Sunday, June 8, 2014

ராஜீவ்காந்தி சாலை - நாவல் விமர்சனம்

இம்மாத உயிர்மையில் இமையம் அவர்கள் எழுதியுள்ள விமர்சனக்கட்டுரை வெளியாகியுள்ளது. நண்பர்கள் பார்வைக்கு....

விமர்சனம் – இமையம்

எல்லாக் காலத்திலும், எல்லா மனிதர்களுக்கும் பெரும் சவாலாக, பெரும் அதிசயமாக, உண்மையான அதிசயமாக இருப்பது வாழ்க்கைதான். அந்த அதிசயத்தை முழுமையாக புரிந்துகொள்ள முடியாது. ஆனால் புரிந்து கொள்ள முயல முடியும். அப்படியான ஒரு முயற்சிதான் விநாயக முருகனுடைய ராஜீவ் காந்தி சாலை நாவல்.

 தமிழ் இலக்கியம், இந்திய இலக்கியம் என்பது அநேகமாக குடும்பத்தைப்பற்றி மட்டும்தான் அதிகம் பேசியிருக்கிறது. அதிகம் அழுதிருக்கிறது. பெரும் திரளான மக்கள் குறித்து, ஒரு சமூகத்தில் குறிப்பிட்ட காலத்தில் சமூகம் பெற்ற மாற்றங்கள் குறித்து, பொது சமூக வாழ்வு குறித்து அநேகமாக எழுதப்படவில்லை. தனி மனித இழப்பிற்கு, சோகத்திற்கு, கண்ணீருக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் – பெரும் சமூக நிகழ்வுக்கு கொடுக்கப்படுவதில்லை, ஏன்?

 கடந்த இருபதாண்டுகளாக பெற்றோர்களுடைய ஒரே கனவாக இருந்தது தங்களுடைய குழந்தைகள் – ஐ.டி. கம்பனியில் வேலை பார்க்கவேண்டும் என்பதுதான். அதே மாதிரி கடந்த இருபதாண்டுகளில் படித்த எல்லா மாணவர்களுடைய கனவும், ஆசையும், லட்சியமும் ஐ.டி. கம்பனியில் வேலை பார்க்க வேண்டும் என்பதுதான். ஒரு தலைமுறையினரின் வாழ்வாக வரவேற்க்கப்பட்ட ஐ.டி. கம்பனிகளில் பணிபுரிவோர்களைப் பற்றி இந்த நாவல் பேசுகிறது. கடந்த இருபதாண்டுகளில் தமிழ் இலக்கியமோ, இந்திய இலக்கியமோ அதிகம் பேசியிருக்க வேண்டிய, விவாதித்திருக்க வேண்டிய வாழ்க்கை முறை இது. நிஜத்தில் அப்படி எதுவும் நிகழவில்லை. அந்த விசயத்தில் ராஜீவ் காந்தி சாலை – முக்கியமானது.
வாழ்வின் லட்சியமாகவும், பிறவியின் பயனாகவும் மதிக்கப்பட்ட வரவேற்கப்பட்ட ஐ.டி. கம்பனிகள் கொண்டு வந்தது என்ன? அது மனிதர்களை எப்படி நடத்துகிறது, எப்படி பார்க்கிறது, அதோடு ஐ.டி. கம்பனிகளில் பணிபுரிவோரின் மனநிலை, வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பது குறித்து விநாயக முருகன் தெளிவாக எழுதியிருக்கிறார். ஒரு ஐ.டி. கம்பனி உருவாகிறது. ஐநூறு ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கிறது. நல்ல சம்பளமும் வழங்கப்படுகிறது. உண்மைதான். ஐ.டி. கம்பனிகள் அமைகிற இடத்தில், சுற்றுப்புறச் சூழலில், அங்கு வசிக்கக்கூடிய மக்களின் வாழ்க்கையில், சமூக வாழ்க்கையில் என்ன மாற்றம் நிகழ்கிறது என்பது குறித்து இலக்கியப் படைப்புகள் வாயைத் திறப்பதில்லை. தனியார் பன்னாட்டுக் கம்பனிகளுக்கு அரசோ, தனியாரிடமிருந்தோ வழங்கப்படும் ஐநூறு ஏக்கர், ஆயிரம் ஏக்கர் நிலங்களை நம்பி வாழ்ந்த மக்கள் என்னவானார்கள் என்பது குறித்து இதுவரை போதிய பதிவுகள் இல்லை. ஐ.டி. கம்பனிகள் மூலம் ஒரு பிரிவினர் வேலை பெறுகின்றனர். அதே நேரத்தில் ஒரு பிரிவினர் வேலை இழக்கின்றனர் என்பதை இந்த நாவல் சுட்டிக்காட்டுகிறது. ஜேசிபி – என்கிற ஒரு இயந்திரம் ஒரு நாளைக்கு ஆயிரம் மனிதர்கள் செய்யக்கூடிய வேலையை செய்து முடிக்கிறது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்த மக்கள் அநாவசியக் குப்பைகளைப்போல இருப்பிடத்திலிருந்து, உழைப்பிலிருந்து அகற்றப்படுகிறார்கள். தெருவோர வாசிகளாக மாற்றப்படுகிறார்கள். வளர்ச்சி, மேம்பாடு, முன்னேற்றம், நாகரீகம் என்பது குறித்து நாம் வைத்திருக்கும் மதிப்பீடுகள் தவறானவை என்று விநாயக முருகன் சொல்கிறார். இதற்கு காரணம் நம்முடைய கல்வி. நாம் எதை கல்வியாக கற்க வேண்டுமோ அதற்கு நேர் எதிரானதையே கற்றிருக்கிறோம்.

 ராஜீவ் காந்தி சாலை – நாவல் சென்னை வாழ்வை பேசுகிறது. குறிப்பாக கடந்த இருபதாண்டுகால சென்னை வாழ்வு. நூறு இருநூறு ஆண்டுகளில் அடைய வேண்டிய வளர்ச்சியை இருபதே ஆண்டுகளில் சென்னை பெற்றிருக்கிறது. பிரம்மாண்டமான சாலைகள், பிரம்மாண்டமான பாலங்கள், பிரம்மாண்டமான கட்டிடங்கள். இவற்றிற்கு போட்டி போடுவது மாதிரி மனிதர்களின் தேவைகளும், கனவுகளும, ஆசைகளும் பிரம்மாண்டமாகிவிட்டன. இந்த பிரம்மாண்டங்கள் யாருடைய வாழ்வை மேம்படுத்துகிறது, யாருடைய வாழ்வில் மண்ணை அள்ளிப்போடுகிறது என்ற கவலை நாவல் முழுவதும் இருக்கிறது.

 மெத்தப் படித்தவர்கள், அதி புத்திசாலிகள், நல்ல வேலை, நல்ல சம்பளம் வாங்குகிறவர்கள் ஏன் மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்துகொள்கிறார்கள்? முறையற்ற வகையில் உறவு கொள்கிறார்கள், காதலியோடு படுத்திருந்ததை படம் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டுகிறார்கள், ஓயாத பாலியல் தொல்லையில் சிக்கிக்கொண்டு தவிக்கிறார்கள், பைத்தியமாகிறார்கள், ஆண் பாலியல் தொழிலாளியாக மாறுகிறார்கள், கார், பைக், பிளாஸ்மா டி.வி, ஐ.போன், சாம்சங் கேலக்ஸி எல்லாம் இருக்கிறது. ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு வகையான வெறுமையையே கொண்டுவந்து சேர்க்கிறது. வெறுமையிலிருந்து, மன அழுத்தத்திலிருந்து மீள்வதற்கு தற்கொலைதான், பாலியல் விஷமங்கள்தான் சிறந்த தேர்வாக இருக்கிறது. ஐந்து மணிநேர பயணம், பனிரெண்டு மணிநேர வேலை என்கிற போது ஒருவன் இயல்பான நிலையில் இருக்க முடியுமா? அதோடு வேலை எப்போது பறிபோகும் என்ற கவலை, பிராஜக்ட் வருமா? வராதா? என்ற கவலை, பெஞ்ச் சிஸ்டம் குறித்த அச்சம், எல்லாவற்றுக்கும் மேலாக போலியான பேச்சு, சிரிப்பு, நட்பு, நடிப்பு என்றாகி கடைசியில் தனிமனித, குடும்ப, சமூக வாழ்க்கையிலும் போலி என்ற நிலையில் மனம் கொள்ளும வெறுமை – எப்படி ஐ.டி. துறையில் வேலை பார்க்கும் மனிதர்களிடையே நிலவுகிறது என்பதை இந்த நாவல் கூடுதல் அழுத்தத்துடன் பேசுகிறது.

ஐ.டி. கம்பனியில் வேலை பார்க்கும் மனிதர்களின் வாழ்க்கையை ஒரு பக்கம் விவரிக்கும் நாவல் மற்றொரு பக்கம் ஐ.டி. கம்பனிக்கு நிலம் கொடுத்தவர்களின் வாழ்க்கையையையும், நிலத்தோடு தொடர்புடைய, கிராமத்தோடு தொடர்புடைய மனிதர்களின் அவல வாழ்வையும் விவரிக்கிறது. ஐ.டி. கம்பனிகளில் வேலை பார்ப்பவர்களின் பெயர்கள், கௌசிக், ப்ரணாவ், ப்ரணிதா, சுஜா, ரேஷ்மா, பிரேம் குமார். இப்பெயர்கள் நமக்கு மிக முக்கியமான செய்தி ஒன்றை சொல்கிறது. பெயர் வைப்பதில் தமிழர்கள் பெரிய மாற்றம் பெற்றுள்ளனர்.

முன்பு நிலத்திற்கான மதிப்பு என்பது, செம்மண்ணா, கருமண்ணா, உவர் மண்ணா, வானம் பார்த்த பூமியா, கிணறு, ஏரிப் பாசனம் கொண்டதா – என்பதை வைத்து தீர்மானமாயிற்று. இன்று நிலத்திற்கான மதிப்பு என்பது, பேருந்து நிலையம், ரயில் நிலையம், பள்ளி, கல்லூரி, கோவில், கம்பனிகள் – சாலை வசதி – இவை எல்லாம்தான் தீர்மானிக்கிறது. காணாமல் போனது குளங்கள், ஏரிகள், ஓடைகள், தரிசு, புறம்போக்கு நிலங்கள் மட்டுமல்ல. பறவைகள், பனைமரங்களும்தான். அதோடு காணாமல் போனவர்கள் குறி சொல்பவர்கள், கைரேகை, கிளி ஜோசியக்காரர்கள், ஈயம் பூசுபவர்கள், சாணை பிடிப்பவர்கள், அம்மி கொத்துபவர்கள், பழனீ விற்பவர்கள், புடவை வியாபாரிகள் என்று எல்லோருக்காகவும் கவலைப்படுகிறார் விநாயக முருகன். 

ராஜீவ் காந்தி சாலை மற்றொரு மிக முக்கியமான பிரச்சினையை பேசுகிறது. பாலியல் குறித்து அதிகம் பேச வேண்டும். அதிகம் எழுத வேண்டும். ரசிக்கும்படியாக. போற்றும்படியாக. அகப்பாடல்களைப் போன்று. உடலை துணியால் மூடிக்கொள்கிறோம். ஆனால் மனதை எதைக்கொண்டு மூட முடியும்? மனித மனத்தின் ஆசைகள், குரூரங்கள், வக்கிரங்கள், ஒவ்வொன்றும் நாம் புனிதர்கள் அல்ல என்பதை நிரூபிக்கின்றன. விமான நிலைய கழிப்பறையிலும், ரயிலின் ஏ.சி. கோச் கழிப்பறையிலும் ஆண் பெண் நிர்வாணப் படங்களை வரைந்து வைக்கும் மேல்தட்டு வர்க்க மனதின் செயலை நாம் எப்படி புரிந்துகொள்வது? எல்லா நிகழ்வுகளும் நம் கண்முன்னேதான் நிகழ்கிறது. அதை நாம் பார்ப்பதில்லை. விநாயக முருகன் பார்த்திருக்கிறார். எழுதியிருக்கிறார். மனித மனத்தின் விசித்திரங்களை, குரூரங்களை. சரியாகவும். சற்று மிகையாகவும்.

 இந்த நாவல் ஆபாசமாக எழுதப்பட்டிருக்கிறது என்று சொல்ல முடியுமா? காமம் – பணம் இதுதான் மனித வாழ்க்கை. மனிதனுடைய அத்துணை கீழ்மையான செயல்களுக்கும் இவைதான் காரணம். அதற்காக இந்த இரண்டையும் விட்டுவிட முடியுமா? முடியாது. காரணம் காமமும் பணமும்தான் வாழ்வின் அடிப்படை. தமிழக இந்தியக் குடும்ப அமைப்பு புனிதமானதுதானா? புனிதம் – புனிதமற்றது இதை எப்படி வரையறுப்பது? எப்படி விளக்குவது? தனிமனித வாழ்க்கையிலிருந்தா? சமூக வாழ்க்கையிலிருந்தா?

 நாம் நம்முடைய பெண்களை கன்னியாஸ்திரி மடத்தில் இருக்கும் பெண்களைப்போல இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். இதனால்தான் எல்லாக் குழப்பமும ஏற்படுகிறது. நாம் நமது பெண்கள் மீது ஏற்றி வைத்திருக்கும் புனிதங்கள் ஆபத்தானவை. அந்தப் புனிதங்கள் மிகையானது மட்டுமல்ல உண்மையானதுமல்ல.

இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு புது காதலனுடன் ஓடிப்போகும் பெண்கள், காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்யும் பெண்கள், ஒரே ஆணுடன் படுக்கும் தாயும், மகளும், ஒரே ஆணுக்காக போட்டியிடும் மூன்று பெண்கள், ஒரே ஆணுடன் ரகசியமாக மாறிமாறி படுக்கப்போகும் தோழிகள் இப்படி பல விநோதங்கள். இந்த விநோதங்கள் இப்போதுதான் நடக்கிறது என்று சொல்ல முடியாது. ஆனால் இப்போது கூடுதலாக நடக்கிறது என்று சொல்ல முடியும். விநோதங்கள் கூடுதலாக நடப்பதற்கு இப்போது வசதிகள் அதிகம். வாய்ப்புகள் அதிகம். காம செயல்பாடு என்பது முன்பு இரண்டு நபர்கள் சம்பந்தப்பட்டதாக, இருட்டில் நடப்பதாக இருந்தது. இப்போது அப்படி இல்லை. கேமராவால் படம் எடுக்கப்படுவதாக, காட்சிப்பொருளாக, வியாபாரப் பொருளாக, உலகத்திற்கே காட்சியாக்கப்படும் விசயமாக, காலத்திற்கும் அழியாத மீண்டும் மீண்டும் பார்க்கப்படும் காட்சியாக மாற்றப்படுகிறது. தொழிற்நுட்பம் மனிதர்களை ரகசியம் அற்றவர்களாக மட்டுமல்ல, அந்தரங்கம் அற்றவர்களாக மட்டுமல்ல, நிர்வாணமாக்கிவிட்டது.

நிஜம், நடந்தது என்ன, குற்றம், நீயா நானா, நித்திய தர்மம், உண்மையை பேசுவோம், பேச தயங்குவதை பேசுவோம், நில், கவனி, சொல் போன்ற நிகழ்ச்சிகளின் வழியே நம்முடைய வீர தமிழச்சிகள், காதலனுடன், கணவனுடன், அடுத்தவளின் கணவனோடு செய்த காம விளையாட்டுகளை சொல்ல மட்டுமல்ல – செய்தும் காட்டுகிறார்கள். அந்தரங்கத்தை காட்சிப்படுத்துகிறவர்களில் படித்தவர், படிக்காதவர் என்ற வேறுபாடு இல்லை. இதைத்தான் வளர்ச்சி, முன்னேற்றம், தொழிற் நுட்ப புரட்சி என்று சொல்கிறோமா என்பதே விநாயக முருகனின் கேள்வி.
நவீன வாழ்வு, நவீன தொழிற்நுட்பம், அதிகப்படியான பணம், வசதிகள், விசித்திரம், வக்கிரம், மன அழுத்தம், விவசாய நிலத்தோடு தொடர்புடைய வாழ்க்கைப்போய் தொழிற்சாலைகள் உருவாகும்போது, ஏற்படும்போது – தனிமனித வாழ்வில், குடும்ப, சமூக வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை எழுதியிருக்கிறார். அதிகப்படியாகவும் எழுதியிருக்கிறார்.

 படைப்புக்கான வெளி எது, படைப்புக்கான வெளியை எது உருவாக்குகிறது – எதார்த்தமா, கற்பனையா, அறிவா, அனுபவமா, படிப்பா என்றால் எல்லாம் சேர்ந்துதான் என்று ராஜீவ் காந்தி சாலை நாவல் சொல்கிறது.

நாவலில் மனிதர்கள் வருகிறார்கள். பெறுகிறார்கள். இழக்கிறார்கள். யாரிடத்திலும் காயம் இல்லை. புண், சீழ், வலி, கண்ணீர், ஓலம், அலறல், அழுகை, கதறல், ஒப்பாரி இல்லை. வெறும் தகவல்களாக – வெறும் வாக்கிய அமைப்புகளாகவே இருக்கிறது. ஒரு படைப்பின் அடிப்படை – சிரிப்பு – கண்ணீர். எல்லா தகவல்களையும் கொட்டி தீர்க்க வேண்டும் என்ற ஆவேசம் இருக்கிறது. கடந்த காலமும் வாழ்க்கையும் மேலானது, புனிதமானது என்ற எண்ணம் நாவலாசிரியரிடம் அழுத்தமாக இருக்கிறது. நேற்றைக்கு இன்று மோசம். இன்றைக்கு நாளை இன்னும் மோசம். தகவல்களையும் பதிவு செய்ய வேண்டியது காலத்தின் தேவை. அந்த வகையில் ராஜீவ் காந்தி சாலை நாவல் கவனத்திற்குரியது. 

Saturday, June 7, 2014

மறைந்துப் போனவர்களின் நிழல்கள்


மலைகள்.காம் ஐம்பத்தொன்றாவது இதழில் "மறைந்துப் போனவர்களின் நிழல்கள்" என்ற சிறுகதை வெளியாகி உள்ளது. நண்பர்கள் பார்வைக்கு...