகளில் மேல்-கீழ் வரிசைகளில் நிறுத்தப்பட்டும், பல்லாண்டுகள் வேலை பார்த்தவர்களை ஒரு நொடியில் வீட்டுக்கு அனுப்பியும், புதிய பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்தியும் சைபெர் கூலி உழைப்பு மூலம் கோடிக்கணக்கில் இலாபம் ஈட்டும் ஐடி கம்பெனிகளுக்கு மின்கட்டண சலுகைகள், தண்ணீர் வழங்குதல், சாலை அமைத்துக் கொடுத்தல் போன்ற வசதிகளைச் செய்து கொடுத்ததும், ஐடி பணியாளர்களின் ஊதியத்தில் முப்பது சதவீதத்தை வருமான வரியாக அபகரித்தும் மத்திய, மாநில அரசாங்கங்கள் இந்த நிறுவனங்களுக்குப் பாதுகாப்புத் தருகின்றன. நம்நாட்டு சட்டங்கள் ஐடி, மோட்டார் வாகனத் தொழிற்சாலைகள் போன்றவற்றுக்கு அவற்றின் சார்பில் நிலம் கையகப்படுத்தும் உரிமையை மத்திய,மாநில அரசாங்கங்களுக்கு வழங்குகின்றன. அண்மையில் ஆக்ஸ்போர்ட் பதிப்பகம் வெளியிட்டுள்ள ஒரு நூலில் எம்.விஜயபாஸ்கர் எழுதியுள்ள ‘மெளனத்தின் அரசியல்’ (Politics of Silence) என்னும் கட்டுரை, இதுபோன்று நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக மக்கள் போராட்டம் என்று சொல்லத்தக்க எந்தவொரு போராட்டமும் இதுவரை நடந்திராத ஒரே மாநிலமாக திகழ்வது தமிழ்நாடுதான் என்று கூறுகிறது. இடதுசாரி அரசாங்கம் இருந்த மேற்கு வங்கத்தில் தனியார் நிறுவனங்களுக்காக அரசாங்கமே முன்நின்று நிலத்தைக் கையகப்படுத்திச் சூடு வாங்கிக்கொண்டதைப் போலன்றி, ஆசை வார்த்தை பேசி நடுத்தர, ஏழை விவசாயிகளை ஏமாற்றும் கலையில் கைதேர்ந்த நிலத்தரகர்களிடம் அந்த வேலையை விட்டுவைக்கும் தந்திர வழியைப் பயன்படுத்தின அடுத்தடுத்து வந்த தமிழக அரசாங்கங்கள் என்பதை இக்கட்டுரை எடுத்துக்காட்டுகின்றது.

சமூக டார்வினியம் செயல்படும் ஐடி உலகத்தில் தோற்றுப்போனவர்களுக்கு இருக்கவே இருக்கின்றது ஆறுமாடிக் கட்டட உயரம். “இந்த உயரத்துக்குப் போகவேண்டும் என்று ஆசைப்படுவதால்தானோ தற்கொலை செய்துகொள்வதற்கும் உயரமான இடங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனவா?” என்று இந்த நாவல் எழுப்பும் கேள்வி உளவியலாளர்களுக்கு விடுக்கப்படும் மிக ஆழமான கேள்வி. எத்தனை பொருளாதார, மாற்றங்கள் வந்தாலும் சலனப்படாது, சற்று நெகிழ்ந்து கொடுப்பதுபோல நடித்து, புதுப்புது வேடங்களில் சிலவேளையும், நீண்டகாலப் பழைய கோலத்திலும் தன்னை இடைவிடாது மறு உற்பத்தி செய்துகொள்கிறது சாதியம். பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காக காலந்தோறும் புதுப்புது உத்திகளைக் கையாள்வதை ஐடி உலகம் பற்றிய விவாதங்கள், ஐடி உலகிற்கு வெளியே உள்ள மனிதர்களின் உரையாடல் வழியாக எடுத்துரைக்கும் இந்த நாவல், இடைநிலை சாதிகளிடமுள்ள சாதி ஆதிக்கத்தையும், தலித்துகளை ஒடுக்கும் மனப்பான்மையையும் சுட்டிக்காட்டத் தவறுவதில்லை. அதேபோல ஐடி நிறுவனங்களில் உள்ள மலையாளிகள், தெலுங்கர்கள் ஆகியோர் சாதி அடிப்படையில் உருவாக்கிக்கொள்ளும் சமூக மூலதனம் (social capital) ஐடி நிறுவனங்களில் அவர்களது வேலை வாய்ப்பையும் செல்வாக்கையும் உருவாக்கிக்கொள்கின்றது என்பதையும் (சாதியக் கட்டமைப்பின் மறு உருவாக்கத்தின் ஒரு வடிவம்தான் இது) இந்த நாவல் பேசுகிறது. ‘ராஜீவ் காந்தி சாலை’ ஐடி கம்பெனிகளின் உறைவிடம் மட்டுமன்று; ரியல் எஸ்டேட் தாதாக்கள், அரசியல்வாதிகளினதும் புதுப்பணக்காரர்களினதும் பண்ணை வீடுகள்ம் ஷேர் ஆட்டோக்கள் நவீன மால்களுக்கும் ஹோட்டல்களுக்குமிடையே காலமுரண்களாக நிற்கும் தள்ளுவண்டிகள், டாஸ்மாக் கடைகள், பைத்தியக்காரர்களை அவர்களது உறவினர்களிடமிருந்து காசு வாங்கிக்கொண்டு வந்து ஹைவேயில் இறக்கிவிடும் லாரிகள், வழிப்பறி கொள்ளைக்காரர்கள், நவயுகத் தத்துவவாதிகளாக அவதாரமெடுத்து காசு பண்ணும் யோகா மாஸ்டர்கள், இளஞ்சோடிகளை வழிமறித்துப் பெண்களை பாலியல் வன்முறை செய்துவிட்டுக் கொன்றுவிடும் கொலைகாரர்கள் என எத்தனையோ விஷயங்களை அரவணைத்துக்கொள்ளும் சாலை இது.

ராஜீவ் காந்தி சாலையில் ஒருபக்கம் முழுக்கமுழுக்க ஏஸி வசதி கொண்ட வானுயர் கட்டடங்கள், அதிநவீன மால்கள், மல்டிபிளக்ஸ்கள், உல்லாச விடுதிகள், ஆடம்பர ஹோட்டல்கள், பண்ணை வீடுகள், கேட்டட் கம்யூனிட்டிகள் இருந்தால் அதற்கு மறுபக்கமும் இருக்கத்தானே வேண்டும். அப்படியிருந்தால்தானே ஒன்றையொன்று முழுமை செய்ய முடியும். அந்த மறுபக்கம்தான் இது: “(செம்மஞ்சேரியில்) குடிசையைச் சுற்றி சேறும்,சகதியும் கலந்து ஓடியது. நாற்றம் குப்பைகளும், பன்றிக்கழிவுகளும் சேர்ந்து நாற்றம் குடலை பிய்த்து எறிவது போல வீசியது. லூர்துவின் குசைக்கு சற்று தள்ளி மலம் கழித்துக்கொண்டிருந்த சிறுவன் தலையில் மழை நீர் படாமல் இருக்க பாலிதீன் கவரை இறுக்க சுற்றிக் கட்டியிருந்தான். அவன் பக்கத்தில் அந்த சொறிநாய் புது ஈர மலத்தை பார்த்தபடி ஆசை வெறியோடு காத்திருந்தது. சிறுவன் கையில் கிடைத்த கல்லை தூக்கி நாயின் மேல் விட்டெறிந்தான். அடிவாங்கிய நாய் ஈனஸ்வரத்தில் முனகியபடி ஓடியது. சற்று தள்ளி பிரமாண்ட சாக்கடை குட்டை போல தேங்கி கிடந்தது. ஈக்களும் கொசுக்களும் சங்கீதம் பாடியபடி. சாக்கடை தண்ணீர் விரவியிருந்த இடத்தில் ஒழுகிக்கொண்டிருந்த குடிநீர் குழாய்க்கு இரண்டு பெண்கள் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். குடத்தால் அவ்வப்போது அடித்தும் கொண்டார்கள். சில ஆண்கள் சற்று தள்ளி தேநீர் கடையில் பீடி குடித்தபடி அவர்களது சண்டையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் தேநீர்க்கடையில் இருந்த வடை,பஜ்ஜி மேல் ஈக்கள் மொய்க்க அதை கடைக்கார பையன் விரட்டி கொண்டிருந்தான். இப்போது சிறுவனின் மலம் மழைத்தண்ணீரோடு கலந்து அந்த செம்மஞ்ச்சேரி முழுவதும் சாக்கடை நீரோடு பயணம் செய்ய ஆரம்பித்திருந்தது மிதந்தபடியே. உடம்பெல்லாம் புண்கள் கொண்ட கிழவி இந்த காட்சிகளையெல்லாம் பார்த்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். லூர்துவுக்கு வயிற்றைக் குமட்டிக்கொண்டு வந்தது. ரெளத்ரமும்,இயலாமையும் சேர்ந்து ரத்தத்துடிப்பை அதிகப்படுத்தியது.

இந்த சூழல் ஏசுநாதரையும்கூட கொலையையும், கொள்ளையையும் செய்யத் தூண்டும். அதனால்தான் கண்ணகி நகரில் பலவந்தமாகக் குடியேற்றப்பட்ட ஏழை மக்களுக்காகப் போராடி போலீஸ் சித்திரவதைக்கு உள்ளாகி சிறை சென்ற லூர்து, துன்பத்தில் பங்கேற்கத் துணை யாரையும் காணாத அவன், சேகுவேராவையும், மாவோவையும் வணங்கி வந்த அவன், மோசடித்தனமான முறையில் பணம் சம்பாதிக்கவும் அதன் பொருட்டு அவனுக்கு வேலை வாங்கித் தந்தவருக்கே துரோகம் இழைக்கவும் துணிகின்றான்.

ஐடி நிறுவனங்களின் சுரண்டல், அங்கு பணிபுரிவோரிடம் ஏற்படும் உடல், மனநோய்கள், தற்கொலைகள், பாலியல் வக்கிரங்கள், ரியல் எஸ்டேட் கொள்ளைகள், எங்கிருந்தோ கொண்டுவரப்பட்டு ராஜீவ் காந்தி சாலையில் அலைந்துக்கொண்டிருக்கும் பைத்தியக்காரர்கள் ஆகியோர் பற்றிய சித்தரிப்புகள் இருண்டுப்போன புற உலகையும், இருள் கவ்விய மன உலகத்தையும் காட்டுகின்றன. அதேவேளை இந்த நாவலில் ஆங்காங்கே நகைச்சுவை உணர்வும் மிளிர்கின்றது:

"இப்பல்லாம் டிவியில எந்தச் சேனலை திருப்பினாலும் அமேசான் காட்டுல விளையுற அரிய மூலிகைன்னு சொல்லி எதையாச்சும் விக்குறானுங்க. முடி முளைக்கனுமா அமேசான் காடு. உடம்பு இளைக்கனுமா அமேசான் காடு. செவப்பா மாறனுமா அமேசான் காடு. எல்லா பிரச்சினைங்களுக்கும் அமேசான் காட்டுல விளையுற மூலிகைன்னு சொல்லி விளம்பரம் செஞ்சு விக்கறானுங்க. அந்த பாழாய்ப்போன அமேசான் காடு எங்கதான் இருக்கு? டிவியில வர்ற எல்லாரும் அந்த மர்மக் காட்டைப் பற்றியே பேசுறாங்க" யதார்த்தத்தோடு பின்னிப்பிணைந்த நகைச்சுவை.

இயற்கை மீதும் தமிழ் மக்களின் மரபான வேளாண் தொழில் அறிவின் மீதும் நாவலாசிரியர் கொண்டுள்ள மதிப்புக்கு ஓர் எடுத்துக்காட்டு: “தென்னைப் போல பனை மரங்களுக்கு அதன் வேர்களை பக்கவாட்டில் பரப்பி நிலத்தடி நீரை சுயநலமாக உறிஞ்சிக் குடிக்கும் வஞ்சகம் தெரியாது. அவை வேரை மண்ணுக்குள் ஆழமாக ஊன்றி வளரும். அப்படி வளரும்போது தான் உறிஞ்சும் நீரை பக்கவாட்டில் பரப்பி நிலத்தடி நீரை அதிகரிக்கவே செய்யும். அது எடுத்தது போக மீதி உள்ள நீர் மண்ணுக்கு அடியில் இருக்கும் நீரோட்டத்தில் இன்னும் கொஞ்சம் ஊற்றெடுக்கும். தெரியாமலா இந்தப் பகுதியில் ஏராளமான ஏரிகளும், குளம், குட்டைகளும் அதன் சுற்றுக்கரைகளில் இருக்கும் மண்மேடுகளில் பனைகளையும் நட்டு வைத்தார்கள் அந்தக்காலத்தில். கான்கிரீட்டுகளும், தென்னைகளுமே நீரை உறிஞ்சி விரயம் செய்கின்றன என்று அவள் கணவன் பழநியாண்டி அடிக்கடி சொல்வான். கடல்மட்டத்தின் வெகு அருகில் இருப்பதால் இது இயற்கையாகவே நீரை பிடித்து வைக்கும் சதுப்புநிலப் பகுதியல்லவா? கடலுக்கு பக்கத்தில் இருக்கும் சதுப்பு நிலங்களை அழிக்க அழிக்க நல்ல நீர் வற்றி கடல் நீர் மண்ணுக்குள் புகுந்து உப்பு நீர்தான் வரும். அதனாலேயே தென்னையை கடலோர கிராம மக்கள் வளர்த்த அளவிற்கு சதுப்பு நிலங்களை ஒட்டி இருந்த நாவலூர் போன்ற பகுதி விவசாயிகள் வளர்க்க ஆர்வம் காட்டவில்லை”.

ராஜீவ் காந்தி கொலையைத் தங்கள் சொல்லாடல்களின் முக்கியக் கூறுகளிலொன்றாகக் கொண்டுள்ள தமிழ் தேசியவாதிகள் பலர் பார்க்கத் தவறுகின்ற அவலங்கள் ‘ராஜீவ் காந்தி சாலை’யில் வண்டி வண்டியாகக் கொட்டப்பட்டுள்ளன. அமெரிக்காவின் தரகர்களாக உள்ள, வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களின் ஐடி நிறுவனங்களின் கொள்ளை இலாபமோ, இந்த மாநிலத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் கொள்ளைக்காரர்களோ, பெரிதும் உழைக்கும் மக்களின் வியர்வையால் ஈட்டப்பட்ட பணத்தைச் சுருட்டிக்கொள்ளும் டாஸ்மாக்கோ (மது அருந்துவதில்கூட ஒவ்வொரு சமுக அடுக்குக்கும் ஒவ்வொருவிதமான பாணி, வெவ்வேறு வகையான மது இருப்பதையும் இந்த நாவல் சொல்கின்றது) இந்த சொல்லாடல்களில் மிக மிக அரிதாகவே இடம் பெறுகின்றன. இதற்கு மாறாக, வெளிமாநிலங்களிலிருந்து வேலைசெய்ய வருபவர்களால்தான் பண்பாட்டுக் கேடுகளும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்களும் எழுவதாக அந்தச் சொல்லாடல்கள் கூறுகின்றன. வெளிமாநிலங்களிலிருந்து வேலை தேடி வருகிறவர்களுக்கு ரேஷன் கார்டுகள்கூடத் தரக்கூடாது என்றும்கூட கூறுகின்றன. போலீஸ் துறையும்கூட வெளிமாநிலத்திலிருந்து வேலைசெய்ய வருகின்றவர்களின் அடையாளக்குறிப்புகள் (profile) எடுக்கப்பட்டுப் பதிவு செய்யப்பட வேண்டும் என்று கூறுகிறது. ஒரு குற்றம் குற்றமாகப் பார்க்கப்படுவதற்குப் பதிலாக குற்றத்தை செய்தவர்களின் மாநில அடையாளத்தோடு தொடர்பு படுத்தப்படுகின்றது. உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால் இருக்கவே இருக்கிறது ‘என்கவுண்டர்’ கொலை.

இந்தச் சூழலில் வெளிமாநிலத் தொழிலாளிகளின் பங்களிப்பைத் துணிச்சலாக சொல்கிறது நாவல்: “இரண்டாயிரத்துக்கு பிறகான நவீன சென்னையின் வரலாற்றை பேசும்போது பீகாரிகளின் அர்ப்பணிப்பையும் அவர்களது உழைப்பையும் அவர்கள் சிந்திய ரத்தத்தையும் தியாகத்தையும் தவிர்த்து எதுவும் எழுத முடியாது. கத்திப்பாரா பாலத்தின் தூண்களில் அவர்களது பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில்களின் தூண்களில் அவர்கள் ரத்தம் சிந்தியுள்ளன. ஐடி நிறுவனங்கள் அவர்கள் உழைப்பை உறிஞ்சியுள்ளன. இதோ இந்த ராஜீவ்காந்தி சாலை உருவாக்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பீகாரி இன மக்கள் உயிர் இழந்துள்ளனர். கட்டிடங்கள் கட்டும்போது சாரம் இடிந்து விழுந்து பலியாகியுள்ளார்கள். கான்கிரீட் பலகைகளை தூக்கும் சுமக்கும் கிரேன் விழுந்து சிலர் பலியாகியுள்ளார்கள்”

ராஜீவ் காந்தி சாலை கொண்டு வந்த நவீன மாற்றங்களுக்குத் தாக்குப்பிடித்து எப்படியோ தங்கள் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டுவரும் சாமானியத் தமிழர்கள் மீது பரிவையும், வாஞ்சையையும் கொட்டுகிறது நாவல். ராஜீவ் காந்தி சாலையின் வருகையால் வாழ்வாதாரங்களை இழந்த பல்லாயிரம் சாமானிய மனிதர்களில் இருவர்தாம் அன்னம்மாவும், பழனியாண்டியும். தண்ணீர் பம்பு மோட்டாரை இயக்க வைக்கையில் மின்கசிவின் காரணமாக இறந்துவிடும் பழனியாண்டியின் மனைவி அன்னம்மாவுக்கு பிழைக்கும் வழியை ஏற்படுத்திக் கொடுக்கிறார் தங்கவேலு செட்டியார். அவரும்கூட நிலபறிப்பால் பாதிக்கப்பட்டவர்தான். அன்னம்மாவுக்கும், தங்கவேல் செட்டியாருக்குமிடையே வளரும் உறவை சமுதாயம் தான் வகுத்துள்ள மரபுநெறி ஒழுக்கங்களின் மீறல் எனக் கருதுகின்றது. ஆனால் அவர்களினூடாக ஓர் அற்புதமான காதல் கதையொன்று மலர்கிறது இந்த நாவலுக்குள்ளே. பிரியாணிக் கடை வைத்திருக்கும் பாய், அஞ்சலை போன்றவர்களுக்குள்ளே இன்னும் மனிதம் சுடர்விட்டு ஒளிர்கின்றது. ரியல் எஸ்டேட் சண்முகமும், சிதம்பரமும் சேர்ந்து அழிக்கும் தோப்பிலுள்ள கடைசி பனை மரமும் வேரோடு சாய்க்கப்படுகையில் நாமும் வீழ்கின்றோம்.

அன்னத்தோடு சேர்ந்து நம்மையும் கனவு காண வைக்கின்றது காலம்: “அன்னத்திற்கு இப்போதெல்லாம் கனவுகள் அதிகரித்திருந்தன. எல்லாமே பெருங்கனவுகளாக இருந்தன. அந்தக் கனவுகளில் எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென்று நெற்வயல்கள். பம்பு செட்டுகளை ஒட்டி இருந்த பெரிய கிணறுகளின் மீதிருந்து சிறுவர்கள் உற்சாகமாக குதித்து விளையாடினார்கள். தண்ணீர்ப் பாம்புகளைப் பிடித்து அடித்தார்கள். அன்னத்தின் பிள்ளைகள் லோகுவும்,தேவியும் சிதம்பரத்தோடு சேர்ந்து பொன்வண்டுகளைப் பிடித்து தீப்பெட்டிகளில் அடைத்து விளையாடினார்கள். எங்கு பார்த்தாலும் பனை மரங்கள் இருந்தன. மாடுகள் தூரத்தில் கூட்ட கூட்டமாக மேய்ந்துக் கொண்டிருந்தன. திருவிழாக் காலம் என்பதால் காப்புக் கட்டியிருந்தார்கள். மழை வரும் போல இருந்தது. ஒன்றிரண்டு நீர்த்துளிகள் நெற்றியில் விழுந்தன. அன்னத்திற்கு அவளது வீட்டின் கொல்லையில் கூரையில் உப்புக்கண்டம் நினைவுக்கு வந்தது. சூழ்ச்சி தெரியாத எளிய மனிதர்களின் கனவுகளை, காலத்திற்கு ஏற்ப மாறிக்கொள்ளாத மனிதர்களின் கனவுகளை காலமாகிய நான் ஒருபோதும் நிறைவேற்றுவதே இல்லை. அவளுக்கு எப்படி புரிய வைப்பது என்று எனக்குத் தெரியவில்லை”


இந்த வார்த்தைகள் நம்மை அழ வைத்துவிடுகின்றன. அரைப் பனை மர உயரத்திலிருந்து ஆழ்கிணற்றில் சுரைக்காய் குடுக்கையுடன் குதித்து நீந்தப் பழகிய, வண்ணத்துப் பூச்சிகளை கர்சீப்கொண்டு மடக்கிப் பிடித்த, முறத்தில் கயிறு கட்டி இழுத்து வைத்து சிட்டுக்குருவிகளை பிடித்த, அமராவதியிலும், நொய்யலிலும் காவிரியிலும் கொள்ளிடத்திலும் சுழிகளைப் பொருட்படுத்தாமல் நீந்தி மகிழ்ந்த, ராஜ வாய்க்காலில் தூண்டில் போட்டுத் துள்ளி வரும் கெண்டை மீன்களைப் பிடித்துப் பெருமைப்பட்ட என் தலைமுறையினருக்கும்கூட எல்லாமே இப்போது வெற்றுக்கனவுகளும் யாருக்கும் பயன்படா பழங்கதைகள்தான்.

பின்குறிப்புகள்:
புத்தகப் பதிப்பு பற்றி சில வார்த்தைகள் சொல்லியாக வேண்டும். தமிழ்நாட்டில் ‘க்ரியா’ , ‘தமிழினி’ போன்ற ஓரிரு பதிப்பகங்கள் தவிர மற்ற அனைத்தும் கையெழுத்துப் படிகளை ஊன்றிப் படித்து ‘எடிட்’ செய்வதிலோ, தொழில்முறையிலான மெய்ப்பு பார்ப்பதிலோ போதுமான கவனம் செலுத்துவதில்லை. எனவே தவறான வாக்கிய அமைப்புகள், இலக்கணப் பிழைகள், சொற் பிழைகள், அச்சுப் பிழைகள் முதலியன திருத்தப்படாமலேயே புத்தகங்கள் அச்சிட்டு வெளிக்கொணரப்படுகின்றன. அச்சேறி வெளிவந்த இத்தகைய புத்தகங்களை அவற்றை ஆக்கியோர்கள் பார்க்கும்போது அவர்கள் அடையும் மனவேதனையையும் பதிப்பாளர்கள் கருத்தில்கொள்ள வேண்டும். பதிப்பாளர்களின் கவனக்குறைவால் பாதிக்கப்பட்டது ‘ராஜீவ் காந்தி சாலை’ மட்டுமன்றி எனது அண்மைக்கால மொழியாக்கமான “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’யும் அடங்கும் என்பதால் இந்த உண்மையை ஆழ்ந்த வருத்தத்தோடு சொல்ல வேண்டியுள்ளது.